Home இஸ்லாம் ‘ஷிர்க்’ வேலூர் ''பாக்கியாதுஸ்ஸாலிஹாத்'' ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமும் அஃலா ஹளரத் அவர்களின் ஃபத்வாவும்
வேலூர் ''பாக்கியாதுஸ்ஸாலிஹாத்'' ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமும் அஃலா ஹளரத் அவர்களின் ஃபத்வாவும் PDF Print E-mail
Friday, 18 November 2011 11:38
Share

வேலூர் ''பாக்கியாதுஸ்ஸாலிஹாத்'' ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமும் அஃலா ஹளரத் அவர்களின் ஃபத்வாவும்

ஒவ்வொரு இஸ்லாமிய இணையதலத்திலும் இடம்பெறவேண்டிய மிக முக்கியமான கட்டுரை

வேலூர் 'பாக்கியாதுஸ்ஸாலிஹாத்' ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே பித்அத்-அனாச்சாரங்களை ஒழிப்பதற்குத்தான்!

[ இந்திய துணைக்கணடத்தைப் பொருத்தவரை தேவ்பந்தில் ஆரம்பிக்கப்பட்ட தாருல் உலூமின் அறிஞர்கள், அதில் கற்றுத்தேறிய மாணவர்கள் உலகம் முழுவதும் குறிப்பாக இந்திய துணைக்கண்டத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று இந்த உண்மைக் கொள்கையை தியாக உணர்வோடு விருப்பு, வெறுப்புகளுக்கு, மனமாச்சர்யங்களுக்கு இடமளிக்காமல் மனத்தூய்மையோடு உறுதியாக எடுத்து வைத்தார்கள்.

அப்போது உலகமே தாருல் உலூம் தேவ்பந்தை திரும்பிப் பார்த்தது. அதன் பிறகு இந்த சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடும் அனைவரும் தாருல் உலூம் தேவ்பந்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். எல்லா இடங்களிலும் தாருல் உலூம் தேவ்பந்தை முன்மாதிரியாகக் கொண்டு பல மதரஸாக்கள் நிறுவப்பட்டன. அதற்குப்பிறகு ஷிர்க், பித்அத்-அனாச்சாரங்கள், சமூகக் கொடுமைகளை எதிர்த்தும், சுன்னத்துகளை பாதுகாத்து தீனை நிலைநாட்டும் அறிஞர்கள் யாவரும் தேவ்பந்த் கொள்கைக்காரர்கள் என்று அடையாலம் காணப்பட்டனர்.

அஃலா ஹளரத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் என்ன நோக்கத்திற்காக வேலூர், ''பாக்கியாதுஸ்ஸாலிஹாத்'' மதரஸாவை ஆரம்பித்தார்களோ அந்த உயர்ந்த இலட்சியத்திற்கு முரணான கொள்கை சுமார் 60 வருடங்களுக்கு முன்னாலேயே பாக்கியாத்தில் திணிக்கப்பட்டு அப்போதே பாக்கியாத் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது என்பதே சத்தியம். விருப்பு வெறுப்பின்றி இந்த வரலாற்று உண்மையை நடுநிலைப் பார்வையோடு ஆராய்ந்து பார்த்தால் இது புரிய வரும். - மனாருல் ஹுதா ]

அஃலா ஹளரத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் திட்டச்சேரியில் ஷரீஅத்திற்கு மாற்றமான பித்அத்-அனாச்சரங்கள், உருஸ், சந்தனக்கூடு, முஹர்ரம் மாத அனாச்சாரங்கள் மற்றும் சமூகக் கொடுமைகளை எதிர்த்து அப்பகுதியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.

மாதக் கணக்கில் இவ்வாறு பிரச்சாரம் செய்து வந்ததைக் கண்ட மர்ஹூம் மவ்லானா, கனி தம்பி ஆலிம் சாஹிப் அவர்கள் அஃலா ஹளரத் அவர்கலிடம் ''பித்அத்-அனாச்சாரங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது சரிதான்! ஆனால், பிரச்சாரம் செய்தவுடன் கேட்பார்கள், நீங்கள் சென்றபின் மீண்டும் பழையபடி ஆரம்பித்துவிடுவார்கள். ஆகவே, பித்அத்துகளை தொடர்ந்து ஒழிக்க வேண்டுமானால், எல்லா இடங்களிலும் ஒழிக்க வேண்டுமானால் ஒரு மதரஸாவை ஆரம்பித்து ஆலிம்களை உருவாக்குங்கள். உங்கள் மாணவர்களான அந்த ஆலிம்களை பல பகுதிகு அனுப்பி பித்அத்தை கண்டித்து பிரச்சாரம் செய்ய வைய்யுங்கள். அப்படி செய்தால் இப்பணி தொடர்ந்து நடந்தால் நல்ல பலன் கிட்டும்'' என்று ஆலோசனை வழங்கினார்கள். மிக நல்ல ஆலோசனையாக இருந்ததால் அதனை ஏற்று வேலூரில் ''பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்'' மதரஸாவை அஃலா ஹளரத் ஆரம்பித்தார்கள்.

