Home குடும்பம் குழந்தைகள் குழந்தைகளுக்குக் கையால் உணவு ஊட்டினால் தப்பா?

மன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு

குழந்தைகளுக்குக் கையால் உணவு ஊட்டினால் தப்பா? PDF Print E-mail
Thursday, 16 February 2012 07:50
Share

குழந்தைகளுக்குக் கையால் உணவு ஊட்டினால் தப்பா?

  கீதா 

[ பிரச்சினையை அக்கறையுடன் கேட்ட ஜனாதிபதி, வியப்பின் உச்சிக்கே போய்விட்டார். ‘இப்படி ஒரு பிரச்சினையை என் வாழ்நாளில் கேட்டதே இல்லை. குழந்தைகளைப் பெற்றோரிடம் ஒப்படைக்கத் தேவையான அனைத்தையும் நிச்சயம் செய்கிறேன்’ என்று உறுதி கூறினார்.]

விதிமுறைகளைக் காரணம் காட்டி, இரண்டு குழந்தைகளை தாயிடமிருந்து தூக்கிச் சென்றது நார்வே அமைப்பு. பிறகு என்ன நடந்தது?

நார்வேயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த புவியியல் ஆராச்சியாளராக (geoscientist) 2006ம் ஆண்டு வேலையில் சேர்ந்தார் அனுரூப் பட்டாச்சார்யா. கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அனுரூப், சகாரிகா தம்பதிக்கு 4 வயதில் அபிக்யான் என்ற மகனும் 1 வயதில் ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

நார்வேயில் பெற்றோருடன் இருந்த குழந்தைகள் இருவரையும் கடந்த ஆண்டு மே மாதம் அந்நாட்டுக் குழந்தைகள் நல சேவை அமைப்பு (child service federation) வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுவிட்டது. அந்த நேரத்தில் ஐஸ்வர்யா, தாய்ப்பால் மட்டுமே குடித்துக்கொண்டிருந்த வெறும் ஐந்து மாதக் குழந்தை. அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள்,

குழந்தைகளுக்கு கையால் உணவு ஊட்டுகிறார்கள் (இதில் அளவுக்கு அதிகமாக உணவு தரும் அபாயம் உள்ளது), குழந்தைகள் இருவரும் விளையாடுவதற்கு வீட்டில் வசதியாக அறைகள் இல்லை, அவர்கள் போட்டிருந்த உடைகள் குழந்தைகளுக்கு ஏற்றதாக இல்லை, சரியான, போதுமான விளையாட்டுப் பொருட்கள் வீட்டில் கிடையாது, இதற்கெல்லாம் மேலாக 3 வயது (அப்போது) அபிக்யான், அப்பாவின் கட்டிலில் அவருடன் சேர்ந்து தூங்குகிறான் (இது அவர்களை இயல்பாக வளர விடாமல் பெற்றோரைச் சார்ந்தே இருப்பதற்கான சூழலை ஏற்படுத்தும்).

இவையெல்லாம் நார்வே அதிகாரிகளுக்கு எப்படித் தெரிய வந்தது? பள்ளிக்குச் சென்ற 3 வயது அபிக்யானின் நடவடிக்கைகள் எல்லாக் குழந்தைகளையும்போல இல்லை. அந்நாட்டில் குழந்தைகளுக்கான உரிமைகள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. அடம் பிடிக்கும் குழந்தைகளை அதட்டுவது, மிரட்டுவது எல்லாம் நார்வேயில் அவர்களின் உரிமையை மீறும் செயல். சிறுவனின்மீது சந்தேகம் வந்தவுடன், குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் வாரம் ஒரு நாள், ஒரு மணி நேரம் சகாரிகாவின் வீட்டை அவர்களுக்கே தெரியாமல் கண்காணித்துள்ளனர். ‘குழந்தையின் அம்மாவுக்குப் பொறுமை இல்லை, சரியாக வளர்க்கத் தெரியவில்லை’ என்று காரணம் சொல்லி, குழந்தைகளைத் தங்களுடன் தூக்கிச் சென்று விட்டனர்.

