Home குடும்பம் ஆண்கள் வரதட்சணை ஓர் மனித தன்மையற்ற பெருங்குற்ற, பாவச்செயல்
வரதட்சணை ஓர் மனித தன்மையற்ற பெருங்குற்ற, பாவச்செயல் PDF Print E-mail
Wednesday, 07 December 2011 12:54
Share

வரதட்சணை ஓர் மனித தன்மையற்ற பெருங்குற்ற, பாவச்செயல்

  தூலாநவாஸ் ரூ ஸபிலா  

[ வரதட்சணை வங்கி நடைபெறும் திருமணத்திற்கு ஜமாத்தார்கள் (ஊர் நிர்வாகம்) கலந்து கொள்ள மாட்டோம் என்று மக்களுக்கு அறிவிக்க வேண்டும். வரதட்சணை வாங்காமல் நடைபெறும் திருமணத்தை ஊக்கப்படுத்துங்கள். ஜும்ஆ பிரசங்கங்களில் வரதட்சணையின் கொடுமைகளை எடுத்துரைக்க மார்க்க அறிஞர்களை தயார்படுத்துங்கள்.

இஸ்லாமிய பார்வையில் தீமைக்கு துணை போன குற்றவாளியாவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் முன் வரதட்சணையின் கொடுமையை முறையிட்டால் இந்த ஜமாத்தார்களின் நிலைமை என்ன? ஜமாத்தார்கள் சிந்திக்கட்டும்.

பெற்றோர்களே! உங்கள் மகனுக்கு வரதட்சணை வாங்மலும்; மகளுக்கு வரதட்சணை கொடுக்காமலும் திருமணம் முடித்து வையுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு வரதட்சணை எதிர்ப்புக் கருத்தை மனதில் உருவாக்குங்கள்.

அறியாமைக் காலத்தில் உங்கள் மகனுக்கு வாங்கிய வரதட்சணையை பெண் வீட்டாரிடம் உங்கள் மகன் மூலம் திருப்பி கொடுத்து விடுங்கள். அல்லாஹ் மிக்க கருணையாளன். மிக்க மன்னிப்பாளன்.]

வரதட்சணை ஓர் மனித தன்மையற்ற பெருங்குற்ற, பாவச்செயல்

அன்புள்ளங் கொண்ட சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நீங்கள் படித்துகொண்டுயிருக்கும் இச்சிறு தொகுப்பில் சமுதாயத்தில் மிகக் கொடுமையாக உள்ள வரதட்சணையைப் பற்றி நாங்;கள் பார்த்தவைகளையும் படித்தவைகளையும் கேட்டவைகளையும் ஒரு சிறுத் தொகுப்பாகத் தந்துள்ளோம்.

வரதட்சணையின் கொடுமையைப் விளக்கும் வண்ணமாக பலப் புத்தகங்கள், பலக் கட்டுரைகள் வந்தபோதிலும், பல கருத்தரங்கங்கள் நடைபெற்ற போதிலும் சமூகத்தில் வரதட்சணை என்னும் கொடிய உயிர் கொல்லி கிருமியை அழிக்க முடியவில்லை.

எல்லா சமூகத்திலும் இந்த வரதட்சணை ஆலமரம் போல் விழுதுகளுடன் ஆழமாக வேர்விட்டு மிக உறுதியாக நிற்கிறது. நல்ல காரியங்களை மனிதன் மறக்கக் கூடியவனாக இருப்பதால் மீண்டும் அதனை நினைவுபடுத்தும் வண்ணமாக இச்சிறுத் தொகுப்பினை தொகுத்துள்ளோம்.

உலகில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டாலும், சமுதாயம் எவ்வளவு நாகரீகத்தின் உச்சிக்கே சென்றாலும் அன்று முதல் இன்றுவரை மாறாத ஒரு சமூகக் கொடுமையாக இருப்பது வரதட்சணை கொடுமையேயாகும். எங்கே ஒரு மாற்றம் ஏற்ப்பட்டுவிடாதா என்று ஏங்கி நிற்கும் அந்த இளம் நேஞ்சங்களுக்கு எமது ஒரு ஆறுதல் கடிதமே இந்த "வரதட்சணையின் அவலஙகள்" என்னும் தொகுப்பு. இதோ நாம் நல்ல ஒரு சமுதாயம் படைப்போம் என்று காத்திருக்கும் ஒரு இளைஞர் படையினரின் ஒரு உந்துதலாக இத் தொகுப்பு இருக்கட்டும்.

வெறுப்போடு படித்தால் இதிலுள்ள உண்மை உங்களுக்கு புரியாது. அரைமணி நேரம் இத்தொகுப்பிற்கு நேரம் ஒதுக்கி அமைதி சூழலில் திறந்த மனதுடன் சரி, தவறை அலசிப் பார்த்து, சரி என்றுபட்டால் நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இத்தொகுப்பை படித்துணரவும்.

அன்புடன்,

தூலாநவாஸ் ரூ ஸபிலா

 வரதட்சணையின் அவலங்கள்  

இந்திய திருநாட்டில் எத்தனை மதங்கள், எத்தனை சாதிகள், எத்தனை மொழிகள். இவைகளுக்குள் நாம் எந்த அளவுக்கு ஒற்றுமையை வளர்க்கிறோமோ இல்லையோ ஆனால் வரதட்சணை என்னும் ஒரு விசயம் மட்டும் ஒரே வித எண்ண ஓட்டத்தால் பிணைக்கப்பட்டு நம்மிடையே ஒன்றிப்போய் உள்ளது.

நமது நாட்டில் பெண்களை அடிமைப்படுத்துவதையும், கொலை செய்வதும் பெண் சிசுக்களை கொலை செய்வதையும், வயிற்றிலிருப்பது பெண் குழந்தை எனத் தெரிந்தால் அதை இவ்வுலகையே காட்டாமல் கருக்கலைப்பு செய்வதையும் அன்றாட செய்திகளாக செய்தி ஊடகங்கள் மூலம் காண்கிறோம்.

இன்று தினந்தோறும் இளம் பெண் தற்கொலை, இளம் பெண் சாவு என்று அன்றாடம் செய்திகளை பார்த்தும், கேட்டும் வரும் நாம் இவற்றிற்கெல்லாம் காரணம் தான் என்ன? சிந்திக்க வேண்டும்

இன்று நம் நாட்டில் ஸ்டவ் வெடிக்கச் செய்தும் இன்ன பிற வழிகளிலும் தினம் தினம் சராசரியாக 17 பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் கொலை செய்யப்படுகிறார்கள். சராசரியாக 242 வழக்குகள் வரதட்சணையின் பெயரில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுவதாக முன்பு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட அறிக்கை கூறுவதாக பத்திரிகைகள் மூலம் அறிகிறோம். இன்று அதன் எண்ணிக்கை அதிகமதிகம். இன்னும் எத்தனை கொலைகள், தற்கொலைகள் காரணம் காட்டப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன. அவற்றில் அதிக பங்கு வரதட்சணையையே சாரும்.