மேற்காணும் செய்தி பாக்கியாத்தின் முன்னால் மாணவரும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தீன் சேவையும், சமுதாய புரட்சியும் செய்த உத்தம பாளையம் மவ்லானா S.S.அப்துல் காதிர் பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நெல்லையிலிருந்து வெளிவரும் 'ரஹ்மத்' மாத இதழில் ''தென்னாட்டு முஜத்தித்'' என்ற பெயரில் எழுதிய அஃலா ஹளரத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைப் பற்றிய வரலாற்றுத் தொடரில், (1971 -அக்டோபர் மாத) இதழின் பக்கம் 18-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, பாக்கியாத் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே பித்அத்-அனாச்சாரங்கள் அனைத்தையும் எதிர்த்து, தொடர்ந்து போராடி, அவற்றை அழிப்பதற்கும் சுன்னத்தான வழிமுறைகளை நிலைநாட்டி தீனைப் பாதுகாபதற்கும்தான் என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.. தாருல் உலூம் தேவ்பந்த் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமும் இதுவேயாகும்.

தாருல் உலூம் தேவ்பந்தின் ஃபத்வாக்களுடன் ஒத்துப்போகும் தமிழகத்தின் தாய் மதரஸாவான பாக்கியாதுஸ்ஸாலிஹாத்தின் நிறுவனர் அஃலா ஹளரத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வழங்கிய ஃபத்வாக்களில் சில:

1. கப்ரு சமாதி வழிபாட்டுக்காரர் இமாமத் செய்வது மக்ரூஹ் தஹ்ரீம் (ஹராமுக்கு நெருக்கான பாவமாகும்). (ஃபத்வா பாக்கியாத், பக்கம் 35-37)

2. மய்யித்தை அடக்கம் செய்த பின்பு அல்லது அதற்கு முன்பு மயான வாசலில் நின்றுகொண்டு அல்லது மய்யித்தின் வீட்டில் ஒன்று கூடி வழமையில் உள்ள ஃபாத்திஹாவைக் கட்டாயப்படுத்தி ஓதுவதும், ''அதைக்கைவிடுவது கண்டனத்திற்கு உரியது'' என்று கருதுவதும் அருவருக்கத்தக்க ''பித்அத்'' ஆகும். (ஃபத்வா பாக்கியாத், பக்கம் - 56)

3. ஷரீஅத்திற்கு மாற்றமான காரியங்களைச் செய்யும் போலி ஷைகுகளை கடுமையான வார்த்தைகளால் கண்டித்து விரிவான ஃபதாவை அஃலா ஹளரத் அவர்கள் வழங்கியுள்ளார்கள். (ஃபத்வா பாக்கியாத், பக்கம் - 112)

4. விஷேச இரவுகளில் தேவைக்கு அதிகமாக மஸ்ஜிதுகளில் விளக்கு அலங்காரம் செய்வது வீண் விரயம் (இஸ்ராஃப்) ஆகும். அதைத்தவிர்க்க வேண்டும். ((ஃபத்வா பாக்கியாத், பக்கம் 284)

5. பெரியார்களின் (அவ்லியாக்களின்) அடக்கஸ்தலங்களில் உருஸு நடத்துவதும், சந்தனக்கூடு தூக்குவதும் பித்அத் ஆகும். நோக்கங்கள் நிறைவேற பெரியார்களின் (அவ்லியாக்களின்) பெயரால் நேர்ச்சை செய்வது ஹராமாகும். (ஃபத்வா பாக்கியாத், பக்கம் – 297)

6. கப்ராளிகளிடம் தேவையை முறையிடுவது கூடாது என்றும், மேலும் மய்யித்தை அடக்கம் செய்த 3-ம் நாள், ஏழாம் நாள், பத்தாம் நாள், 30-ம் நாள், 40-ம் நாள் ஃபாத்திஹாக்கள் கூடாது என்றும் மய்யித் கப்ரில் போடப்படும் பூ மாலை, பொறுத்தி வைக்கப்படும் பத்திகள்.... இதுபோன்று எதுவும் மார்க்கத்தில் இல்லை, கூடாது என்றும் தெளிவாக ஃபத்வா கொடுத்துள்ளார்கள். (ஃபத்வா பாக்கியாத், பக்கம் – 289-291)

இவைதான் பாக்கியாத்தின் கொள்கை என்பதை உறுதிப்படுத்த இது போன்ற ஃபத்வாக்களில் தாம் மட்டும் கையெழுத்திட்டதோடு மட்டுமல்லாமல் மதரஸாவின் முக்கியமான மூத்த ஆசிரியர்களையும் கையெழுத்திடச் செய்து பகிரங்கப்படுத்தியுள்ளார்கள்.