அனுரூப், சகாரிகாவிற்கு அந்நாட்டில் இருப்பதற்கான விசா இந்த வருடம் மார்ச் மாதத்துடன் முடிகிறது. எங்கே தங்கள் குழந்தைகள் இல்லாமல், அவர்களை நார்வேயிலேயே விட்டுவிட்டு இந்தியா திரும்ப வேண்டிய நிலை வந்துவிடுமோ என்ற பதட்டம். குழந்தைகளை நார்வே அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் குழந்தைகள் அமைப்பு தூக்கிச் சென்றதிலிருந்து குழந்தைகளை மீட்கப் பல சட்ட போராட்டங்கள். எந்தப் பலனும் இல்லை. இடையில் 2 முறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமிருந்து நார்வே அரசுக்கு கடிதங்கள் அனுப்பியும் எந்தப் பதிலும் இல்லாத நிலை. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

இந்தச் சூழலில் கொல்கத்தாவில் வசிக்கும் சகாரிகாவின் பெற்றோர் மோனோடோஷ், ஷிகா சக்கரவர்த்தி இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத் உதவியுடன் கடந்த சனிக்கிழமை (ஜன. 21) குடியரசுத் தலைவர் பிரதிபா தேவி சிங் பாட்டீலை சந்தித்து, குழந்தைகளை மீட்க உதவுமாறு கோரிக்கை வைத்தனர்.

பிரச்சினையை அக்கறையுடன் கேட்ட ஜனாதிபதி, வியப்பின் உச்சிக்கே போய்விட்டாராம். ‘இப்படி ஒரு பிரச்சினையை என் வாழ்நாளில் கேட்டதே இல்லை. குழந்தைகளைப் பெற்றோரிடம் ஒப்படைக்கத் தேவையான அனைத்தையும் நிச்சயம் செய்கிறேன்’ என்று உறுதி சொன்னதாக மோனோடோஷ், தில்லியில் ஜனாதிபதியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தொடர் முயற்சியால், குழந்தைகள் இருவரையும் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ள நார்வே அரசு, அவர்கள் 18 வயது வரை சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் இருக்கலாம். வருடத்தில் 2 மணி நேரம் மட்டும் குழந்தைகளைப் பெற்றோர் பார்க்கலாம். ஒருவேளை, பெற்றோர் பிரிந்து வாழ நேரிட்டால் குழந்தைகள், அப்பாவின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதித்திருக்கிறது. நார்வேயிலிருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்டாவெஞ்சர் (stavenger) நகரத்தில் இருக்கும் குழந்தைகள் சேவை நல அமைப்புடன் கடந்த எட்டு மாதங்களாகப் போராடி இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் அனுரூப் பட்டாச்சார்யா, சகாரிகா தம்பதி.

கடந்த வாரம் குழந்தைகளின் சித்தப்பா டாக்டர் அருனபாஸ் பட்டாச்சார்யா (நார்வே அரசு தேர்வு செய்த குழந்தைகளின் கேர் டேக்கர்) நார்வே சென்றுள்ள நிலையில், விரைவில் அபிக்யானும் ஐஸ்வர்யாவும் வீடு திரும்பும் நம்பிக்கையான சூழல் உள்ளது. கடந்த பல மாதங்களாக குழந்தைகளைப் பிரிந்து இருந்த சகாரிகா, தீவிர மன அழுத்தத்தில் உள்ளார்.

குழந்தைகளை வளர்க்க, நார்வே அரசு வைத்துள்ள விதிமுறைகள் சரியானதுதானா? சூர்யா மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் தீபா ஹரிஹரன், "ஒவ்வொரு நாட்டிற்கும் கலாசாரம், பழக்க வழக்கங்கள் மாறுபடும். அமெரிக்காவில் மருத்துவப் பயிற்சி செய்தபோது அங்கும் இதேபோல பிரச்சினையைப் பார்த்திருக்கிறேன். அமெரிக்காவைப் பொறுத்தவரை அவர்கள் கலாசாரப்படி கையால் உணவை சாப்பிடுவது நாகரிகம் இல்லை. ஆனால், நம் இந்திய வழக்கம் கையால் சாப்பிடுவதுதான். உணவு, கலாசாரம் இவற்றில் இருக்கும் புரிதல் மாறுபாடுதான் தற்போது நார்வேயில் வந்த பிரச்சினைக்கும் காரணம். நம்முடைய உணவு வகைகளை கத்தி, ஸ்பூன், முள் கரண்டியால் சாப்பிடுவது வசதியாக இருக்காது. அதிலும் தற்போது பிரச்சினைக்கு உள்ளான பெங்காலிக் குழந்தைகள் அதிகமாகச் சாப்பிடும் ரொட்டி, சப்பாத்தி போன்றவற்றை ஒரு 3 வயதுக் குழந்தை, ஸ்பூன் உதவியுடன் சாப்பிடுவது சாத்தியமான விஷயமே கிடையாது.

