Home குடும்பம் ஆண்-பெண் பாலியல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காமமும் (2)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காமமும் (2) PDF Print E-mail
Friday, 23 September 2011 07:31
Share

 ஏ.பி.எம். இத்ரீஸ்  

[ காமத்தை மீபொருண்மை உலகோடு சுவனத்து அப்ஸரஸ்களோடு தொடர்புபடுத்தி உன்னதப்படுத்திக் கொள்ளும் முறையையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். ஹூருல் ஈன்கள் எனும் அழகிகள் பற்றிய வர்ணிப்புக்கள் மனத்தின் கட்டுக்கடங்காத காமத்துக்கு இன்றைய யுகத்திலும் பிரதியீடாக அமைய முடியும்.

ஏனெனில் காமமானது இயல்பான மானுட ஆற்றலாகும். அதை ஒடுக்கும் போதெல்லாம் வளர்ந்து கொண்டே செல்லும். அதைக் கட்டுப்படுத்த கட்டுப்படுத்த அது ரகசியமாக மாறும். இந்த இடத்தில்தான் இலட்சிய வாழ்வுக்கு, தஃவாவுக்கு, நீதியை நிலைநாட்டுவதற்கு பரிசாக ஹூருல் ஈன்கள் அளிக்கப்படுவதாக அல் குர்ஆன் வாக்களிக்கின்றது.

இந்தியாவில் தோன்றிய காமசூத்திராவுக்கு இணையாக இமாம் நப்ஸாவியின் ‘நறுமணத் தோட்டம்’ அறேபியாவில் தோற்றம் பெறுகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காம அனுபவிப்புக்கள், அவர்களது பொன்மொழிகள் வழியாகவும் உடல்சார்ந்த வாழ்வின் வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கின்றது.

மிகப்பெரிய மாற்றங்கள், தகவல் புரட்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காலத்தில், தினந்தோறும் வந்து குவியும் எண்ணற்ற பத்திரிகைகளில் விரல் சொடுக்கில் அவிழ்ந்து கொட்டக் காத்திருக்கும் இணையத் தளங்கள், எப்போதும் நம் குழந்தைகளை ஆக்கிரமிக்கக் காத்திருக்கும் தொலைக்காட்சி சாதனங்கள், இவற்றின் மூலம் வெளிப்படும் தகவல்கள், அறைகுறையான உண்மைகள், அவற்றால் உருவாக்கப்படும் கிளர்வுகள் ஆகியவற்றுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சீறாவில் பாலியல் தொடர்பான பாடத்திட்டத்தை வகுப்பதற்குரிய அத்தனை வாக்குமூலங்களும் அடங்கியிருக்கின்றன.

பருவமடைதல், உடலுறவு போன்ற பல தலைப்புக்களில் விரிவான பாடத்திட்டத்தை வகுப்பதற்கான பாடப் பரப்பு அங்கே உள்ளது.]

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காமமும் (2)  

இயற்கையில் கட்டற்றது என்று எதுவுமில்லை. ஒவ்வொன்றும் பிரிதொன்றால் கட்டுப்படுத்தப்படுவது இறைநியதியாக உள்ளது. ஒரே ஒரு புல்கூட கட்டுப்படுத்தப்படாவிட்டால் பூமியை மூடிவிடும். ஒவ்வொரு உயிருக்குள்ளும் விரியவும் பரவவும் ஆக்கிரமிக்கவும் கூடிய ஆற்றல் காணப்படுகிறது. அதை இன்னொன்றின் ஆற்றலால் தடுத்து நிறுத்தும் போதே இயற்கை சமநிலையில் இருக்க முடியும். மானுடக் காமம் மனத்துக்குள் செல்லும் போது அதற்கு கட்டுப்பாடே இல்லை. அதைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் உலக மதங்கள் துறவரத்தைப் போதித்தன. ஏனெனில் மனத்தின் ஆற்றலைப் போல உடலும் எல்லையற்ற ஆற்றல் கொண்டதல்ல. காமத்தில் கட்டுப்பாடு இல்லாமல் இறங்கியவர்கள் உடலைக் கெடுத்துக் கொண்டதுதான் வரலாறாகும்.

ஆகவேதான் காமத்தைக் கட்டுப்படுத்தும் விழுமியங்கள் எல்லாச் சமூகத்திலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று, நேரடியான ஒழுக்கக் கட்டுப்பாடுகள். மற்றது, காமத்தை காதலாக மாற்றி உன்னதப்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் கட்டுப்பாடுகளாகும். இவ்விருவகை கட்டுப்பாடுகள் வழியாக ஒழுகிச் செல்லும்போதே மானுட வாழ்க்கை சமநிலையில் இருக்க முடியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சீறாவில் இந்த இரு வழிகளையும் காணலாம். வரையறையற்ற பாலுறவுக்கு மிக அருகாமையில்தான் தொன்மை அறேபியரின் மனமுறை ஆரம்பத்தில் காணப்பட்டது. பல கணவர் மனமும் பல துணை மணமும் அங்கே பரவலாகக் காணப்பட்டன.

