Home இஸ்லாம் ‘துஆ’க்கள் இறைதியானம் (திக்ர்) எப்படி அமைய வேண்டும்? கொஞ்சம் யோசிக்கலாமே!
இறைதியானம் (திக்ர்) எப்படி அமைய வேண்டும்? கொஞ்சம் யோசிக்கலாமே! PDF Print E-mail
Friday, 03 February 2012 08:46
Share

இறைதியானம் (திக்ர்) எப்படி அமைய வேண்டும்?

    கே.ரஹ்மதுல்லாஹ் மஹளரி    

ஒரு மாலைப்பெழுதில் மளிகைச் சாமான் வாங்க பையைத் தூக்கிக்கொண்டு கடைத்தெருவுக்குச் சென்றேன். அங்கே....

ஒரு கடையில் கையில் தஸ்பீஹ் மணி சகிதமாய் அமர்ந்திருந்த கடை ஓனரைக் கண்டவுடன், ‘(இறைவிசுவாசியாகிய) அவர்கள் எத்தகையவர்கள் என்றால் நின்ற நிலையிலும், உட்கார்ந்த நிலையிலும், படுத்த நிலையிலும் ஆக எல்லா நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூறுகின்றார்கள்’ (அல்குர்ஆன் 3 : 191) என்ற இறைவசனம் நிழலாடியது.

அதே நேரத்தில்.....

கையில் தஸ்பீஹ் மணியோடு காட்சி தந்த அவர் பணியாளர்களை வேலை ஏவிக் கொண்டிருந்தார். பொருட்களுக்கான காசையும் அவ்வப்போது கணக்குப்பார்த்து கவனமாய் கல்லாவில் போட்டுக்கொண்டிருந்தார்.

இத்தனை வார்த்தையாடல் மற்றும் செயல்களுக்கிடையிலும் அவருடைய கையிலுள்ள தஸ்பீஹ்மணி மட்டும் உருட்டப்பட்டுக் கொண்டே இருந்தது.

அவரது செயல்பாட்டைக் கண்ட எனக்கு, இவர் என்ன ஜெபமாலை மூலம் இறைதிக்ருகளை எண்ணிக் கொண்டிருக்கின்றாரா? அல்லது தனது வார்த்தைகளை எண்ணிக் கொண்டிருக்கின்றாரா? என்ற சந்தேகம் வந்துவிட்டது.

இவர் மாத்திரமல்ல நிறையபேர் இப்படித்தான் எவ்வித சிந்தனையுமற்ற நிலைபாட்டில் சடங்கு போல இறைதியானம் மற்றும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இறைவனை நினைவு கூறுதல் என்பதற்கு தஸ்பீஹ் மணியை உருட்டுதல் என்று மட்டுமே அர்த்தப்படுத்திக் கொண்டதன் விளைவுகளே மேற்குறிப்பிடப்பட்ட நிகழ்வு.

‘அவர்கள் எல்லாநிலைகளிலும் இறைவனை நினைவு கூறிக் கொண்டிருக்கின்றார்கள்’ என்று சொன்ன இறைவன் அதையடுத்த வசனத்தில் ‘(அவ்வாறு வெறுமனே துதிப்பதோடு நின்றுவிடாமல்) வானங்கள் மற்றும் பூமியின் அமைப்பு குறித்து சிந்தித்து, அதனால் உந்தப்பட்டு உணர்ச்சிப் பொங்க ‘இறைவா! இவற்றை எவ்வித நோக்கமுமின்றி நீ வீணாகப் படைக்கவில்லை என்று பிரார்த்தனையும் செய்வார்கள்’ என்றும் குறிப்பிடுகின்றான்.

வெறும் உருட்டல் இறைதியானம் ஆகாது. அது சிந்தனையோடு கூடிய வெளிப்பாடாய் அமைதல் வேண்டும். அந்த வகையில் நமது இறைதியானம் (திக்ர்) எப்படி அமைய வேண்டும்? எந்த நிலையில் இறைதியான வார்த்தைகள் நமது நாவில் உதிர்க்க வேண்டும் என்பதை கொஞ்சம் சிந்திப்போமா?

