Home குடும்பம் பெண்கள் முஃமினான பெண்ணிடம் இருக்க வேண்டியதும் இருக்கக்கூடாததும்!
முஃமினான பெண்ணிடம் இருக்க வேண்டியதும் இருக்கக்கூடாததும்! PDF Print E-mail
Friday, 10 February 2012 07:29
Share

முஃமினான பெண்ணிடம் இருக்க வேண்டியதும் இருக்கக்கூடாததும்!

      ரிப்கா பின்த் ஆதம்பாவா அஷ்ஷரயிய்யா      

அடிமைத்தனத்திலும், மடமைத்தனத்திலும் வேரூன்றி வாழ்ந்த அந்த ஜாஹிலிய சமுதாயத்தில் பெண் சமுதாயம் பல இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுக்க நேரிட்டனர்.

ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட ஒந்தவொரு உரிமையும் பெண்களுக்கு வழங்கப்படவில்லை. சமூகத்தில் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்திலே நோக்கப்பட்டனர். பெண் பிள்ளை பிறந்து விட்டால் அதை உயிருடன் புதைக்கக்கூடியவர்களாக இருந்தனர். இல்லையெனில் இழிவான ஒரு நிலையில் அதை விட்டுவைக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அவளை அவர்கள் நோக்கியதெல்லாம் ஒரு இன்பப்பொருளாகவேதான் இருந்தது. எந்தளவுக்கெனில் அப்பெண்ணுக்கு பிள்ளை பிறந்து விட்டால் அந்தப் பிள்ளையின் சாயலை வைத்துத்தான் தந்தையை குறிப்பாக்கினர். இந்த அளவு ஜாஹிலிய சீர்கேட்டில் பெண்கள் சிக்கித் தவித்தனர்.

இது நாம் அறிந்த விடயமே. இவ்வேளையில் இப்பெண்களுக்கு குரல் கொடுத்து அறியாமைக்கால பண்புகளிலிருந்து மீட்டெடுத்த இஸ்லாம் அவர்களுக்குரிய கடமையுணர்வுகளையும் உணர்த்திக் காட்டுகிறது.

அவ்வாறே ஆண்களின் செயலை வைத்து அந்தஸ்தை உயர்த்திக் காட்டிய ஜாஹிலியக் காலத்திற்கு மாற்றமாக பெண்களும் சிறந்த செயலால் கௌரவப்படுத்தக்கூடியவர்கள் என்று இஸ்லாம் கீழ்வரும் வசனம் மூலம் எடுத்துக் காட்டி பெண்களை சிறப்புப்படுத்துகிறது.

"ஆண் அல்லது பெண் - விசுவாசம் கொண்டவராக இருக்க யார் நற் செயலை செய்தாரோ நிச்சயமாக நாம் அவரை நல்ல வாழ்க்கை வாழச் செய்வோம். இன்னும் நிச்சயமாக அவர்களுக்கு அவர்களது கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிக அழகானதைக் கொண்டு நாம் கொடுப்போம்." (அந்நஹ்ல் - 97)

இவ்வாறான உரிமைகளையும், அந்தஸ்துக்களையும் கொடுத்து சிறப்புப்படுத்திய இஸ்லாம், அவள் தனது வாழ்க்கையை சீரான வழியால் நடத்திச் செல்ல பெண்ணுக்கென குறிப்பான ஒழுக்கநெறிகளையும் வணக்க வழிபாடுகளையும் குறிப்பாக்கியுள்ளது.

குறிப்பாக:

 o பெண்னிண் உடல் அலங்காரம் :

பெண்ணைப் பொறுத்த வரையில் தன்னை அலங்கரிக்கும் ஆர்வத்தை அதிகம் கொண்டவளாக இருக்கிறாள். இன்னும் பெண் இயற்கையிலும் அப்படியான இயல்பைக் கொண்டுதான் படைக்கப்பட்டிருக்கிறாள். இருப்பினும் பெண் தன்னை அலங்கரிக்கும் இப்பண்பை இஸ்லாம் வரவேற்று அதை ஒரு கடமையாகவும் ஆக்கியுள்ளது என்பது கண்கூடே. குறிப்பாக திருமணமான ஒரு பெண் தன்னை அலங்கரித்து அவள் கணவனை மகிழ்விப்பதை ஒரு கடமையாகவும் இஸ்லாம் கூறிக்காட்டுவது ஜபிர் ரளியல்லாஹு அன்ஹு மூலம் புகாரியில் பதிவாகியுள்ள பின்வரும் நபி மொழி மூலம் தெளிவாகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாம் ஒரு போரிலிருந்தோம். பின் நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது (எங்கள் வீடுகளுக்குள்) நுழையச் சென்றோம். அதற்கு நபியவர்கள் "தலைவிரி கோலத்திலிருக்கும் பெண் தன் தலையை வார்வதற்காகவும், கணவனைப்பிரிந்த பெண் தன்னுடைய உரோமங்களை நீக்கி சுத்தம் செய்வதற்காகவும் இரவில் நீங்கள் நுழையும்வரை தாமதியுங்கள்" எனக்கூறினார்.