பத்துக்கும் குறையாத ஆண்கள் ஒரு பெண்ணை உடலுறவுக்குப் பயன்படுத்தி வந்தார்கள். அவள் கருவுற்றுப் பிள்ளை பெற்ற போது அப்பெண் பின்வருமாறு கூறுவாள். "எமது ஒப்பந்தத்தை நீங்கள் அறிவீர்கள். இப்போது நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளேன். எனது அபிப்பிராயப்படி இக்குழந்தை இன்ன ஆடவருக்குரியதாகும்". அவளால் பெயர் குறிக்கப்படுபவர் தந்தை அந்தஸ்த்தை ஏற்க வேண்டும். அதாவது அவள் பெற்றெடுத்த குழந்தை உடல் இலட்சண சோதனை மூலம் அதன் தந்தையைத் தீர்மானிக்கும் திறன் அப்போது இருந்தது.

அடிமை முறையும் அறேபியர் மத்தியில் அங்கீகரிக்கக்கூடியதாக இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்பு அடிமைப் பெண்களை எஜமானர்கள் தமது பாலியல் உணர்வுகளுக்குப் பயன்படுத்தினர். சிலர் அடிமைப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதித்தனர். ஜாஹிலிய்யக் கால பால்வினைத் தொழிலில் நிலவிய முதலாளித்துவத்தை அல் குர்ஆன் (4:33) விமர்சனம் செய்கின்றது.

திருமணம் செய்யாது மனைவியரைப் போல பெண்களை வைத்திருக்கும் மற்றொரு முறையும் அங்கிருந்தது. யுத்தத்தில் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களையும் விலைக்கு வாங்கிய அடிமைகளையும் அறேபியர் இத்தகைய உறவுக்குப் பயன்படுத்தினர். அடிமைப் பெண்கள் மீதான பலியல் நிர்ப்பந்தம், விபச்சாரம், சட்டபூர்வமற்ற மணமுறை ஆகிய பாலியல் உறவுகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடிமைகளுக்கு விடுதலையையும் விவாக உரிமையையும் வழங்கினார்கள்.

வன்முறை மூலம் கடத்திச் சென்று மணமுடிக்கும் முறையும் அறேபியரிடம் இருந்தது. தொன்மை அறேபியாவில் விதவைகளுக்கும் சுதந்திரம் இருக்கவில்லை. விதவைகளை கணவனின் மகனோ அல்லது சகோதரர்களோ உடமையாக்கிக் கொண்டனர். பெண்ணின் விருப்பம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டது. இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தில்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பலதார திருமணங்கள் நிகழ்வதைக் காணலாம். 38 வயதைத் தாண்டிய வாசனைத் திரவியங்கள் வணிகத்தில் ஈடுபட்ட விதவை பெண்ணான ஹதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத்தான் 25 வயது நிரம்பிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமுடிக்கின்றார்கள். ஹதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் வாழ்ந்து ஹதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்த பின்பே இறுதி பத்து ஆண்டுகளுக்குள்தான் ஏனைய திருமணங்கள் நிகழ்கின்றன.

ஸஃபிய்யாஹ் (ரளியல்லாஹு அன்ஹா) என்ற யூதப் பெண்கூட தந்தையும் கணவரும் சகோதரர்களும் மொத்தமாக கொல்லப்பட்ட போது அப்பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையிலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணம் அமைகிறது. இத்திருமணத்தை இதர மனைவிகளோ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களோ விரும்பவில்லை. ஸவ்தா-Sauda (ரளியல்லாஹு அன்ஹா) என்ற மனைவியிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிடம் செல்லும் மனநிலையை அடைந்தார்கள் என அவர்களே ஒரு கட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஹதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் இழப்பை ஈடுசெய்யும் வகையிலேயே ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா போன்றோரின் திருமணங்கள் அமைகின்றன. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா பெண்களில் சிறந்த அறிவாளியாகவும் அழகும் சுறுசுறுப்பும் இளமையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிற்கால வாழ்வில் ஒர் உத்வேகத்தை கொடுத்தது என்பது மறுக்க முடியாது. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கட்டிளமைப் பருவத்தின் ஆரம்பத்தில் இருந்ததால் பெரும்பாலும் அப்பருவத்திற்கேற்ற விளையாட்டுக்களிலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஈடுபாடு காட்டினார்கள். இங்கு அறிவார்ந்த ஈர்ப்பும் உத்வேகமுமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காமத்தை அணுகியதில் தெளிவாகத் தெரிகின்றது.

காமத்தை மீபொருண்மை உலகோடு சுவனத்து அப்ஸரஸ்களோடு தொடர்புபடுத்தி உன்னதப்படுத்திக் கொள்ளும் முறையையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். ஹூருல் ஈன்கள் எனும் அழகிகள் பற்றிய வர்ணிப்புக்கள் மனத்தின் கட்டுக்கடங்காத காமத்துக்கு இன்றைய யுகத்திலும் பிரதியீடாக அமைய முடியும். இப்னுல் கையூம் ஹூருல் ஈன்கள் பற்றிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின், குர்ஆனின் கருத்துக்களைத் திரட்டி ‘நூனிய்யா’ என்ற பெயரில் ஹூருல் ஈன்கள் காவியத்தை இயற்றியுள்ளார். தமிழில் வண்ணக்களஞ்சியப் புலவர் இராஜநாயத்தில் ஹூருல் ஈன்களுக்கான தனியான படலத்தையே அமைத்துள்ளார்.

