Home கட்டுரைகள் பொது அந்நியர்களின் தலைநகரமாக மாறிவரும் சென்னை!
அந்நியர்களின் தலைநகரமாக மாறிவரும் சென்னை! PDF Print E-mail
Saturday, 24 September 2011 07:01
Share

Related image

அந்நியர்களின் தலைநகரமாக மாறிவரும் சென்னை!

சென்னையின் பிரமாண்ட மால்கள், மல்டிப்ளக்ஸ்கள், பெரிய சிறிய கடைகள், உணவகங்கள், சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், தொழிற்சாலைகள், அழகு நிலையங்கள்... எங்கும் இப்போது ஆதிக்கம் செலுத்துபவர்கள் வெளி மாநிலத்தவர்கள்!

சென்னையின் பொருளாதாரம் நீண்ட காலமாகவே ராஜஸ்தானியர்களிடமும் குஜராத்திகளிடமும்தான் இருக்கிறது. சென்னையில் எந்த ஒரு தொழிலிலும் மொத்த விற்பனையாளர்கள் - முதலாளிகள் அவர் கள்தான். ஒருவேளை அவர்கள் நேரடியாக ஒரு தொழிலில் ஈடுபடவில்லை என்றால், வட்டித் தொழில் மூலம் அவர்களுடைய கரங்கள் அந்தத் தொழிலில் பிணைந்து இருக்கும். இப்போது தொழிலாளர்கள் நிலையிலும், வெளி மாநிலத்தவர்களின் - குறிப்பாக - வட இந்தியர்களின் கை ஓங்குகிறது!

தமிழர்கள் நஹி ஹை !

எப்போதுமே வெளியூர்களில் இருந்து வேலை தேடி வருவோருக்குக் கிடைக்கும் முதல் வாய்ப்பு, கட்டுமானப் பணி. சென்னையின் வரலாற் றிலேயே அதிகமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் காலகட்டம் இது. ஆனால், கட்டுமானப் பணிகளில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட அடைபட்டு விட்டதாகவே தோன்றுகிறது.

சென்னையில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கும் 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 80 சதவிகிதத்தினர் வட மாநிலத்தவர்கள். ''நம் ஆட்களே வேண்டாம் என்று கூறுகிறார்கள் முதலாளிகள்'' என்கிறார் கொத்தனார் கி.கணேசன்.

''கட்டுமானத் துறையின் இன்றைய ராட்சச வேகத்துக்கு வெளி மாநிலத்தவர்களாலேயே ஈடுகொடுக்க முடிகிறது'' என்கிறார் முன்னணி கட்டுமான நிறுவனமான 'எல் அண்டு டி’-யின் பொது மேலாளர்களில் ஒருவர்.

தென் ஆசியாவிலேயே பெரிய தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற் பேட்டையில் பணியாற்றுவோரில் 70 சதவிகிதத்தினர் வெளி மாநிலத்தவர்கள். சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்யும் இந்தத் தொழிற்பேட்டை, சென்னையின் வேலைவாய்ப்புகேந்திரங்களில் மிக முக்கியமானது.

''வெளிமாநிலத் தொழிலாளர்களைத் தவிர்த்துவிட்டு, இன்றைய தொழிற்பேட்டையைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அவர்கள் இல்லாவிடில், தொழிற்பேட்டை யையே மூடிவிட வேண்டியதுதான்'' என்கிறார் அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரான ஆர்.செல்வராஜ்.

கீழ்மட்ட வேலைகள்தான் என்று இல்லை; தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட உயர்நிலைப் பணிகளிலும் வெளி மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. உதாரணமாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் சென்னையில் பணியாற்றுவோரில் 40-50 சதவிகிதத்தினர் வெளி மாநிலத்தவர்கள் என்கிறார் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான 'டி.சி.எஸ்.’ நிறுவனத்தின் ஆளெடுப்புத் துறையில் பணியாற்றும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர்.

''அங்கே, இங்கே என்று இல்லாமல் எங்கும் வெளி மாநிலத்தவர்கள் வியாபித்து இருக்கிறார்கள். சென்னையின் சந்தைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு நடை நடந்து பாருங்கள்... உங்களுக்கு உண்மை புரியும். அவர்களுக்கு என்று இங்கு ஓர் உலகம் உருவாகிவிட்டது'' என்கிறார் ஆசிரியரான குமணன்.

அடிமைகள் Vs அடிமைகள் !

வெளி மாநிலங்களில் இருந்து வந்து இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலை அப்படி ஒன்றும் மெச்சிக்கொள்ளும்படி இல்லை. குறிப்பாக, அடிமட்ட வேலைகளில் இருக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை கடுமையாக அவர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள்.

