Home குடும்பம் ஆண்-பெண் பாலியல் பரிபூரண தாம்பத்யத்திற்கு மிகப்பெரும் கூலி நிச்சயம் உண்டு! (இ.பா.05)
பரிபூரண தாம்பத்யத்திற்கு மிகப்பெரும் கூலி நிச்சயம் உண்டு! (இ.பா.05) PDF Print E-mail
Sunday, 26 February 2012 08:08
Share

(இஸ்லாமும் பாலியலும் (05)

பரிபூரண தாம்பத்யத்திற்கு மிகப்பெரும் கூலி நிச்சயம் உண்டு! 

 உடலுறவு கொண்ட பின் குளிப்பதற்கும்கூட நன்மை 

உடலுறவு கொண்டு "ஜனாபத் குளியல்" குளிப்பதில் கூட நன்மைகளை அள்ளித்தருகிறது இஸ்லாம்.

"ஜனாபத் குளியல் குளிக்கும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி, அவர்கள் தலைமுடியை நன்றாக கோதிக் கழுவிக் குளிக்கும்போது உடலில் இருந்து தெறித்துவிழும் ஒவ்வொரு துளித் தண்ணீருக்கும் ஒவ்வொரு நூறு நன்மைகள் எழுதப்படாமல் இல்லை. பேலும் அவர்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன." என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அல் ஹதீஸ்)

மற்றோர் நபிமொழியில்,

"எவரொருவர் உளூச்செய்து பின்பு (ஜனாபத்) முழுக்கு நீங்கக் குளித்தால் குழைத்த மாவிலிருக்கும் உரோமத்தை எடுப்பது போன்று அவர் பாவங்கள் களையப்படுகின்றன." என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அல் ஹதீஸ்)

இந்த இரு நபிமொழிகளைக் காணூம் எவரும் ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்வதில் வினோதமில்லை. உடலுறவு கொள்வதும் ஒரு வணக்கமே என்பதை முதலிலேயே பார்த்தோம். இப்பொழுதோ உடலுறவுக்குப்பின் தூய்மைப்படுத்திக்கொள்ள குளிக்கும் குளியலுக்குக்கூட இவ்வளவு நன்மை என்று இஸ்லாம் சொல்கிறதே! நினைத்தாலே இனிக்கிறதல்லவா? ஆம்! அதுதான் இஸ்லாத்தின் வசீகரம்.

மனிதா! நீ, தீய வழியில் சென்று உன் இச்சையை தீர்த்துக்கொள்ளாதே! அது உன்னை நரகக்குழியில் தள்ளிவிடும் என்று எச்சரிக்கும் இஸ்லாம், ஆகுமான வழியில் இறைவன் அனுமதித்த வழியில் திருமணம் முடித்துக்கொண்டு மனைவியுடன் உடலுறவு கொண்டு இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது - அதை இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்ட, இறைக்கட்டளைக்கு கண்ணியமளித்த ஒரு செயலாக இறைவன் கருதுவதால் தனது அடியார்களுக்கு கரும்புத் திண்ணக்கூட கூலி கொடுக்கின்றான் என்றே அறியமுடிகிறது. இப்பொழுது எண்ணிப்பாருங்கள் அந்த ஏக இறைவன்; தனது படைப்புகளில் உயர்வான மனித இனத்தின்மீது மீது கொண்டிருக்கும் அன்பும் கருணையும்.

இதன்வாயிலாக இன்னொரு விஷயமும் விளங்குகிறது... உடலுறவை அலட்சியம் செய்கின்றவர்கள் "ஜனாபத்" குளியலால் கிடைக்கும் நூற்றுக்கணக்கான நன்மைகளையும் இழக்கிறார்கள். (இதை படிக்கும் வாசகர்கள், அடேங்கப்பா! இப்படியெல்லாமா இஸ்லாம் சொல்கிறது? இவ்வளவுநாளும் இது பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே, நன்மைகள் சம்பாதிக்க இப்படியொரு வழியிருக்கிறதா...? இனிமேல் இதை மிஸ்ஸ் பண்ண மாட்டோம் என்று முடிவெடுத்தீர்களானல் அதுதான் இந்த கட்டுரை எழுதியதற்கான பலன்!)