எனவே, இதற்கு மாற்றமாக பெண் அவலட்சனமாக இருக்கவேண்டுமென்று இஸ்லாம் கூறவில்லை. எனினும் குறிப்பிட்ட கட்டளைகளையும் சலுகைகளையயும் வழங்கி அதனூடாக மனிதன் தவறினுள் நுழைந்து விடாமல் இருக்க அதற்கான ஒரு வேலியையும் இஸ்லாம் இட்டுள்ளது. குறிப்பாக, தொழுகையைக் கூட அதற்கென ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை இட்டு மட்டுப்படுத்தியுள்ளது. அதேபோன்றுதான் பெண் என்பவள் தன் அலங்காரத்தில் எல்லை மீறிச்சென்று ஆபாசமான தோற்றத்தையோ ஹறாமான அலங்கார முறையையோ கையாள்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. எனவே, பெண்கள் தன்னை அலங்கரிப்பதில் கவனம் செலுத்தும் சில அம்சங்களைப் பார்ப்போம்.

குறிப்பாக, பெண் தன்னை அலங்கரிப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஷரிஅத்தின் வரையறையைவிட்டும் வெளியேறியவையாக இருக்கக்கூடாது. உதாரணமாக ஒட்டுமுடிவைத்தல், பல்லைக் கூராக்கல், பச்சை குத்தல், தலைமுடிக்குச் சாயமிடல், முடியை கட்டையாக வெட்டுதல், தலை முடியை உயர்த்திக் கட்டுதல், இமை முடியை நீக்குதல், நகங்களை நீளமாக வளர்த்தல் என்பனவற்றைக் குறிப்படலாம். இவைகள் பற்றி நபியவர்கள் கூறிருப்பதை ஒவ்வொன்றாக எடுத்து நோக்குவோம்.

 o ஒட்டு முடிவைத்தல் :

இன்றைய பெண்களில் சிலர் இயற்கை முடிகளுடன் செயற்கை முடிகளை சேர்க்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். இதைப் பெரும்பாலும் கலை நிகழ்ச்சி மற்றும் திருமண வைபவத்தில் ஈடுபடும் பெண்களிடமும். வயோதிபத்தின் காரணத்தால் முடிவுதிர்ந்த பெண்களிடமும் காணலாம். இதை முஸ்லிம் பெண்கள் காபீரான பெண்களை கண்மூடித்தனமாக பின்பற்றியதன் காரணமாகவும், சுன்னத்தை அறியாததன் காரணமாகவும் செய்து வருகிறார்கள இது பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்று நோக்கும்போது அஸ்மா பின்த் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக நபியவர்களைத் தொட்டும் முஸ்லீமில் பதிவாகியுள்ள ஹதீஸ் விளக்குகிறது.

"ஒரு சமயம் ஒரு பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நிச்சயமாக எனக்கு மணம் முடிக்கப்போகும் ஒரு மகள் இருக்கின்றாள். அவளுக்கு சிரங்கு நோய் ஏற்பட்டு அவளின் தலைமுடி உதிர்ந்து விட்டது. எனவே, அவளிற்கு நான் பொய்முடி சேர்க்கவா? எனக்கேட்டாள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அல்லாஹ் ஒட்டுமுடி சேர்ப்பவனையும், சேர்க்குமாறு வேண்டுபவரையும் சபிக்கிறான்" என்று பதிலளித்தார்கள்."

எனவே, ஒரு பெண் தன் அலங்காரத்தை மெருகூட்ட தற்காலிய அலங்காரமான ஒட்டுமுடி சேர்த்தலை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கின்றது என்பது தெளிவாகின்றது.

