Home கட்டுரைகள் அரசியல் காந்தி வேஷம் போடும் ஹஸாரே சாயம் வெளுக்கிறது!
காந்தி வேஷம் போடும் ஹஸாரே சாயம் வெளுக்கிறது! PDF Print E-mail
Friday, 28 October 2011 07:28
Share

 காந்தி வேஷம் போடும் ஹஸாரே சாயம் வெளுக்கிறது!

[ இந்த அன்ன ஹசாரேவை இவ்வளவு நாள் யாருக்கு தெரியும்? இவர் சுதந்திர போராட்ட தியாகி என்று சொல்கிறார்கள். அதுவும் நம்ப முடியவில்லை. இந்திய சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகிறது. அப்போ இவர் போராடியபோது இவருக்கு வயது 10 அல்லது 12 தான் இருந்திருக்கும். இது நம்புறமாதிரி இல்லை. இவரோட ஆரம்பமே ஃப்ராடா இருக்கு. இப்படி யாருக்குமே தெரியாத தகுதியில்லாத ஒரு நபர் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறேன்னு அராசாங்கத்தை மிரட்டினால் பிறகு ஆளாளுக்கு இப்படி கிளம்பிவிடுவார்கள்.

இந்த அன்னஹஸாரே பற்றி ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிவது என்ன என்றால், இவர் நேர்மையானவர் இல்லை என்பது இவர் அடிக்கும் பொய்யில் இருந்தே புரியுது, இவரின் ஒரே எண்ணம் காங்கிரஸ் தோற்று வேறு யாராவது வந்து பதவி வாங்கணும் என்பதுதான். இவர் RSS -ன் கைக்கூலியாக இருக்கலாம் எனும் சந்தேகம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. பா.ஜ.க.வை ஆதாரித்து ஹசாரே பேசுவதை ஏற்றுகொள்ள முடியாது. 

இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் லோக்பால் அமைப்பில் பொறுப்பு வகித்தால் ஊழலுக்கு புதிய இலக்கணம் எழுதப் பட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. ஹசாரே போன்ற தனி மனிதர் நாடாளுமன்றத்தை விட உயர்ந்தவர் என்பதையும் ஏற்றுகொள்ள முடியாது. காந்தி வேஷம் போட்டால் எளிதாக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறாரோ!.]

ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்ற பெயரில் அன்னா ஹஸாரேவும் அவரது கோஷ்டியினரும் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்துள்ளதால் அவரை ஆதரித்தவர்களில் பலரும் அவரை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

ஹஸாரே எங்கள் நம்பிக்கைகளைத் தகர்த்துவிட்டார் என்றும், ஹஸாரே ஒரு நம்பிக்கை துரோகி, அரசியல் புரோக்கர் என்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையத் தளங்களில் எதிர்ப்புக் கருத்துக்களை அவரது ஆதரவாளர்களே வெளியிட்டு வருகின்றனர். மேலும் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டார் என அவர் மீது நம்பிக்கை துரோக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான போர் என்ற பெயரில் அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்தைத் தொடங்கியபோது நாடே அவருக்கு ஆதரவாகத் திரண்டது. ஜந்தர் மந்தரில் நடந்த முதல் போராட்டத்துக்கு பிரமாண்ட ஆதரவு கிடைத்தது. அடுத்து, ராம்லீலா மைதானத்தில் அவர் 12 நாட்கள் தண்ணீரை மட்டும் பருகி, உண்ணாவிரதம் இருந்தார். இந்தப் போராட்டம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தாலும், அவருக்கு ஆதரவு பெருகியது.

ஒரு நல்ல நோக்கத்துக்காக இவராவது போராட முன்வந்தாரே என்பதால் அவருக்கு ஆதரவு பெருகியது. பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக இணைய தளங்களிலும் அவருக்கென தனி பக்கங்களைத் தொடங்கி, I'm with Anna, என்ற கோஷத்தை முன்வைத்தார்கள்.