இன்று நாட்டில் சாதிக்கலவரம் மற்றும் மத கலவரங்களில் கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை விடவும் வரதட்சணைக்காக கொலை செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதற்க்காக கவலைக் கொள்ளவே கடுமையாக அதை எதிர்க்க அரசும், அரசியல்வாதிகளும் தயாரில்லை.

சாலைகளில் அடித்துக் கொண்டு சாகும் சாதி, மத வெறியர்கள் மனித நேயர்களாவும், சாதி, மத பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகளும், அரசும். இன்று தினம் தினம் சராசரியாக 17 உயிர்களை பறிக்கும் வரதட்சணை கொடுமைக்கு எதிராக அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லையே ஏன்?

மது, சூது, திருட்டு, விபச்சாரம், கொலை போன்ற குற்றங்களை செய்பவரை நாம் பெரும் தீமையைச் செய்தவன் போல் அவனை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்போம். அவனை இழிவானவனாக பார்ப்போம். ஆனால் இந்த மனித விரோத வரதட்சணையை வாங்குபவரை யாரும் அப்படி பார்ப்பதில்லை. காரணம் அந்த வரதட்சணை என்ற புற்று நோய் இந்திய சமூகத்தில் எல்லோரையும் தாக்கியுள்ளது. இதில் சிலரை மட்டும் விதி விலக்கு என்றுக் கூறலாம்.

அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜமாஅத்(சமூக நிர்வாகம்), அரசு நிர்வாகம் ஆகியவற்றைவழிநடத்துபவர்கள் அதன் சட்டத்திற்குப் புறம்பாக நடந்தாலோ இன்னபிற குற்றங்கள் புரிந்தாலோ கட்சி, இயக்க கொள்கைக்கு மாற்றமாக ஊர் நிர்வாகத்திற்கு மாற்றமாக நடந்து கொண்டாலோ அவர்கள் அந்த பதவியிலிருந்து இறக்கப்படுகிறார்கள். யாரும் அவரிடம் எந்தத் தொடர்பும் வைக்கக் கூடாது என்று அறிக்கைகள் வருகிறது. ஆனால் மனித சமுகத்திற்கு எதிரான வரதட்சணையை வங்குகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எவருக்கேனும் தயிரியம் இருக்கிறதா?

பெண் என்பவள் வேறும் போகப் பொருளிற்குரியவளல்ல. அவள் சிறந்த குடும்பத்தை அமைத்து நல்ல ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டியவள். ஆனால் இன்று பெண் இனத்தை நவீன ஸ்கேன் மூலம் கண்டறிந்து கருக்கலைப்பு என்ற பெயரில் கருக் கொலை செய்யப்படுகிறது. இதற்கு கணவன் மனைவி இருவரும் உடந்தை. அதுபோல் சில சில்லறை ரூபாய்க்காக கருக்கொலைகளை செய்ய துணிகின்ற சில மருத்துவர்களும் உடந்தை. அதிகமான பெண் சிசுக்கொலைகள் இன்று வரதட்சணைக்கு பயந்து எவ்வித மன உறுத்தலும் இல்லாமல் சர்வ சாதாரணமாக நடத்தப்படுகின்றன.

கடைசியாக நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இன்று நமது நாட்டில் ஆண், பெண் விகிதாச்சாரத்தில் பெரும் மாற்றம் காணப்படுகிறது. 1000 ஆண்களில் பெண்களின் விகிதம் பெருமளவு குறைந்து வருகிறது. இதற்கு காரணம் பெண் கருக்கொலையேயாகும். ஏன் பெண் கருக்கலைப்பு நடைபெறுகிறது என்றால் நாளை அக்குழந்தைகளை வளர்த்து அது திருமண வயதை அடையும்போது அதற்கு கொடுக்க வேண்டிய வரதட்சணையை எண்ணியேயாகும்

உங்கள் பெண் குழந்தைகளை வறுமைக்கு பயந்து கொலை செய்யாதீர்கள். (அல் குர்ஆன் 6:151)

கொலை செய்யப்பட்ட குழந்தைகளை பற்றி இறைவன் கேட்டால் என்ன பதில் வைத்துள்ளீர்கள். இக் கொடிய செயலை செய்தவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல வரதட்சணை வாங்கியவர்கள் அதை ஆதரிப்பவர்கள் அனைவருக்கும் அக்குற்றத்தில் (கொலைக்குற்றத்தில்) இறைவன் முன் பங்கு உண்டு.

இன்று ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டால் அவன் தன்மீது பெரிய சுமை சுமத்தப்பட்டதுபோல் எண்னுகிறான். காரணம் பெண் குழந்தை என்றதும் வரதட்சணை என்ற கொடுமைதான் அவன் முன் காணப்படுகிறது.

அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது அவன் கோபமுடையவனாகிறான். (அல் குர்ஆன் 16: 58, 59)

 பெண் குழந்தை என்பவள் பரக்கத்தானவள் என்பது நபி மொழியாகும் .

நாம் ஒரு புழு பூச்சியை நசுக்கினாலும் அது தன் எதிர்ப்பை காண்பிக்கும் என்பதை அறிந்த மனிதன் தன் குழந்தையை கொலை செய்ய துணியகாரணமென்ன? வீட்டில் வளர்த்தும் ஆடு, மாடு, கொழிஇறந்து விட்டால் அதற்காக கண்ணீர் வடிக்கும் மனிதர்கள் கருக் கொலை செய்ய துணிய காரண மென்ன? இரக்க உள்ளம் கொண்ட பெண்களே தன் இனத்தை அழிக்க துணிய காரணமென்ன? இவைகளுக்கெல்லாம் முக்கிய காரணம் இன்று சமூகத்தில் உலவும் வரதட்சணை தான். அந்த வரதட்சணையை வாங்குவதில் இன்று இஸ்லாமியர்கள் என்று கூறிக் கொள்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

திருமணத்தை இஸ்லாம் ஒரு வணக்கமாகவே கூறுகிறது. விபசாரத்திலும் சரி, மனைவியிடத்திலும் சரி கிடைக்கும் இன்பம் ஒன்றுதான். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இறைவனுக்கு அஞ்சி, திருமணத்தின் மூலமாக, கணவன், மனைவி இன்பம் பெறுவாரானால் அது இஸ்லாமிய பார்வையில் இறைவனுக்கு செய்கின்ற வணக்கமாகும்.