ஏனெனில் காமமானது இயல்பான மானுட ஆற்றலாகும். அதை ஒடுக்கும் போதெல்லாம் வளர்ந்து கொண்டே செல்லும். அதைக் கட்டுப்படுத்த கட்டுப்படுத்த அது ரகசியமாக மாறும். இந்த இடத்தில்தான் இலட்சிய வாழ்வுக்கு, தஃவாவுக்கு, நீதியை நிலைநாட்டுவதற்கு பரிசாக ஹூருல் ஈன்கள் அளிக்கப்படுவதாக அல் குர்ஆன் வாக்களிக்கின்றது. இந்தியாவில் தோன்றிய காமசூத்திராவுக்கு இணையாக இமாம் நப்ஸாவியின் ‘நறுமணத் தோட்டம்’ அறேபியாவில் தோற்றம் பெறுகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காம அனுபவிப்புக்கள், அவர்களது பொன்மொழிகள் வழியாகவும் உடல்சார்ந்த வாழ்வின் வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பலதார மணத்துக்கு நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளார்கள். எல்லா மனைவியர்களுக்கிடையேயும் நீதியாக நடக்கக்கூடிய, பராமரிப்பதற்கான உடல், உள மற்றும் பொருளாதார பலமுள்ள, பாராபட்சம் காட்டாத, அசாதாரண சூழ்நிலைகளிலேயே இவ்வனுமதி வழங்கப்படுகின்றது. சாதாரணமாக ஆண்களைவிட பெண்களின் மக்கள்தொகை அதிகரித்தல், யுத்தம் இயற்கை அனர்த்தங்களின் மூலம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல், மனைவி குழந்தைப் பேறு இல்லாதவளாக இருத்தல், நிரந்தர நோயாளிக மாறுதல், அதிகரித்த காம உணர்வு, தவறான முறையில் குழந்தையை பிறப்பதை இல்லாதொழித்தல் போன்ற பல காரணங்கள் பலதார மணத்தை அனுமதிக்கின்றன. ஆனாலும் பலதார மணத்தினால் மனைவிகளுக்கிடையே பகைமை, பொறாமை, நெருக்கடிகள் ஏற்படுவதும் அது குழந்தைகள் மத்தியில் மேலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதும் அன்பு, பாசம் காட்டுவதில் அசமத்துவம் தோன்றுவதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்காமல் விடவில்லை.

எனவே பாலியல் தொடர்பான சரியான தகவல்களை அறியும் உரிமையையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவாதப் படுத்தியுள்ளார்கள். பாலியல் தொடர்பான புனைவுகளையும் மறுமப்படுத்தல்களையும் தக்கவைப்பதும் சரியான தகவல்களிலிருந்து கட்டிளமைப் பருவத்தினரை காப்பாற்றுவதும்தான் கலாச்சாரம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சீறாவில் காணமுடியவில்லை.

மிகப்பெரிய மாற்றங்கள், தகவல் புரட்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். தினந்தோறும் வந்து குவியும் எண்ணற்ற பத்திரிகைகளில் விரல் சொடுக்கில் அவிழ்ந்து கொட்டக் காத்திருக்கும் இணையத் தளங்கள், எப்போதும் நம் குழந்தைகளை ஆக்கிரமிக்கக் காத்திருக்கும் தொலைக்காட்சி சாதனங்கள், இவற்றின் மூலம் வெளிப்படும் தகவல்கள், அறைகுறையான உண்மைகள், அவற்றால் உருவாக்கப்படும் கிளர்வுகள் ஆகியவற்றுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சீறாவில் பாலியல் தொடர்பான பாடத்திட்டத்தை வகுப்பதற்குரிய அத்தனை வாக்குமூலங்களும் அடங்கியிருக்கின்றன.

பருவமடைதல், உடலுறவு போன்ற பல தலைப்புக்களில் விரிவான பாடத்திட்டத்தை வகுப்பதற்கான பாடப் பரப்பு அங்கே உள்ளது. அதேபோன்று பாலியல் துஷ்பிரயோகங்களும் அத்துமீறல்களும் குடும்ப உறுப்பினர்களாலேயே மேற்கொள்ளப்படும் மிக துர்ப்பாக்கியமான ஒரு காலப்பிரிவிலும் நாம் வாழ்கிறோம். அந்த வகையிலும் இந்த துஷ்பிரயோகங்களால் இளம் உள்ளங்களில் ஏற்படும் மனப்பிறழ்வுகளை இல்லாமலாக்கி தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாறு வழிகாட்டுகின்றது.

- ஏ.பி.எம். இத்ரீஸ்

source: http://idrees.lk/