Home இஸ்லாம் கட்டுரைகள் சிறுநீரைக்கொண்டு துணியை துவைத்தால் சுத்தமாகுமா...?
சிறுநீரைக்கொண்டு துணியை துவைத்தால் சுத்தமாகுமா...? PDF Print E-mail
Sunday, 25 December 2011 08:38
Share

சிறுநீரைக்கொண்டு துணியை துவைத்தால் சுத்தமாகுமா...?

"நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்." (அல்குர்ஆன் 4 : 29)

பொய் சத்தியம் செய்தோ, ஏமாற்றியோ, அபகரித்தோ, மோசடி செய்தோ, திருடியோ, அநீதமாகவோ அல்லது விளையாட்டில் பந்தயம் கட்டியோ, சூதாட்டத்தின் மூலம் மற்றவர்கKஅது பொருளை சாப்பிடாதீர்கள். அதன் விளைவு படுபயங்கரமானது என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: "ஒருவர் நீண்ட பிரயாணத்தில் இருக்கிறார். தலை விரிகோலமாக புழுதி படிந்து ஆடைகள் அழுக்கடைந்த நிலையில் கைகளை வானத்தின்பால் ஏந்தி 'துஆ' செய்கிறார் என்றால் அவரது 'துஆ' அவசியம் ஏற்கப்படும். ஆனால், அவரது பானம் ஹராமாக, உணவு, உடை ஹராமாக இருப்பின் பிரயாண நிலையிலும் அவரது துஆ ஏற்கப்படாது" (ஸஹீஹ் புகாரி)

ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: "நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் "யா ரஸூலல்லாஹ்! எனக்கு து ஆ செய்யுங்கள். நான் எனது துஆ (பிரார்த்தனை)அங்கீகரிக்கப்படுபவனாக ஆக வேண்டும்" என்றேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: "உனது சம்பாத்தியத்தை பரிசுத்தமாக வைத்துக்கொள். அவசியம் உனது துஆ கபூலாகும் (ஏற்றுக்கொள்ளப்படும்) என்றார்கள்".

ஹளரத் யூஸூஃப் இப்னு அஸ்பாத் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்: "ஒரு வாலிபன் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டிருந்தால் ஷைத்தான் தன் பட்டாளத்திடம் சொல்வானாம்: அவன் உண்ணும் உணவு ஹரமாக உள்ளதா? அப்படி ஹராமாக இருப்பின் அவனைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். உணவு ஹரமாக இருக்க என்ன வணக்கம் செய்தாலும் அது வீண்தான்" என்பானாம்.

ஹளரத் இப்னுல் முபாரக் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்: "சந்தேகத்திற்குறிய ஒரு திர் ஹத்தை ஒருவர் திருப்பிக் கொடுப்பது ஒரு இலட்சம் திர் ஹத்ங்களை தர்மம் செய்வதைவிட எனக்கு விருப்பமானதாக உள்ளது."

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: "யார் ஹராமான பொருள் கொண்டு ஹஜ் செய்வாரோ அவர் இறைவா! நான் ஆஜராகி விட்டேன் எனக் கூறினால் மலக்குகள் சொல்வார்களாம்: "நீ ஆஜராகவில்லை, உனது ஹஜ் ஏற்புடையதுமில்லை".

ஹளரத் வஹிப்னுல்வர்த் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்: "உனது வயிற்றுக்கு போகும் உணவு ஹலாலா? ஹராமா? என்பதின் பால் நீ கவனம் செலுத்தாதவரை இரவு முழுக்க விழித்து வணங்கினாலும் எந்த பலனும் இல்லை."

ஹளரத் ஸுஃப்யானே ஸவ்ரி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்" நற்காரியங்களில் ஹராமான பொருளை செலவு செய்வது சிறுநீரைக்கொண்டு துணியை துவைப்பதைப் போல" என்றார்கள்.

ஹராம் கலந்திருக்குமோ என்ற பயத்தால் ஹலாலில் 9 பங்கை விட்டு விடுவோம். ஒன்றை பயன்படுத்துவோம்" என்கிறார்கள் ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நடந்த ஒரு உண்மை சம்பவம். ஏற்கனவே இவ்விணையதளதில் வெளியிட்டுள்ளோம். இதுவரை அதை படிக்காதவர்களுக்காக மீண்டும் இங்கு....

ஒரு அறிஞர் வட இந்தியாவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அக்கூட்டத்திற்கு போலீஸ் அதிகாரி ஒருவரும் வந்திருந்தார். அறிஞரின் பேச்சு அவரை மிகவும் கவர்ந்தது. கூட்டம் முடிந்ததும் அவரை அணுகி, தனது வீட்டிற்கு வந்து விருந்துண்ணுமாறு அழைத்தார் போலீஸ் அதிகாரி.

