Home கட்டுரைகள் உடல் நலம் விருந்துத் துறையை நாடுகின்ற நாம் மருந்துத் துறையை நாடுகின்றோமா...?
விருந்துத் துறையை நாடுகின்ற நாம் மருந்துத் துறையை நாடுகின்றோமா...? PDF Print E-mail
Friday, 18 November 2011 12:20
Share

விருந்துத் துறையை நாடுகின்ற நாம் மருந்துத் துறையை நாடுகின்றோமா...?

மருத்துவத் துறையிலும், சேவை மைய்யங்கள் அமைப்பதிலும் கிறிஸ்துவர்களும், ஜைனர்களும் முன்னனியில் இருக்கின்றனர். இந்த இரண்டிலும் முஸ்லிம்களின் பங்களிப்பு கடைநிலையில் உள்ளது.

கிறிஸ்துவர்கள் நடத்தும் சென்னை கல்யாணி மருத்துவ மனையில் ஒரு கண் அறுவை சிகிச்சைக்கு நான்காயிரம் ரூபாய் பெறப்படுகிறது. இதே அறுவை சிகிச்சைக்கு முப்பதாயிரத்துக்கு மேல் வாங்கும் மருத்துவ மனைகளும் உண்டு.

ஆழ்வார்பேட்டையில் உள்ள சகோதர சமுதாய மருத்துவ மனையில் கண் அறுவை சிகிச்சைக்கு ஏழைகள் என்றால் ரூபாய் 3000/- வசதியுள்ளோர்க்கு ரூபாய் 25,000/- கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஜைனர்கள் அறக்கட்டளை, அனாதைகளாக இருக்கும் எந்த மதத்தினருக்கும், ஏழைகள் என்றால் இலவச கண் சிகிச்சையும், மூக்குக் கண்ணாடியும் வழங்குகிறது. (பல முஸ்லிம்கள் இவர்களிடம் பயனடைந்துள்ளனர்).

மருத்துவத் துறைக்குள் இது போன்ற சேவையைச் செய்ய முஸ்லிம்கள் முன் வராத நிலையே உள்ளது. கோடிக்கணக்கானோர் வாழும் சென்னையில், சேவை மனப்பான்மையோடு ஏழைகள் பயன்பெறும் வகையில் புற நோயாளிகளுக்காகச் செயல்பட்டு வரும் ஒரே முஸ்லிம் மருத்துவமனை 'கிரஸண்ட் மருத்துவமனை'.

இது போன்று மருத்துவமனைகள் மற்ற மாவட்டங்களில் அமைந்துள்ளனவா? என்றால், இல்லை என்றே தெரிகிறது.. நிரம்ப மருத்துவமனைகள் மாவட்டங்கள் தோறும் உள் நோயாளிகளாகச் சேர்த்துக்கொள்ளும் வகையில் முஸ்லிம்களால் அமைக்கப்பட வேண்டும்.

மத்திய திட்டக் கமிஷன், நர்ஸிங் உதவியாளர்களும், லேப் டெக்னீஷியன்களும் 10 லட்சம் பேர் தேவைப்படுவதாக மூன்று ஆண்டுக்கு முன் அறிவித்தது. ஆனால், மருத்துவர் ஆகும் படிப்பைத்தவிர மற்ற படிப்புகளை நடாத தன்மை நம்மிடம் காணப்படுகிறது. மருந்து படிப்புத்துறையிலும், நர்ஸிங் படிப்புத் துறையிலும் ஆயிரம் பேருக்கு ஒரு முஸ்லிமே காணப்படுகின்றனர்.

இறக்குமதி மருந்துகளான 20 வகைத் தடுப்பூசிகளைப் போட்டு வீரியமுள்ள மருந்தையே எதிர்காலத்தில் உட்கொள்ள வேண்டிய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர். இதைப் பயன்படுத்திக் கொள்வோர் ரூபாய் 7./- க்கு விற்க வேண்டிய மாத்திரையை ரூபாய் 30/- க்கு மேல் விற்கின்றனர். இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாத நாம் கலயாண மண்டபங்கள், லாட்ஜுகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், பொழுதுபோக்கு வணிக வளாகங்கள் கட்டுவதில் மட்டுமே அக்கரை செலுத்தி வருகிறோம்.

