Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் கலிமதுத் தௌஹீதுக்கு வழங்கப்படும் தவறான அர்த்தங்கள் (1)
கலிமதுத் தௌஹீதுக்கு வழங்கப்படும் தவறான அர்த்தங்கள் (1) PDF Print E-mail
Wednesday, 16 November 2011 07:35
Share

கலிமதுத் தௌஹீதுக்கு வழங்கப்படும் தவறான அர்த்தங்கள் (1) 

''லாஇலாஹ இல்லல்லாஹ்'' என்ற அரபு வாசகத்துக்கு ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறுயாரும் இல்லை’ என்று தமிழில் கருத்துக் கூறலாம். மக்கத்து காஃபிர்கள் சூரியன், சந்திரன், கல், மனிதர்கள் போன்றவற்றையெல்லாம் கடவுளாக ஏற்றிருந்தனர். உண்மையில் இவைகள் கடவுளல்ல. கடவுள் தன்மைக்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.

அல்லாஹ்வின் படைப்புக்கள் கடவுள்களாக வணங்கப்பட்டாலும் அவை வணங்கத் தகுதியானவைகளல்ல. வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்பதையே இக்கலிமா நமக்குணர்த்துகின்றது. எனவே ‘வணங்கப்படுபவன் அல்லாஹ் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லலை’ என்று கலிமாவுக்கு நாம் விளக்கம் சொல்லக் கூடாது. ‘வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை’ என்றுதான் அதற்கு நாம் விளக்கம் சொல்ல வேண்டும். இது மொழி பெயர்ப்பு சம்பந்தமான ஒரு சிறு விளக்கம்.

முஸ்லிம் சமூகம் கலிமதுத் தவ்ஹீதை முழுமையாக ஏற்றிருந்தாலும் ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு விதமாக விளக்கம் சொல்வதைப் பார்க்கிறோம்.

விளக்கமாகச் சொல்வதென்றால் அந்த விளக்கங்களிடப்படையில்தான் அந்த ஜமாஅத்துக்களே உருவாகியுள்ளன. அதில் பிரதானமான இரண்டு தவறான விளக்கங்களை தெளிவுபடுத்துவதே இவ்வெழுத்தின் நோக்கம் .

தப்லீக் ஜமாஅத் அமைப்பினர் கலிமாவுக்கு தவறான விளக்கங்களை வழங்கி தமது பிரசாரத்தில் அடிப்படையாகவே அதைப் போதித்து வருவதைக் காண்கிறோம்.

அவர்களது பயான் நிகழ்ச்சிகளைப் கேட்கும்போது ‘அல்லாஹ்வால்தான் அனைத்தும் நடைபெறுகின்றது. நமது பார்வைக்கு சிலது சிலவற்றுக்குக் காரணமாக அமைவதாய் தெரிந்தாலும் அல்லாஹ்வால்தான் அதுவும் நடைபெறுகின்றது. அல்லாஹ்வால்தான் அனைத்தும் நடைபெறுகின்றது என்ற இக்கலிமாவைப் பிரசாரம் செய்யவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகுக்கு வந்தார்கள்’ என்று அவர்கள் பேசுவார்கள்.

தம்மோடு சேர்ந்து பணியாற்ற பிறரை அவர்கள் அழைக்கும் போது ‘உங்களது உழைப்பால்தான் உங்கள் குடும்பம் வாழ்கின்றது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். அது தவறு. அனைத்தும் அல்லாஹ்வால்தான் நடைபெறுகின்றது ஆகவே வெளிக்கிளம்பிச் செல்லுங்கள்.’என்று கூறுவார்கள்.

இந்த விளக்கத்தைத்தான் கலிமாவின் விளக்கமாகச் சொல்வார்கள்.

இதைத் தவிர வேறெதனையும் அவர்கள் பேசுவதில்லை.

பக்கத்திலே ஷிர்க் அரங்கேறும் அதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்கள்.

கலிமாவின் விளக்கம் அதைத் தடைசெய்யாதது போன்று இருந்துவிடுவார்கள்.

அதாவது சுருங்கக் கூறினால் ‘எல்லாமே அல்லாஹ்வால்தான் ஆகிறது வஸ்துக்களுக்கு எந்த சக்தியுமில்லை’ என்பதுவே அவர்கள் கலிமாவிற்குத் தரும் விளக்கம்.

