Home இஸ்லாம் வரலாறு ஒரு தாயின் ஆவல்!
ஒரு தாயின் ஆவல்! PDF Print E-mail
Monday, 29 August 2011 08:37
Share

ஒரு தாயின் ஆவல்!

      இது ஓர் வரலாற்றுப் பொக்கிஷம்      

அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

ஹாரிஸா பின் சுராகா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயரான உம்மு ருபய்யிஉ பின் பராஉ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி எனக்கு நீங்கள் கூற மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார். எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று அவர் மீது தாக்கியிருந்தது. அவர் சுவர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக் கொள்வேன். அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்" என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஹாரிஸாவின் தாயே! சுவர்க்கத்தில் பல்வேறு (படித்தரங்களைக் கொண்ட) சுவனச் சோலைகள் உள்ளன. உங்கள் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த 'பிர்தவ்ஸ்" எனும் சுவனச் சோலையைப் பெற்றுக் கொண்டார்கள்" என்று பதிலளித்தார். (நூல்: புகாரீ)

ஓர் இலட்சியத் தாயின் ஆவல் இந்த ஹதீஸில் பிரதிபலிக்கிறது. புவிமேற்பரப்பில் கால்பதித்து நின்றாலும் சுவனத் தேடலும், இறைதிருப்தியை பெற்றுக் கொள்ளும் அவாவும் அக்கால தாய்மார்களின் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்திருந்தன.

பத்ரு யுத்தம் சத்தியத்தை வாழ வைத்த யுத்தம். இஸ்லாமிய ஆட்சியின் அடித்தளங்களை ஆட்டங் காணச் n சய்து அதனை முழுமையாக வேரறுத்து விடுவதற்கான முழுமையான யுத்த முஸ்தீபுகளுடன் இறைநிராகரிப்பாளர்கள் பத்ருக் களம் நோக்கி வந்திருந்தனர். எதிர்பாராத விதமாக போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலையில் இருந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனித வளத்தையும், பௌதீக வளத்தையும் அங்கசம்பூரணமாகப் பிரயோகித்தார்கள். நபித்தோழர் பெருமக்களில் ஹாரிஸா பின் சுராகா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர்.

ஹாரிஸா பின் சுராகா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தான் வீர மரணம் அடைய வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கொண்டவர். ஹிஜ்ரி 2 ம் ஆண்டு நடந்த பத்ருப் போரில் கலந்து கொண்டார். போரின் போது தண்ணீர் அருந்துவதற்காக நீர்த் தொட்டிக்கு அவர் வந்த சமயத்தில் ஹிப்பான் இப்னு அரிகா என்பவர் தொலைவிலிருந்து எய்த அம்பொன்று ஹாரிஸாவின் குரல் வளையைத் தாக்கியதில் அவர் வீரமரணம் அடைந்தார்.

பத்ரு யுத்தம் இஸ்லாத்தினதும், முஸ்லிம்களினதும் இலக்கையும், இருப்பையும் உறுதி செய்தது. இஸ்லாத்திற்கான ராட்சத பங்களிப்பில் தன்னை உட்படுத்திக் கொண்ட ஹாரிஸாவின் நிலை குறித்து அவர்களது அருமைத் தாய் அண்ணலாரிடம் வினவுகிறார்கள். ஒரு முஸ்லிமின் வாழ்வில் அவன் இறுதி மூச்சை விட்ட நிலை அவனது மறுவுலக வாழ்வைத் தீர்மானிக்கிறது. எனவே தான் அந்தத் தாய், ''ஹாரிஸா குறித்துக் கூற மாட்டீர்களா? என்று கவலை குரல் வளையை அடைக்க ஏக்கப் பெருமூச்சுடன் வினாத் தொடுக்கிறார்கள். ''எனது மகன் சுவனத்தில் இருப்பாரென்றால் நான் பொறுமையைக் கைக் கொள்வேன்"" என்ற அந்தத் தாயின் கூற்று அவர்களது இலட்சியவாத வாழ்வை அழகாகச் சித்தரிக்கிறது.

தனது மகன் மரணித்து விட்டதை அவள் ஏற்கனவே அறிந்து கொண்டாள். அதற்காக அவள் கவலைப்படவில்லை. அண்ணலாரை சந்திப்பதற்கு முன்னர் ஒரு நபித்தோழரை சந்தித்து மகனின் மரணச் செய்தியை அறிந்து கொண்டு 'அல்லாஹ{ அக்பர்" என்று உரக்கக் கூறினார்கள். அவர்களது கவலை எல்லாம் மகனின் மறுவுலக வாழ்வு குறித்ததாகவே இருந்தது.