இன்று அவர்களில் பெரும்பாலானோர் அன்னா ஹஸாரேவை மிகக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

காரணம், அன்னாவின் ஒருதலைப்பட்சமான அரசியல் நிலைப்பாடு. ஊழலுக்கு எதிரான போர் என்று அவர் மக்களிடம் திரட்டிய அபரிமிதமான ஆதரவை அப்படியே பாஜகவுக்கு திருப்பி விட அன்னா முயல்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ஊழல் என்று வந்துவிட்டால், அதில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்குமே வித்தியாசம் இல்லை. காங்கிரஸாவது, அன்னாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாகச் சொன்னது. ஆனால் அதற்கான அவகாசமே கொடுக்காமல் அன்னா பாஜகவுக்கு ஓட்டுப் போடுமாறு பிரச்சாரம் செய்வது, அவரது உண்மையான நோக்கத்தைக் காட்டிவிட்டது என அன்னா ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹஸாரேவை நம்பி அவருக்கு ஆதரவளித்து, இப்போது அவரது அரசியல் நிலைப்பாட்டால் வெறுத்துப் போன பலரும் 'fed up with Anna' எனும் பெயரில் பேஸ்புக்கில் தனி பக்கம் ஆரம்பித்துள்ளனர். இந்தப்பக்கம் ஆரம்பிக்கப்பட்ட சில நொடிகளில் நூற்றுக்கணக்கானோர் அன்னாவைத் திட்டியடி, இந்த குழுவில் இணைந்துவிட்டனர்.

ஊழல் மட்டுமல்ல, அன்னாவையும் அவரது குழுவைச் சேர்ந்தவர்களையும் கடுமையாக எதிர்ப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு அன்னா துரோகம் செய்துவிட்டார் என்றும், அரசியல் தரகரைப் போல உள்ளது அவரது செயல்பாடு என்றும், தாங்கள் அளித்த ஆதரவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார் என்றும் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, அன்னா மீது நம்பிக்கை துரோக வழக்கு தொடர்ந்துள்ளார் குரு கோவிந்த் சிங் இந்திரப் பிரஸ்தா பல்கலைக் கழகத்தில் சட்டம் பயிலும் மாணவர் வினோத் ஆனந்த். இது தொடர்பாக அன்னாவுக்கும் அவரது குழுவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிராகப் போராடுவதை விட்டுவிட்டு ஒரு தனிப்பட்ட கட்சியை மட்டும் எதிர்த்து போராடுவதன்மூலம் இந்தியர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டார்கள் என்றும், நாட்டு மக்களை அன்னா ஹசாரேவும் அவரது குழுவினரும் தவறாக வழி நடத்துகின்றனர் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே குழுவினர் மீது குற்ற நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று கேட்டு உள்துறை அமைச்சகம், டெல்லி போலீஸ் கமிஷனர், ஹரியானா டிஜிபி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வெளிச்சத்துக்கு வந்த ஹஸாரே குரூப்பின் பெண் தளபதி கிரண்பேடியின் ஊழல்

கிரண்பேடி எங்களிடம் அதிகமாக பணம் வசூலித்துவிட்டார்! - தன்னார்வ அமைப்பு புகார்

முன்னாள் போலீஸ் அதிகாரியும் ஹஸாரே கோஷ்டியின் முக்கிய புள்ளியுமான கிரண் பேடி எங்களிடம் பொய்யான பில்களைக் காட்டி அதிக பணத்தை வசூலித்துவிட்டார் என்று மும்பையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான ஏவியேஷன் இன்டஸ்ட்ரி எம்ப்ளாயீஸ் கில்ட் அமைப்பு குற்றம் சாட்டியது.

கிரண்பேடி இவ்வளவு அதிக தொகை வசூலித்தது, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்ட பிறகே தங்களுக்குத் தெரியும் என்றும், இது தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் அந்த அமைப்பின் தலைவர் ஜார்ஜ் கிரகாம் கூறியுள்ளார்.

பொது நிகழ்ச்சிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகளின் விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள கிரண் பேடிக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் ஏராளமாக பணம் வசூலிக்கிறார், கட்டணமாக. இதைத் தவிர, அவருக்கு விமானப் பயணக் கட்டணம் வழங்கப்படுகிறது.

குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றவர் என்பதால் கிரண் பேடிக்கு விமானக் கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை தரப்படுகிறது. இந்த சலுகைக் கட்டணத்தில் பயணிக்கும் அவர், ஏற்பாட்டாளர்களிடம் பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட்டுக்கான பணத்தைக் கேட்டு வசூலித்துக் கொள்கிறார். இப்படி அதிகமாகப் பெற்ற பணத்தை தனது தலைமையில் இயங்கும் ட்ரஸ்டில் அவர் செலுத்தியுள்ளார்.

அவரது இந்த செயல் சட்டப்படி தவறானதே ஆகும். பணியிலிருந்த போதே அவர் இதுபோல செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த உண்மையை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, 12க்கும் மேற்பட்ட ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது. அதிர்ச்சியடைந்த கிரண்பேடி, என்ன சொல்வதென்றே தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளற ஆரம்பித்தார்.