முஸ்லிம்களுடைய போக்கை அறிந்திருக்கும் அரசு மகப்பேறு மருத்துவமனைப் பணியாளர்கள், நர்ஸுகள் பிரசவத்திற்காகத் தங்களை நாடிவரும் முஸ்லிம் பெண்களிடம், அசிங்கமான, கொச்சையான வார்த்தைகளால் ஏசிப் பேசும் நிலையும், இந்த ஏச்சையும், பேச்சையும் பொருத்துக் கொள்வதோடு, ஆண் மருத்துவர்களிடம் பிரசவம் பார்க்கும் நிலையும் சென்னையில் இன்றைக்கும் தொடர்கிறது.

உணவுப் பழக்க வழக்கம், ஓய்வில்லா உழைப்பு, உடல் நலம் பேணாமை, நடைப்பயணம் இல்லாமையால் ஐம்பது வயதுக்குள்ளாகவே முஸ்லிம்களுக்கு முதுமை தட்டிவிடுகிறது. (நாற்பது வயதுக்கு மேல்தான சமுதாயத்தினர் வாழ்க்கையையே ஆரம்பிக்கின்றனர்). இன்றைக்கு 60 வயதுக்குள் முஸ்லிம்களுக்கு வாழ்க்கையே முடிந்து விடுகிறது.

இந்த நிலைப் பாட்டிலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுக்க தொண்டுள்ளம் கொண்ட முஸ்லிம் மருத்துவர்களும், ஆண் நர்ஸுகளும் முன்வர வேண்டும். மஸ்ஜிதுகள் தோறும், மருத்துவர்கள் தங்கள் பணி நேரம்போக இரண்டு மணி நேரம் மாலையில் வருகை தந்து ரத்த அழுத்தம், நீரழிவு ஏனைய வகை நோய்களைக் கண்டறிந்து முஸ்லிம்களுக்கிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். (சென்னையிலுள்ள சில மஹல்லாக்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பரவலாக்கப்பட வேண்டும்). காரணம், முன் குறிப்பிட்ட இரண்டு வகை நோய்களும் முற்றிய நிலையில் தான் முஸ்லிம்கள் மருத்துவ மனைக்கே செல்கின்றனர்.

வசதியுள்ளோர், மருத்துவர்களைக் கொண்டு ஏழைகள் வாழும் பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். மறுபடியும் சொல்கிறோம் வசதியுள்ளோர், மருத்துவர்களைக் கொண்டு ஏழைகள் வாழும் பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். வசதியற்ற ஏழைப் பெண்களுக்கு முழு சிகிச்சையும் அளிக்க முன்வர வேண்டும்.

இதற்கு மாவட்டந்தோறும் மருந்து ஸ்டாக்கிஸ்டுகளாக உள்ள முஸ்லிம்களும், ஆங்கில மருத்துவர்களும் உதவ வேண்டும்.

மருத்துவத் துறையில் உச்சம் முதல் கடைசி வரை உள்ள பல படிப்புகளில் எல்லா வகைப் படிப்பையும் தங்களது மதிப்பெண்ணுக்கொப்ப கற்க முஸ்லிம் மாணவர்கள், மாணவிகள் முன்வர வேண்டும். எல்லாப் படிப்புகளுக்கும் தேவை அதிகமாக உள்ளது. படித்தால் உச்சத்தில் தான் படிப்பேன் என்ற நிலைப்பாட்டை நமது பிள்ளைகள் மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளின் மூலமே முஸ்லிம்களை மற்ற சமூகத்தினர் அன்னியர்களாகப் பாவிக்கும் போக்கு மாறும்.

வசதிபடைத்தோரின் சேவை இவ்விஷயத்தில் அவசியம் தேவை. அவர்கள் முயன்றால் சமுதாயத்தை ஆரோக்கியத்துடன் வாழ வைக்க முடியும். உண்மையான இறையச்சமுள்ள வசதிபடைத்தோர் விரைவில் களமிறங்குவார்கள் என நம்புவோமாக. அல்லாஹ் உதவியும், நல்லருளும் புரிவானாக.

-முஸ்லிம் முரசு, நவம்பர் 2008 தலையங்கம்

www.nidur.info