எறும்பு முதல் யானை வரை என்று ஒரு சொல்லாடல் உண்டு. பார்வைக்கு எறும்பு சிறியதாகத் தோன்றினாலும் அதில் அடங்கியுள்ள அதிசயங்கள் ஏராளம். ஏன் தெரியுமா? எறும்புகளினால் அவற்றின் எடையைவிட ஐம்பது மடங்கு அதிகமான பளுவுடைய பொருட்களை நகர்த்த முடியும்.

பொருட்களின் பருமனையும் எறும்பின் உடலையும் ஒப்பிட்டு நோக்கும்போது உயிரினங்களுக்குள்ளேயே ‘பெரும் பளுவைத் தூக்கும் வீரர்கள்’ (ர்நயஎல றநiபாவ ஊhயஅpழைளெ) என்ற பட்டம் எறும்புகளுக்குத்தான் ரொம்பப் பொருந்தும்.

எறும்புகள் உணவு சேர்க்கும் முறையே அலாதியானது. உணவு தேடச்செல்லும் எறும்புகள் முதலில் மாதிரிக்காக ஒரு தானியத்தை எடுத்து வந்து புற்றுக்குள் தங்களை வழிநடத்தும் அரசியிடம் காண்பிக்கும். அரசி அதனை ஆயிவு செய்து ஓ.கே. சொன்னவுடன்தான் ஒரு பெருங்குழு வெளிக்கிளம்பிச் செல்லும். சேமித்த தானியங்களை கண்டமேனிக்கு வீசி எறிந்துவிடாமல் (உணவுகளை வீண் விரயம் செய்யும் மனித ஜென்மங்கள் கவனிக்க!) அவற்றின் மூக்கை உடைத்து (மனிதர்கள் நெல்மூட்டைகளை அடுக்கி வைப்பதுபோல்) முறையாக அடுக்கி வைக்கும். இதுபோன்ற பாதுகாப்பை பண்ணாவிட்டால் தானியம் ஈரம்பட்டு முளைக்கத் தொடங்கி பயனற்றதாகிவிடும் எனும் அறிவை அல்லாஹ் அந்த எறும்புக்கு வழங்கியுள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடியுமா?

உணவுப் பொருட்களைக் கண்டவுடனேயே தின்றுவிடாமல் மேலும் கீழும் பார்த்து கொஞ்ச நேரம் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் பரிசீலிக்கும். இரு எறும்புகள் சந்திக்கும்போது ஆண்டனாக்கள் போன்ற அவற்றின் உணர்வுக் கொம்புகள் ஒன்றையொன்று உரசக் காணலாம். இதுதான் அவை தகவல் பரிமாறிக்கொள்ளும் முறை.

ஆயிரக்கணக்கான எறும்புகள் வரிசையாகச் சென்று இருப்பிடத்திற்குக் கொண்டு செல்லவேண்டிய பண்டத்தை சூழ்ந்துகொள்கின்றன. ஒவ்வொன்றிற்கும் இலாக்காக்கள், பணிகள் ஒதுக்கப்படுகின்றன. சில எறும்புகள் பண்டத்தின் மீது ஏறி நின்று கொண்டு சூப்பர்வைஸர்களாக செயல்படுகின்றன. சில பொருட்களை இழுக்கும், சில தள்ளிக்கொடுக்கும். இப்படியாக அனைத்தும் இணைந்து சற்று நேரத்தில் பண்டகசாலைக்குள் பொருளைக் கொண்டு வந்து சேர்த்துவிடும்.

ஆக, ஒரு சின்னஞ்சிறிய பிராணி எறும்பு! அதற்கு இவ்வளவு பெரிய ஆற்றலா? தொலைதூரப் பார்வையா? கட்டுப்பாட்டுணர்வா? இவற்றை அந்த சின்னஞ்சிறு உள்ளத்தில் போட்ட அந்த ஒப்பற்ற இறைவன் எவ்வளவு பெரிய மகத்தானாக இருக்க வேண்டும் என்ற வியப்பில் ஆழ்கிறபோது அந்த நேரத்தில் நமது நாவில் வந்து விழ வேண்டும் ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூய்மையானவன்).