அடுத்து இஸ்லாம் அனுமதிக்கும் எந்த செயலை செய்தாலும் நன்மை நிச்சயம் உண்டு எனும் அதே வேளையில் அந்த செயலை முறையாக செய்தால் நன்மைகள் இன்னும் அதிகமுண்டு என்பதை எவரும் மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஆம்! மனைவியுடன் உடலுறவு கொள்வதும் நன்மையான காரியம் எனும்போது அந்த உடலுறவு இருவருக்குமே நிம்மதியளிக்கும் விதத்தில் அமையும்போது இன்னும் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதில் என்ன சந்தேகம்?! இப்போது ஓரளவுக்காவது உங்களுக்குப் புரிந்திருக்கும். தம்பதிகள் தங்களது இச்சையைத் தீர்த்துக்கொள்ளும்போது தன்னுடைய சுகத்தை மட்டும் பாராமல் தனது இணைக்கும் உடலுறவின்மூலம் முழு திருப்தியை கொடுக்க வேண்டும். அப்படி செய்யும்போதுதான் அது இருவருக்கும் முழு நிம்மதியளிக்கக்கூடிய செயலாக அமையும்.

மனங்கள் அமைதிபெரும் பொருட்டே உங்களிலிருந்து உங்கள் மனைவிகளை படைத்திருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறானே அந்த மன நிம்மதி உங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமானால் உடலுறவின்மூலம் நீங்கள் சுகத்தை அனுபவிக்கும் அதே சமயம் உங்கள் துணைவிக்கும் முழு சுகத்தைக் கொடுத்து அவளது மனமும் அமைதியடைந்தாலே அது பரிபூரணமான தாம்பத்யம். அப்படிப்பட்ட தாம்பத்யத்திற்கு மிகப்பெரும் கூலி நிச்சயமாக உண்டு. என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா? இதற்கு ஆதாரத்தை உங்கள் எதார்த்தமான வாழ்க்கையிலேயே காணலாம். எப்படி என்கிறீர்களா...?

 உடலுறவில் முழு திருப்தியை பெற்றுக்கொண்ட தம்பதிகளின் நிலை : 

உடலுறவில் முழு இன்பத்தையும் திருப்தியையும் பெற்றுக்கொண்ட தம்பதிகளுக்கிடையே சண்டைச் சச்சரவுகள் அதிகமிருக்காது. அவர்களுக்குள் பாசம் பொங்கிவழியும். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேர்ந்தாலும் அவைகளை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சமாளித்துக்கொள்வார்கள். காரணம் உடலுறவின்போது அவர்களுக்குள் இருந்த ஈடுபாடு அதாவது தன்னைப்போல் தன் துணையும் முழுமையான இன்பத்தை அனுபவிக்க வேண்டும் எனும் எண்ணம்... அந்த நல்லெண்ணம் எல்லா நேரத்திலும் அவர்களிடம் தழைத்தோங்கவே செய்யும். இது திருப்தியான, நிம்மதியான உடலுறவினால் விளைந்த நன்மையல்லவா? இது இவ்வுலகில் நம் கண்முன்னே இறைவன் அவர்களுக்களித்த நற்கூலிதானே! வெறுமனே சொன்னால் எப்படி? அந்த உண்மையான தம்பதிகள் தங்களுடைய இணையின் திருப்திக்கும் முக்கியத்துவம் அளித்து நடந்து கொண்டதால் இறைவன் அவர்களுக்கு அளித்த பரிசுதானே வாழ்க்கையின் மற்ற காரியங்களிலும் அவர்களுக்குக் கிடைக்கும் நிம்மதி.

 திருப்தி கிட்டாத தம்பதிகளின் நிலை : 

அவ்வாறு இல்லாமல் உடலுறவில் சரியான முறையில் பரிபூரண திருப்தியை கிடைக்கப்பெறாத தம்பதிகளைப் பாருங்கள்... என்ன நடக்கிறது? உடலுறவில் திருப்தி இல்லாத முழுமையான உச்சம் அடையாத எத்தனையோ பெண்கள் நிம்மதியிழந்து.... எல்லா வசதியும் இருந்து மனநோயாளியைப் போல இருப்பார்கள். எதையோ பரிகொடுத்ததுபோல் காட்சியளிப்பார்கள். இல்லற சுகத்தை கணவன் மூலம் முழுமையாக கிடைக்கப்பெறாதவள் தன்னை கணவனுக்காக அலங்கரித்துக்கொள்ள மாட்டாள். எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென்று சீறிப்பாயும் குணம் கொண்டவளாக இருப்பாள். இதன் பாதிப்பு எதுவரை செல்லும் என்றால், குழந்தைகளை திட்டுவதும், சின்ன சின்ன குற்றத்துக்காக அவர்களை அடிப்பவர்களாகக் காணமுடியும். ''சனியன்களா... இதுகளைப்பெற்றுக்கொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்...? என்று கண்ணீர் வடிப்பாள்.