ஏனெனில், மகன் சுவனத்தில் இருந்தால் அவன் சுவனச் சோலையின் சுகந்தத்தைச் சுவாசிப்பேன். பேரின்பகரமான உணவை உட்கொள்வான், பாலாறு, தேனாறு போன்றவற்றிலிருந்து அருந்தி மகிழ்வான். வசந்தம் கொழிக்கும் வாலிபப் பருவத்தை அனுபவிக்கு முன்னரே உயிர்த்தியாகம் செய்தவன் சுவன வசந்தத்தை என்றும் இளமை மாறாத நிலையில் வாழ்ந்து அனுபவிப்பான். 'ஹ{ருல் ஈன்" எனும் கண்ணழகிகளுடன் கொஞ்சி விளையாடுவான். நோய், மரணம், களைப்பு, சோர்வு, வறுமை, முதுமை எதுவுமே அவனை அணுகப் போவதில்லை. மேலும் இன்னோரன்ன சுகபோகங்கள் அவனை சுற்றி வளைத்திருக்கும். அத்தோடு இறைதிருப்தி அவனது நெஞ்சத்தை நிறைத்திருக்கும்.

இந்தக் கனவு கலைந்து கவலைப் பாறைகள் தொண்டைக்குழியை அடைத்து விடக் கூடாது என்பதற்காகவே அண்ணலாரிடம் அந்தத் தாய் மகனின் இறுதி நிலை தொடர்பாக தனது உளக் குமுறலைக் கொட்டினார்கள். எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் செவியேற்றிராத, எந்தவொரு மனித உள்ளமும் உணர்ந்திராத சுவனத்தை எனது அடியார்களுக்காக நான் சித்தப்படுத்தியுள்ளேன் என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீஸ{ல் குத்ஸீ வர்ணிக்கும் சுவனத்தை எனது மகன் வெகுமதியாகப் பெற்று விட்டால் நான் பொறுமை சாதிப்பேன். என்னை எனது மகனின் பிரிவுத்துயர் வாட்டி வதைக்கப் போவதில்லை என்பதே அந்தத் தாயின் நிலைப்பாடு.

'அதுவல்லாத (துன்ப) நிலையில் அவர் இருப்பாரென்றால் நான் கடுமையான அழுவேன்" என்ற அந்தத் தாயின் கூற்று பிள்ளைப் பாசத்தை அப்படியே கொப்பளிக்கிறது. அதுவல்லாத நிலை என்றால் நரகம் தானே! ஜஹன்னம், ஜஹீம் என்ற வார்த்தைகளைக் கூற நா எழவில்லை. அந்தத் தாய் நரகத்திற்குரிய பெயர்களைத் தானும் கூற விரும்பவில்லையென்றால் அவள் எப்படி தனது மகன் நரகத்தின் புகை மண்டலத்தில் இருந்து வரும் நச்சுக் காற்றைச் சுவாசிப்பதை விரும்புவாள்? இதுவே இஸ்லாமியத் தாயின் ஆவல்! தனது மகனின் இறுதி இலக்கை அவனுக்கு சரியாக வரித்துக் கொடுத்த தாயின் இலட்சியவாத வாழ்வு! மகனின் பிரிவால் வாழ்வு கசந்து போக விரக்தியின் விளிம்புக்குச் சென்று விடாத அஞ்சா நெஞ்சம் கொண்ட வீரத்தாயின் தணியாத தாகம்! அவள் உருவாக்கியது சரிசாரி மனிதப் பிண்டத்தை அல்ல. மாறாக, தீனுல் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக செந்நீர் வார்க்கத் துணிந்து விட்ட வீரப் புருஷனை! ஹாரிஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களது தாய் தனது மகனின் மரணத்தை பேரிழப்பாகக் கருதவில்லை.

