Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் கலிமாவிற்கு வழங்கப்படும் தவறான அர்த்தங்கள் (4)
கலிமாவிற்கு வழங்கப்படும் தவறான அர்த்தங்கள் (4) PDF Print E-mail
Monday, 21 November 2011 06:53
Share

  கலிமாவிற்கு வழங்கப்படும் தவறான அர்த்தங்கள் (4)  

கலிமதுத் தௌஹீதுக்குப் பல் வேறுபட்ட தவாறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தௌஹீதுல் ஹாகிமிய்யா என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அதாவது இவ்வுலகில் அல்லாஹ்வின் சட்டம் மட்டுமே இருக்க வேண்டும். கடவுள்களாக சித்தரிக்காப்பட்டுள்ள வேறெவரின் சட்டமும் உலகில் இருக்கக் கூடாது.

சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது. அவ்வாறு மனிதர்களால் இயற்றப்படும் சட்டததை ஒருவர் ஏற்று நடந்தால் அவர் காஃபிராகிவிட்டார் என்ற இந்தப் பிரசாரத்தை செய்வதற்காகவே நபிமார்கள் அனுப்பப்பட்;டார்கள். தௌஹீதுல் உலூஹிய்யா, ருபூபிய்யாவைப் போன்றே தௌஹீதுல் ஹாகிமிய்யாவும் தௌஹீதுல் உள்ள ஒரு பகுதியாகும். தௌஹீதுல் உலூஹிய்யா, ருபூபிய்யாவை விட தௌஹீதுல் ஹாகிமிய்யாவைப் பிரசாரம் செய்யவே நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள்.

அதிகாரம் அல்லது ஆட்சியொன்றை மையமாக வைத்துத்தான் நபியர்கள் செயல்பட்டார்கள். மக்காவில் வைத்தே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்சியைக் கற்பனை செய்தார்கள். ஆனால் அப்போது அங்கே அதற்கான சூழல் அமையவில்லை. பின்னர் தாயிஃபுக்குப் போனார்கள் அதுவும் சரிவரவில்லை. பின்னர் மதீனாவுக்குச் சென்றார்கள் அது எல்லா வகையிலும் பொருத்தமாக அமைந்தது ஒப்பந்தம் செய்து ஆட்சியை நிருவினார்கள். ஆகவே நபியர்களின் நோக்கம் தூய்மையான ஆட்சியொன்றை ஏற்படுத்துவதுதான் மக்காவில் வைத்து அபூஜஹ்ல், அபூலஹப் போன்றோர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்த்ததும், தமது ஆட்சி நபியவர்களால் பறிக்கப்பட்டு விடும் என்பதற்காகவே என்றெல்லாம் விளக்கம் சொல்லப்படுகின்றது.

இவ்வுலகில் அல்லாஹ்வுடைய சட்டம் மட்டுமே நிலைநாட்டப்படவேண்டும் என்பதில் யாரும் முரண்படலாகாது. அதற்காக நபிமார்கள் வந்ததெல்லாம் ஆட்சியை ஏற்படுத்தி அல்லாஹ்வின் சட்டத்தை நிலைநாட்டத்தான் என்று கூறமுடியாது. அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் வேறெவரையும் வணங்கக் கூடாது என்பதைச் சொல்லவே நபிமார்கள் இவ்வுலகுக்கு வந்தார்கள். சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வைத்தவிர வேறெவருக்கும் கிடையாது என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கியிருக்கின்றோம். ஆதை உறுதிப்படுத்தும் வகையில் அது பற்றிய அல்குர்ஆன் வசனங்களைக் கீழே தருகின்றோம்.

''அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை.'' (அன்ஆம் : 57)

''பின்னர் அவர்களது உண்மையான அதிபதியாகிய அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுவார்கள். கவனத்தில் கொள்க! அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவன் விரைவாகக் கணக்கெடுப்பவன்.'' (அன்ஆம் : 62)

''என் மக்களே! ஒரே வாசல் வழி யாக நுழையாதீர்கள்! பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அல்லாஹ்விட மிருந்து சிறிதளவும் உங்களை நான் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருக்க வேண்டும்’ என்றார்.'' (யூஸுப் : 67)

''அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இவ்வுலகிலும் மறுமையிலும் புகழ் அவனுக்கே உரியது. அதிகாரமும் அவனுக்கே. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!'' (அல்கஸஸ் :70)

''நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங் களை நிறைவேற்றுங்கள்! உங்களுக்கு (பின்னர்) கூறப்படுவதைத் தவிர தாவரத்தை உண்ணும் கால்நடைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இஹ்ராமின் போது வேட்டையாடுவதை அனுமதிக்கப் பட்டது என நீங்கள் கருதக் கூடாது. தான் விரும்பியதை அல்லாஹ் கட்டளையிடுவான்.'' (மாயிதா : 01)

''உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண் மூக்குக்கு மூக்கு காதுக்குக் காது பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப் பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.'' (மாயிதா : 45)

''கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை(என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.'' (ஸுமர் : 3)

''உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப் படுத்துவதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! உங்களில் ஒவ் வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும் வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக்கியிருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிடவில்லை.) எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.'' (மாயிதா : 48)

மேலுள்ள இவ்வசனங்கள் அனைத்தும் சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியது என்பதை தெளிவாகச் சொல்கின்றன. நாம் இவற்றை முழுமையாக ஏற்கின்றோம். இதற்கு மாற்றமாக ஒருவர் இஸ்லாமிய சட்டத்தை மறுத்தால் அவரை நாம் காஃபிர் என்போம். களவெடுத்தால் கை வெட்டக்கூடாது. கசையடி வழங்கக் கூடாது என்று ஒருவர் கூறினால் அவரை நாம் காஃபிர் என்போம்.

ஆனால் லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவின் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதையா மக்களிடம் எதிர்பார்த்தார்கள்? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தப் பிரசாரத்தை முன்னெடுத்த போது அந்த மக்கள் விளங்கியதெல்லாம் வணக்க வழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும் அல்லாஹ்வுக்கு மட்டுமே நேர்ச்சை செய்ய வேண்டும். அவனுக்கே அறுத்துப் பலியிட வேண்டும். அவனிடமே நோய் நிவாரணம் தேடவேண்டும். என்பதையே. இந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். இவர்கள் சொல்வதைப் போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கலிமாவின் மூலம் ஆட்சி அதிகாரத்தையே எதிர்பார்த்தார்கள் என்றால் குறைஷிகள் அதைக் கொடுப்பதற்கு தயாராகவே இருந்தார்கள் அது பற்றிய சமரசத்தையும், கொள்கையில் சிறிதளவேனும் நழுவமாட்டேன் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு எடுத்துரைத்தார்கள் என்பதையும் சூறா காஃபிரூன் அழகாகச் சித்தரிக்கின்றது.

எனவே கலிமாவின் மூலம் குறைஷிகள் விளங்கியது வணக்க வழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ்வுக்கு மட்டுமே நேர்ச்சை செய்ய வேண்டும். அவனுக்கே அறுத்துப் பலியிட வேண்டும். அவனிடமே நோய் நிவாரணம் தேடவேண்டும். என்பதையே. அதனால்தான் அவர்கள் தமது தெய்வங்களை விடமறுத்து அதைக் கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கடுமையாக எதிர்த்தார்கள் என்பதை நாம் விளங்க வேண்டும்.

ஆட்சிக்காகத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகுக்கு வந்தார்கள் என்றால் அபீஸீனியாவுக்கு தனது தோழர்களை அனுப்பியமை மிகப்பெரும் தவறென்பதாகிவிடும். ஏனென்றால் அல்லாஹ்வின் சட்டத்தை நிலை நாட்ட வந்த நபியவர்கள் அல்லாஹ்வின் சட்டமல்லாது மனித சட்டம் நிலைநாட்டப்படுகின்ற அபீஸீனியாவுக்குத் தனது தோழர்களை அனுப்பியிருக்கக் கூடாது.