 

உலகில் ஆக மிகப்பெரிய ஜீவராசி திமிங்கிலம். சிறியது எறும்பு. நடுத்தர படைப்பு மனிதன். இம்மூவகை ஜீவராசிகளுக்கும் உணவளிப்பவன் அல்லாஹ்.

இதில் ஒரு அதிசயம் என்னவெனில், ஒரு எறும்பு நான்கு வருடங்கள் தொடர்ந்து சாப்பிடுகின்ற உணவு, ஒரு மனிதனைப் பொறுத்தவரைக்கும் ஒருவேளை உணவுதான். இதேபோல ஒரு மனிதன் நாற்பது வருடங்கள் தொடர்ந்து சாப்பிடுகிற உணவு ஒரு திமிங்கிலத்தைப் பொறுத்தவரை ஒருவேளை நேர உணவு தான்.

0 ஆகச்சிறிய எறும்புக்கும் அல்லாஹ் உணவளிக்கின்றான், நடுத்தர மனிதனுக்கும் உணவளிக்கின்றான், ஆகப் பெரிய திமிங்கிலத்திற்கும் அல்லாஹ் உணவளிக்கின்றான்.

அதிலும் கூட அல்லாஹ் யாருக்கு எந்தளவுக்கு நாடுகின்றானோ அந்தளவுக்குத் தான் கிடைக்கும். அவன் நாடாதவனுக்கு தலைகீழாக நின்றாலும் ஒரு குண்டுமணி அளவு கூட கிட்டாது.

இரு மலைகளுக்கிடையில் உள்ள ஒரு உணவு! அதை ஒருவனுக்கு கிடைக்கச் செய்திட வேண்டுமென இறைவன் நாடிவிட்டால் எந்த வகையிலும் அது அவனை வந்தடையும். அதை யாரும் தடுக்க இயலாது. அதே நேரம் எல்லாம் கைகூடி ஒரு உணவு ஒருவனின் இரு உதடுகளுக்கு மத்தியில் வந்துவிட்டது. விழுங்கவதற்குத்தான் தாமதம். ஆனால் அதை இறைவன் தடுத்துவிட முடிவு செய்துவிட்டால் எந்தக் கொம்பனாலும் அதை அவன் வயிற்றினுள் செலுத்த இயலாது என்பது ஆதாரப் பூர்வமான நபிமொழி.

பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு அதற்கான சாமான்களை மனைவியிடம் வாங்கிக் கொடுத்துவிட்டு அலுவலகத்துக்குப் புறப்பட்டுப் போனான் ஒருவன். இங்கே பிரியாணியை மனைவி மெனக்கட்டு சுவைபட சமைத்துக்கொண்டிருக்க, அங்கே அலுவலகத்தில் வேலையில் ஒரு லயிப்பின்றி கண்ணில் காணாத பிரியாணியை மானசீகமாய் கற்பனை செய்து கொண்டு நாம் அதை எப்போது சாப்பிடுவது என்ற யோசனையில் அவன் பரபரத்துக் கொண்டிருந்தான்.

ஒரு பனிரெண்டு மணி வாக்கில் அவன் வயிற்றில் ஒரு சின்ன ‘கடபுடா’. பாத்ரூம் சென்றவன் திரும்பி வந்து அமர்வதற்குள் மீண்டும் வயிற்றுக்குள் ‘கர்புர்’ அழைப்புக் குரல். இப்படியாக 12 மணி ஆரம்பித்து 1 மணிக்குள் ஏழெட்டு தடவை பாத்ரூமுக்கும் நாற்காலிக்குமாய் அலைந்ததில் ஃபியூஸ் கழண்டுபோய் அரை உயிராய்ப் போனான். அசந்துபோய் வீட்டுக்குள் நுழைந்தால் வீட்டில் கம கம பிரியாணி ரெடி! ஆனால் அதை ஒரு பிடி பிடிக்க அவன் வயிறு தான் ரெடியாக இல்லை.

மனைவியிடம் சொல்லிவிட்டு மாத்திரையைப் போட்டுக்கொண்டு படுக்கையில் விழுந்தான். கணவன் நிலையறிந்த மனைவியோ, தந்தை நிலையறிந்த பிள்ளைகளோ சரியாக சாப்பிட முனைவார்களா? ஆக்கி வைத்த பிரியாணி அப்படியே இருக்க, ‘அம்மா தாயே, பசிக்குது. உண்ண ஏதாவது இருந்தா கொடுங்கம்மா...’ என்றொரு யாசகக்குரல்.