ஆமாம், நான் இப்படி அதிக பணம் பெற்றது உண்மைதான். நான் இப்படி பெற்றது பணம் கொடுத்தவர்களுக்கே தெரியும் என முதலில் அவர் கூறினார். ஆனால் அடுத்த சிலமணி நேரங்களில், பணம் கொடுத்த தன்னார்வ அமைப்புகள் பல கொதித்துப் போய், கிரண் பேடியை திட்ட ஆரம்பித்துவிட்டன. ஹைதராபாதைச் சேர்ந்த அமைப்பு ஒன்று கிரண் பேடி செய்தது அவமானத்துக்குரியது என்றும், இதைவிட எங்களிடம் நேர்மையாக உண்மையைச் சொல்லி அதிகப் பணத்தை கேட்டே வாங்கியிருக்கலாமே என்றும் கூறியிருந்தது.

அதுவரை அன்னா குழுவை பெரிதாக நம்பிக்கொண்டிருந்த அத்தனை பேரும், கிரண் பேடியின் கேவலமான மோசடி, அல்பத்தனத்தைக் கண்டு பெரிதும் அதிர்ச்சியடைந்து 'Corrupt Team Anna' என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இதைக் கண்டு மேலும் பதட்டத்துக்குள்ளான கிரண் பேடி, தனது உளறலின் அடுத்த கட்டமாக, அன்னா ஹஸாரேவோடு இணைந்து ஊழலை எதிர்க்கப்போராடும் தன்னை வேண்டுமென்றே களங்கப்படுத்துவதாகவும், வேண்டுமானால் தன்னை தூக்கில் போடட்டும். அப்படியாவது அன்னாவின் இயக்கத்தைக் காக்க வேண்டும் என்றும் வார்த்தைகளைக் கொட்டினார்.

இது மேலும் பல விமர்சனங்களைக் கிளப்பியுள்ளன. தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள மனமின்றி, மக்களின் இரக்கத்தைப் பெற இஷ்டத்துக்கும் உளறுகிறார் கிரண்பேடி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஏவியேஷன் இன்டஸ்ட்ரீஸ் கில்ட் எனும் தன்னார்வ நிறுவனம் கிரண் பேடி தங்களிடம் அதிக பணம் வசூலித்து ஏமாற்றியதாக புகார் கிளப்பியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத் தலைவர் ஜார்ஜ் ஆப்ரஹாம், தி ஹிந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "எங்களிடம் கிரண் பேடி அதிகமாக வசூலித்திருக்கும் உண்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை பார்த்த பிறகுதான் தெரிந்தது.

இது அநியாயம். அவர் பதவிக்கும் அந்தஸ்துக்கும் பொருத்தமில்லாத, நேர்மையற்ற செயல். இதைவிட அவர் எங்களிடம் பணம் கேட்டுப் பெற்றிருக்கலாம்.

குறிப்பிட்ட எங்கள் விழாவுக்கு புனேயிலிருந்து வந்துள்ளார் கிரண் பேடி. அதே நாளில் இவர் வேறொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். எகானமி க்ளாஸில் வந்த அவர் பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட்டை பெற்றுக் கொண்டார். அதுவும் டெல்லி - மும்பை மார்க்கத்துக்கு. அதே தேதியில் மும்பையில் நடந்த இன்னொரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதற்காகவும் தனியாக இரு வழி விமானக் கட்டணத்தைப் பெற்றுள்ளார்.

ஒரு பயணம்தான். ஆனால் இருவரிடமும் பிஸினஸ் கிளாஸ் டிக்கெட். அதுவும் வராத ஊரிலிருந்து வந்ததாக கணக்கு காட்டியுள்ளார். இது எத்தனை மோசடியானது! இவரை நிகழ்ச்சிக்கு அழைத்ததற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம்," என்று கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு கிரண் பேடி கூறியுள்ள பதிலில், "சேமிப்பு என்பதை ஒரு குற்றமாகப் பார்க்கிறீர்களே... இது ஆச்சர்யமாக உள்ளது. நான் அந்த நிகழ்ச்சிக்கு பணம் பெறவில்லை. ஆனால் உயர் வகுப்பு விமானக் கட்டணம் பெற்றேன். நான் சிக்கன வகுப்பில், சலுகையில் பயணம் செய்தேன். மீதிப் பணத்தை எனது ட்ரஸ்டில் சேமித்தேன். இன்னொரு நிகழ்ச்சிக்கு நான் என்ன பெற்றேன் என்பது தேவையற்றது. இது நிச்சயமாக சேமிப்பு. சேமிப்பை நீங்கள் குற்றம் என்பீர்களா?" என்று கூறியுள்ளார்.

