Home கட்டுரைகள் அரசியல் தமிழக முஸ்லீம் அரசியல் சூழலும், ஆபத்தான இஸ்லாமியவாதிகளின் போக்கும்!
தமிழக முஸ்லீம் அரசியல் சூழலும், ஆபத்தான இஸ்லாமியவாதிகளின் போக்கும்! PDF Print E-mail
Wednesday, 08 February 2012 12:03
Share

தமிழக முஸ்லீம் அரசியல் சூழலும், ஆபத்தான இஸ்லாமியவாதிகளின் போக்கும்

பொதுவாக முஸ்லீம் சமூகத்தில் பல்வேறு வகையான குழுக்கள் இருந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவிப்பு செய்ததை போல் 73 க்கும் மேற்பட்ட குழுக்கள் இருந்தாலும் பொதுவாக அவற்றை மூன்று பிரிவாக பிரிக்கலாம். ஒன்று எக்குழுவிலும் இருக்க மாட்டார்கள் அல்லது அவர்கள் இருக்கின்ற குழுவுக்கும் இஸ்லாத்திற்கும் பெயரளவிற்கும் சம்பந்தமிருக்காது.

ஒரு சாதாரண முஸ்லீமிடத்தில் காணப்படும் தொழுகை, நோன்பு போன்றவற்றில் கூட பலவீனமாக இருப்பார்கள். அவர்களின் குழுக்களோ வெறும் உலக விஷயங்களில் ஈடுபட கூடியவர்களாக, தங்கள் பொருளாதார அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் மட்டும் கவனம் செலுத்துவார்கள்.

இன்னொரு வகையினர் எப்படிப்பட்டவர்கள் என்றால் இஸ்லாத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் போன்று தோற்றமளிப்பார்கள். தாடியின் அளவு குறைந்தது இவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் அதீத முனைப்பு காட்டுவார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு தான் தொழுதார்கள் என்று கூறுவதோடு நில்லாமல் தங்களுக்கு மாற்றமாக கையை அசைத்தால் அல்லது அசைக்காமல் இருந்தால் அவர்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் அளவு வணக்க வழிபாடுகளில் தீவிரமானவர்கள்.

இவர்களில் வேறு சிலர் இம்மாதிரி தர்க்க ரீதியாக சிந்திப்பவர்கள் அல்ல என்றாலும் தொழுகையோடு திருப்தி பட்டு கொள்பவர்களாக இருப்பவர்கள்.

ஆனால் இஸ்லாத்தை முழுமையாய் இம்மண்ணில் நிலைநாட்டுவதில் ஆர்வமிருக்காது மாத்திரமல்ல, இஸ்லாமிய அரசியல் என்றால் தொற்று நோயை பார்த்து விரண்டோடுபவனை போல் ஓட கூடியவர்களாய், இஸ்லாமிய ஆட்சியாய் என்றாலே அலர்ஜியாய் பக்கம் பக்கமாய் விமர்சனம் செய்ய கூடியவர்களாய் உள்ளனர். தொழுகையில் ஜமாத்தின் ஒற்றுமைக்காக சிறிய விஷயங்களை விட்டு கொடுக்காதவர்கள், மாலை போட்டு திருமணம் செய்தாலே இஸ்லாமிய திருமணம் அல்ல என்றும் பத்திரிகை அடித்தாலே 'பித்அத்' என்று கூக்குரலிடுபவர்கள் வரதட்சணைக்கு எதிராக முழக்கமிடுபவர்கள், இஸ்லாமிய ஆட்சி என்றால் மாத்திரம் "அல்லாஹ் யாதோர் ஆத்மாவையும் சக்திக்கு மேல் சோதிப்பதில்லை" (அல்குர்ஆன் 2:286 ) எனும் திருமறை வசனத்தை சொல்லி அவ்வுணர்வை மங்க செய்வதை பார்க்கின்றோம்.

மூன்றாவது குழு யாரெனில் திருமறை குரானில் சொல்கின்ற "மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்" (அல்குர்ஆன் 3:104). படி இருக்கும் இஸ்லாமியவாதிகளே முஸ்லீம் உம்மத்தில் இருக்கும் உன்னதமான குழு. இவர்கள் இஸ்லாத்தை கூறு போட்டு பிரிக்காமல், நுனிப்புல் மேயாமல் இஸ்லாத்தை ஆழமாய் விவாதிப்பதோடு நின்று விடாமல் இஸ்லாத்தை தனிப்பட்ட வாழ்வில் கடைபிடிப்பதோடு அதை பிற மக்களுக்கும் சொல்ல கூடியவர்களாய் இருப்பார்கள். மேலும் இஸ்லாத்தை மண்ணில் நிலைநாட்ட போராட கூடியவர்களாய் அல்லாஹ் திருமறை குரானில் சொல்கின்ற படி அழகான வியாபாரம் செய்ய கூடியவர்களாய் இருக்கின்றனர்.

"ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்." (அல்குர்ஆன் 61 : 10,11) என்று சொல்கின்ற படி தீனை மேலோங்க செய்ய, மார்க்கத்தை நிலைநாட்ட போராடுகின்றவர்களாய் இருக்கின்றன. இஸ்லாம் வலியுறுத்தும் இம்மூன்றாம் குழுவில் தற்போது நான்காம் படையாக உருவாகியுள்ளது so called இஸ்லாமியவாதிகள் எனப்படுவோர் ஆவார்கள். ஆம் இஸ்லாமியவாதிகளிலேயே ஒரு புதிய குழுவாய் இந்நவீன இஸ்லாமியவாதிகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஆபத்தாய் உள்ளனர் என்றால் அது மிகையானதல்ல.

இதை விரிவாய் விளங்க தமிழக அரசியலையே எடுத்து பாருங்கள். முஸ்லீம் லீக் தேர்தலில் போட்டியிடுவதை யாரும் ஆபத்தாய் பார்ப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் இயல்பிலியே தங்களை ஓர் அரசியல் கட்சியாக அடையாளம் காட்டி கொண்டவர்கள். வன்னியர்களுக்கு ஓர் வன்னியர் சங்கம், பா.ம.க போல் அல்லது தலித்களுக்கு ஓர் புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் போல் கவுண்டர்களுக்கு ஓர் கொ.மு.க போல் முஸ்லீம்களுக்கான ஓர் கட்சி எனும் அடிப்படையில் அவர்களின் நிலைப்பாடில் குறை காண வாய்ப்பில்லை. ஆனால் குர்ஆன், ஹதீஸ் படி தான் நடப்போம் என்று சமூக மறுமலர்ச்சிக்காக ஏகத்துவத்தின் அடிப்படையில் (இது முழுமையான ஏகத்துவம் அல்ல, so called ஏகத்துவம் என்பது வேறு விஷயம்) சமூகத்துக்காக ஆரம்பிக்கட்ட இயக்கங்கள் ஜனநாயக அரசியலில் குதிக்க ஆரம்பித்த போது முஸ்லீம் லீக்கை போல் நேரடியாக குதிக்காமல் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்றும் மக்களுக்கு போராட மட்டுமே அரசியலில் குதிப்பதாகவும் கூறினார்கள்.

பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட கழகங்களும், ஜமாத்துகளும், ஜனநாயகம் ஹராம், ஜிஹாத் ஒன்றே தீர்வு என இளைஞர்களுக்கு வெளிச்சத்தை காட்டியவர்களும் வெவ்வேறு பெயர்களில் உருமாறி நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தின் காவலர்களாய் பரிணாமம் எடுத்தும் அரசியலில் ஈடுபடுவதை பார்க்கின்றோம். ஏன் இவர்களின் அரசியல் ஆபத்தானது என்றால் இவர்களின் அரசியல் முஸ்லீம் லீக்கை போல் அல்லாமல் இஸ்லாமிய சாயம் பூசப்பட்ட அரசியலாக சிலரால் இஸ்லாமிய அரசியலாகவே பார்க்கப்படும் ஆபத்து உள்ளதை பார்க்கின்றோம்.

ஜனநாயக அரசியலில் நுழைந்த பிறகு எந்தளவு மாறி போய் விட்டனர் என்றால் ஜனநாயகம் நவீன கால இணைவைப்பு என்றவர்கள் ஜனநாயகத்தின் காவலர்களாய், நரபலி மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மோடியின் தோழிக்கு வக்காலத்து வாங்குபவர்களாய் மாறிய கொடுமையை பார்க்கின்றோம். அது போல் அரசியல் சாக்கடை என்பதால் நாங்கள் போட்டியிட மாட்டோம் ஆனால் முஸ்லீம் வேட்பாளர்களுக்கு எதிராக உடன்பிறப்புகளுக்கு வேட்டையாடும் ஜமாத்துகளும் ஒரு காலத்தில் ஓட்டு போடுவதை ஹராம் என்று சொன்னவர்கள் தாம் என்பதை மறந்து விட கூடாது.