இப்படி உலகெங்கும் பாலியல் திருப்தி இல்லாமல் பலப்பல அநியாயங்கள், கொடுமைகள், தவறுகள் தினந்தோறும் நடப்பதை கண்முன்னால் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

 ஆண்களைக் காட்டிலும் 99 மடங்கு பெண்களுக்கு ஆசையா? : 

"ஆண்களைக் காட்டிலும் 99 மடங்கு பெண்களுக்கு ஆசை அதிகப்படுத்தப்பட்டுள்ளது, என்றாலும் அவர்களுக்கு அதில் அல்லாஹ் (ஆசையை அடக்கிக்கொள்ள) அவர்கள்மீது வெட்கத்தைப் போட்டுவிட்டான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க்ள் சொன்னார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: கன்ஜுல் உம்மால்)

வெட்கம் எனும் போர்வையை பெண்ணின் மீது போர்த்தி அவளின் 99 மடங்கு இச்சையை மறைத்து வைத்துள்ளான் அல்லாஹ்! இது பெண்ணினத்திற்கே இறைவன் வழங்கிய தனிப்பட்ட பாக்கியமாகும். அந்த தனிப்பட்ட பாக்கியத்தை ஒவ்வொரு கணவனும் புரிந்து நடந்துகொண்டால் அவர்களின் இல்லங்கள் ஒவ்வொன்றுமே பூலோக சொர்க்கம்தான் என்பதை அவர்கள் உணர\முடியும், புரிந்துகொள்ள வேண்டும்.

 மனைவியின் ஆசை அடங்கவில்லையென்றால்.... 

இஸ்லாம் பெண்ணினத்தின் இந்த ஆசைக்கு எந்த அளவு உயர்வான மதிப்பளிக்கிறது என்பதற்கு... ''மனைவியின் ஆசை அடங்கவில்லையென்றால் அவளுக்கு ஆசை அடங்கும்வரை ஊரில் தங்கியிருந்து அவளை முழுமையாக திருப்திபடுத்திவிட்டு அதற்கப்புறமே போருக்குச் செல்ல வேண்டும்'' என்று இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது. எனவே மனைவிக்கு செலுத்த வேண்டிய கடமைகளில் ஒன்றான உடலுறவு விஷயத்தில் கணவன்மார்கள் புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும். இதற்கு மாற்றமாக, தனது மனைவியிடம் உடலுறவு விஷயத்தில் அலட்சியமும், பொடுபோக்கும், வஞ்சகமும் செய்வது மாபெரும் துரோகமாகும்.

எங்களுக்கு வேலைபளு, டென்ஷன், வெளிநாடு சம்பாத்தியம், அது... இது என்று சாக்கு போக்கு சொல்லி எந்த கணவனும் மனைவிக்கு செய்ய வேண்டிய இந்த மாபெரும் பொறுப்பிலிருந்து அல்லாஹ்விடம் தப்பிக்கவே முடியாது.

 நடைமுறையில் காணப்படும் தவறான தாம்பத்யம் : 

ஒரு முஸ்லிம் சகோதரர். கைநிறைய சம்பளம். வசதிக்கு குறைவில்லை. சொந்தவீடு, அழகான மனைவி எல்லாம் அவருக்கு உண்டு. ஆனால், வேலை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் நேராக குளியலறைக்குச் சென்று நன்றாக குளித்துவிட்டு, அத்தர் போட்டுக் கொண்டு ரெடியாக இருப்பார். அந்த நேரத்தில் மனைவி சூடாக சுவையாக உணவுகளைத்தயாரித்து கொண்டு வருவாள். எல்லாவற்றையும் ஒரு வெட்டு வெட்டிவிட்டு (வயிற்றுக்குள் தான்!) அவர் எழுந்து கை கழுவிவிட்டு வரும்போது மனைவி ரெடியாக படுக்கையறைக்குள் அவருக்காக காத்திருக்க வேண்டும். உண்டுவிட்டு சிறிது நேரம் கூடத்தில் உலாத்திவிட்டு ரூமுக்குள் நுழைந்த வேகத்துக்கு அவசர அவசரமாக உடலுறவு கொண்டு முடித்துவிட்டு, திரும்பப் படுத்து தூங்கிவிடுவார்.