அது மட்டுமா அங்கே நபித்தோழர்கள் அந்நாட்டு மன்னரிடம் தீர்ப்புக் கேட்டுச் செல்கிறார்கள். மக்காவிலிருந்து வந்த முஸ்லிம்களை திரும்பி தம் நாட்டுக்கனுப்புமாறு கோரி குறைஷிப்பிரமுகர்கள் சிலர் பரிசுப் பொருட்களுடன் மன்னரிடம் சென்று விஷயத்தைக் கூறவே மன்னர் குறித்த நபித்தோழர்களை விசாரித்த போது அவர்களில் ஒருவர் ‘முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் அல்லாஹ்வை மட்டும் வணங்கச் சொன்னார் உறவுகளைச் சேர்ந்து நடக்கச் சொன்னார்’ என்று நபியவர்களின் பிரச்சாரத்தை மன்னருக்கு விளக்குகிறார்.

சொல்லவும் ‘நீங்கள் விரும்பியவாறு இங்கு இருக்கலாம்’ என்று மன்னர் முஸ்லிம்களிடம் சொன்னார் என்று வரலாற்றில் பார்க்கின்றோம். இவர்கள் சொல்வதைப் போல் பார்த்தால் மன்னரிடம் அந்த மக்கள் ‘அல்லாஹ்வின் சட்டத்தை நிலைநாட்டவும் உங்களைப் போன்ற குப்பிரியத்திலுள்ள மன்னர்களை எதிர்க்கவுமே நபியவர்கள் வந்தார்கள்’ என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு சொல்லவில்லை. அவ்வாறு சொல்லியிருந்தால் மன்னர் அவர்களை அங்கு விடப் போவதுமில்லை.

பிற்காலத்தில் ஆட்சியை ஏற்ற அபீஸீனிய மன்னருக்கு தான் முஸ்லிம் என்று வாயால் சொல்வதற்குக் கூட முடியவில்லை. இத்தகைய ஒரு நாட்டுக்குத் தம்மை அனுப்பிய போது எந்த நபித்தோழராவது ஏன் எங்களை இஸ்லாமிய ஆட்சியில்லாத ஓர் அந்நிய நாட்டுக்கு அனுப்புகிறீர்கள்? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவவுமில்லை. இந்த மக்கள் எதைச் சொல்கிறார்கள் என்பதை மன்னர் தெரிந்திருந்தார். எனவே அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். ஆகவே இஸ்லாத்தின் அடிப்படை ஆட்சியோ, சட்டமோ அல்ல என்பதை விளங்க வேண்டும்.

ஆட்சிக்காகத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உழைத்தார்கள் என்றால் மதீனாவில் ஆட்சியமைத்ததும் நஜ்ஜாஷி மன்னருக்கு ஜனாஸாத் தொழுகை நடாத்தினார்கள். தன்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்த போது ‘மன்னரே என்னிடம் வந்து சேர்ந்து எனக்குக் கட்டுப்பட்டிருங்கள் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் நபியவர்கள் அப்படியெல்லாம் எதுவும் செய்யவில்லை. நான் அங்கு வரவா என்று மன்னரே வலிந்து கேட்ட போதும் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரையழைக்கவில்லை என்பதிலிருந்து ஆட்சியோ, அதிகாரமோ முக்கியமல்ல கொள்கைதான் முக்கியம் என்பது உறுதியாகின்றது. அதன் அடிப்படையில் ஓர் ஆட்சி உருவானால் அந்த இடத்திலும் இறைவன் சொல்வதை நடைமுறைப்படுத்த வேண்டும்

நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றிலும் படிப்பினைகள் பலவுண்டு. தான் ஓர் அந்நிய ஆட்சியின் கீழிருந்து அங்குள்ள அமைச்சரின் மனைவியால் தவறானதின்பால் பலவந்தப்படுத்தப்பட்டு அதற்கு இணங்க மறுத்ததனால் அநியாயமாக சிறைவாசம் சென்றார்கள். அங்குள்ள கைதிகளுக்கு தௌஹீத் பிரசாரம் செய்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில்தான் சட்டம் இயற்றும் அதிகாரம் யாருக்குண்டு என்பதையும் நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்கள். அதை அல்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

‘என் சிறைத் தோழர்களே! ஏராளமான கடவுள்கள் (இருப்பது) சிறந்ததா? அடக்கியாளும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வா?"அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும் உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது’ என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.’ (யூஸுப் : 39-40)

பின்னர் நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறையிலிருந்து வெளிவருகின்றார்கள். அதன் பின்னர் மன்னர், யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து தனக்கு நெக்கமானவராக, ஒரு பொருப்பாளராக ஆக்கயமை பற்றி அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகின்றது.

''அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! அவரை எனக்காகத் தேர்வு செய்கிறேன்’ என்று மன்னர் கூறினார். அவரிடம் மன்னர் பேசிய போது ‘இன்று நீர் நம்மிடத்தில் நிலையான இடம் பெற்றவராகவும், நம்பிகைக்குரிய வராகவும் இருக்கிறீர்’ என்றார். ‘இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்’ என்று அவர் கூறினார்.'' (யூஸுஃப்: 54-55)

அந்த ஆட்சியில் ஒரு பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றார்கள். தனது சகோதரர்கள் தன்னிடம் உதவி தேடி வந்த சமயம் அவர்களோடு வந்திருந்த தன் சகோதரன் புன்யாமீனைத் தன்னோடு வைத்துக் கொள்வதற்காக ஒரு திட்டம் போட்டு புன்யாமீனுடைய பையினுள் பாத்திரத்தைப் பதுக்கி வைக்கச் சொல்கிறார்கள். ஏனெனில் யாராவது ஒருவர் திருடினால் அவரிடம் ஒரு தொகை வாங்கிவிட்டு அல்லது வேளை வாங்கிவிட்டு அவரை விடுவதே அக்காலத்தில் திருட்டுக்கான தண்டனையாகவிருந்தது.

பாத்திரத்தைத்திருடியதாக புன்யாமீன் இனங்காணப்படுகின்றார். அப்போது யூஸுப் நபியவர்கள் அவர்களிடம் ‘இவருக்கு என்ன தண்டனை வழங்குவது?’ என்று அவர்க்ளிடத்திலேயே கேட்கச் சொல்கிறார். அதற்கு அவர்கள் ‘அவரை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்கிறார்கள். நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் அதுவே தேவையாகவுமிருந்தது. இதை அல்லாஹ் பின்வருமாறு சொல்கின்றான். இங்கு அல்லாஹ்வை நிராகரிக்கும் ஓர் அட்சியில் நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு பதவியைக் கேட்டுப் பெறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் சட்டத்தை அமுல்படுத்த முடியாத ஓர் ஆட்சியில், யார் குற்றம் செய்தார் என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் அநியாயமாகக் குற்றம் செய்யாதவர்களை சிறையில் தள்ளிய அவ்வாட்சியில் நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏன் அங்கம் வகித்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். அவர் ஆட்சியில் பங்கெடுத்த பின்னராவது எகிப்து முழுவதும் இஸ்லாமிய ஆட்சியாக மாறியமைக்கான எந்த சான்றுகளும் இல்லை. இறை நிராகரிப்பாளரின் ஆட்சியில் பங்கெடுக்கக் கூடாது என்றிருந்தால் யூஸுப் நபியவர்கள் இப்பொறுப்பை ஏற்றிருப்பார்களா? அவர்கள் செய்ததெல்லாம் அல்லாஹ்வை மட்டும்தான் வணங்க வேண்டும் என்ற தனது கொள்கையை அந்த மக்களிடம் முன்வைத்ததுதான். அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள்.

சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் என்பதைச் சிலர் தவறாக விளங்கியுள்ளார்கள். சட்டம் என்றால் அது அரசியல்தான் என்று இவர்கள் விளங்கியுள்ளார்கள். இது முற்றிலும் தவறானதாகும். அல்லாஹ்வை மட்டும்தான் வணங்க வேண்டும் என்பதிலேயே சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் என்பதும் அடங்கிவிட்டது. அடிபணிதல், கட்டுப்படுதல் அல்லாஹ் ஒருவனுக்காக மட்டுமே என்பதையும்தான் கலிமா உள்ளடக்கியுள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.

எனவே அல்லாஹ்வும், தூதரும் எதையெல்லாம் நமக்குச் சொன்னார்களோ அவையனைத்தும் சட்டம்தான். தாடி வைததல், கரண்டைக்கு மேல் ஆடையணிதல், தொழுதல், ஸகாத் கொடுத்தல் போன்ற எல்லாம் சட்டமே. அவற்றைப் பின்பற்றுவது அனைவருக்கும் கடமையே. வணக்க வழிபாடுகள் இவ்வாறுதான் அமைய வேண்டும் என அல்லாஹ்வும் தூதரும் சொன்னால் அதற்கு மாறுபட முடியாது. பித்அத்துக்களைச் செய்ய முடியாது. ஆகவே சட்டம் என்பது குற்றவியல், அரசியல், பொருளியல், குடும்பவியல் போன்ற எல்லாத் துறைகளையும் உள்ளடக்கியதாகும். இவையனைத்திலும் அல்லாஹ்வையும், தூதரையும் பின்பற்றவேண்டும். ஆட்சியமைத்தால்தான் சட்டத்தை நிலை நாட்டலாம் என்பது இறைவனின் சட்டம் என்றால் என்ன என்ற புரிதலின்மையின் காரணமாக விளைந்தது.

இறை சட்டமாக அரசியலை மட்டும் தூக்கிப்பிடிக்கும் இவர்கள் அல்லாஹ் கூறியுள்ள பல சட்டங்களைப் புறக்கணிக்கின்றனர்.

கூட்டு துஆ அல்லாஹ்வின் சட்டத்திலில்லை ஆனால் செய்கிறார்கள்.

கப்ர்கள் கட்டப்படக் கூடாது, கட்டப்பட்டவை உடைக்கப்பட வேண்டும் என்பது அல்லாஹ்வின் சட்டம் ஆனால் செய்யமாட்டார்கள்.

வட்டியெடுப்பது அல்லாஹ்வின் சட்டத்தில் பெரும்பாவமாகும். ஆனால் இவர்களோ, முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாட்டில் வட்டியெடுக்கலாம் என்கிறார்கள்.

பின்பற்ற முடியுமான பல சட்டங்கள் தேங்கிக்கிடக்கும் போது ஆட்சி வந்தால் எதையெல்லாம் பின்பற்றலாம் என்பது பற்றிக் கற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள். இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசும் இவர்களிடம் இஸ்லாமிய ஆட்சி பற்றிக்கூட சரியான தெளிவு கிடையாது. ‘இஸ்லாத்திற்கும் கம்யூனிஸத்துக்கும் எந்த முரண்பாடுமில்லை. உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கம்யூனிஸத்தை நிலை நாட்ட வந்த ஒரு சிறந்த தலைவர். அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு கம்யூனிஸ வாதி. இஸ்லாத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.....’ என்றெல்லாம் கூறியவர்கள் அவர்களில் மிகப்பெரும் அறிஞர்களாகக் கணிக்கப்படுகிறார்கள்.

இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதை இவர்கள் வலியுறுத்துகின்றார்கள். நாமும் அதையே சொல்கிறோம். தம்மால் முடிந்தவற்றில் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணால் 20 நாட்களே தொழ முடியும், மற்றொருவருக்கு மாதம் முழுவதும் தொழ முடியும் இருவரும் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றியவர்களாகவே கருதப்படுவர். அவர் 10 நாள் தொழவில்லை என்பதால் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றவில்லை என்பதாகாது.