இவ்வாறே ஒரு பெண் தன்னை அலங்கரிப்பதில் இஸ்லாத்தின் வரையறைக்கு அப்பாற்பட்ட முறைகளையும் அதன் தீர்ப்புக்களையும் பார்ப்போம்.

நாகரீகம் என்ற பெயரில் அனாச்சாரங்களும், கலாச்சாரச் சீரழிவுகளும், அலங்கரிக்கப்பட்டு மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்டவைகளும் அலங்காரமென மெருகூட்டப்பட்டு அவையனைத்தும் மார்க்கம் என்ற பெயரில் மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ளது. இதைப் பின்பற்றுவதில் முஸ்லிம் சமுதாயப் பெண்களும் விதிவிலக்கல்ல.

ஓவ்வொரு பெண்னும் தன் சமுகத்தில் அவளுடைய திறமை, ஆளுமை போன்றவற்றைக் கொண்டு தான் ஈர்க்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுவது போல் அவளுடைய அழகை கொண்டும் ஈர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றாள். இவ்வாறு மிதமிஞ்சி ஆசைப்படக் கூடிய பெண்கள் தன் அழகை மெருகூட்டுவதற்காக இறைவனின் வரையறைகளுக்கு அப்பாற்பட்ட முறைகளையும் நடைமுறைப்படுத்தத் துணிகின்றாள். இந்த விடயத்துடன் தொடர்பான இன்னும் சில விடயங்களையும் உற்று நோக்குவோம்.

 பச்சை குத்தல் :

சில பெண்கள் தன் அழகை மெருகூட்டுவதற்காக தன் உடம்பின் சில பாகங்களில் உருவங்களையோ அல்லது தமக்கு விருப்பத்துக்குரியவர்களின் பெயர்களையோ (உதாரணமாக : அவளின் நேசத்திற்குரிய நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற இவ்வாறான பிரபல்யமானவர்களின் பெயர்களை) பொறித்து பச்சை குத்துகின்றனர். இவ்வலங்காரம் இஸ்லாமிய வரையறைக்கு அப்பாற்பட்டதாகும். ஏனென்றால் மார்க்கத்திலே ஓரு உறுப்பை நோவினை செய்வதென்பது தடுக்கப்பட்ட ஓரு செயலாகும். அது ஓரு வணக்க வழிபாட்டிற்காக இருந்தாலும் சரியே இதனை புஹாரியில் பதிவாகியுள்ள அபூ தர்தாரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சம்பவம் தெளிவுபடுத்துகின்றது.

அதாவது அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரின் ஆத்மாவிற்குரிய மற்றும் அவரைச் சூழவுள்ளவைகளுக்குரிய உரிமைகளையும் பேணாது இறைவனை நெருங்குவதற்காக இரவு முழுதாக வணக்கத்தில் ஈடுபட்டார். அச்சமயம் அவருடன் இருந்த மற்றொரு ஸஹாபியான சல்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

"உன் இரட்சகனான அல்லாஹ்வுக்கு உம்மிடம் சில உரிமைகள் உள்ளன, இன்னும் உன் குடும்பத்தினருக்கும் உன்னிடம் சில உரிமைகள் உள்ளன".

எனவே, ஒவ்வொரு உரிமைகளையும் அதன் உரியவர்களுக்கு வழங்கி விடுவீர்களாக எனக் கூறினார். அப்போது இது நபியவர்களிடத்தில் எத்திவைக்கப்பட்ட போது நபியவர்கள்"சல்மான் உண்மை கூறிவிட்டார்" என பதிலளித்தார்கள்;.

இன்னும் இச்செயலில் ஈடுபடும் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தும் உள்ளார்கள் இதனை புகாரிக் கிரந்தத்தில் பதிவாகியுள்ள கீழ்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் தன் தலைமுடியுடன் ஒட்டு முடியை சேர்க்குமாறு வேண்டும் பெண்னையும், இன்னும் தன் உடலில் பச்சைகுத்துவதன் மூலம் அடையாளமிட வேண்டும் என்கின்ற பெண்களையும் நபியவர்கள் சபித்துள்ளார்கள்.