ஏனெனில் ஒருவர் நினைத்தால் விபச்சாரத்தை நாடியிருக்கலாமல்லவா எப்படி இறைவனுக்கு அஞ்சி தொழுகை, நோன்பு, ஜக்காத்து இன்னபிற வணக்கங்களை செய்கிறோமோ அதுபோல்தான் திருமணமும். இஸ்லாத்திற்கு, (மனித சமூதாயத்திற்கு) எதிரான வரதட்சணையை வாங்காமலும், இன்னபிற தேவையற்ற சடங்குகள் இல்லாமல் நபிவழிப்படித் திருமணத்தை நடத்தினால்தான் அவை வணக்கமாகும். நாம் இஷ்டம் போல் திருமணத்தை நடத்தி விட்டு அதற்கு இஸ்லாமிய சாயம் பூசக்கூடாது.

திருமணத்தின் நோக்கம் இன்பம் அடைவது மட்டுமல்ல அத்தோடு சேர்த்து ஒரு உன்னத இலட்சியமும் உண்டு. அவைதான், சிறந்ததொரு குடும்பத்தை அமைப்பதும் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதும் ஆகும்.

பெண் விடுதலை பேசும் இந்த காலத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனையையும் குர்ஆனின் வாக்கையும் அறியாததினால் இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண் விடுதலையைப்பற்றி பேசி நடைமுறையும்படுத்திக் காட்டியுள்ளார்கள். உலகில் பெண் விடுதலையும் பெற்று தந்தார்கள்.

இஸ்லாம் பெண்களுக்குரிய உரிமையை வழங்கியுள்ளது. கல்வி கற்க உரிமை, கணவனை தேர்வு செய்யும் உரிமை, மணவிலக்கு உரிமை, சொத்துரிமை, அதனை தன் பெயரில் வைத்துக் கொள்ளும் உரிமை, மணக் கொடையான மஹரை வருங்கால கணவரிடம் கேட்டுப் பேறும் உரிமை இதைப் போன்று எண்ணற்ற உரிமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. இவைகளை முஸ்லிம் பெண்கள் அறியாததன் விளைவுதான் ஆண்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

 பெண்களுக்குரிய உரிமைகளைப் பற்றி குர்ஆன் நபி வழி  

பெண்களுக்குரிய உரிமைகளைப் பற்றி குர்ஆன் நபி வழி என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "அநாதைகள், பெண்கள் ஆகிய பலவீனமான இருவரின் உரிமைகளைப் பறிப்பதைக் கடுமையான குற்றம் என நான் கருதுகிறேன்". (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயீ)

'கணவர்களுக்கு பெண்களிடத்திலிருக்கும் உரிமையைப் போன்று முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமை உண்டு". (அல்குர்ஆன் 2:228)

 கல்வி கற்க உரிமை:  

"கல்வியைத் தேடுவது ஆண் பெண் அனைவர் மீதும் கடமையாகும் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா)

 திருமண உரிமை:  

(திருமணத்திற்கு) கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவளது மௌனமே சம்மதமாகும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, முஸ்லிம், அஹமத்)

ஹன்ஸா பின்த் ஹித்தாம் ரளியல்லாஹு அன்ஹாஎன்ற பெண்மணியை அவரது தந்தை சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத அப் பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இதைக் கூறியபோது அத்திருமணத்தை ரத்து செய்தார்கள். (நூல்: புகாரி, அபுதாவுத், அஹமத்)

""இறை நம்பிக்கை கொண்டவர்களே, பெண்களை(அவர்கள்) மனப்பொருத்தம் இல்லாத நிலையில் நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாக்கிக் கொள்வது உங்களுக்கு கூடாது". (அல் குர்ஆன் 4:19)

 சொத்துரிமை:  

இஸ்லாம் பெண்களுக்கு சொத்தில் உரிமை கொடுத்து உள்ளது. அதை சரியான முறையில் நடைமுறைப்படுத்தாததும் வரதட்சணைக்கு ஒரு காரணமாகிவிட்டது சொத்துரிமை என்பது ஒருவரின் இறப்புக்குபின் இஸ்லாம் கூறுகின்ற முறைப்படி பங்கிட்டு கொடுப்பதோ அல்லாமல் வரதட்சணை என்பதை கொடுப்பதினால் சொத்துரிமையாகாது. அதுபோல் வரதட்சணை என்பது மாப்பிள்ளையின் அந்தஸ்த்துக்கு ஏற்றவாறு கொடுக்கப்படுவதால் இதுவும் சொத்துரிமையாகாது. இஸ்லாம் கூறுகின்ற சொத்துரிமை என்பது பெண் மக்கள் அனைவருக்கும் சரியான முறையில் பாரபட்சம் காட்டாமல் கொடுப்பதேயாகும்.

 மஹர்:  

"மணமுடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:20)

ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணம் முடியுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டார்கள் (ஹதீஸின்சுருக்கம்) அறிவிப்பவர்: ஸஹல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம் அபுதாவுத் நஸயீ, தாரமி, திர்மிதி

ஒரு நபித் தோழரிடம் மஹராகக் கொடுக்க எந்த பொருளும் இல்லாததை அறிந்த ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உனக்கு ஏதாவது திருக்குர்ஆன் வசனங்கள் தெரியுமா? எனக் கேட்டார்கள். அந்நபித்தோழர், தனக்கு இன்னன்ன குர்ஆன் வசனங்கள் தெரியுமென விடையளித்தார்கள். உடனே அந்த வசனங்களை மணப்பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பாயாக! அது அப்பெண்ணுக்குரிய மஹராகும்" என்றார்கள். அறிவிப்பவர்: ஸஹல் பின் ஸஅத் (ரலி), ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம் அபுதாவுத் நஸயீ, தாரமி, திர்மிதி

அந்த வகையில் திருமணத்தின் போது இஸ்லாம் ஆண்களுக்கு மஹர் என்னும் பெண்ணுக்குரியபாதுகாப்பு நிதியை பெண்களுக்கு மகிழ்வுடன் கொடுக்கக் கூறுகிறது.

மஹர் எவ்வளவு என்பதை நிர்ணயிக்கும் உரிமை மணமகளுக்கே இஸ்லாம் கொடுத்துள்ளது. இந்த உரிமையை இஸ்லாம் வழங்க காரணம் திருமண வாழ்க்கையில் அதிக இழப்பும், தியாகமும் பெண்ணுக்கே. மேலும் ஒருவேளை அந்த கணவன் பெண்ணை விட்டு விவாகரத்து பெற்று சென்று விட்டாலும் அப்பொழுது அந்த பெண்ணுக்கு மிக உதவியாக அந்த மஹர் (மண கொடை என்னும் பாதுகாப்பு நிதி) இருக்கும்.

இதில் வேதனை என்னவென்றால் முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள மஹர் என்ற மண கொடையைப் பற்றிய அறிவு சிறுதும் இல்லை. பெண்களுக்கு மஹரை பற்றிய அறிவு இல்லாதததும், ஆண்கள் வரதட்சணையை வாங்க ஒருரளியல்லாஹு அன்ஹு காரணமாக இருக்கிறது என்று கூட கூறலாம்.