இஸ்லாமிய ஆட்சி கலிமாவில் ஒரு பகுதியாகிய இந்த சிந்தனை 1924 க்குப் பின்னரே உருவாகியது. ''தௌஹீதுல் ஹாகிமிய்யா'' என்ற வார்த்தையை முதலில் சொன்னவர் மௌலானா மௌதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களாவார். அவருக்குப் பின்னால் அதைச் சொன்னவர் ஸெய்யித் குத்ப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்;.

‘இறைவனின் சட்டத்தை வைத்து ஆட்சி செய்யாதவர்கள் தமக்கு சட்டம் இயற்றும் அதிகாரமுள்ளதாகச் சொல்கிறார்கள். அவ்வாறு சொல்பவர்கள் தம்மைக் கடவுளாக அறிவிக்கிறார்கள். அவ்வாறு அறிவித்த ஆட்சியாளர்களை ஆட்சியாளனாக ஏற்பது அவனை வணங்குவதற்குச் சமம். எனவே. எனவே அவர்கள். முஸ்லிம்களாக இருந்து அந்த ஆட்சியாளர்களை ஏற்றால் அவர்கள் முர்த்த்களாகி விடுகின்றனர்.’ இதுவே அவர்கள் தவ்ஹீதுல் ஹாகிமீயாவின் மூலம் முன்வைத்தது.

இவர்கள் இந்தக் கருத்தை முன் வைத்த விதத்திலேயே ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட ஜமாஅத்துக்கள் உருவாகின. அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் அளவிற்கு இந்தக் கருத்து சிலரைத் தூண்டியது. இவையனைத்தையும் அவர்கள் இணைவைப்புக்கு எதிரான பிரச்சாரமாகக் கருதினார்கள்.

ஸெய்யித் குத்ப் ரஹ்மதுல்லாஹி அலைஹி எழுதிய ‘மைல்கற்கள்’ ‘அல்குர்ஆனின் நிழலிலே’ போன்ற நூற்களிலும், மௌலானா மௌதூதி அவர்களின் ‘இஸ்லாத்தின் வாழ்வியல் ஒழுங்குகள்’;, ‘அல்குர்ஆனிலே வரும் நான்கு நடைமுறைகள்’ போன்ற நூற்களிலும் அவர்கள் சொல்லவருவது என்னவென்றால் என்றால்‘சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே. ஆயினும் தற்போதைய உலகைப் பார்ப்போமானால் அல்லாஹ்வின் சட்டம் எங்குமில்லை....’ என்பதே!

ஸெய்யித் குத்ப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ‘இன்று உலகில் ஒலிக்கும் அதான்கள் அல்லாஹ்வின் அதான்கள் அல்ல. அதைச் சொல்பவர்கள் யாரும் முஸ்லிம்களல்ல’ என்று கூறியுள்ளார். மௌலானா மௌதூதி அவர்கள் ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தைப்பிரசாரம் செய்யும் வேளையில் கஃபாவைப் பராமரித்துக் கொண்டிருந்த பூசாரிகள் போன்றவர்களே இன்று கஃபாவில் சேவை செய்து கொண்டிருப்பவர்களாவர்’ என்று கூறியுள்ளார். ‘இன்று உலகை ஆள்பவர்களும் ஆளப்படுபவர்களும் இறைவனை நிராகரித்துவிட்டனர்’ என்றெல்லாம் ஸெய்யித் குத்ப் ஸெய்யித் குத்ப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது ‘ஜாஹிலிய்யதுல் அஸ்ர்’என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புரட்சிக் கருத்துக்களால் தூண்டப்பட்ட பல இளைஞர்கள் பல இயக்கங்களாகப் பரிணமித்தார்கள். எகிப்து, சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் வன்முறைகள் வெடித்தன. இந்தக் கருத்துக்கள் பற்றிய விமர்சனங்கள் எழுந்த போது எகிப்தைச் சேர்ந்த ஸாலிம் அல் பஹ்னஸாஈ என்பவர் இக்கருத்தைப் பாதுகாக்கும் வகையில் ‘ஸையித் குதுப் பைனல் ஆதிபிய்யதி வல் மவ்ழூஇய்யா’ என்ற நூலை எழுதி ஸெய்யித் குத்ப் ரஹ்மதுல்லாஹி அலைஹி மீதான விமர்சனங்களுக்கு வியாக்கியானம் வழங்கினார்.