அறிஞருக்கோ போலீஸ் அதிகாரியின் விருந்தை ஏற்றுக் கொள்வதில் சிறிதும் விருப்பமில்லை. காரணம் போலீஸ் அதிகாரிகளில் பெரும்பாலானோரது சம்பாத்தியம் எப்படி என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்!

ஹலாலான உணவை மட்டுமே உண்ண வேண்டும் எனும் நோக்கமுள்ள அறிஞருக்கு அந்த அதிகாரியின் விருந்தழைப்பை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லையானாலும் அதை எப்படி நேரடியாக பிடிக்கவில்லை என்று சொல்ல முடியும்! ஆகவே, ‘எனக்கு இப்போது வருவதற்கு வசதியில்லை’ என்றார்.

போலீஸ் அதிகாரி விடுவதாக இல்லை. தான் வாகனம்கூட ஏற்பாடு செய்வதாகவும், அவசியம் அறிஞர் தனது இல்லத்துக்கு வந்து விருந்துண்ண வேண்டும் என்று மீண்டும் அந்த போலீஸ் அதிகாரி வற்புறுத்தினார் இம்முறையும் அறிஞர் மறுத்துவிட்டார். போலீஸ் அதிகாரியோ அவரை விடுவதாக இல்லை. ‘வேண்டுமானால் உணவு வகைகளைத் தயார்செய்து நீங்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து தருகிறேன்’ என்றும் சொல்லிப் பார்த்தார். அறிஞரோ மசிவதாகத் தெரியவில்லை. அன்புடனும் நயத்துடனும் மறுத்துக் கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் டென்ஷனான அந்த போலீஸ் அதிகாரி கோபமடைந்து வாய்க்கு வந்தபடி அந்த அறிஞரை வசைபாட ஆரம்பித்து விட்டார். பொறுமையாக எல்லா வசவுகளையும் கேட்டுக்கொண்டிருந்த அந்த அறிஞர் ‘நீங்கள் என்னை வசைபாடியதிலிருந்தே என் குறைபாடுகள் உங்களுக்குத் தெரிந்திருக்கின்றன. என்னுடைய எல்லா குறைபாடுகளும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் என் முகத்தைக்கூட பார்க்க விரும்ப மாட்டீர்கள்!’ என்றார்.

அவ்வளவுதான் அந்த போலீஸ் அதிகாரி திடுக்கிட்டவராக கோவென்று அழ ஆரம்பித்துவிட்டார். அவருக்கு உண்மை விளங்கியது. தன் பக்கமுள்ள தவறுகள் அவருக்குப் புரிந்தது. தனது சம்பாத்தியம் சரியானதல்ல என்கின்ற உண்மையை தெரிந்து கொண்டதால்தான் அறிஞர் தான் அழைக்கும் விருந்துக்கு வர மறுக்கிறார் என்பதை புரிந்து கொண்டார்.

‘அறிஞரே! நான் போலீஸ் என்பதால் எனது விருந்துபசரிப்பை மறுக்கின்றீர்கள். நான் பாவமன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி நான் பணியில் இருக்கும்போது தவறிழைக்க மாட்டேன். என் சொந்த சொத்துக்களிலிருந்து வரும் வருவாயிலிருந்து தங்களுக்கு விருந்தளிக்கின்றேன். அதைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கண்ணீருடன் கேட்டுக்கொண்டார். அறிஞரும் அதன்பின் அவரின் விருந்தை ஏற்றுக் கொண்டார். அந்த அறிஞர் முஜஃப்பர் நகரில் வசிக்கும் மவ்லானா முஹம்மது காசிம் ஆவார்.

அன்பளிப்பை பெறுகிற போதும் ஹராம் ஹலாலை பேணுவது நன்மை தரும் செயலாகும். அப்படியே ஹராமான வருவாய் உள்ளவரால் அன்பளிப்பு வழங்கப்பட்டு விட்டது என்றால் அதை நாம் உபயோகம் செய்யாமல் வேறு ஏழை எவருக்காவது அதை பயன்படுத்த வழங்கி விடலாம். இதுவும் பேணுதல் மிகுந்த செயலாகும்.

வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் ஹலாலைப்பேணி, ஹராமை விட்டும் தவிர்ந்து வாழும் பாக்கியத்தை தந்தருள் புரிவானாக! ஆமீன்.

-மவ்லவீ, பி.இஸட். பரகத் அலீ பாகவி, சென்னை. & மவ்லவி, காரி, அப்துல் பாரி பாகவி, வேலூர்

www.nidur.info