 இஸ்லாமிய பார்வையில் ஒரு பெண்ணை திருமணத்திற்கு ஒரு ஆண் எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்.  

பெண்களை அவர்களின் அழகிற்காக மணமுடிக்காதீர்கள். அவர்களின் அழகு அவர்களை அழித்து விடலாம். அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள். அவர்களின் செல்வம் அவர்களை தடுமாறி தவறச் செய்து விடலாம். அவர்களின் நல்லொழுக்கத்திற்காக மண முடியுங்கள். நல்லொழுக்கமுள்ள அழகற்ற அடிமைப் பெண் (தீய) அழகிய பெண்ணைவிட மேலானவள். (அறிவிப்பவர்: அப்துல்லா பின் உமர் , நூல்: புகாரிஃ முஸ்லிம், அஹமத்)

மேலே கூறப்பட்ட நபிமொழிப்படி மணப்பெண் இறைவனுக்கு இணைவைக்காதவளாகவும் இறைவணக்கமும் நபி வழிப்படி நல்லொழுக்கமுள்ளவளாக இருப்பவளையே ஒரு மணமகன் மணமகளாக தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இன்று என்ன நடக்கிறது என்றால் நற்குணத்தைவிடவும் பணத்திற்கு மதிப்பளிக்கப்படுகிறது. எந்த வீட்டீல் அதிகம் வரதட்சணை தருவார்கள் அல்லது எந்த வீட்டீல் அதிகம் சொத்துள்ளது என்று மணமகனின் பெற்றோர்கள் அலைவதைப் பார்க்க முடிகிறது.

அவர்களில் தான் எத்தனை வகை. ஒரு வகையினர், வரதட்சணையைகறாராக பேரம் பேசியும் சொத்தின் மதிப்பை வைத்து கணக்கு போட்டு முடிந்த அளவு கறந்து விடுவார்கள். மற்றொரு வகையினர் வரதட்சணை எதிர்ப்புக்கருத்துக்களை பேசியும், எதிர்த்தும் வந்தவர்கள், இவர்களால் நேரடியாக வரதட்சணையை கேட்டுப் பெற முடியாது. இவர்களில் இரு பிரிவினர் உள்ளனர். முதல் பிரிவினர் எங்களுக்கு வரதட்சணையாக ஒன்றும் வேண்டாம் உங்கள் மகளுக்குக் கொடுப்பதை கொடுங்கள் என்று கூறி மறைமுக நிர்பந்தமாக வரதட்சணை வாங்கிவிட்டு வரதட்சணை வாங்கவில்லை என்று சமூகத்தில் கூறிவரும் ஒரு கூட்டம். இரண்டாம் பிரிவினரோ, ரோக்க பணமாக வாங்கினால் வரதட்சணை என்று கூறிவிடுவார்களே என்று நினைத்து குறிப்பிட்ட பணத்திற்கு பதில் நகையாக பெற்றுக் கொள்வார்கள். இவர்கள் உண்மையில் கொள்கை வாதிகளா?

வரதட்சணையை ஒழிக்க வேண்டுமென்று சிறிதளவேனும் மனதில் எண்ணம் உள்ளவர்கள் என்றால் இறைவனும் அவனது தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலின்படி மார்க்க அடிப்படையில் நல்லொழுக்கத்துடன் வாழும் பெண்கள் இருப்பார்களே! அவர்களை மணம் முடித்துக் கொள்ளலாமல்லவா? அதையெல்லாம் போலி குடும்ப கௌரவம் பேசி பணத்தையே முழு குறிக்கோளாக கொண்டு தவிர்த்து விடுவார்கள். அதுபோல் வரதட்சணை கொடுக்கமாட்டோம் என்று இறைவனுக்கு அஞ்சி சபதம் எடுத்திருக்கும் கன்னிப் பெண்கள் எத்தனை? எத்தனை? அது வெல்லாம் இவர்களுக்கு கண்ணில் படாது. ஏனெனில் இவர்களின் உள்நோக்கம் வரதட்சணையல்லவா?

பெண் பார்ப்பதற்கு முன் அவர்களின் சொத்து விபரம், எவ்வளவு கொடுக்க வசதி உள்ளது என்பதை அறிந்து விட்டுத்தான் பெண் பார்க்கும் படலம் ஆரம்பம் ஆகும். பெண் பார்க்கும் நிகழ்ச்சி ஒரு சம்பிரதாயமே. உண்பதற்கும், ஆடம்பரம் செய்வதற்கும், பேரம் பேசுவதற்கும் தான் அது. பெண்ணைப் பார்த்தபிறகு பெண் வீட்டாரிடம் எவ்வளவு ரொக்கமாக தருவீர்கள் நகையாக எவ்வளவு, இன்னபிற பொருட்கள் எவ்வளவு என்று பெரியோர்கள் என்று கூறிக்கொள்ளும் சில மனித மிருகங்கள் சமூகத்தில் அலைவதைப் பார்க்க முடிகிறது. இந்த வரதட்சணையை வாங்குவதற்கு ஒரு நாள் குறித்து அதற்கு நிச்சயதார்த்தம் என்று பெயரும் வைத்து அன்றைய தினத்தில் திருமணத்திற்கு ஆகும் செலவில் பாதி செலவை செய்ய வைத்து அதன் மூலம் ஏப்பம் விடுகிறது சிலக் கூட்டம். ஏன் இந்த ஆடம்பரங்கள்?

"உண்ணுங்கள், பருகுங்கள் ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து வீண்விரயம் (செலவு) செய்பவர்களை நேசிப்பதில்லை". (அல் குர்ஆன் 7:31).

வரதட்சணை என்ற ஒரு தீமை எல்லா தீமைக்கும் துணை போகிறது. நாங்கள் வரதட்சணை எதுவும் வாங்கவில்லை. திருமணச் செலவிற்கு பணம் வாங்குகிறோம் அதில் மண மகளிற்கு நகை போடுகிறோம், வருகிறவர்களுக்கு சாப்பாடு போடுகிறோம். பூ மாலை, கார் வாடகை ஏனைய செலவுகளுக்கு பணம் தேவைப்படுவதால் பெண் வீட்டாரிடம் பணம் வாங்குகிறோம் என்று கூறும் ஆண்மை உள்ள இளைஞனே? அவனை பெற்றவர்களே! பெண் வீட்டாரிடமிருந்து பணம் வாங்கித்தான் இந்த வீண் செலவுகளை செய்ய வேண்டுமா? நீங்கள் வரதட்சணையை பணமாக, நகையாக, பொருளாக, சொத்தாக வாங்குவதற்கு வெட்கமில்லையா?