ஸலாஹுல் காலிதீ என்பவரும் இவ்வாறே கருத்துச் சொன்னார். ஸெய்யித் குத்ப் ரஹ்மதுல்லாஹி அலைஹி இந்தக் கருத்தைச் சொன்னமைக்கு அவருடைய பல புத்தகங்களே சான்றாகவுள்ளன. யூஸுப் அல்கர்லாவி அவர்களே ‘ஸையித் குதுபின் நூல்களில் இந்த முழு முஸ்லிம் சமூகமும் குஃப்பார்களாகி விட்டனர் என்ற கருத்துக்கள் இருந்தன’ என ‘அவ்வியாதுல் ஹரகாதில் இஸ்லாமியா’என்ற நூலில் ஏற்றுள்ளார். இந்தக் கருத்துக்கள் முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டச் செய்தனவேயன்றி வேறெதையும் ஏற்படுத்தவில்லை. இன்று வரை அதனால் எற்பட்ட விபரீதங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

இஸ்லாமிய ஆட்சியை அகீதாவின் ஒரு பகுதியாக கொள்கையின் ஒரு பகுதியாக மாற்றியமைத்தஇந்த சித்தாந்தத்திற்கு ஷிஆக்களும் ஒரு வகையில் காரணமாக உள்ளனர். இஸ்லாமிய ஆட்சியைப் பேசும் அமைப்பினர் யாரும் இன்றைய ஷிஅக்களுக்கெதிராக, அவர்களின் கொள்கைகள் பற்றி எதுவும் பேசியதில்லை. இதன் பிறகாவது பேசப் போவதுமில்லை. மஹ்தி பவுன்டேஸன் என்ற அமைப்பு உருவாகிய போது வரிந்து கட்டிக் கொண்டு அதை எதிர்த்தவர்கள், அல் குர்ஆனில் மாற்றம் செய்து, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு போன்றோரைச் சபித்து, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை வசைபாடிய ஷீஆக்களைப் பற்றி ஏன் பேசுவதில்லையென்றால் ஷீஆக்கள் இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசியமைதான். இதனால்தான் சவூதியை விட ஈரானை அதிகம் நேசிக்கின்றார்கள். ஷீஆக்கள் அகீதாவில் முரண்பட்டாலும் இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசுகின்ற ஒரே காரணத்துக்காகவே இவர்கள் ஷிஆக்களை விரும்புகின்றனர். ஆகக் கலிமாவின் நோக்கம்;

படைத்து நிருவகிக்கும் ஒருவனே வணக்கத்திற்குறியவன் என்பதைச் சொல்வதுவேயன்றி வேறில்லை. அவ்வாறு ஏற்றவர்களுக்கான ஒரு அழகிய வாழ்வுமுறையை அடுப்படி முதல் அரசியல் வரை இறைவன் வகுத்துக் கொடுத்துள்ளான். அவைகளே இறைவனது சட்டம். இதை இயன்றளவு ஏற்று நடக்க வேண்டும். அதை மறுத்தால் அவர் இறைவனை நிராகரித்தவராவார்.

என்றுதான் கலிமாவைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கலிமாவிற்கு வழங்கப்படும் தவறான அர்த்தங்கள் தொடர்கட்டுரை இவ்வாக்கத்தோடு முடிவுறுகிறது

source: http://www.mujahidsrilanki.com/2011/10/explantion-of-lailaaha-illallah/