Home இஸ்லாம் கட்டுரைகள் சுவனத்தின் விலை பொறுமை!
சுவனத்தின் விலை பொறுமை! PDF Print E-mail
Thursday, 01 December 2011 10:41
Share

சுவனத்தின் விலை பொறுமை!

கனவுலக விளக்கம் கூறுகின்ற மமேதை இப்னு ஸீரின் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் ஒருவர் தான் கண்ட கனவுக்கு விளக்கம் கேட்டார். "நான் தரையில் நீச்சலடிப்பது போலவும் இறக்கையின்றி வானத்தில் பறப்பது போலவும் கனவு கண்டேன். இதன் விளக்கம் என்ன?" என்று கேட்டார். பேரறிஞர் இப்னு ஸீரின் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறினார்கள்: "நிறைவேராத வீணான கற்பனைகளில் மிதப்பவன்"

முயற்சிகள் அதில் ஏற்படும் சிரமங்களில் பொறுமை ஏதுமின்றி வெறும் கற்பனைகளில் திளைப்பவர்கள் இவனைப்போல் தான் கற்பனைவாதியாக இருக்க முடியும். தத்துவக்கவிதை ஒன்று இப்படி கூறுகிறது.

"அந்தஸ்து என்பது பேரித்தம்பழம் அல்ல. சுவைத்துத் தின்பதற்கு! பொறுமையைச் சுவைக்காமல் அதை அடைய முடியாது"

பதவியின் மீது மோகம் கொண்டு அலைந்த முத்னபீ பாடுகிரார்:

"எந்தத் தலைவனும் ஏற்றிடத்தயங்கும் கஷ்டங்களைத் தாங்குபவனே பதவியை அடைய முடியும்.

புத்திசாலிக்கும் தலைவனுக்கும் தவிர அது வாய்க்காது. கஷ்டம் ஏதும் இல்லையெனில் அனைவருமே தலைவராகி இருப்பார்கள் அல்லவா?

எல்லாவற்றையும் வாரி இறைப்பது வறுமையில் தள்ளிவிடும். நிதானமில்லாத வேகமான முயற்சி ஆளையே "காலி செய்துவிடும்". இதே முதனபீ இன்னொரு கவிதையில் தன்னிடம் பேசுகிறார்.

"மனமே என்னை விட்டுவிடு. யாருமே அடைந்திடாத உயர்வை நான் அடைய வேண்டும். கஷ்டங்களோடுதான் உயர்வை அடைய முடியும். எளிதான சிரமத்தில் எளிதான பதவியே கிடைக்கும்.

உயர்பதவியைப் பெறுவது எளிதென்று எண்ணுகிறாயா? தேனடை தேவையென்றால் தேனீக்களின் தீண்டுதல்களை தாங்கியே தீர வேண்டும்."பொறுமை இன்றி சிரமங்களைத் தாங்கிட இயலுமா? எனவே பொறுமைசாலிகள் அன்றி வேறொருவரும் உயர்வை அடைந்திடவே முடியாது.

லட்சியத்தின் திறவுகோல் பொறுமை தான். பொறுமை இருந்தால் எல்லாக் கஷ்டங்களும் எளிதாகும். நாட்கள் போனால் என்ன? காத்திரு. பொறுத்திரு. விலை போகாதவை கூட விற்றுத்தீரும். வாய்ப்பே இல்லை எனக் கூறப்பட்டவை கூட நிறைவேறும். அழிந்து போகும் இவ்வுலக வெற்றிக்கே இப்படி என்றால், என்றும் நிலைத்த நிரந்தர மறுமையின் வெற்றிக்கு பொறுமை எவ்வளவு அவசியம்?

ஒரு அறிஞர் கூறுகிறார்: "சுவனத்தில் நுழையவும் நரகத்தில் நுழைந்திடாமல் பாதுகாப்பு பெறவும் பொறுமை அவசியம். ஏனெனில் அண்ணல் நபி (ஸல்) கூறுகிறர்கள்: "சுவனம் வெறுப்புக்குரியவற்றால் வேலியிடப்பட்டுள்ளது. நரகம் இச்சைகளால் வேலியிடப்பட்டுள்ளது."

எனவே, ஒரு ஏகத்துவ நம்பிக்கையாளன் சுவனத்தில் நுழைய வேண்டுமானால் அறச் செயல்கள் புரியும்போது ஏற்படும் மனச்சங்கடங்களை பொறுமையுடன் ஏற்பது நரகினில் நுழையாமல் பாதுகாப்புப் பெற வேண்டுமானால் மன இச்சைகளை அடக்குவதில் ஏற்படும் சிரமங்களை பொறுமையுடன் சகித்துக் கொள்வதும் அவசியம்.

"மனிதர்களில் பெரும்பாலான குற்றங்கள் இரு வகையில் அமைகின்றன. விரும்புவதை அடைவதில் பொறுமை இழந்து (ஹராமில் விழுந்து) விடுவது. தடுக்கப்பட்டவைகளை விடுவதில் பொறுமை இழந்து (அதைச் செய்து) விடுவது" என்கிறார் ஒரு அறிஞர்.

மனிதனுக்குப் பொறுமை அவசியம். இறை நம்பிக்கையாளர்களுக்கு அது மிக அவசியம். மனிதன் படைக்கப்பட்ட விதம் பற்றியும் அவனைச் சுழ்ந்துள்ள பிரச்சனைகள் பற்றியும் குர்ஆன் இப்படிக் கூறுகிறது.

"(ஆண், பெண் இருவரின்) கலவையான இந்திரியத்திலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம் அவனை நான் சோதிப்போம்" (அல்குர் ஆன் 76:2)

மேலும் கூறுகிறது: நிச்சயமாக மனிதனை கஷ்டத்தில் (உழல்பவனாகவே) நாம் படைத்துள்ளோம். (அல் குர் ஆன் 90:4)

மனித வாழ்க்கை துன்பங்கள் கலந்த இன்பமாகவே உள்ளது. பருவ வயதை அடைந்தவன் அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களைப் பேணுவது என்ற அமானிதத்தாலும் விசாரணைக்குட்படுத்தப்பட்டவன் என்ற பொறுப்பாலும் சோதனைக்குள்ளாகிறான். அந்த அமானிதங்களை வானங்களும் பூமியும் கூட ஏற்க மறுத்தன. மேலும் சக மனிதனின் நாவினால் கரத்தினால் பொறாமையினால் ஏற்படும் சோதனையும் சந்திக்க வேண்டியுள்ளது.

சோதனை எல்லா மனிதர்களுக்கும் பொதுவான விஷயமாகிவிட்டது. ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றவர்களுக்கு அது இன்னும் கடுமையாக இருக்கிறது.

சுவனம் ஒரு வில உயர்ந்த பொருள். அதற்கென ஒரு வில உண்டு அந்த விலையைத் தராமல் அதை அடைய வேறு வழியில்லை. இதற்கு முன் இஸ்லாத்தின் அழைப்புக்குச் செவி சாய்த்தோர் அந்த விலையைத் தந்தனர். பின்னரும் வரும் சகோதரர்களும் தர வேண்டும். செல்வங்களில் சோதனை ஏற்பட்டு வறுமை வந்தாலும் உடல்கள் சோதனைக்குள்ளாக்கி வியாதியுற்றாலும் ஆன்மாக்கள் பாதிப்புள்ளாகி நிலைகுலைந்தாலும் பொறுமை காக்க வேண்டும். இதுவே சுவனத்தின் விலை.

- சிந்தனை சரம் ஆகஸ்ட் 2005

 www.nidur.info