Home குடும்பம் பெண்கள் பூவையருக்கு பூப்போன்ற அறிவுரைகள் (1)
பூவையருக்கு பூப்போன்ற அறிவுரைகள் (1) PDF Print E-mail
Monday, 22 August 2011 10:50
Share

 1. எனது இனிய இஸ்லாமிய சகோதரிகளே!

எப்போதும் அர்த்தமின்றி அதிகம் பேசுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்!

அல்லாஹ் கூறுகின்றான்:

தர்மத்தை பற்றி அல்லது நன்மையானவற்றை பற்றி அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதை பற்றி ஏவியதைதவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. (அன்னிஸா- 4 : 14)

உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் நன்மையை பெற்றுத்தரக்கூடியதாகவும், சுருக்கமானதாகவும், விளக்கமானதாகவும், கருத்தாழமிக்கதாகவும் அமைந்திருப்பது அவசியமாகும். ஏனெனில் மலக்குகள் எப்பொழுதும் உனது பேச்சை பதிவு செய்துகொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

ஒவ்வொருவரின் வலது புறத்திலும், இடது புறத்திலும் அமர்ந்து (செயல்களை) எழுதும் இரு வானவர்கள் மனிதனிடம் இல்லாமல் எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை. (காஃப்- 50 : 17,18)

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

நீர் ஓதுவீராக! (அதன்மூலம்) உயர்வீராக! இவ்வுலகில் நீர் திருத்தமாக ஓதியதுபோல் திருத்தமாக ஓதுவீராக! கடைசி வசனத்தை ஓதும்போது நீர் அடையும் இடம் உமது தங்குமிடமாகும். என்று குர்ஆனை மனனம் செய்தவரிடம் கூறப்படும். (திர்மிதி)

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதன் தீங்கையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதன் தீங்கையும் எவருக்கு அல்லாஹ் பாதுகாக்கின்றானோ அவர் சுவர்க்கத்தில் நுழைவார் (திர்மிதி)

அல்லாஹ்வின் தூதரே! ஈடேற்றம் பெறுவது எவ்வாறு என்று கேட்டேன். அதற்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உன் நாவை தீங்கை விட்டும் தடுத்துக்கொள்! உன் வீடு விஸ்தீரணமாக இருக்கட்டும். உன் பிழைகளுக்காக அழுவீராக! எனக்கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதி)

 2. அன்புச் சகோதரிகளே!

வாழ்வின் வழிகாட்டியான அல்குர்ஆனை தினமும் ஓதி அதை விளங்கி நிலைநிறுத்துவதோடு அதில் முடிந்தளவு சில அத்தியாயங்களையும் மனனம் செய்துகொள்ளுங்கள். அதன்மூலம் மறுமையில் மகத்தான நன்மையை பெற்று வெற்றி அடைவீர்கள்.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

நீர் ஓதுவீராக! (அதன்மூலம்) உயர்வீராக! இவ்வுலகில் நீர் திருத்தமாக ஓதியதுபோல் திருத்தமாக ஓதுவீராக! கடைசி வசனத்தை ஓதும்போது நீர் அடையும் இடம் உமது தங்குமிடமாகும். என்று குர்ஆனை மனனம் செய்தவரிடம் கூறப்படும். (திர்மிதி)

 3. அன்புச்சகோதரிகளே!

உங்கள் காதால் கேட்கும் அனைத்தையும் பிறரிடம் கூறிவிடாதீர்கள். அது சிலவேளை பொய்யாகவும் இருக்கலாம்.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

தான் கேட்டது அனைத்தையும் அப்படியே பேசுவது ஒருவன் பொய்யன் என்பதற்கு போதுமான ஆதாரமாகும். (முஸ்லிம்)

 4. அன்புச்சகோதரிகளே!

பிறர் கண்களுக்கு தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதாக எண்ணி பெருமைப்படாதீர்கள்.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து அல்லாஹ்வின் தூதரே! எனது கணவர் எனக்கு வழங்காததையெல்லாம் அவர் வழங்குவதாக நான் கூறுகின்றேன். அதற்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:- நமக்கு வழங்கப்படாத ஒன்றை யார் வழங்கப்பட்டதாக கூறுகின்றாரோ அவர் பொய்யான இரண்டு ஆடைகளை அணிந்தவர் போலாவார். (புகாரி, முஸ்லிம்)

 5. அன்புச்சகோதரிகளே!

அல்லாஹ்வின் திக்ர் ஒரு முஸ்லிமின் வாழ்வில் உடல், உள, ஆத்மீக ரீதியிலான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. எனவே நீங்கள் என்னிலையிலும், எப்போதும் அல்லாஹ்வை ஞாபகப்படுத்துங்கள். நிச்சயமாக அல்லாஹ் தன்னை நினைவுபடுத்தக்கூடிய நல்லடியார்களை பின்வருமாறு புகழ்ந்து கூறுகின்றான்.

நிச்சயமாக வானம்,பூமி ஆகியவற்றின் படைப்பிலும், இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப்புறங்கள் மீது (சாய்ந்த) நிலையிலும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கின்றார்கள். (ஆலு இம்ரான்- 3 : 190, 191)

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டளைகள் என்மீது அதிகமாகிவிட்டன. எனவே நான் வழக்கமாக கடைப்பிடித்துவர விஷேசமான ஒரு அமலை எனக்கு சொல்லித்தாருங்கள் எனக் கேட்டார்கள். அதற்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னுடைய நாவு எப்பொழுதும் அல்லாஹ்வை திக்ர் செய்வதிலேயே திளைத்ததாக இருக்கவேண்டும் எனக் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா, இப்னுஹிப்பான்)

 6. அன்புச்சகோதரிகளே!