இன்னும் மார்க்க அறிஞர்கள் சிலர் இது பற்றி கூறுகையில் "பச்சை குத்தப்பட்ட இடத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டே இருக்கிறது. இதனால் அவ்விடம் அசுத்தமாக ஆகிவிடுகின்றது. ஆகையால் பச்சை குத்தியவர் அவ்விடத்திலிருந்து எந்தவொரு பாதிப்பையோ அல்லது அவ்வுறுப்பின் பிரயோசனத்தை இழந்து விடுவாரோ என ஐயப்படாத பட்சத்தில் பச்சை குத்தப்பட்ட இடத்தை காயப்படுத்தியேனும் அழிப்பது அவர் மீது கடமையாகும்". அவ்வாறு அவர் பயப்படுவாரானால் அதைக் காயப்படுத்தாமல் விட்டு விட்டு அவர் பாவத்தில் விழுந்ததற்காக (தௌபா ) பாவ மன்னிப்புக் கேட்டு மீளுதல் வேண்டும்.

 கழற்றுதல் அல்லது பிடுங்குதல் :

இறைவன் அமைத்த அமைப்பிலிருந்து அழகை நாடி அவலட்சனமாக தென்படக்கூடிய ஓன்றை கழற்றிவிடுதல் அல்லது பிடிங்கி விடுதல் போன்றவற்றை இது குறித்து நிற்கின்றது. உதாரணமாக இரு புருவ முடிகளும் இணைந்திருந்தால் அவை இரண்டிற்கும் மத்தியில் உரோமங்களை நீக்கி இடைவெளி ஏற்படுத்தல், அல்லது அடர்த்தியாக இருந்தால் அதனை மெல்லியதாக்கி உயர்த்தல் என்பன இதனையே சாரும். அதே போல் வைபவங்களில் கலந்து கொள்ளும் பெண்கள் இன்னும் மணப்பெண்கள் போன்றவர்கள் தங்களை அழகுபடுத்துவதற்காக அவர்களது இரு கை, கால்களில் இருக்கக் கூடிய உரோமங்களை நீக்கி அவ்விடங்களை மருதாணி இடுவதன் மூலம் அலங்கரித்துக் கொள்வதும் இவ்வகையிலேயே உள்ளடங்கும். குறிப்பாக இவைகள் இறைவன் படைப்பில் குறை கண்டு அதை நீக்குவதற்காக மனிதன் எடுக்கும் வழிமுறைகளில் ஓன்று என்று சொல்வதில் ஐயமில்லை.

இது பற்றி மஸ்னத் அஹமத்தில் பதிவாகியுள்ள நீண்ட சம்பவம் ஓன்று கூறுகின்றது.

இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு இவர்கள் கூறுகின்றார்கள்; "நபியவர்கள் கழற்றக் கூடியவளையும், பல்லைக் கூறாக்கக் கூடியவளையும், முடி சேர்க்க்கூடியவளையும், பச்சை குற்றக் கூடியவளையும் தடுத்துள்ளார்கள்"

இவ்வாறு அனுமதியற்ற முறையில் இறைவன் படைப்பிலிருந்து இல்லாத ஒன்றை உருவாக்குவதோ அல்லது இருக்கும் ஒன்றை நீக்குவதோ இறைவனின் படைப்பை மாற்றியமைப்பதில் உள்ளடங்கும்.

இஸ்லாம் எவ்வாறு ஓரு பெண் தனது மர்மஸ்தானம் மற்றும் அக்குள் பகுதியில் உள்ள முடியை நீக்குவதற்கு கடமையாக்கியுள்ளதோ அதே போல் சில இடங்களிலிருந்து முடி அகற்றப்படுவதும் ஹராமாக்குகின்றது. என்றாலும் பெண்கள் மீசை, தாடி போன்ற தன் பொதுவான வடிவத்திற்கு மாற்றமானவைகள் முளைத்தால் அதை நீக்கி விடுவதில் இஸ்லாம் அவர்களுக்கு அனுமதியை வழங்குகின்றது.

