Home குடும்பம் பெண்கள் அன்பான குடும்பம் அமைய வேண்டுமா?
அன்பான குடும்பம் அமைய வேண்டுமா? PDF Print E-mail
Sunday, 09 October 2011 19:07
Share

       அன்பான குடும்பம் அமைய வேண்டுமா?     

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். 1000 ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும் ஒரு வேளைச் சாப்பாட்டிற்கு ஒரு கரண்டி சாதமும், ஒரு கப் கறிக் குழம்போ அல்லது சாம்பாரோ அல்லது எதுவோ ஒன்றைத்தான் உங்களால் சாப்பிட முடியும். அதற்கும் மேல் சாப்பிட்டால் உடம்பில் விஷமேறி மண்டையைப் போட்டு விடுவீர்கள்.

1000 கோடி ரூபாயில் வீடு கட்டினாலும் நிம்மதியான உறக்கம் வந்தால் தான் அந்த வீட்டுக்குப் பெருமை. ஆனால் இன்றைய உலக மாந்தர்களுக்கு 1000 கோடி ரூபாய் வீடும், 1000 ஏக்கர் நிலமும் தான் கருத்தில் நிற்கும்.

உங்களைச் சுற்றியும் பின்னப்பட்டிருக்கும் ஹைஜீனிக் அல்லது மேட்டுக்குடித் தனமான வாழ்க்கை முறை என்பது நீர்க்குமிழ் போல! பெரும் கோடீஸ்வர முதலைகளும், பன்னாட்டுக் கம்பெனிகளும் மக்களிடமிருந்து காசு பறிக்க பல பத்திரிக்கை, மீடியாக்களோடு கைகோர்த்துக் கொண்டு தங்களின் பொருட்களை சந்தைப் படுத்தி மக்களின் தலையில் கட்டி வருகின்றன.

அப்பொருட்களை வைத்திருந்தால் தான் சமூகத்தில் மதிப்புக் கிடைக்கும் என்பது போல தோற்றத்தினை காசுக்காக மாறடிக்கும் பத்திரிக்கைகள் மூலமாகவும், மீடியாக்கள் மூலமாகவும் உருவாக்குகின்றன.

முதலில் மக்கள் இந்த வகை நுகர்பொருள் ஃபோபியாவிலிருந்து வெளி வர வேண்டும். அவ்வாறு வந்தால்தான் வாழ்க்கையின் வசந்தத்தின் ஆரம்ப கட்டம் துவங்கும். அதை விடுத்து நுகர்பொருள் கலாச்சாரத்தின் மீது மையல் கொண்டால் வீடு குப்பைகளைச் சேகரித்து வைக்கும் குப்பைத் தொட்டியாகவும், நீங்கள் அவ்வீட்டினுள் உலாவரும் கரப்பான் பூச்சியாகவும் மாறி விடுவீர்கள். அன்பான குடும்பம் அமைய முதல் வழி இதுதான்.

பிறந்ததிலிருந்து ஏசியிலேயே வாழ்ந்து வந்த என் நண்பரின் குழந்தைக்கு வெயில் பட்டால் காய்ச்சல் வந்து விடுகிறது. கோடிகளில் புரள்பவன் இன்று தன் வாரிசு நோயில் விழுந்ததை எண்ணி எண்ணிச் சாகிறான்.

காரிலேயே எந்த நேரம் பார்த்தாலும் சுற்றிக் கொண்டிருந்த என் நண்பனுக்கு புற்று நோய் வந்து விட்டது. வாயில் பெரிய ஓட்டை விழுந்து நரகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான். கம்பெனி ஊழியர்களை நாயை விடக் கீழாக நடத்திய மற்றொரு நண்பனுக்கு சோறு சாப்பிட முடியாது.

மிகப் பெரிய சர்க்கரை ஆலையை வைத்திருக்கும் எனது இன்னொரு நண்பனின் மனைவிக்கு சர்க்கரை நோயால் கால் எடுக்கப்பட்டு விட்டது. மசாலா சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தியின் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு எல்லையே இல்லை. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று தேடுகின்றார்கள். இன்று வரை கிடைக்கவும் இல்லை. அவர்களுக்கு கிடைக்கப்போவதும் இல்லை.

இரவு பகல் பாராது அவர்களின் கம்பெனிக்காக உழைக்கும் உழைப்பாளிக்கு அவர்கள் கொடுப்பது பிச்சைக்காசு. அதன் பலனைத் தான் இன்றைக்கும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுதான் காரணம் என்று இதுவரைக்கும் அவர்கள் தெரியவில்லை என்பதுதான் விதியின் விளையாட்டு. ஏதேதோ சொல்லி ஜோஷியக்காரர்களும், மந்திரவாதிகளும் லட்ச லட்சமாய் கொள்ளையடிக்கிறார்கள். உழைப்பாழியின் வியர்வையை அந்தக் கம்பெனி கொள்ளையடிக்கிறது. இவர்களிடமிருந்து வேறொருவர் கொள்ளையடிக்கிறார்.