மேலும் அஃலா ஹளரத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பேத்தி மகனார் நிஸார் அஹ்மது ஃபித்வி பாகவி அவர்கள் "முஜத்திதே ஜுனூப்" என்ற நூலில் "அன்னார் தங்களது அதிகமான ஃபத்வாக்களில் வழிகெட்ட பித் அத்களைப் பற்றி கேட்கப்பட்ட போதெல்லாம் மிகவும் ஆணித்தரமாக 'இவற்றை விட்டும் தவிர்திருப்பது மிகவும் அவசியம்" என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள்.; என்று கூறியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். (பக்கம் - 74)

அஃலா ஹளரத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஆசிரியர்களின் கொள்கையும், அவர்களிடம் நேரடியாகப் பயின்ற மாணவர்களின் கொள்கையும், தேவ்பந்த் உலமாக்களின் கொள்கையும் ஒன்றாகவே இருக்கிறது. அஃலா ஹளரத் அவர்களின் கொள்கையும் அதுதான் என்று தெளிவான பிறகு, வரலாற்று ஆதாரங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு 'பாக்கியாத்தின் கோள்கை இதுவல்ல, பின்னால் வந்த சில பாகவிகள் கூறும் கொள்கைதான் பாக்கியாத்தின் கொள்கை’ என்று சொல்வது மிகப்பெரும் தவறாகும்.

அஃலா ஹளரத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் என்ன நோக்கத்திற்காக மதரஸாவை ஆரம்பித்தார்களோ அந்த உயர்ந்த இலட்சியத்திற்கு முரணான கொள்கை சுமார் 60 வருடங்களுக்கு முன்னாலேயே பாக்கியாத்தில் திணிக்கப்பட்டு அப்போதே பாக்கியாத் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது என்பதே சத்தியம். விருப்பு வெறுப்பின்றி இந்த வரலாற்று உண்மையை நடுநிலைப் பார்வையோடு ஆராய்ந்து பார்த்தால் இது புரிய வரும்.

ஷிர்க், பித்அத்-அனாச்சாரங்களை ஒழித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளை ஸுன்னத்தான வாழ்வை நிலைநாட்டி, தீனைப் பாதுகாத்து நிலைநாட்டுவதுதான் இஸ்லாமியக் கொள்கை கோட்பாடாகும். ஆரம்ப காலம் முதல் ஆங்காங்கே நல்லடியார்கள் மூலம் இந்த சேவை செய்யப்பட்டே வந்தது.

இந்திய துணைக்கணடத்தைப் பொருத்தவரை இடையில் சற்று தொய்வு ஏற்பட்டது. பிறகு தேவ்பந்தில் ஆரம்பிக்கப்பட்ட தாருல் உலூமின் அறிஞர்கள், அதில் கற்றுத்தேறிய மாணவர்கள் உலகம் முழுவதும் குறிப்பாக இந்திய துணைக்கண்டத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று இந்த உண்மைக் கொள்கையை தியாக உணர்வோடு விருப்பு, வெறுப்புகளுக்கு, மனமாச்சர்யங்களுக்கு இடமளிக்காமல் மனத்தூய்மையோடு உறுதியாக எடுத்து வைத்தார்கள்.

அப்போது உலகமே தாருல் உலூம் தேவ்பந்தை திரும்பிப் பார்த்தது. அதன் பிறகு இந்த சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடும் அனைவரும் தாருல் உலூம் தேவ்பந்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். எல்லா இடங்களிலும் தாருல் உலூம் தேவ்பந்தை முன்மாதிரியாகக் கொண்டு பல மதரஸாக்கள் நிறுவப்பட்டன. அதற்குப்பிறகு ஷிர்க், பித்அத்-அனாச்சாரங்கள், சமூகக் கொடுமைகளை எதிர்த்தும், சுன்னத்துகளை பாதுகாத்து தீனை நிலைநாட்டும் அறிஞர்கள் யாவரும் தேவ்பந்த் கொள்கைக்காரர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர்.

கண்டதையும், கேட்டதையும், மனோ இச்சையையும் பின்பற்றுவதை விடுவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழியில் ஸஹாபாக்கள் முதல் அஃலா ஹளரத் போன்ற நல்லடியார்கள் வரை எந்த உண்மைக் கோட்பாடுகளின் பிரகாரம் வாழ்ந்து சென்றார்களோ அது போன்று அல்லாஹுதஆலா நம் அனைவரையும் வாழ தவ்ஃபீக் செய்வானாக! ஆமீன்.

நன்றி: ''மனாருல் ஹுதா'' நவம்பர் 2011 -இதழில் வெளியான செய்திகளின் தொகுப்பு.

www.nidur.info

மேலும் விரிவான விபரங்களுக்கு ''மனாருல் ஹுதா'' நவம்பர் 2011 இதழைப் பாருங்கள்.

E-mail: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it