கூடுதலாக வசூலித்த தொகையைக் கொடுத்துவிடுகிறேன்! - கிரண் பேடி

"சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்தப் பணத்தை நான் எடுத்துக் கொள்ளவில்லை. என் டிரஸ்டில் தான் சேமித்தேன். லோக்பால் மசோதாவுக்காக போராடி வரும் அன்னா குழுவினர் மீது அவதூறுகளைப் பரப்புவது மகிழ்ச்சி அளிக்குமானால் எங்களைத் தூக்கில் போடுங்கள்" என்று ஆவேசப்பட்ட கிரண் பேடி, "அதிகமாகப் பெற்ற விமானக் கட்டணத்தை உரிய அமைப்புகளிடம் திருப்பித் தரப் போவதாக" அறிவித்துள்ளார். இதன் மூலம் கிரண்பேடி தன்னார்வ அமைப்புகளை ஏமாற்றி பணம் பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு உண்மையைத் தெரிவித்தே அதிக கட்டணம் வசூலித்து இருந்தால் அதை ஏன் அவர் திரும்பச் செலுத்த வேண்டும்?

"திருப்பிச் செலுத்தி விட்டால் நீங்கள் தவறு செய்யவில்லை என்றாகி விடுமா? உங்களுக்கும் ராசாவுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ராசாவும் தாம் முறைகேடு செய்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டால் திகார் சிறையில் அடைபடாமல் வழக்கில் இருந்து விடுதலையாகி விடலாமே?" என்று திக்விஜய் சிங் கேட்பது நியாயமாகத் தானே தெரிகிறது. வீரத் தீரச் செயல்கள் புரிந்த கிரண் பேடியைப் போன்றவர்களைக் கௌரவிக்க அரசு தரும் இது போன்ற நல்ல திட்டங்கள் மூலமும் காசு பார்ப்பது இவர்களின் மனசாட்சிக்கே விரோதமாகப் பட வில்லையா?

எரிவாயுவுக்கு இந்திய அரசு அளிக்கும் மானியத்தின் மூலம் வாங்கப்படும் எரிவாய் சிலிண்டர்களை வெளிச் சந்தையில் ரூ 50, 100 -க்கு விற்று காசு பார்க்கும் அடித் தட்டு பொது மக்களையே 2G ஊழலைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது? என்று தலையங்கம் எழுதியது இந்நேரம். கிரண் பேடி லட்சக் கணக்கில் அல்லவா அரசு தரும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்!. தவறைத் தவறு தான் என்று துணிந்து சுட்டிக் காட்டுவதே ஊடக தர்மம். தினமும் பெல் அடிக்கும் ஒரு பத்திரிக்கை தமது தலையங்கத்தில் ''இது எப்படி ஊழல்'' என்று கிரண் பேடியின் மோசடிக்குக் கூட்டுச் சேர்ந்து ஆதரவு தெரிவிக்கிறது!.

''தேவைப்பட்டால் எங்களில் யாரையாவது தூக்கில் போட்டுக் கொள்ளுங்கள்'' - கிரண் பேடியின் சினிமாத்தனமான கூத்து

அன்னா ஹஸாரே குழுவினர் மீது தொடர்ந்து அவதூறுகளை வீசுவதற்குப் பதில் பேசாமல் எங்களில் யாரையாவது தூக்கில் போட்டு விடுங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார் கிரண் பேடி. இதுகுறித்து அவர் கூறுகையில், அன்னா குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் படிப்படியாக குறி வைத்து அவமானப்படுத்தி அவதூறு கூறி வருகிறார்கள். திட்டமிட்டு இது செய்யப்படுகிறது. தொடக்கத்திலிருந்தே இது செய்யப்படுகிறது.