உடலுறவுக்கு சக்தி வேண்டும் என்பதற்காக உணர்ச்சியைத்தூண்டும் உணவுகளை வகை வகையாக சமைக்கச் சொல்லி சாப்பிடுவார். தினந்தோறும் உடலுறவு கொள்வார். ஐந்து நிமிடத்தில் அவரது முழு உடலுறவும் முடிந்துவிடும். இப்படியே பல வருடங்கள் அவர் செய்து கொண்டிருந்தார். தினமும் உடலுறவு வைத்துக் கொள்வது மனைவியை திருப்திப்படுத்தும் என்று தவறாக எண்ணிக்கொண்டு ஒரு இயந்திரத்தனமாய், மனைவியின் மனதைப் புரிந்து கொள்ளாமலேயே இருந்து வந்திருக்கிறார். அவர் தூங்கிய பின் மனைவி குளித்துவிட்டு, சமையல் அறை வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, சீரியல் பார்த்து விட்டு கணவன் அறையை எட்டிப் பார்ப்பாள், அங்கு கணவன் குறட்டை விட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார்.

இதுவா வாழ்க்கை? ஆனால், இன்று பெரும்பாலான குடும்பங்களில் இந்த நிலை அதிகமாக பரவி வருகிறது. இப்படிப்பட்ட இயந்திரத்தனமான உடலுறவை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அதை உடலுறவு என்றுகூட சொல்வதில்லை.

 உடலுறவு விஷயத்தில் முன்னோர்களின் பெரும் அக்கரை : 

நமது முன்னோர்கள் உடலுறவு விஷயத்தில் பெரும் அக்கரை எடுத்துக் கொள்வார்கள். தொழுகையில் அக்கறை எடுத்துக்கொள்வது போல அக்கறை எடுத்துக்கொள்வார்கள். (மனைவிக்கு உச்சநிலையை உண்டாக்கி அவளை திருப்திபடுத்தாத உடல் உறவு, உடலுறவே அல்ல என்றும் சொன்னார்கள்.) அவ்வாறு இருந்த காரணத்தால் தான் அதிக குழந்தைகளை அவர்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

பெண் உடலுறவில் திருப்தி அடைய அவள் மனம், உடல், குடும்ப சூழல், இடம் பொருள் போன்ற பல விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். கணவன் தான் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இன்று பெண்களை தூக்க மாத்திரைகள் போல பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆண்களே அதிகம். தங்களின் தூக்கத்திற்கு தாம்பத்யம் தேவை என்ற கண்ணோட்டத்தில் அவர்கள் மனைவியை அணுகுவதால் அவளது மனம், உடல், சூழ்நிலை சார்ந்த அனைத்து விஷயங்களையும் அவளே கருத்தில்கொள்ள வேண்டியவளாகிவிடுகிறாள். இது அவளது உடல் நலத்தை மட்டுமின்றி மனநலத்தையும் மிகவும் பாதிக்கச்செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒரு பெண் தன் கணவனிடம் அதிக அன்பையும், பாதுகாப்பையும், நம்பிக்கையையும் எதிர்பார்க்கிறாள். இவை அவளுக்கு கிடைக்கும்போது அவள் ஐஸ் கட்டியாக கணவனின் பார்வையில் உருகுகிறாள். அப்படிப்பட்ட நிலையில் அவள் தன்னை முழுமையாக, எல்லாவற்றையும் கணவனிடம் ஒப்படைக்கும்போதுதான் அங்கு அர்த்தமுள்ள உடலுறவுக்கு சாத்தியம். ஆம்! உடல் மட்டுமின்றி மனமும் ஒன்றோடொன்று சேரும்போது இரட்டை இன்பம் கிடைக்கும்போது அதன் முடிவு பன்மடங்கு சிறப்பானதாக உயர்வானதாக அமையும்.

இன்று மனிதர்கள் பணத்தின் பின்னாலேயே ஓடுவதால் தாம்பத்யமே பாழாகிப் போய், பெரும்பாலும் தம்பதிகளிடம் தாம்பத்யமே குறைந்து போய்விட்டது என்றுகூட சொல்லலாம். அந்த இடத்தை டி வி யும் சீரியலும் பிடித்துக்கொண்டுவிட்டது தான் காரணம்.

www.nidur.info

கட்டுரையின் தொடர்ச்சிக்கு "Next"  "கிளிக்" செய்யவும்.