Home கட்டுரைகள் சமூக அக்கரை ஈவ் டீசிங் - இதுவும் தீவிரவாதமே!
ஈவ் டீசிங் - இதுவும் தீவிரவாதமே! PDF Print E-mail
Friday, 07 October 2011 07:11
Share

  ஈவ் டீசிங் - இதுவும் தீவிரவாதமே!   

ஈவ் டீசிங் என்பது எதற்காக எங்கே ஏன் ஏற்பட்டது என்பதைப் பற்றி யோசிக்கும் முன்பு இதன் பாதிப்பு மரணம் தற்கொலை என வேகமாகிவிட்டது. கிராமப்புறங்களில் பெண்களை ஆண்கள் கேலி செய்யும் வழக்கம் உண்டு, சிலருக்கு அடுத்தவரை கேலி செய்வது கிண்டல் செய்வது என்பது கைவந்த கலை, கேலி செய்பவர் பெண்ணாகவும் கேலி செய்யப்படுபவர் ஆணாகவும் இருப்பது கூட கிராமப்புறங்களில் உண்டு ஆனால் இவ்வகைப் பெண்கள் திருமணமானவர்களாகவும் மிகவும் தைரியசாலிகளாவும் இருப்பதுண்டு.

ஒரு இளம் பெண் அல்லது இளம் ஆணை கிண்டல் செய்வது என்பது கிராமம் நகரம் என்ற வித்தியாசமின்றி எங்கும் காணப்படுகின்ற பொதுவுடைமை என்று கூட சொல்லலாம். இளம் ஆண்களை சற்று வயது முதிர்ந்த ஆண்களோ சம வயது ஆண்களோ கிண்டல் கேலி செய்வதும் கூட எங்கும் காணப்படுகின்ற ஒன்றுதான், இதனால் பாதிப்பிற்கு உள்ளாகி மனம் நொந்து தற்கொலைகள் நடப்பதாக ஆய்வுகளில் காண முடிகிறது.

திருமணமாகாத இளம் பெண்களை ஆண்கள் கிண்டல் செய்வது கேலி செய்வது, தவறான முறையில் விமர்சிப்பது போன்றவை வீதிகளில், பேருந்து நிலையங்களில், போக்குவரத்து ஊர்திகள், கடை வீதிகள், கல்லூரிகள், விடுதிகள், பள்ளிகள் என்று இதன் விஸ்தாரம் அதிகரித்துள்ளதன் காரணம் பெண்கள் தற்காலத்தில் படிப்பிற்காகவும் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை தேடிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வருகின்ற நிலை அதிகரித்து இருப்பது முக்கிய காரணம். இளம் பெண்களை மட்டுமில்லாமல் திருமணமான பெண்கள் முதியவர்கள் என்று கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகும் வட்டம் அதிகம்.

இப்படி அடுத்தவரை கிண்டல் கேலி செய்வது பாலியல் ரீதியில் வன் சொற்களால் கிண்டல் செய்வதால் என்ன சுகமடைய போகின்றனர் என்பது அவர்களுக்குத்தான் தெரியும், அடுத்தவரை கேலி கிண்டல் செய்வது என்பது தனிமனித ஒழுக்கமற்ற கீழ்த்தரமான எண்ணங்களை உடையவர்கள் தான் பெரும்பாலும் இச்செயலுக்கு சொந்தக்காரர்கள். அடிப்படையிலேயே நல்ல முறையில் வளர்க்கபடாததும் இதற்க்கு முக்கிய காரணம், ஒரு குழந்தையின் வளர்ப்பில்தான் அக்குழந்தை நல்லவனாவதும் தீயவனாவதும் நிர்ணயிக்கப்படுகிறது, அதற்குப் பின்பு நண்பர்கள் வட்டாரம் இதற்க்கு உரமிடுவதற்க்கு கிடைத்துவிட்டால் இவ்வித மட்டரகமான நடத்தைகள் செழித்து நன்கு வளர காரணமாகிறது.

பல சமயங்களில் தங்களால் அடைய முடியாத அடைய நினைத்தும் எட்டாத காரியங்களுக்காக மனதில் தோன்றும் வன்மங்களின், வக்கிரங்களின் வெளிப்பாடு இத்தகைய தரம் கெட்ட செயலுக்கு அடிகோலுகிறது. சமீப காலமாக ஈவ் டீசிங்கிற்கு எதிராக அரசு கொண்டுவந்திருக்கும் பல சட்டங்களால் நிலைமை ஓரளவிற்கு கட்டுக்குள் இருந்தாலும் பல சமூக விரோதிகளால் நல்ல நோக்கத்திற்காக கொண்டுவரப்படும் எல்லாவித சட்டங்களும் யாரையாவது எப்படியாவது பழி தீர்த்துக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுவதும் சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டால் அவள் திருமணமாகிய பெண்ணாக இருந்தால் வரதட்சிணை கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி மாமனார் மாமியார் மீது வழக்கு தொடுத்து, வரதட்சிணை வாங்குவதை தடுக்கும் சட்டத்தை பயன்படுத்தி அப்பெண்ணின் கணவனது பெற்றோர் தமக்கை போன்றவர்களை பழிவாங்க பயன்படுத்துவது, [உண்மையாகவே அந்த பெண் வேறு காரணத்திற்க்காக தற்கொலை செய்து கொண்டிருந்தாலும்].

கல்லூரியில் படிக்கும் மாணவியோ பள்ளியில் படிக்கும் மாணவியோ தற்கொலை செய்துகொண்டால் ஈவ் டீசிங் செய்யப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டதாக கூறி சம்பந்தபட்டவர்களை பழிவாங்குவது என்று பல நல்ல சட்டங்கள் தங்களது சொந்த லாபம் மற்றும் பழிவாங்கும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதும் பெருகிவருகின்ற மோசடிகள் என்றும் கூறலாம்,

ஆக பொது நலனுக்காக சட்டங்கள் நடப்பில் தீவிரப்படுத்துகின்ற போது அதை தங்கள் சொந்த நலனுக்கு பயன்படுத்தி லாபம் சேர்க்கும் கீழ்த்தரமான மக்களை நம் நாடு பத்திரமாக பேணி காத்து வருகிறது, நாட்டின் அழிவிற்கும் தீமைகளுக்கும் வெளிநாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஒருபுறம் நாட்டை அழிக்க சதித்திட்டங்கள் தீட்டி செயல்படுத்தவிருந்தாலும் உள்நாட்டு நயவஞ்சகம் தீராத கான்சர் வியாதியாகி பொதுமக்களின் வாழ்க்கையோடு விளையாடி வருவதும் நாளுக்குநாள் பெருகிவரும் தீவிரவாதம்தான்.

source: http://www.haaram.com/CompleteArticle.aspx?aid=243186&ln=ta