தேசிய அளவி்ல் நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கும் ஊழலை எதிர்த்து அன்னா ஹஸாரே குழு தனது சொந்தக் காசைப் போட்டு பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் கடுமையாக முயன்று கொண்டிருக்கிறோம். ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

அன்னா ஹஸாரே குழுவுக்கு வரும் நன்கொடைகளை எங்களது உறுப்பினர் அரவிந்த் கேஜ்ரிவால் தான் நடத்தி வரும் அறக்கட்டளையின் கணக்கில் வரவு வைப்பதாக குற்றச்சாட்டை இப்போது வைத்துள்ளனர். இது நிச்சயம் தவறான குற்றச்சாட்டு. அந்த அறக்கட்டளையில் எங்களது உறுப்பினர்கள் யாருமே உறுப்பினர்களாக இல்லை. இப்படி அவதூறாகப் பேசி வருவதற்குப் பதில் பேசாமல் எங்களில் யாரையாவது தூக்கில் போட்டு விடுங்கள். அப்போதாவது இந்த அவதூறுகளை நிறுத்துகிறார்களா என்று பார்க்கலாம் என்றார் பேடி.

அக்னிவேஷின் கடும் குற்றச்சாட்டு

இதற்கிடையே, அன்னா குழுவைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். அவர் கூறுகையில், ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற போராட்ட அமைப்பின் மூலம் கிடைத்த ரூ. 80 லட்சம் வரையிலான நன்கொடைகளை அரவிந்த் கேஜ்ரிவால் சுருட்டி விட்டார். இதை தான் நடத்தி வரும் பொதுமக்கள் நலனுக்காக ஆய்வுக் கழகம் என்ற அறக்கட்டளையின் கணக்குக்குக் கொண்டு போய் விட்டார் என்று அவர் கூறினார். வழக்கம்போல் இதற்கும் அன்னா ஹஸாரே குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஹஸாரேயின் வலதுகை - கேஜ்ரிவால் வருமான வரித்துறைக்கு வைத்துள்ள பாக்கி ரூ.9.5 லட்சம்!

அன்னா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அர்விந்த் கேஜ்ரிவால் வருமான வரித்துறைக்கு வைத்துள்ள பாக்கி ரூ.9.5 லட்சத்தை செலுத்த 27/10/2011 தான் கடைசி நாள்.

அன்னா ஹஸாரேவின் குழுவின் முக்கிய உறுப்பினரான அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு முன்னாள் இந்திய வருவாய்த் துறை அதிகாரி. கடந்த 2006ம் ஆண்டு அவர் அரசு பணியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமா இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ளது. ராஜினாமா செய்த கேஜ்ரிவால் அரசு ஒப்பந்தத்தை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவர் பணியில் இருக்கையில் கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2002ம் ஆண்டு வரை மேல்படிப்பு படிக்க விடுப்பில் சென்றார். அப்போது அவர் செலுத்தாத வரி பாக்கி ரூ. 9.5 லட்சத்தை அக்டோபர் மாதம் 27ம் தேதிக்குள்(இன்று) செலுத்துமாறு கூறி வருமானவரித்துறை கேஜ்ரிவாலுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அந்த தொகையை செலுத்த இன்று 27/10/2011 தான் கடைசி நாள்.

அந்த பாக்கியை செலுத்தினால் தான் கேஜ்ரிவாலின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹஸாரேவுக்கு தொழிலதிபர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள்! - பால் தாக்கரே

ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ளதாகக் கூறிக் கொள்ளும் அன்னா ஹஸாரேவுக்கு தொழிலதிபர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.

மேலும், 'இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. காரணம் இங்கே இருப்பவை பெரிய திமிங்கிலங்கள். ஹஸாரேயின் வலை கிழிந்து விடும்," என்றும் அவர் கூறியுள்ளார்.

மும்பையில் நேற்று தசரா பேரணியில் பேசிய தாக்கரே, "ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஒரு தமாஷ். ஒருபக்கம் இவர் தொழிலதிபர்களிடம் பணத்தை வாங்குறார். இன்னொரு பக்கம் ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்கிறார். இவர் உண்ணாவிரதம் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டல் சமாச்சாரம் மாதிரிதான் இருக்கிறது.

இப்படி பொய்யான நோக்கத்துடன் செயல்படும் இவரால் இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. இதைச் சொல்லும் எங்களுடன் ஹஸாரே விரோதம் பாராட்டுவது தேவையற்றது. மேலும் அவர் மீதான என் விமர்சனங்களை கிண்டலடித்துள்ளார் ஹஸாரே. அவர் என்னைவிட வயதில் இளையவர். அதனால்தான் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்," என்றார்.

