Home கட்டுரைகள் சமூக அக்கரை மாற்றம் வேண்டும் - என் தேசத்தில்!
மாற்றம் வேண்டும் - என் தேசத்தில்! PDF Print E-mail
Monday, 05 December 2011 22:18
Share

 மாற்றம் வேண்டும் - என் தேசத்தில்!  

'மாற்றம்' இது ஒன்று மட்டும்தான் இந்த உலகில் மாறாமல் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். மற்றதெல்லாம் மாறிவருகிறது. இன்றைக்கு அரசு அலுவலகங்களுக்கு ஏதாவது ஒரு காரியமாகப் போனால் கிட்டத்தட்ட அந்த நாளையே தியாகம் செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.

காரணம், அலுவலர்களின்போக்குதான். எத்தனை கம்ப்யூட்டர் வந்தால் என்ன? இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகள் வந்தால் என்ன? பழைய குருடி கதவைத் திறடி கதையாகத்தான் இருக்கிறது.

காலதாமதம், சோம்பல், இழுத்தடித்தல் இதுபோன்ற வார்த்தைகளுக்கு தமிழ் அகராதியில் விடை தேடினால் மறக்காமல் அரசு அலுவலகம் என்று போட்டுக் கொள்ளலாம். அந்த அளவுக்குக் காரியங்கள் நடந்தேறுகின்றன.

ஒரு மனு குறித்து விசாரிக்கவோ, கையெழுத்து வாங்கவோ அரசு அலுவலகத்துக்குச் செல்ல வேண்டுமானால் போகும் நபர்கள் அந்த ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அன்று முழுக்க அரசு அலுவலகத்தில்தான் நிற்க வேண்டும்.

காலை 9 மணிக்கு அலுவலகம் வருபவர்கள் பைல், கணினி இன்ன பிற பொருள்களை எடுத்து வைத்து சீட்டில் அமர 10 மணியாகும்.அதற்கு மேல் ஒரு பைலை பார்ப்பார். உடனே சங்க விவகாரம், அரியர்ஸ், போனஸ், ஊதிய உயர்வு என சகாக்கள் பேச்சு மெதுவாகத் தொடங்கும்.

அப்போது மனுவுடன் செல்பவரைப் பார்த்து கொஞ்சம் அமருங்கள் என்பார். அவரும் பரபரப்போடு அமர்ந்திருப்பார். அதற்குள் மணி 11-ஐ தாண்டிவிடும். வந்த நபர் மெல்ல எட்டிப் பார்ப்பார். அந்தநேரத்தில் தேநீர் வந்துவிடும். கொண்டு வரும் உதவியாளரோ, நாயரோ அவரிடம் பேச்சுத் தொடரும். சுமார் அரைமணி நேரம் பொழுது ஓடிவிடும். சார்..என் மனு என வந்த நபர் கேட்பார்.

இருப்பா.. பார்த்திட்டுத்தானே இருக்கேன் என்று நேரம் ஒருவழியாகக் கடக்கும். மணி ஒன்றைத் தாண்டியிருக்கும். முழுதாக ஒரு பைல் நகர்ந்திருக்கலாம். பிறகு மதிய உணவு இடைவேளை. அரட்டைக் கச்சேரி. சகாக்கள் புடைசூழ உணவு அருந்தும் படலம்.வந்தவருக்கு நேரம் நன்றாக இருந்தால் காரியம் முடிந்திருக்கும். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு தேதியைக் கூறி அனுப்பி விடுவார்கள்.