வலிமையுள்ள இளைஞனே உன்னைவிட உடலாலும் வலிமையாலும் எல்லா வகையிலும் மென்மையான, தன்னுடைய மனைவி என்கிற அந்தஸ்தை கொடுப்பதற்கு, உன்னுடைய வலிமையையும், ஆண்மை என்ற தன்மையையும் வெட்க வைத்து விலை பேசி வாங்குவது நியாயமா? உன் மனதில் குற்ற உணர்வு சிறிதும் கிடையாதா? நீ இறைவனின் கோபத்திற்கு ஆளாகவேண்டுமா? சிந்தித்துப்பார். இலட்சியமுள்ள இளைஞனெ! உன் இலட்சியங்களை சில லட்சங்கள் வாங்கி எச்சங்கள் போட்டு, ஏன்? அதைவிட கோடிகள் வாங்கி பேடி ஆகப் போகிறாயா?

வரதட்சணை என்ற கொடுமையால் திருமணமாகாமல் திருமண கனவோடு ஏங்கி பரிதவிக்கும் கன்னிப் பெண்கள் உன் அண்டை வீட்டீலும், உன் உறவுக்கார வீட்டீலும் ஏன் உன் வீட்டீலும் இருப்பதை பார்த்ததில்லையா? அல்லது உனக்கு கண் இல்லையா? அந்தக் கன்னிப் பெண்களின் திருமண வாழ்க்கை உன் கையில் இருக்கிறது. நீ நினைத்தால் அவர்களுக்கு திருமண வாழ்வு கொடுக்கலாம். பெண்ணை பெற்றோர் சமூகத்தில் சுயமரியாதையோடு நடக்க செய்ய போகிறாயா? அல்லது முதிர்கன்னிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய போகிறாயா? சிந்தித்துப்பார்.

உன் தாய், தந்தை ஆடு, மாடுகளுக்கு விலை பேசுவதைப் போல் உனக்கு விலை பேசுகிறதை நீ அறியவில்லையா? உன்னோடு வாழப்போகும் உன் துணைவி, ஊரை விட்டு, பெற்றோரை விட்டு உறவினர்களை விட்டு செய்யும் தியாகங்கள் எத்தனை? எத்தனை? உனது வாரிசை சுமக்க அவள் படும் சிரமங்கள் எத்தனை? எத்தனை? உனக்கு பணி விடை செய்துதரும் வேலைக்காரியாய் இருக்கிறாள். வீட்டு வேலைச் செய்யும் வேலைக்காரிக்கு மாதச் சம்பளம் எவ்வளவு கொடுப்பாய்? உன்னோடு காலமெல்லாம் வாழப்போகும் உன் துணைவி உனக்கும் உன் பெற்றோருக்கும் வீட்டு வேலை செய்தும், உனக்கு தாம்பத்திய இன்பமும் தருகிறாளே அவளுக்கு நீயல்லவா கொடுக்க வேண்டும். இவ்வளவு பெரிய தியாகங்கள் செய்யக் கூடிய பெண்களிடம் கையேந்தி வரதட்சணை என்ற பிச்சைக் கேட்பது நியாயமா?

வரதட்சணை கொடுக்க முடியாமல் திருமணமே வேண்டாம் என்ற முடிவில் முதிர் கன்னிகள் எத்தனை? எத்தனை? மானம், கௌரவம், குடும்பத்தாருக்கு சுமை கொடுக்க வேண்டாம் என இறுதியாக தற்கொலை செய்து கொள்ளும் இளம் பெண்கள்தான் எத்தனை? எத்தனை? தன் வாழ்க்கையை தானே தேடிக் கொள்வதாக எண்ணி கற்பிழந்த பெண்கள் எத்தனை எத்தனை? அப்போதெல்லாம் வீர வசனம் பேசும் இளைஞனே அவள் ஓடியதற்கு காரணமென்ன?

வரதட்சணை வாங்கும் கொடுரக்காரர்தான் முன்னால் நின்றான். இதைவிடவும் கொடுமை என்னவென்றால் இரக்கமுள்ளவர்கள் என்று கூறும் பெண்களே இந்த வரதட்சணை வாங்குவதில் அதிகம் பங்கு கொள்கிறார்கள். தன் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் தாய் தன் மகளை வரதட்சணை வாங்காமல் திருமணம் முடிக்க ஏதாவது மாப்பிள்ளை கிடைக்கமாட்டானா? தன்னிடம் வரதட்சணை கொடுப்பதற்கு ஏதும் இல்லையே. தன் மகளுக்கு வயதாகிப் போகிறதே என்று ஏங்குகிற அதே தாய், தன் மகனுக்கு பெண் தேடும்போது வரதட்சணை சந்தையில் எங்கு அதிக விலைக் கிடைக்குமோ அங்கு தன் மகனை விலை பேசுகிறாள். மேலும் இத்தனை லட்சங்கள் வாங்கினேன், இத்தனை கோடிகள் வாங்கினேன் என்று பெருமையாக பேசுவதற்காக வரதட்சணை என்ற கொடுமையை பேரம் பேசி வருவதை பார்க்க முடிகிறது.

சமூகத்திற்காக வாரி வாழங்கும் வள்ளல் கூட இந்த வரதட்சனையில் அதிகம் கவனம் செலுத்துவதை நாம் பார்க்க முடிகிறது. இவர்கள் சமூக அந்தஸ்திற்காக வரதட்சணை என்னும் சாக்கடையில் விழுந்துவிட்டு பிறகு வாரி வழங்கும் வள்ளலாக மாறி விடுவார்கள்.

தன் வாழ்க்கையை இஸ்லாமிய அடிப்படையில் அமைத்து வாழ்ந்து வரும் நல்ல மனிதர்கள் இவர்களின் மகள்கள் அல்லது சகோதரிகள் திருமணத்தின் போது வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொடுப்பதற்கு காரணமென்ன? இஸ்லாத்திற்கு எதிரான வரதட்சணையை ஒரு மண மகன் கேட்பதனால் தானே? அந்த நல்ல மனிதர்கள் தன் மகளை, சகோதரியை திருமணம் முடித்து வைக்க வரதட்சணை என்ற சாக்கடையில் தள்ளப்படுகிறார்கள். தள்ளியவர்கள் தான் மிகப் பெரும் முதல் குற்றவாளிகள்.