இவற்றிக்கெல்லாம் மாற்றாய் கிலாபத் சிந்தனையை தமிழ் கூறும் நல்லுலகில் பிரபலமாக்கியவர்கள், ஃபிக்ஹு பிரச்னைகளுக்குள் மாட்டி கொள்ளாமல் உலகளாவிய அளவில் இஸ்லாத்துக்காக போராடிய இயக்கங்களையும் வீரர்களையும் அடையாளம் காட்டியவர்கள், இன்று அதிகாரம் அல்லாஹ்வுக்கே என்பதற்கு பதிலாக அதிகாரம் மக்களுக்கே என முழங்க கூடிய நிலையை பார்க்கின்றோம். பயத்திலிருந்தும் பசியிலிருந்தும் விடுதலை என்று சொல்லி கொள்ளும் இவர்கள் தாங்கள் வெளியிடும் மைல்கற்கள் போன்ற புத்தகங்களை படிக்கின்றார்களா என்பதும் தெரியவில்லை. இதே நிலை சென்றால் இஸ்லாத்திலிருந்தும் விடுதலை என்று போய்விடும் அபாயம் இருப்பதையும் மறுப்பதிற்கில்லை (அல்லாஹ் பாதுகாப்பானாக).

இவர்களால் இஸ்லாத்துக்கு முரணான ஜாஹிலிய்யாவிலிருந்தும் முழுமையாய் விடுபடவில்லை. அதே சமயத்தில் தாங்கள் சுவாசித்த இஸ்லாமிய இயக்கங்களில் தாக்கத்தினால் இஸ்லாத்தையும் மறக்க முடியாமல் தவிப்பதை பார்க்கின்றோம். இப்படிப்பட்ட நான்காம் படை இஸ்லாமியவாதிகளின் வளர்ச்சி என்பது இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஆபத்தானதாகவே முடியும். இவர்கள் அந்தந்த சமயத்திற்கு தகுந்த மாதிரி பேச கூடியவர்களாக இருப்பது ஆபத்தானது. வெறும் அரசியல் மட்டும் பேசினால் பரவாயில்லை. அவ்வப்போது இஸ்லாத்தையும் பேசுவது தான் பிரச்னை. ஏனென்றால் இவர்கள் பேசுவது, செய்வது அனைத்தும் இஸ்லாமாக கணிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

அதனால் தான் இவர்களால் சாதாரண சமயங்களில் அன்வர் அல் அவ்லாக்கியை சிலாகித்தும் தேர்தல் சமயங்களில் அதிமுகவை ஆதரித்தும் பேச கூடியவர்களாய் உள்ளனர். செசன்யாவின் போரட்டத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் உள்ளூரில் திமுகவை ஆதரிக்க கூடியவர்களாகவும் உள்ளனர். இன்னும் சிலர் திமுக, அதிமுகவை ஆதரிப்பது தான் ஹராம், ஆனால் முஸ்லீம்களை ஆதரிப்பது ஹலால் எனும் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளனர். இது இஸ்லாத்தின் அரசியல் கொள்கையை பற்றிய அறியாமையை காட்டுகிறது. அதனால் தான் பேரறிஞர்கள், நவீன இமாம்கள் என கருதப்படுவோர் கூட இஸ்லாத்தின் அரசியல் கொள்கை எவ்வடிப்படையில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்பதை குறித்து தான் கரிசனை காட்டுகிறதே தவிர யார் பொறுப்பில் இருக்கிறார், தேர்ந்தெடுக்கப்படும் முறை குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை என்பதை உணர மறந்து விடுகின்றனர்.

ஆனால் இந்நான்காம் படையினர் உலகில் வெற்றி பெற வேண்டுமென்றால் குறைந்தது அரசியலையாவது ஒழுங்காக செய்ய வேண்டும். அதற்கு இஸ்லாத்தை பேசாமல் அரசியலை மட்டும் செய்யலாம். இல்லை எங்களுக்கு கொள்கை தான் முக்கியம், மார்க்கத்தை நிலைநாட்டுவது தான் எங்கள் நோக்கம் என்று நினைத்தார்கள் என்றால் அவர்கள் இரண்டாங்கெட்டான் நிலையை தவிர்த்து விட்டு இஸ்லாத்தை இஸ்லாமின் மூலமே நிலைநாட்ட முடியும் என்பதை உணர்ந்து உண்மையான இஸ்லாமியவாதிகளாய் மாறுவதன் மூலம் ஈருலகிலும் நன்மை பெற்று கொள்ள முடியும். அத்தகைய கொள்கை குன்றுகளாய் மாற அல்லாஹ் நமக்கு தவ்பீக் செய்வானாக.

-இறைவனின் அடிமை

source: http://www.islamiyakolgai.blogspot.in/2011/04/blog-post.html