அவர்கள் தங்க வைக்கப்படும் இடம் அனல் கக்கும் தகரக் கொட்டகைகள். கூலி தவிர்த்து, வேறு எந்தச் சலுகைகளும் வழங்கப்படுவது இல்லை. கூலியும் தமிழர்களைவிடக் குறைவுதான். இந்தக் குறைந்தபட்சக் கூலியிலும் சரி பாதியை அவர்களை இங்கு அழைத்து வந்த ஏஜென்ட்டுகள் வாங்கிக்கொள்கிறார்கள். கிட்டத்தட்ட அந்தத் தொழிலாளர்கள் விலங்குகளாகவே நடத்தப்படுகிறார்கள்.

ஒரு காலத்தில், அரபு நாடுகளில் வேலைக்குப் போய் கொத்தடிமைகளாகச் சிக்கிய சக தமிழர்களின் நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட தமிழ்ச் சமூகம், இப்போது எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல் இந்தக் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கிறது. ஆனால், இவ்வளவு பரிதாபத்துக்கு உரிய நிலையில் இருக்கும் இந்தத் தொழிலாளர்கள்தான் அதே வறிய நிலை யில் இருக்கும் தமிழகத் தொழிலாளர்களுக்கு மறைமுகமான போட்டியாளர்களாக மாறுகிறார்கள்.

''தமிழ் ஆட்கள் கிடைக்கலை. அப்படியே கிடைச்சாலும் நம் ஆட்களைவெச்சு வேலை வாங்க முடியலை. அவங்க அப்படி இல்லை. மாடு மாதிரி உழைக்கிறாங்க. தேவை இல்லாமப் பேசுறது இல்ல. லீவு எடுக்குறது இல்ல. ஞாயிற்றுக்கிழமைகூட வேலை செய்றாங்க. நம்ம ஆளு ஒருத்தனுக்குக் கொடுக்குற சம்பளத்துல பாதியைக் கொடுத்து, அவன்கிட்ட ரெண்டு ஆளு வேலை வாங்கிடலாம்.'' - வெளி மாநிலத் தொழிலா ளர்களை வேலையில் அமர்த்த சென்னை முதலாளிகள் சொல்லும் பொதுவான நியாயம் இது.

உண்மைதான். ஆனால், ஒரு தொழிலாளி ஏன் மாடு மாதிரி உழைக்க வேண்டும்? ஏன் அவன் விடுமுறை நாளில்கூட வேலைக்கு வர வேண்டும்? எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர்கள் வேலை செய்வது இல்லை என்றால், இத்தனைக் காலமாக யார் வேலை பார்த்து, சென்னையை நாட்டின் பணம் கொட்டும் மாநகரங்களில் ஒன்றாக உரு மாற்றினார்கள்?

உண்மை என்னவென்றால், தமிழ் ஆட்கள் கிடைக்காமல் இல்லை. ஒரு தொழிலாளிக்கு என்று இருக்க வேண்டிய குறைந்தபட்ச சலுகைகளையும் வேலை செய்வதற்கு ஏற்ற சூழலையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை இன்றைய சென்னை முதலாளிகளுக்குத் தர விருப்பம் இல்லை. இந்தப் பிரச்னைக்கு மாற்றாகவே வெளி மாநிலத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்துகிறார்கள்.

அம்பத்தூர் 'ரெயின்போ ஸ்பிரிங்க்ஸ்’ நிறுவன அதிபர்களான டி.கமலக்கண்ணன் - எஸ்.பாலசுப்பிரமணியன் இருவரும் இந்தப் பிரச்னை குறித்து விரிவாகவே பேசினார்கள். ''வெளி மாநிலத் தொழிலாளர் களுக்குப் பெரும்பாலும் குடும்பங்கள் இங்கு இல்லை. ஆகையால், கூடுதல் நேரம் வேலை செய்கிறார்கள். வெளியிடங்களில் வேலை பார்க்கும் எல்லாருக்குமே இது இயல்பானது.

ஒரு தமிழர் வெளிநாட்டில் வேலைக் குச் சென்றால், அவரும் அங்கு இப்படித்தான் வேலை செய்வார். ஆனால், சொந்த ஊரில் குடும்பத்துடன் உள்ள ஒரு தொழிலாளி நேரம் பார்க்காமல் வேலை பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அநீதியானது'' என்கின்றனர் அவர்கள் இருவரும். இந்த நியாயம் எல்லா வேலைகளுக்கும் பொருந்தும்!

அந்நிய நகரம் !