வரதட்சணையின் துவக்கம் பெண் பார்ப்பதிலிருந்து, நிச்சயதார்த்த விருந்திலிருந்து மாப்பிளைக்கு பெண் வீட்டார் கொடுக்கும் தங்க மோதிரம், தங்க சங்கிலி, வாட்சு, கார் பைக்; போன்றவைகளில் துவங்கி பேசப்பட்ட தொகை வரை கொடுக்க பட வேண்டும். பெண்ணிற்கு நகையும் வீட்டீற்கு தேவையான அனைத்து பொருள்களும் கொடுக்கப்பட வேண்டும். திருமண தினத்தில் மாப்பிள்ளை வீட்டார்கள் அழைத்து வரும் ஆட்களுக்கு பிரியாணி கொடுக்க வேண்டும். அதை எவ்வித வெட்கமுமில்லாமல் தின்று வர ஒரு கூட்டம். தின்று விட்டு அதை குறை கூற ஒருக் கூட்டம். இஸ்லாமிய பார்வையில் பெண் வீட்டாரிடமிருந்து மாப்பிள்ளை தான் அழைத்து வரும் நபர்களுக்கு விருந்து கேட்பதும் வரதட்சணையாகும். (வலிமா விருந்து என்பது மாப்பிள்ளை வீட்டார்கள் கொடுக்கும் விருந்தாகும்)

திருமணம் முடிந்த பின் மறுவீடு என்று ஒரு சடங்கு, அதிலும் கௌரவத்திற்கு ஏற்றவாறு வீட்டீற்கு தேவையான அனைத்து பொருள்களும் மாப்பிள்ளை வீட்டீற்கு அனுப்பி வைக்க வேண்டும். மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டால் எல்லாம் அன்பளிப்பு என்று கூறுவார்கள். உண்மையில் இவை அன்பளிப்புதானா என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் கூறமுடியும். இவை அனைத்தும் மறைமுக கட்டாய வரதட்சணை என்பதை நாம் அறிவோம். இவை எப்படி சமூகத்தில் ஊடுருவியது என்றால் வசதி படைத்த வீணர்கள், தன் வசதியை மக்களுக்கு காட்ட அவர்களால் உருவாக்கி இன்று எல்லோராலும் கட்டயாமாக பின்பற்றப்படுகின்ற ஒரு நிகழ்வுதான், இந்த கேடுகெட்ட வைபவங்கள்.

சிறுதொழில் செய்பவர்க்கு ஏற்றவாறும், பெரும் முதலாளிக்கு ஏற்றவாறும், ரோட்டோர கூலி தொழிலாளிக்கு ஏற்றவாறும், பிச்சை எடுப்பவனுக்கு ஏற்றவாறும் இந்த வரதட்சணை இவர்களுக்குள் மாறுபட்டாலும் இவர்கள் அனைவரும் செய்யும் செயல் மனிதவிரோத செயலே.

அதுபோல் இன்று ஆண்டி முதல் அறிஞர் வரை வரதட்சணையில் ஒவ்வொருவருக்கும் ஒரு விலை உண்டு. அவரவர்கள் கற்ற கல்விக்கேற்றவாறு விலை பேசப்படுகிறது. படித்தவர்களுக்கு பெயருக்கு பின்னால் உள்ள டிகிரிக்கு ஏற்றவாறு வரதட்சணை பேசப்படுகிறது. கல்வி கற்பது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமை என்று இஸ்லாம் கூறுகிறது.

கல்வியைத்தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும் என்பது நபி மொழியாகும். (நூல்: இப்னுமாஜா)

இன்று அந்த கல்வி எதற்காக கற்கப்படுகிறது என்றால் படிப்புக்கேற்றவாறு வரதட்சணை வாங்கலாம் என்ற எண்ணம் அதிகம் பேரிடம் இருப்பதால்தான். கல்வி வரதட்சணைக்கு மூலதனமாக போடப்படுகிறது! தன்னை படித்த அறிவாளியாகவும், மேதையாகவும் எண்ணி திரியும் இந்த இளைஞன் வரதட்சணை வாங்குவதில் படிக்காத பாமரனை விடவும் கீழாக நடந்து கொள்வதை நாம் பார்க்க முடிகிறது.

கல்வியறிவும், பொருளாதாரமும் மேம்பட்டால் வரதட்சணை ஒழிந்து விடும் என்று சிலர் கூறிகின்றார்கள். உண்மையில் கல்வியறிவைக் கொண்டு டாக்டருக்கும், என்ஜினியருக்கும், ஒரு விலை பேசப்படுகிறது. மற்ற கல்விகளுக்கு ஒரு விலை என்று கல்வியை காசாக்கும் கயவர்கள் கூட்டம் அதிகமதிகம். அதுபோல் வசதி படைத்தவர்கள் தான் இன்று வரதட்சணை என்ற இந்த ஈன செயலை அதிகமதிகம் செய்கிறார்கள். ஆதலால் பொருளாதார வசதியும் கல்வியறிவும் இருந்து விட்டால் வரதட்சணை ஒழிந்து விடாது என்பது நிதர்சன உண்மை. முஸ்லிம் பெண்களை படிக்க வைப்பது என்பது ஆண்களைவிட குறைவுதான். காரணம் ஒருவர் தன் மகளை சிரமப்பட்டு படிக்கவைத்தாலும், அவள் திருமணத்தின் போது அவள் படிப்புக்கேற்ற மாப்பிள்ளையை பார்க்க வேண்டும்.

படித்து வேலையிலுள்ள மாப்பிள்ளைக்கே இன்று அதிக விலை திருமண சந்தையிலுள்ளது. படிக்க வைக்காமலிருந்தால் தன் மகளை குறைந்த விலையுள்ள ஏதேனும் ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்பதால் தான் இஸ்லாமிய சமூகத்தில் பெண்களின் கல்வியறிவு மிக மிக குறைவுயேன்றுக் கூட கூறலாம்

இளைஞனே! உனக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் முடித்து தந்ததால் சொத்தை இழந்து, வியாபார கடைகளை இழந்து, மானம் இழந்து, சுயமரியாதை இழந்து, இஸ்லாத்தின் பெரும் பாவமாக கருதும் வட்டிக்கு பணம் வாங்கி உன் குழந்தைக்கு நகையும், பிரசவ செலவும், பெருநாள் படியும் தருகிறார்களே அவர்களை இந்த இக்கட்டான சூழலை உருவாக்கிய நீ மனித விரோதியல்லவா.

(உன்னால்) அநீதம் செய்யப்பட்டவனின் பிராத்தனையை பயந்துகொள். இறைவனுக்கும் இவனது பிராத்தனைக்குமிடையே திரையேதும் இல்லை என்பது நபிமொழி.

உன் வாழ்க்கைக்காலமெல்லாம் இணை துணையாக உன்னோடு வாழப்போகும் உன் வருங்கால மனைவி வீட்டாரிடமிருந்து அவர்களை கசக்கி பிழிந்து அவர்களைகடனாளியாகவும் பள்ளிகளில் பிச்சையெடுப்பவர்களாகவும் மானமரியாதை இழந்து உயிருள்ள நடை பிணமாக்கிய பிறகு உனக்கு என்ன மரியாதை இருக்கிறது. இறைவனிடத்தில் மிகப்பெரும் கொடுமையை செய்த குற்றவாளியல்லவா நீ. இதையெல்லாம் அறிந்த பிறகு நீ கேட்டு வாங்கினாலும் அவர்கள் தந்தாலும் வரதட்சணை என்ற பிச்சையைத்தான் வாங்குகிறாய்!

