Home குடும்பம் பெண்கள் பூவையருக்கு பூப்போன்ற அறிவுரைகள் (3)
பூவையருக்கு பூப்போன்ற அறிவுரைகள் (3) PDF Print E-mail
Saturday, 27 August 2011 08:20
Share

21. அன்பின் இஸ்லாமிய சகோதரிகளே!

நீங்கள் கலந்துகொள்ளக்கூடிய சபை அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிந்து அவனது தண்டணைக்கு அஞ்சக்கூடியதாகவும், புறம், கோள் போன்றவற்றை விட்டும் தூய்மையானதாகவும் இருக்கவேண்டும். ஏனெனில் இவை வெறுக்கத்தக்க குணங்களும் இழிவான பண்புகளுமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

விசுவசிகளே! உங்களில் சிலர் சிலரை புறம்பேச வேண்டாம். உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரனின் மாமிசத்தை (அவர் செத்து) சவமாக இருக்கும் நிலையில் புசிக்க விரும்புவாரா? அப்போது அதனை நீங்கள் வெறுத்து விடுவீர்கள். (அல் ஹுஜ்ராத்- 49 : 12)

22. அன்புச்சகோதரிகளே!

சபையில் இருக்கக்கூடிய சகோதரிகளில் ஒருவர் தேவையற்ற அல்லது தவறான பேச்சுக்களை பேசினால் அவர்கள் சபையிலிருந்து வேளியேறிய பின் அவர்களிடம் மென்மையான அழகான முறையில் அவர்களுக்கு உபதேசம் செய்வது அவசியமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே!) நீர் விவேகத்தை கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமது நாயனின் வழியின் பக்கம் அழைப்பீராக! (அந் நஹ்ல்- 16: 125)

23. அன்புச்சகோதரிகளே!

நீங்கள் வீட்டில் சிறிய நூல்நிலையம் வைப்பதற்காக பயனுள்ள புத்தகங்களை சேகரிப்பதற்கு ஆர்வங்காட்டு. இதனால் குடும்பத்திலுள்ள அனைவரும் பயனடைவார்கள்.

24. அன்புச்சகோதரிகளே!

பயனற்ற புத்தகங்களை வாசிப்பதில் உனது நேரத்தை வீணாக்காதே! மேலும் மோசமான சஞ்சிகைகள், இழிவான விஷயங்களை பிரசுரிக்கக்கூடிய, குழப்பத்தையும், இழிவான குணங்களை பரப்பக்கூடிய தீய வார்த்தைகளை படிக்காமல் இருப்பாயாக! இத்தீமைகளை உனது வீட்டில் நுழைய விடாமல் பாதுகாப்பாயாக!

25. அன்புச்சகோதரிகளே!

உனது நூல் நிலையம் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யக்கூடியதாகவும் பல்வேறு தலைப்புக்களை ஆராயக்கூடியதாகவும் இருப்பது பயனுள்ள அம்சமாகும். எனவே முஸ்லிமான ஆண், பெண் இருவரும் தங்களின் மார்க்க சட்டங்கள், அதன் கொள்கை பற்றி அறிவதும், உலகில் நடக்கின்ற செய்திகளை பார்ப்பதும், முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூய பிரச்சினைகள், துன்பங்களை அறிவதும், தங்களையும், தங்களின் குடும்பத்தாரையும் சிறந்தமுறையில் வளர்த்துக்கொள்ளக்கூடிய சாதனங்களை பெற்றுக்கொள்வதும், முன்சென்ற நல்லோர்களின் வாழ்க்கை வரலாறுகளை படித்து அவற்றை அறிவுரையாகவும், படிப்பினையாகவும் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

26. அன்புச்சகோதரிகளே!

பயனுள்ள நூல்களை நீ கண்டால் அதை நீ மற்ற சகோதரிகளுக்கும் அறிமுகப்படுத்து! அதை வாசிப்பதற்கு அவர்களையும் தூண்டு! மேலும் உன்னிடம் மோசமான அல்லது விபரீதங்களை ஏற்படுத்தக்கூடிய ஏதாவது புத்தகங்களை நீ பெற்றுக்கொண்டால் அதன் தீமை பற்றி மற்ற சகோதரிகளுக்கும் உணர்த்துவதும், விளக்கிக் கூறுவதும் உன்மீது கடமையாகும்.

27. அன்புச்சகோதரிகளே!

வாசிப்புப் பழக்கம் முக்கியமான ஒரு அம்சமாகும். எனவே அறிவைக் கூட்டக்கூடிய விஷயங்களை அறிந்துகொள்வதில் ஓய்வுநேரங்களை பயன்படுத்து! அல்லாஹ் உனக்கு உதவியளிப்பான்.

கடைத்தெருவிற்கு செல்லும்போது பெண்கள் பேணவேண்டிய ஒழுக்கங்கள்.

28. அன்புச்சகோதரிகளே!

உனது தேவைகளை நிறைவுசெய்யக்கூடிய ஒருவர் இருக்கும்போது நீ வெளியே செல்வதற்கு ஆசைப்படாதே! மேலும் நீ தனிமையில் வெளியே செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டால் உன் தேவைகளை விரைவாக குறுகிய நேரத்திற்குள் நிறைவேற்றிவிட்டு வீடு திரும்பு!

29. அன்புச்சகோதரிகளே!

கடைத்தெருவிற்கு செல்லும்போது மணம் பூசுவது, அலங்கரித்துக்கொள்வது, பிறர் பார்வையை தன்பக்கம் திருப்பக்கூடிய அழகிய ஆடைகளை அணிவது போன்றவற்றை விட்டும் எச்சரிக்கையாக இருந்துகொள்!

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

எப்பெண்மணி நறுமணத்தை பூசிக்கொண்டு அடுத்தவர்கள் முகர்வதற்காக அங்கு செல்கின்றாளோ அப்பெண் விபச்சாரியாவாள். (திரிமிதி, நஸாயி)

உன் ஆடை, உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருப்பது அவசியமாகும்.

30. அன்புச்சகோதரிகளே!

நீ கடைத்தெருவில் அல்லது பாதையில் செல்லும்போது அதிகம் திரும்பிப் பார்க்காதே! ஏனெனில் பார்வையினால் பல விபரீதமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன. மேலும் தேவையில்லாமல் வியாபாரிகளுடன் அதிகம் பேசுவதை தவிர்ந்து கொள்! ஏனெனில் அது வெட்கத்தை இல்லாமலாக்கி குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.

இன்ஷா அல்லாஹ் அறிவுரைகள் தொடரும்