மதிய இடைவேளை முடிந்து இரண்டு அல்லது இரண்டரையைத் தொடும்போது மெல்ல வேலை தொடங்கும்; இடையிடையே செல்போன் அழைப்புகளும் வரும். அப்புறம் லேசாக ஒரு புகை இழுக்கும் படலம்.அடுத்ததாக பேச்சு என தொடரும் பணி. மணி நான்கை நெருங்கும்போது பழையபடி தேநீர் இடைவேளை வந்துவிடும். அதற்குப் பிறகு எப்படி வேலை பார்க்க முடியும்? எப்படா மணி ஐந்தாகும் என்ற எண்ணம் மேலோங்கும். அதுவரையில் பொறுமையாக அலைந்த மனுதாரர் இனி வேலைக்கு ஆகாது என்று கிளம்பி விடுவார். இந்த லட்சணத்தில் அரசுப் பணிகள் நடந்தால் பொதுமக்கள் எப்படி இவர்களை அணுக முடியும் என்பதுதான் நம் கேள்வி.

இதே நடைமுறையை மின் கட்டணம் செலுத்துபவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். மேலும், ரேஷன் கடையிலும் இதே நிலைமையைத்தான் காணமுடிகிறது. இது ஒருபுறம் இருக்க வங்கிச்சேவையில் இருப்பவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஏறக்குறைய மாநில அரசு ஊழியர்களுக்கு சற்றும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் போல அவர்களிடம் கூனிக்குறுகி பொதுமக்கள் தவிக்கும் தவிப்பை வார்த்தையால் சொல்லமுடியாது. வந்தவர்களை ஏளனமாக ஒரு பார்வை பார்த்து, அலட்சியமாகப் பேசி, கிட்டத்தட்ட மரியாதை என்றால் என்ன விலை என இவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதைவிட மற்றொரு துறை உள்ளது. அதுதான் ரயில்வே துறை. அங்கு போய் சில்லரை இல்லையென்றாலோ, அந்த ரயில் எப்போது வரும் என்றுகேட்டுவிட்டாலோ அவர்பாடு திண்டாட்டம்தான். கிட்டத்தட்ட எரிந்துவிழும் ஊழியர்கள்தான் அதிகம். இதேபோல அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் அத்தனை பயணிகளுமே ஏறக்குறைய படுகேவலமானவர்கள் அல்லது குற்றம்புரிந்துவிட்டு வந்தவர்கள் என்ற நினைப்புதான் பல நடத்துநர்களுக்கு. கிட்டத்தட்ட தற்கொலை செய்ய வைக்கும் மனநிலைக்குப் பயணிகள் வந்துவிடுவர். அத்தனை கேவலமாகவும், மரியாதைக்குறைவாகவும் அரசு ஊழியர்களால் நடத்தப்படுகிறார்கள்.

முதலில் இவர்கள் வேலை பார்க்கிறார்களோ என்னவோ? மற்றவர்களைத் தரக்குறைவாகவே நினைப்பது இவர்களது பழக்கமாகிவிட்டது. எனவே இவர்களுக்கு முதலில் மனிதாபிமானத்தைப் போதிக்க வேண்டும். அரசுப் பணி என்றால் பொதுமக்கள் இழிவானவர்கள் என்ற மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். அத்துடன் வாங்கும் ஊதியத்துக்கு உண்மையாகப் பணியாற்ற வேண்டும். இதே தனியார் துறையாகட்டும். மனிதரைக் கசக்கிப் பிழிந்து 8 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை வாங்குவார்கள். போதாக்குறைக்கு குறைந்த ஊதியம், எந்தவித சலுகைகளும் கிடையாது. ஆனால் அரசு ஊழியர்களுக்கு அப்படியா?

ஒரு பழமொழி கூறுவார்கள் "வேலை பார்க்கிறவனுக்கு சம்பளம் கொடுக்காதே, வெட்டியாக இருப்பவர்களுக்கு சம்பளம் கொடு' என்று. அது அரசு ஊழியர்களுக்கு மிகவும் பொருந்தும்.இவர்களில் அனைவருமே இதுபோன்ற குணங்களுடன் செயல்படுவதில்லை. ஒரு சிலர் மட்டுமே. ஒரு குடம் பாலுக்கு துளி விஷம் போதுமே. எனவே, மாற்றத்தையே மக்கள் விரும்புகிறார்கள். ஒன்று மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்

source: http://malaikakitham.blogspot.com/2010_11_01_archive.html