நீர் பேச்த்தொடங்கினால் கர்வமாக, பெருமையாக, பேசுவதை தவிர்ந்துகொள்ளுங்கள். அவ்வாறு பேசுவது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மிகவும் கோபத்திற்குரிய அம்சமாகும்.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

உங்களில்அழகிய குணமுள்ளவர்கள் எனக்கு மிக நேசமானவர்களிலும், மறுமைநாளில் எனக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருப்பவர்களிலும் அடங்குவர். உங்களில் எனக்கு மிக வெறுப்பானவர்களும், மறுமைநாளில் என்னை விட்டும் தூரத்திலிருப்பவர்களும் உங்களில் அதிகமாக பேசுபவர்களும் தங்களின் பேச்சால் மக்களிடம் பெருமையடிப்பவர்களும், வாய்பிளந்திருப்பவர்களும் ஆவார்கள். அல்லாஹ்வின் தூதரே! வாய் பிளந்தோர் என்றால் யார்? என்று நபித்தோழர்கள் கேட்ட போது பெருமையடிப்பவர்கள் என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். (அஹ்மத், திர்மிதி, இப்னுஹிப்பான், தப்ரானி)

 7. அன்புச்சகோதரிகளே!

அதிகம் சிரிக்காதவர்களாக, மௌனமாக,சிந்தனை மிக்கவர்களாக இருந்துகொள்ளுங்கள். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரி உங்கள் வாழ்வில் பிரதிபலிக்கட்டும்.

நீங்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தீர்களா? என நான் ஸமுராவின் மகன் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் எனக்கூறி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீண்டநேரம் மௌனமாக இருப்பவர்களாகவும், குறைவாக சிரிப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தோழர்கள் கவிதைகளை கூறியும், தங்களின் தனிப்பட்ட விரூப்பங்களை பற்றி கதைத்து சிரித்து மகிழ்வார்கள். சிலவேளைகளில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புன்முறுவல் பூப்பார்கள். (முஸ்னத் அஹ்மத்)

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசிக்கின்றாரோ அவர் நல்லதை பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும். (புகாரி, முஸ்லிம், திர்மிதி)

 8. அன்புச்சகோதரிகளே!

நீங்கள் எவரிடமாவது பேசும்போது அவர்களின் பேச்சை அசட்டை செய்யாது இடையில் துண்டிக்காது, மறுப்புத் தெரிவிக்காது நல்லமுறையில் கேட்டு அதற்கு தெளிவாக ஒழுங்கான முறையில் அழகிய பதிலை கூறுங்கள். அதுவே உங்களுக்கு அழகிய பண்பாகும்.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

உங்களில் சிறந்தவர் உங்களில் அழகிய குணமுடையவரே! (புகாரி)

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

தனது சகோதரனை சிரித்த முகத்துடன் பார்ப்பது உட்பட எந்த ஒரு நல்ல விஷயத்தையும் இலகுவாக, இழிவாக கருதிவிடாதே! (முஸ்லிம்)

 9. அன்புச்சகோதரிகளே!

பிறர் கதைக்கும்போது அதைப்பார்த்து பரிகசிக்காதீர்கள். ஏனெனில் சிலர் பேசும்போது அவர்களின் பேச்சில் திக்கித்திக்கி பேசும் பழக்கம் இருக்கலாம். அல்லது அவர்களின் பேச்சில் குறைகள் இருக்கலாம்.

அல்லாஹ் கூறுகின்றான்:

விசுவாசிகளே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை பரிகாசம் செய்யவேண்டாம். (பரிகாசம்) செய்யப்பட்ட அவர்கள் (பரிகாசம்) செய்யும் இவர்களைவிட மிகச்சிறந்தவர்களாக இருக்கலாம். (அவ்வாறே) எந்தப்பெண்களும் மற்றப்பெண்களை (பரிகாசம்) செய்யவேண்டாம். (பரிகாசம்) செய்யப்பட்ட அவர்கள் (பரிகாசம்) செய்யும் இவர்களை விட சிறந்தவர்களாக இருக்கலாம். (அல்ஹுஜ்ராத்- 49 : 11)

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரனவான். எனவே ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு அநீதி இழைக்கமாட்டான். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை கைவிடமாட்டான். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடம் பொய்யுரைக்க மாட்டான். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை தாழ்த்திட மாட்டான். இறையச்சம் இங்கே உள்ளது என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்றுமுறை தங்கள் நெஞ்சை தொட்டுக்காட்டினார்கள். ஒரு முஸ்லிம் தன்னுடைய சகோதர முஸ்லிமை இழிவாக கருதுவது தீய செயலாகும். ஒரு முஸ்லிமின்மீது ஒரு சகோதர முஸ்லிமின் இரத்தமும், உடைமையும், கண்ணியமும் ஹராமாக்கப்பட்டுள்ளது. (அவற்றிற்கு ஊறு விழைவிக்கக்கூடிய எந்தச் செயலும் விலக்கப்பட்டதாகும். (முஸ்லிம்)

 10. அன்புச்சகோதரிகளே!

அல்லாஹ்வின் அருள்மறையாம் அல்குர்ஆன் ஓதுவதை கேட்டால் அனைத்து பேச்சுக்களையும் விட்டுவிட்டு அதற்கு செவிசாய்க்கவும். ஏனெனில் இதுவே அவனது பேச்சிற்கு மதிப்பளித்து அவனது கட்டளைக்கு கீழ்படிவதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

குர்ஆன் ஓதப்பட்டால் அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாக) கேளுங்கள், மௌனமாக இருங்கள். (அதனால் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள். (அல் அஃராப்- 7 : 204)

இன்ஷா அல்லாஹ் அறிவுரைகள் தொடரும்

source: http://www.islamkalvi.com/portal/?p=598