நீங்கள் நீதி செலுத்துங்கள் இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது அல்லாஹ்வுக்கு அஞ்சி செயலாற்றுங்கள். நீங்கள் செய்பவனவற்றை அல்லாஹ் முழுமையாக அறிகிறான். (அல் குர்ஆன் 5:8)

  வரதட்சணையை ஒழிக்க சில ஆலோசனைகள்: 

வீதிக்கு ஒரு கட்சியும் சாதிக்கு பல சங்கங்களும் உள்ள நமது நாட்டில் நாடு தழுவிய அளவில் வரதட்சணையை ஒழிக்க பெரும் அமைப்பு வேண்டும். அதன் பணி ஒவ்வொரு மனிதரும் வரதட்சணையின் கொடூரத்தை அறியும் விதமாக அதன் பிரச்சாரம் அமைய வேண்டும்.

வரதட்சணையின் கொடுமைகளை பற்றிய கல்வியை குழந்தைகளுக்கு கட்டாய பாடமாக வைக்க வேண்டும். காரணம் திருட்டையும், பொய்யையும், இன்ன பிற தவறுகளையும் பெரும் பாவமாகவும், குற்றமாகவும் நமது குழந்தைகளுக்கு ஒழுக்க போதனையாக கற்ப்பிக்கின்றோம். கொலையை விட பெருங்குற்றமாக உள்ள வரதட்சணையை ஏன் ஒழுக்கப் போதனையாக கற்பிக்கக்கூடாது?

அதலால் வருங்கால தலைமுறையினருக்கு இந்த வரதட்சணை பெருங்குற்றம் என்பதை உணர்த்த இன்றைய கல்விச் சாலைகளில் வரதட்சணையின் கோர முகங்களையும் கற்பிப்பது காலத்தின் கட்டாயமாகும்.

இந்தியாவில் வருடத்தில் சராசரி 88330 வரதட்சணை கொடுமை வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவாகின்றன. மேலும் 6205 உயிர்பலிகள் வரதட்சணை கொடுமையினால் நடைபெறுகின்றன. இத்தனைவழக்குகளுக்கும் நீதி கூற வேண்டிய நீதிபதிகளில் எத்தனை பேர் வரதட்சணை வாங்காமல் திருமணம் முடித்திருப்பார்கள். அல்லது அவர்களின் மகன்களுக்காவது வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து வைத்திருப்பார்களா? இப்படிப்பட்ட நீதிபதிகளுக்கு வரதட்சணையின் கோர முகம் புரியாது. ஆதலால் தான் வரதட்சணை வழக்குகளின் நியாய தீர்ப்பு மிக சிலருக்கே கிடைக்கின்றது?

குடிகாரன் மதுவை குடித்துவிட்டு மது குடிப்பவர்களுக்கு தண்டனை வழங்கினால் எப்படி நகைப்பாக இருக்குமோ அதுபோல் தான் இதுவும் இருக்கிறது. நாங்கள் நீதிமன்றங்களை குறைக் கூறவில்லை வரதட்சணை வாங்கிய நீதிபதிகளைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். ஆதலால் வரதட்சணைக்கு எதிராக குரலும், வரதட்சணை வழக்குகழில் கடுமையாக தண்டனை வழங்கும் நீதிபதிகளை மட்டும் கொண்டு வரதட்சணை வழக்குகளை விசாரிக்க தனி நீதி மன்றங்கள் அமைக்க வேண்டும்.

அரசு பதவியிலிருப்பவருக்குத்தான் இன்று அதிகம் வரதட்சணை பேசப்படுகிறது. இன்று நாட்டின் நிர்வாகத்தை செயல்படுத்தும் உயர் அதிகாரிகளாகட்டும், நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு அதிகாரிகளாகட்டும், நாட்டை உயர்ந்த வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய விஞ்ஞானிகளாகட்டும், எங்கு நோக்கினாலும் வரதட்சணை! வரதட்சணை! இப்படிப்பட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவக்கைகள் எடுக்க வேண்டும்.

வரதட்சணை கொடுமையால் கொலை, தற்கொலை, பெண் கருக்கொலை, பெண் சிசுக்கொலை, வரதட்சணை சித்திரவதை இதுபோன்ற எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களை மனித நேயத்துடன் மதிக்க வேண்டும் என்றால் இந்த வரதட்சணைக்கு எதிராக அவசரச்சட்டம் வேண்டும். லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் நமது நாட்டில் தண்டனைக் குரிய குற்றமே. அதேபோல வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றமே. எனவே, நமது இந்திய அரசு வரதட்சணை என்னும் கொடுமையை ஒழிக்க இருக்கின்ற சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று அரசுக்கு நாம் வேண்டுகிறாம்.

வரதட்சணையை ஒழிக்க வரதட்சணை வாங்காத அதிகாரியைத்தான் வரதட்சணை ஒழிப்பு அதிகாரியாக போட வேண்டும்.

அரசியல் கட்சித் தலைவர்களே! ஜமா அத் ஊர் நிர்வாகிகளே! ஊங்கள் பகுதியில் வரதட்சணை திருமணம் நடந்தால் உடனே தக்க நடவடிக்கை எடுங்கள். முடியவில்லை எனில் காவல் நிலையத்தில் புகார் செய்யவும்.

வரதட்சணைக்கு துணை போகும் ஊர் ஜமாத் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் மற்றும் சமுக அமைப்பு தலைவர்களே நீங்களும் உங்கள் தொண்டர்களுக்கு வரதட்சணை வாங்க கூடாது என்றும் மீறி வாங்கினால் உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார் என்றும் கடுமையான எச்சரிக்கை விடவும்; அதுபோல் வரதட்சணை திருமணத்திற்கு போகவும் மாட்டோம் என்றும் அரசியல் மற்றும் அமைப்பு தலைவர்கள் உறுதிமொழி எடுத்து அறிக்கையாக வெளியிட வேண்டும்.

இளைஞிகளே! உங்கள் திருமணத்தின்போது வரதட்சணை கேட்காத மணமகனை தேர்வு செய்யுங்கள். உங்கள் பள்ளி, கல்லூரி தோழிகளிடமும் வரதட்சணைக்கு எதிரான கருத்துக்களை அடிக்கடி கூறி வாருங்கள். உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும், உங்கள் சகோதரருக்கும் வரதட்சணையின் கோர வடிவங்களை எடுத்துக் கூறி வந்தால், வரும் தலைமுறை சமூகத்திற்கு பயன் உள்ளதாக அமையும்.

இன்று வரதட்சணை வாங்கப்படுவதற்கு ஜமாத்தார்கள் துணை போகிறார்கள். லட்சமும், கோடியும் வாங்கிவிட்டு 101 அல்லது 1001 என்று மஹர் சடங்கை நிறைவேற்றி விட்டு வரதட்சணை தொகையை ஜமாத் நிர்வாக புத்தகத்தில் ஜமாத்தினாரால் பதிவு செய்யப்படுகிறது.