ஏற்கெனவே ஒருமுறை தாக்கரே இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது, தனக்கு பணம் தந்த நிறுவனங்களின் பெயர்களை தாக்கரே சொல்வாரா? எனக்கு தொழில் அதிபர்கள் பண உதவி செய்வதாக பால் தாக்கரே நிரூபித்து விட்டால், நான் என் வாழ்நாள் முழுவதும் அவருக்கு அடிமையாக இருக்க தயாராக இருக்கிறேன், என ஹசாரே சவால் விட்டார். ஆனால் இப்போது மீண்டும் இதே போன்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் தாக்கரே.

நான் காந்தியின் கால் தூசுக்குக் கூட தகுதி பெறாதவன்- அன்னா

அன்னா ஹஸாரே இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

என்னை காந்தியுடன் ஒப்பிடுவது நியாயமற்றது. நான் காந்தியடிகளின் காலடியில் அமரக் கூட தகுதி இல்லாதவன். அவரது கொள்கைகளை நான் பின்பற்ற முயற்சிக்கிறேன்.

எனக்கென்று எந்த இலக்கும், கொள்கையும் இல்லை. சுயநலமற்ற வகையில் கடைசி வரை செயல்படவே விரும்புகிறேன். நான் பிரதமர் பதவிக்கெல்லாம் சற்றும் பொருந்த மாட்டேன். (ஏதோ இவரை மக்களெல்லாம் பிரதமராக்க துடிப்பதுபோல் கனவு காண்கிறாரோ என்னவோ!) அரசியலில் புகும் ஆர்வமும் இல்லை. அது எனக்கு ஒத்துவராது. (இவர் இப்பொழுது நடத்துவதே அரசியல் நாடகம்தானே!)

இவையெல்லாம் ஒருபக்கமிருக்கட்டும்... இந்திய குடிமக்கள் இவரைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போமே...

இந்த அன்ன ஹசாரேவை இவ்வளவு நாள் யாருக்கு தெரியும்? இவர் சுதந்திர போராட்ட தியாகி என்று சொல்கிறார்கள். அதுவும் நம்ப முடியவில்லை. இந்திய சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகிறது. அப்போ இவர் போராடியபோது இவருக்கு வயது 10 அல்லது 12 தான் இருந்திருக்கும். இது நம்புறமாதிரி இல்லை. இவரோட ஆரம்பமே ஃப்ராடா இருக்கு. இப்படி யாருக்குமே தெரியாத தகுதியில்லாத ஒரு நபர் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறேன்னு அராசாங்கத்தை மிரட்டினால் பிறகு ஆளாளுக்கு இப்படி கிளம்பிவிடுவார்கள்.

இந்த அன்னஹசரே பற்றி ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிவது என்ன என்றால், இவர் நேர்மையானவர் இல்லை என்பது இவர் அடிக்கும் பொய்யில் இருந்தே புரியுது, இவரின் ஒரே எண்ணம் காங்கிரஸ் தோற்று வேறு யாராவது வந்து பதவி வாங்கணும் என்பதுதான். இவர் RSS -ன் கைக்கூலியாக இருக்கலாம் எனும் சந்தேகம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது

பெரும்பாலான இந்திய குடிமகனின் கருத்து என்னவாக இருக்கிறது எனில்; ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பது நம் அனைவரின் கடமை .ஹசாரே போன்றவர்கள் அந்த போராட்டத்தை முன்னின்று நடத்துவது பாராட்டுக்குரியது. ஆனால் எல்லா கட்சியிலும் ஊலல்வதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் .எனவே பா.ஜ.க.வை ஆதாரித்து ஹசாரே பேசுவதை ஏற்றுகொள்ள முடியாது. அவரே அவர் மதிப்பை குறைத்து கொள்கிறார். ஹசாரே போன்ற தனி மனிதர் நாடாளுமன்றத்தை விட உயர்ந்தவர் என்பதையும் ஏற்றுகொள்ள முடியாது. .

ஒரு கொள்ளைக்கூட்டத்தையே ஹஜாரே தனக்கு துணையாக வைத்திருக்கிறாரொ என்று எண்ணத்தோன்றுகிறது. மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டங்களில் கலந்து கொண்ட சிலருக்காவது இப்போது புரிந்திருக்கும் - அன்னா ஹசாரே குழு ஏன் லோக்பால் மசோதாவில் இருந்து தொண்டு அமைப்புகளுக்கு விலக்கு அளித்தது என்று!. இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் லோக்பால் அமைப்பில் பொறுப்பு வகித்தால் ஊழலுக்கு புதிய இலக்கணம் எழுதப் பட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

sources from: thatstamil & Inneram ...