இந்தியாவில் வேலை தேடிப் பிற மாநிலங்களை நோக்கிச் செல்வோரின் முதல் தேர்வு இப்போது சென்னைதான். ஏனைய இந்திய நகரங்களைப்போல உள்ளூர்வாசிகள் தொந்தரவு தராதது இங்கு வேலைத் தேடி வருவோரை வசீகரிக்கிறது. ஆனால், இந்த நகரமோ, மக்களோ அவர்களுக்குப் பிடித்தமானவர்களாக இல்லை என்பதையும் உணர முடிகிறது.

''தீவிரவாதம், வேலை இல்லை, கடன் தொல்லை - இப்படிப் பல சிக்கல்கள்... குடும்பச் சூழல் காரணமாகவே இங்கு வேலைக்கு வந்தோம்'' என்கிறார்கள் பீகாரைச் சேர்ந்த பாபுலாலும் ராஜனும். ''இங்கு சோற்றுக்கும் காசுக்கும் தட்டுப்பாடு இல்லை. சந்தோஷமாக இருக்கிறோமா என்று கேட்டால், காசும் சோறும்தான் சந்தோ ஷம் என்றால், இந்த ஊர் சந்தோஷமானது தான்'' என்று விரக்தி யாகச் சிரிக்கிறார்கள் ஒடிஷாவைச் சேர்ந்த ஜெயக்கரும் பிஜூ வும். பெரும்பாலான வெளி மாநிலத் தொழிலாளர்களின் கதை இதுதான்.

மூளும் தீ !

தொடக்கத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்களைத் தமிழர்கள் ஒரு பிரச்னையாகப் பார்க்கவில்லை. ஆனால், இப்போது அந்தப் பார்வை மெள்ள மெள்ள மாறுவதை உணர முடிகிறது.

''எதிர்காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் இது ஒரு பெரிய சமூகப் பிரச்னையாக மாறும்'' என்கிறார் சமூகவியலாளரும் கலை விமர்சகருமான தேனுகா. ''இப்படி வருபவர்கள் இங்கேயே தங்கிவிட்டால்? கொல்கத்தா ஓர் உதாரணம். கொல்கத்தாவை நீங்கள் எல்லாம் வங்காளிகளின் மாநகர மாக நினைத்துக்கொண்டு இருப்பீர்கள். உண்மை என்ன தெரியுமா? இந்தியாவிலேயே அதிகம் இந்தி பேசுபவர்கள் வாழும் நகரம் அது. இன்றைய கொல்கத்தாவின் பொருளாதாரப் பின்னடைவுகளுக்கு எல்லாம் இதுவும் ஒரு முக்கியமான காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது'' என்கிறார் தேனுகா.

''வெறுமனே தொழிலாளர் பிரச்னையாக மட்டுமே இதைப் பார்க்க முடியாது. எங்கிருந்தோ வருகிறார்கள், வேலை பார்க்கிறார்கள், திடீரெனக் காணாமல் போகிறார்கள். இவர்கள் எல்லாம் யார், பின்னணி என்ன...? ஒரு விவரமும் நம் அரசிடம் கிடையாது! இப்படி வருபவர்கள் இங்கு ஒரு குற்றத்தைச் செய்துவிட்டுத் தப்பிவிட்டால், அவர்களை எப்படி நம்மால் பிடிக்க முடியும்? தொழிலாளர்கள் என்கிற ரூபத்தில் பயங்கரவாதம்கூட இங்கு இறக்குமதி செய்யப்படலாம்'' என்கிறார் தொழிற்சங்கவாதியான அ.சௌந்தரராஜன் எம்.எல்.ஏ.

தளரும் பிடி !

உலகமயமாக்கல் பின்னணியில் தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி என்பது உலக அளவிலான ஒரு பிரச்னை. உலகம் முழுவதும் இன்றைய தேதியில் 21.4 கோடித் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காகக் கூடும். வளர்ந்த நாடுகள் பலவும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றன.

அமெரிக்காவுக்கு மெக்ஸிகோகாரர்கள், இங்கிலாந்துக்கு ஆசியர்கள், பிரான்ஸுக்கு ஆப்பிரிக்கர்கள், ஜெர்மனிக்கு கிரேக்கர்கள் மற்றும் துருக்கி யர்கள் என்று எல்லா வளர்ந்த நாடுகளுமே இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றன.

இடப் பெயர்ச்சியைத் தடுக்க தீவிர நட வடிக்கைகளையும் எடுக்கின்றன. ஆனால், இந்தியாவில் இது உள்நாட்டுப் பிரச்னை. கதம்பம் போன்ற அமைப்பில் இருக்கும் ஒரு நாட்டில் இந்தப் பிரச்னையை அணுகுவது சிக்கலானது. இப்போதைக்குத் தீர்வுகள் புலப்படவில்லை. ஆனால், பிரச்னை தெளிவாகத் தெரிகிறது.... தமிழர்கள் கைகளில் இருந்து நழுவுகிறது சென்னை!

- Mohamed mohaideen