எனது நண்பனொருவனின் மனைவிக்கு வித விதமான புடவைகள் மீதும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மீதும் கொள்ளை ஆசை. மொபைல் போன் என்றால் உயிர். தங்க நகை என்றால் சோறுட் தண்ணீர் இறங்காது. லட்சக்கணக்கில் செலவழித்து பட்டுப் புடவைகளாய் வாங்கிக் குவித்தாள். லட்சக்கணக்கில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களாய் வாங்கினாள். வாரம் தோறும் டிசைன் டிசைனாய் நகைகள் வாங்கி அணிந்தாள். இன்றைக்கு கழுத்தில் அலர்ஜி ஏற்பட்டு ஆசை ஆசையாய் வாங்கிய நகைகள் பீரோவிற்குள் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

அலர்ஜியினால் பட்டுச் சேலையை தொட்டுக்கூட பார்க்கக் கூடாது. பருத்தி ஆடைகளை அணிந்து கொண்டிருக்கிறாள்.

பட்டுச் சேலைகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எல்லாம் குப்பையில் கிடக்கின்றன.

எந்த நேரம் பார்த்தாலும் போனில் பேசிக் கொண்டிருந்தவளின் காது மடல்களில் கொப்பளம் பூத்து நாறச் சீழ் வடிகிறது. என்னைப் பார்க்கும் போதெல்லாம் அழுகிறாள்.

"அண்ணி அப்போதே சொன்னார்கள் அண்ணா, நான் தான் கேட்க வில்லை, என் கதியைப் பார்த்தீர்களா?" என்று அங்கலாய்க்கிறாள்.

காலையில் உப்பே இல்லாத சப்பாத்தியும் காயும் சாப்பிடுகிறாள். மதியம் உப்பே இல்லாத கோதுமைக் கஞ்சி குடிக்கிறாள். வாழும் போதே செத்துப்போன வாழ்க்கை வாழ்கிறாள்.

வாழ்க்கை என்பது நுகர்வோர் கலாச்சாரத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆண்களும் பெண்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். கழுத்தில் இரண்டு பவுன் செயின் போட்டிருப்பவனுக்கு பெருமை ஏற்படுவதாக நினைக்கிறான். செயின் போடாதவனை ஏளனமாகப் பார்க்கிறான். ஆனால் அந்த முட்டாளுக்குத் தெரியவில்லை என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு திருடனால் அவனது உயிருக்கு ஆபத்து என்று. காசைத் தேடுவதிலே வாழ்வின் பாதி நேரத்தைத் கொன்று விட்டு உறவுகளையும், பந்தங்களையும் தொலைத்து விட்டு முதியோர் இல்லங்களில் தனிமையில் செத்துக் கொண்டிருக்கிறார்கள் பலர்.

உணவைத் தேவைக்கு அதிகமாக சாப்பிட்டால் எப்படி விஷமாகுமோ, பணமும் பொருளும் தேவைக்கு அதிகமானால் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும். இன்றைய நாளில் அதிகச் சொத்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்கி விடும். தமிழ்நாட்டிலேயே இன்றைய முதல்வரின் தொகுதியில் தான் கொலையும், கொள்ளையும் அதிகம் என்று திரு த.பாண்டியன் அவர்கள் பேட்டி கொடுக்கின்றார்.

ஆட்சியாளர்களுக்கு தங்களது குடும்பத்தை நிர்வகிக்கவே போதுமான நேரம் கிடைக்க வில்லை. இன்றைய அறிக்கையில் முதல்வர் தன் மூத்த மகனுக்கு கவுண்டர் கொடுக்கிறார். குடும்பத்தைக் கவனிக்கவே நேரமில்லாத நிலையில் நாட்டு மக்களை எங்கனம் கவனிப்பார்கள் ஆட்சியாளர்கள். மக்களைக் காக்க வேண்டிய காவல்துறை அரசியல்வாதிகளால் அடிமைப்படுத்தப்பட்டு விட்டது.

ஒரு சாதாரண, படிக்காத கவுன்சிலருக்கு சலாம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சட்டத்தின் காவலர்கள். காவல்துறையின் காக்கிச் சட்டைக்குள் சட்டமென்பது சவலைப்பிள்ளையாகி விட்டது. நீதிமன்றங்களிலோ லட்சக்கணக்கான வழக்குகள் வாய்தாவிற்குள் முடங்கிக் கிடக்கின்றன. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் பொன்னும், பொருளும் கோடி கோடியாய் சேர்த்து வைத்தால் கொள்ளைக் காரனும், கொலைகாரனும் தான் அதற்கு சொந்தம் கொண்டாடுவான்.

சரி எங்கேயோ வந்து விட்டோம். அன்பான குடும்பத்தினை விரும்பும் ஆணோ அல்லது பெண்ணோ முதலில் உதறித் தள்ள வேண்டியது நுகர்வோர் கலாச்சார அடிமைத்தனத்தை. மிக்ஸில் சட்னி அரைத்துச் சாப்பிடுவதை விட அம்மியில் அரைத்துச் சாப்பிடுவது அரைப்பவருக்கும் சாப்பிடுபவருக்கும் நன்மை தரும்.

நன்றி: அனாமி