மேலும் சிலருடைய பற்கள் சீரில்லாமல் அலங்கோலமாக முளைத்திருக்கும் உதாரணமாக முரசு பூராகவும் அடுக்குப்பல்லாக முளைத்தல் அல்லது முரசில் அங்கொன்று இங்கொன்றுமாக வாயை மூட முடியாத அளவிற்கு வாய் நிரம்பக் காணப்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில் சிகிச்சை மூலம் சீராக்கிக் கொள்வது அனுமதியாகும். ஆனால் அழகிற்காக எந்தவித சிக்கலும் அல்லது தடையும் உடம்பிற்கு ஏற்படாத நிலையில் பல்லைக் கூறாக்கல், அழகுபடுத்தி சமப்படுத்தல் என்பவற்றை நபியவர்கள் சபித்துள்ளார்கள். இன்னும் இது போன்று மேலதிக விரல்கள், மேலதிக சதைத்துண்டுகள் உருவாகுதல் (உதாரணமாக கையில் 6 அல்லது 7 விரல்கள் காணப்படல் அல்லது பிறக்கும் போதே 3 கைகள் இருத்தல், இரண்டு பாதங்கள் காணப்படுதல்) போன்ற நோயுள்ளவர்கள் சிகிச்சை மூலம் அதை சீர்படுத்துவதில் எந்தவித குற்றமும் இல்லை.

மேற்குறிப்பிட்ட அனைத்து முறைகளும் தவிர்த்து இன்னும் சில அலங்கார முறைகளும் மணப்பெண் அலங்கரிக்கும் சந்தர்ப்பங்களில் கையாளப்பட்டு வருகின்றன. உதாரணமாக சுருண்டிருக்கக் கூடிய முடியை நிமிர்த்துதல், தலைமுடி சுருட்டுதல், கண் இமைகளுக்கு சுருமா இடல், முகத்தில் கிறீம் வகைகளை பாவித்தல், உதட்டுச்சாயம் பூசுதல், மருதாணி இடல் போன்றவற்றை குறிப்பிடலாம். இவையனைத்தும் இஸ்லாத்தின் பார்வையில் அனுமதிக்கப்பட்டவைகளே ஆகும்.

 குறிப்பு :

புருவ முடி குறைவாக காணப்படக்கூடிய ஓரு பெண் சுருமா இடுவதன் மூலம் அதிகமாக்கிக் காட்டுதல் தவறாகும். அதே போன்று தண்ணீர் புகமுடியாத நகப்பூச்சுக்களை பூசுவது இது கடமையான குளிப்பு, வுழு என்பவற்றுக்குத் தடையாக அமையும்.

மேற்கூறப்பட்ட அனைத்து முறைகளையும் தவிர்த்து பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை என்ற பெயரில் ஒன்று மக்களுக்கு மத்தியல் மிகத்தீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது. அதாவது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அடிப்படை குறைகளை பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மூலம் மாற்றியமைத்தல். ஊதாரணமாக: மூக்கை நீளமாக்கல், வயோதிகத்தினால் ஏற்படக்கூடிய முகச்சுருக்கங்களை நீக்கி தோலை நிமிர்த்துதல் அல்லது தான் விரும்பிய அலங்காரத்தின் அடிப்படையில் உடம்பின் தோலை மாற்றல் (கறுப்பு நிறத்தோலை உடையவர்கள் வெண்ணிறத் தோலை மாற்றுதல்) என்பவற்றை குறிப்பிடலாம் இவ்வாறு இறைவனால் ஏற்படுத்தப்பட்ட குறைகளை மறைப்பதற்காக கையாளும் இம்முறைகள் மிகக்பெரும் பாவமாகும்.

இறைவனுடன் ஷைத்தான் மனிதர்களை வழிகெடுப்பதாக சவால் விட்ட போது அவர்களுக்கு கட்டளையிடுவேன் "அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்" என்று கூறியது இது திருமறையில் 4வது அத்தியாயத்தில் 119வது வசனத்தில் குறிப்பிடுகின்றது.

எனவே, மேற்கூறப்பட்ட விடயங்களைச் செய்வதன் மூலம் ஷைத்தானின் சூழ்ச்சிகளுக்கு உள்ளாகுவோமேயானால் பெரும் நஷ்டவாளிகளாக ஆகிவிடுவோம். இதனையே இறைவன் மேற்கூறப்பட்ட வசனத்தைத் தொடர்ந்து "அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்" என்று கூறுகின்றான். எனவே, மேற்கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இறைவனால் தடைசெய்யப்பட்ட அலங்கார முறைகளை தவிர்த்து இறைவனின் வரையறைகளை கடைப்பிடிப்போமாக.

-ரிப்கா பின்த் ஆதம்பாவா அஷ்ஷரயிய்யா

source: http://srilankamoors.com/AAYWU.html