"நீங்கள் நன்மையான காரியத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருங்கள். தீமையான காரியத்திற்கும் அக்கிரமத்திற்கும் ஒருவருக்கொருவர் துணை போகாதீர்கள்" (அல் குர்ஆன் 5:2)

இஸ்லாமிய பார்வையில் தீமைக்கு துணை போன குற்றவாளியாவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் முன் வரதட்சணையின் கொடுமையை முறையிட்டால் இந்த ஜமாத்தார்களின் நிலைமை என்ன? ஜமாத்தார்கள் சிந்திக்கட்டும்.

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பணமோ பொருளோ வரதட்சணையாக வாங்கிக் கொள்ளுங்கள் எங்கள் ஊர் நிர்வாகத்திற்கு இத்தனை சதவிகிதம் தந்துவிட வேண்டும் என்று கூறும் ஊர்நிர்வாகம் அந்த ஊர் வளர்ச்சிக்காகவும், பள்ளியை நிர்வாகம் செய்யவும், அங்கு பணிபுரியும் இமாம்களுக்கும், மோதினாருக்கும் இந்த வரதட்சணை கமிஷனை கொடுப்பதை அறிகிறோம். இவை எவ்வளவு தரம் தாழ்ந்த செயல். இஸ்லாத்திற்கு எதிரான எத்தனையோ தரம் தாழ்ந்த செயல்கள் உள்ளன. அதை ஒருவர் செய்துவிட்டு வரும் வருமானத்தில் சில சதவிகிதத்தை கொடுத்தால் ஊர் நிர்வாகம் பெற்று கொள்ளுமா? இப்படி எழுதியதால் ஆத்திரம் வர வேண்டாம். அதைவிட சிந்தித்து நம்மைப் படைத்த இறைவனை அஞ்சிக் கொள்வோம்.

வரதட்சணை வங்கி நடைபெறும் திருமணத்திற்கு ஜமாத்தார்கள் (ஊர் நிர்வாகம்) கலந்து கொள்ள மாட்டோம் என்று மக்களுக்கு அறிவிக்க வேண்டும். வரதட்சணை வாங்காமல் நடைபெறும் திருமணத்தை ஊக்கப்படுத்துங்கள். ஜூம்ஆ பிரசங்கங்களில் வரதட்சணையின் கொடுமைகளை எடுத்துரைக்க மார்க்க அறிஞர்களை தயார்படுத்துங்கள்.

இன்றைய காலத்தில் முஸ்லீம்கள் மத்தியில்தான் வரதட்சணை வாங்கப்படுவது அதிகமாக இருப்பதால் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான வரதட்சணையை எதிர்க்கும் விதமாக குர்ஆன் வசனமும் நபி (ஸல்) மொழிகளும், ஸ்டிக்கர், மற்றும் சுவரெழுத்துகள், துண்டு பிரசுரம் மற்றும் தெருமுனை பிரச்சாரங்கள் மூலமாக முஸ்லிம் சமூகம் உணரும் விதமாக இப்பணி அமைய வேண்டும்.

திருமண அழைப்பை ஜூம்மாவில் அறிவிக்கலாம் உறவினர்களுக்கு போஸ்ட் கார்டு மூலம் அழைப்பு வைக்கலாம், உள்ளுர் மக்களுக்கு துண்டு பிரசுரம் மூலம் அறிவிக்கலாம்.

வரதட்சணை வாங்கவோ கொடுக்கவோ செய்யும் திருமணத்திற்கு எங்களை அழைக்க வராதீர்கள் என்று ஒவ்வொரு வீடுகளிலும் எழுதி வைக்க வேண்டும்.

வரதட்சணை வாங்கி நடைபெறும் திருமண விருந்தில் கலந்து கொள்வதை ஒவ்வொரு மனிதனும் அடியோடு புறக்கணிக்க வேண்டும்.

திருமணங்களை எளிதாக்கிக் கொள்ள, பல திருமணங்களை ஒரு இடத்தில் வைத்து நடத்துவதனால் பல வீண் செலவுகள் குறையும்.

திருமணத்தை காலை நேரத்தை தவிர்த்து மாலை நேரத்தில் நடத்தலாம். அதிக செலவை தவிர்க்க பிரியாணி மற்றும் ஆடம்பர உணவுகளை தவிர்த்து டீ பிஸ்கட் போன்ற குறைந்த செலவு உணவுகளை கொடுப்பதின் மூலம் மணமகனுக்கு (வலிமா) விருந்து கொடுப்பது மிக எளிதாக இருக்கும்.

அறியாமைக் காலத்தில் உங்கள் மகனுக்கு வாங்கிய வரதட்சணையை பெண்;; வீட்டாரிடம் உங்கள் மகன் மூலம் திருப்பி கொடுத்து விடுங்கள். அல்லாஹ் மிக்க கருணையாளன். மிக்க மன்னிப்பாளன்.

ஒவ்வொரு இளைஞனும் நான் இந்த வரதட்சணைக்கு எதிராக என்னசெய்தேன் என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும். இந்த வரதட்சணைக்கு எதிராக தினமும் ஒரு நிமிடமாவது உனக்கு நீ பிரச்சாரம் செய்.

பெற்றோர்களே! உங்கள் மகனுக்கு வரதட்சணை வாங்மலும்;, மகளுக்கு வரதட்சணை கொடுக்காமலும் திருமணம் முடித்து வையுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு வரதட்சணை எதிர்ப்புக் கருத்தை மனதில் உருவாக்குங்கள்.

நமது இளைஞர்களை ஆக்கப்பூர்வமான நல்ல விசயங்களின்பால் அழைத்துச் செல்வது சமூக ஆவலர்களின் கடமையாகும். இல்லையேல் வரும் தலைமுறையினரின் ஒழுக்க வாழ்வுக்கு நாம் ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடுவோம் என்பதை மனதில் வைத்து இறைவனுக்கு கட்டுப்பட்டு சாந்தி சமாதான பணிகளை அன்பாக மனித நேயத்தோடு மக்களுக்கு எடுத்துக் கூறுவது நமது கடமையாகும்.

சகோதரர்களே! மதவாதிகளும் சாதீயவாதிகளும் அரசியல்வாதிகளும் தற்போது அரசியல் நடத்தட்டும். மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான் என்பதுநபி மொழி. நாம் மனித நேயவாதிகள் என்பதை நிருபிக்க வரதட்சணை ஒழிப்பு கருத்துக்களை பரப்புவோம். அதற்காக களப்பணிகளை இன்றே துவங்குவோம்.

"யார் இஸ்லாத்தில் (மக்களுக்கு நன்மை தரும்) அழகிய நடைமுறைகளை ஏற்படுத்துவாரோ அவருக்கு அதனுடைய கூலியும் இதைப் போன்று பின்னர் செயல்படுத்தியவரின் கூலியும் கிடைக்கும் " என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)