கைகளை சுத்தம் செய்யும் அளவிற்கு கரண்டிகளை நாம் சுத்தம் செய்வதில்லை. கைகளால் சாப்பிடும்போது அதிலிருந்து சுரக்கும் என்சைம்கள், ஜீரணத்திற்கு எந்த அளவிற்கு உதவியாக உள்ளன என்பது அறிவியல் ரீதியில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் கைகளால் ஊட்டும்போதுதான் குழந்தைக்கும் அம்மாவிற்கும் இடையில் பிணைப்பு வலுப்படும்.

என் அனுபவத்தில் அமெரிக்காவில், ஸ்பூன் வைத்து ஊட்டும்போது உணவில் எந்த அளவிற்கு சூடு இருக்கிறது என்று தெரியாமல் குழந்தையின் நாக்கு, உதடுகள் புண்ணாகி என்னிடம் சிகிச்சைக்கு வந்திருக்கிறார்கள். கையால் ஊட்டும்போது இந்தப் பிரச்சினை கிடையாது. அமெரிக்கக் குழந்தைகள் நல அமைப்பு, ஆறு மாதத்திலிருந்து குழந்தைகளை தனியாகத்தான் தூங்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன்பின் நடந்த பல ஆய்வுகள், இந்தக் கருத்திற்கு மாறுபட்டதாக வந்துள்ளன. அதில், ஐந்து வயது வரை பெற்றோர்களின் அரவணைப்பில் தூங்கும் குழந்தைகள் வளர்ந்த பிறகு, தன்னம்பிக்கையோடு எல்லா விஷயங்களையும் தன்னிச்சையாகக் கையாளும் திறனோடு வளர்கிறார்கள்.

3 முதல் 6 வயதில் இருட்டு, பேய் என்ற பார்க்கும், கேள்விப்படும் விஷயங்கள் குழந்தைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இந்த வயதில் விருப்பம், ஆர்வம், பாலியல் வேறுபாடு என்று பல மன மாறுபாடுகள் வர ஆரம்பிக்கும். எனவே, பெற்றோருடன் தூங்குவது மிக அவசியமான ஒன்று. குழந்தைகளுக்கு குறைந்தது 2 வயது வரை தாய்ப்பால் தர வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பாக வளர வேண்டும் என்று இவ்வளவு விதிகளைப் பின்பற்றும் நாடு, ஐந்து மாதக் குழந்தையை எப்படி அம்மாவிடம் இருந்து பிரிக்க முடியும்?

பள்ளியில் குழந்தையிடம் நடத்தை மாற்றம் இருந்ததாகக் கூறுகிறார்கள். வகுப்பில் தூங்கிக்கொண்டு சோர்வாக இருந்தால், அதற்குப் பல காரணங்கள் உள்ளன. வீட்டில் மொழி, கலாசாரம் வேறு. பள்ளியில் வேறு. திடீரென்று புதிய சூழல் கொஞ்சம் மிரட்சியாகவே இருக்கும். அந்நாட்டுக் குழந்தைகள் கொண்டு வரும் சாப்பாடு, நடவடிக்கைகள், பாஷை வித்தியாசமாக இருக்கும்போது 3 வயதுக் குழந்தை சோர்வடைவது இயல்பு. இந்தச் சூழல் புரிய ஆரம்பித்தால் தானாகவே சரியாகிவிடும்" என்கிறார், டாக்டர் தீபா.

பெட்டி செய்தி: நார்வே அரசின் அக்கறை

உலகிலேயே குழந்தைகள் நலன், உரிமைகளுக்காக ஓர் அமைப்பை ஏற்படுத்தியது நார்வே அரசுதான். கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, பொது இடங்களில் குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. பல நாடுகள், குழந்தைகள் உரிமைகளுக்காக நார்வே நாடு பின்பற்றும் விதிகளையே பின்பற்றுகின்றன. இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் தேதி, அந்நாட்டு அரசர் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கு பெறும் குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. நார்வேயுடன் இணைந்து 25 ஐரோப்பிய நாடுகள், குழந்தைகளின் உரிமைகளுக்காக European network for Ombudsman for Children - ENOC என்ற தனி அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

நன்றி: புதிய தலைமுறை