அனைத்தும் அவன் பாத்திரத்தில் விழ ஓசியில் ஒரு கல்யாண விருந்து கிடைத்த பெருமிதம் யாசகனுக்கு. வயிறுமுட்ட சாப்பிட்டான் அவன்.

இன்று பிரியாணி சாப்பிட வேண்டுமென ஆசைப்பட்டவனுக்கு வாய்ப்புக் கிட்டாமல் அவன் எண்ணத்தில் மண். பசிதீர இன்று எங்காவது பழைய கஞ்சியாவது கிட்டாதா? என நிராசையுடனிருந்த யாசகனுக்கு மணக்கும் சுவையான பிரியாணி.

சுகர் ஃபேக்டரியின் ஓனராய் இருப்பார். ஆனால் சும்மா பெயருக்குக் கூட சுகரைத் தொட்டுத் தீண்ட முடியாத பரிதாப நிலை. இப்படி வசதி வாய்ப்புகள் வளமாய் பெற்றிருந்தும் விரும்பியதை உண்ணமுடியாமல் வாய்ப்பூட்டோடு பலர் காலந்தள்ளி கொண்டிருக்கையில், ‘என்னை எல்லாவித உணவுகளையும் எவ்விதக் கழிவுமின்றி திண்ண வைத்து, அதை முறையாக ஜீரணம் செய்யும் பழுதில்லா மிஷினையும் கொடுத்து, என்னை பாரினில் வாழ வைத்துள்ளானே எல்லாம் வல்;ல அல்லாஹ் என்ற நன்றிப் பெருக்கு’ நம் உள்ளத்தில் ஓடும்போது – அப்போது நமது நாவில் விழ வேண்டும் அல்ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே)

 

நன்றாகச் சப்பிய மாங்கொடடையைத் தான் நாம் பூமியில் புதைத்து வைக்கிறோம். கொஞ்ச நாளில் அதிலிருந்து முளைவிட ஆரம்பிக்கின்றது. பின் அது செடியாகி மரமாகிறது. பின் அதில் கிளைகளும், கிளையினுள் இலைகளுமாய் வெளிக்கிளம்புகின்றன. பின் அதிலிருந்து பூக்கள், காய்களும், கனிகளுமாய் நமக்கு அவை பயன்தருகின்றன.

இவை எல்லாவற்றையும் ஒரு சப்பிப் போட்ட மாங்கொட்டையில் அடக்கி வைத்துள்ள அந்த மாபெரும் அல்லாஹ்வின் அற்புதம் கண்டு மலைத்து நிற்கிறபோது,

வானிலிருந்து மழைநீர் விழுகிறபோது,

அது ஒரு கற்பறையின் மீது விழுந்தால் ஒரு பயனுமின்றி வீணாகிவிடுகிறது, அதுவே ஒரு நிலத்தில் விழுந்தால் நிலம் வளம் பெற காரணமாக அமைகிறது.

அதுவே ஒரு கிணற்றில் விழுந்தால் தாகித்தவர் தாகம் தீர்க்கும் பானமாக மாறுகிறது.

அதுவே சாக்கடையில் விழுந்தால் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி, நாற்றத்தை உண்டு பண்ணுவதோடு என் கடமை முடிந்து விடாது எனக் கூறாமல் கூறி பிணியை உற்பத்தி செய்கிறது.

அதே மழைத்துளி, கடலிலே வான் நோக்கி வாய்ப்பிளந்து நிற்கும் சிப்பிக்குள்ளே சென்று தஞ்சம் அடைகிறபோது முத்தாய் மாறி, விமைதிக்க முடியாத மதிப்பைப் பெறுகிறது. இப்படியான இறை மகத்துவங்களையும் இறையாற்றலகளையும் எண்ணி வாய் பிளக்கிறபோது – அப்போது நமது நாவில் வந்து விவேண்டும் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)

அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான சொற்கள்: "ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்" –திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

www.nidur.info