பத்ரு யுத்த சத்தம் ஓய்ந்தாலும் அந்தத் தாயின் சத்தம் இன்னும் தணியவில்லை! அது ஒரு நொந்து போன உள்ளம். தனது மகனின் இறுதிப் பெறுபேற்றை எதிர்பார்த்து நிற்கும் முதல் பாடசாலை! அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அதரங்கள் உதிர்த்த வார்த்தைகள்:

''ஹாரிஸாவின் தாயே! சுவனத்தில் பல்வேறு (படித்தரங்கள் கொண்ட) சோலைகள் உண்டு. உங்கள் மகன் உயரிய பிர்தவ்ஸ் என்ற சுவனச் சோலையை தனதாக்கிக் கொண்டார்" தூதர் மொழிகள் அவளுக்கு ஒத்தடமாய் அமைந்தன. அந்த முதல் தர சித்தி கண்டு அந்த முதல் பாடசாலை அகமகிழ்ந்தது. அவளை சமாளித்து அனுப்புவதற்காக அவ்விடத்தில் புனையப்பட்ட ஆறுதல் வார்த்தைகளல்ல அவை, நஊதுபில்லாஹி மின்ஹா, அவை வஹியின் ஊடாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெற்றுக் கொண்ட பேருண்மை. அவற்றில் நபித்தோழர்களுக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருந்தது. எனவே தான், இளைஞர் பட்டாளம் களம் காணத் துடித்துக் கொண்டிருந்தது. களம் காணும் ஆசையை, ஆவலை இளம் உள்ளங்களில் அன்னையர் விதைத்தனர்.

இஸ்லாத்தை வாழ வைக்க இளம் உள்ளங்களை அன்று தூண்டியவை மாவீரர் தினங்களோ, மாவீரர் துயில் கொள்ளும் இல்லங்களோ அல்லது இனவெறியை வரிக்குவரி கொப்பளிக்கும் கீதங்களோ அல்ல. மாறாக வேதவரிகளும், தூதர் மொழிகளும், தாய்மார்களது அகன்று விரிந்து கிடந்த உள்ளங்களுமே களம் நோக்கி அவ்விளைஞர்களை உந்தித் தள்ளி நகர்த்தின.

இலட்சியங்களை இலட்சியமாய் வரித்துக் கொள்ளாத, பெரிய இடத்து சம்பந்தத்திற்காக மாப்பிள்ளையைச் சந்தைப் பொருளாக்கும் சராசரி சடவாதச் சிந்தனைப் போக்குள்ள தாய்மார்கள் அல்ல அக்கால தாய்மார். உழைப்பு, உத்தியோகம், சமூக அங்கீகாரம், அந்தஸ்து, பதவிநிலை போன்றவற்றை முதன்மைப்படுத்தி பிள்ளைகளை சடவாதச் சகதியில் மூழ்கடிக்கின்ற பெற்றோரை இன்று பரவலாக நாம் அவதானிக்கின்றோம். அன்று சுவனமும், இறைதிருப்தியும் பெற்றோர்களினால் பிள்ளைகளுக்கு முதன்மைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டன. எதிர்காலத்தில் தமது பிள்ளைகள் பெரிய சுகபோகத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக பெற்றோரினால் வழிகாட்டல் வழங்கப்பட்டதாக நாம் அறிய முடியாது. அப்படியான நிலைப்பாடு ஜனரஞ்சகமாக இருந்திருக்குமென்றால் ஹாரிஸாவையும், இஸ்லாமிய வரலாறு சந்தித்திருக்க முடியாது. இஸ்லாமிய புவியில் மேலோங்கியிருக்கவும் முடியாது.

ரபீஅத்துர் ரஃயீ என்ற இமாமின் தாயிடம் ஊரவர்கள், 'உங்கள் மகன் கற்பிக்கும் தகையையைப் பெற்றுள்ளார். அவருக்கு ஒரு தொழிலை நீங்கள் செய்து கொடுத்தால் என்ன?" என்று கேட்டனர். அதற்கு அந்தத் தாய், '' எனது மகனின் ஈருலக வாழ்வுக்கு இயைந்து வரக் கூடிய ஒன்றைத் தெரிவு செய்து கொடுக்குமாறு நான் அல்லாஹ்வை வேண்டுகிறேன்" என்றார்கள்.

இலட்சியவாத தாய்மார்களும், பிள்ளைகளும் காலத்தின் தேவையாக அமைந்து விட்டான். எமது பிள்ளைகளை சுவனப் பிரியர்களாக வளர்ப்பதற்கு எமது இன்றைய நடைமுறை வாழ்வையும், சிந்தனையையும், நோக்கையும் போக்கையும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. இது ஒரு காலத்தின் அறைகூவல்! நவயுகத்தின் சவால் இலகுவாக நிலைநாட்ட முடியாத சாதனை என்றால் அது மிகையாகாது.

source: http://www.a1realism.com/women/mother_expectation.HTM