ஆனால் கலிமாவின் சரியான விளக்கம் இதுவல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தக் கலிமாவை மக்கத்து காஃபிர்களிடம் முன்வைத்த போது அதை எதிர்க்கத் தூண்டிய விளக்கம் இதுவல்ல. அல்லாஹ்வைப் பற்றி மக்கத்துக் காஃபிர்கள் இந்த அளவை விட சற்றுக் கூடுதலாகவே நம்பியிருந்தார்கள். தப்லீக் ஜமாஅத்தினர் கூறும் இந்த விளக்கத்தை ஏற்கனவே மக்கத்துக் காஃபிர்களும் ஏற்றிருந்தனர். இதைக் கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவாகக் கூறுகிறது. 

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ - العنكبوت61

''வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் கூறுவார்கள்.'' (அல்அன்கபூத் : 61)

மக்கத்துக் காஃபிர்கள் ஏற்கனவே ஏற்றிருந்த கொள்கையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசாரம் செய்யவரவில்லை. அதற்கவசியமுமில்லை. அதற்காக ‘இவ்விளக்கம் பிழையானது, இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணானது’ என விளங்கிடலாது. இவ்விளக்கம் சரியானதுவே ஆனாலும் ‘எல்லாமே அல்லாஹ்வால்தான் ஆகிறது ‘என்று நம்புவதால் மாத்திரம் ஒருவர் இஸ்லாத்துக்குள் நுழைய முடியாது.

மற்றோரிடத்தில் அல்லாஹ் கூறும்போது;

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ

أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ. العنكبوت: 63

''வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்றே கூறுவர்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.'' (அல்அன்கபூத்: 63)

இன்னோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது;

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ لقمان: 25

''வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்'' (லுக்மான் : 25)

மற்றோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது;

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلْ أَفَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِيَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِي بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَاتُ رَحْمَتِهِ قُلْ حَسْبِيَ اللَّهُ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ الزمر: 38

''வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறுவீராக!'' (அஸ்ஸுமர் : 38)

மற்றோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது;

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ الزخرف: 87

''அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?'' (அஸ்ஸுகுருப் : 87)

ஒரு காபிருடைய பிராத்தனையை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்;

وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ الأنفال: 32

"அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையாக இருந்தால் எங்கள் மீது வானத்திலிருந்து கல் மழையைப் பொழியச் செய்வாயாக! அல்லது துன்புறுத்தும் வேதனையைத் தருவாயாக!" என்று அவர்கள் கூறியதை எண்ணிப் பாருங்கள்.'' (அல் அன்பால் : 32)

நபியவர்களுக்கெதிராகவே அல்லாஹ்விடம் பிராத்திக்குமளவுக்கு மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வை ஏற்றிருந்தனர் என்பதற்கு இது சான்றாக அமைகின்றது. மக்கத்துக் காஃபிர்களைப் பார்த்து அல்லாஹ் பின்வருமாறு கேட்கின்றான்.

وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُونَ إِلَّا إِيَّاهُ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ وَكَانَ الْإِنْسَانُ كَفُورًا الإسراء: 67

''கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரைசேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான். (இஸ்ரா : 67)

மற்றோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது;

قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ (31) فَذَلِكُمُ اللَّهُ رَبُّكُمُ الْحَقُّ فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ فَأَنَّى تُصْرَفُونَ يونس: 31، 32

''வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும் பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும் உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா’ என்று நீர் கேட்பீராக! அவனே உங்களின் உண்மை இறைவனாகிய அல்லாஹ். உண்மைக்குப் பின்னே வழி கேட்டைத் தவிர வேறு என்ன உள்ளது? எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?'' (யூனுஸ் : 31,32)

மேலே நாம் பார்த்த இந்த வசனங்களனைத்தும் மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ்தான் உலகைப் படைத்துப் பரிபாலிப்பவன் என்பதை ஏற்றிருந்தார்கள் என்பதை தெளிவாகச் சொல்கின்றன. ஆகவே இதைப் பிரசாரம் செய்வதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்திருக்க முடியாது என்பது உறுதியாகின்றது.

இன்ஷா அல்லாஹ், கட்டுரை தொடரும்