Home கட்டுரைகள் அரசியல் முஸ்லிம்களை ஏமாளிகளாக எடைபோட்டுக்கொண்டே இருக்கும் கருணாநிதி!
முஸ்லிம்களை ஏமாளிகளாக எடைபோட்டுக்கொண்டே இருக்கும் கருணாநிதி! PDF Print E-mail
Wednesday, 17 August 2011 14:28
Share

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர்

நெல்லை கண்ணன்

[ ‘கடவுளே இல்லை’ என்று சொல்லுகின்ற உங்களைத் தானே, கடவுளை மிக உண்மையாகப் போற்றும் சில இஸ்லாமிய நண்பர்கள் தங்கள் விழாக்களுக்கு அழைத்தார்கள். அங்கு தேவையில்லாமல் இந்து மதம் பற்றி நீங்கள் கருத்துக்களைக் கூறியதால்தான், தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பே தோன்றியது.

அது எப்படி உங்களால் மட்டும் மாற்றி மாற்றிப் பேச முடிகிறது. ‘நான் சாமானியக் குடும்பத்திலே பிறந்தவன், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்திலே பிறந்தவன்’ என்பீர்கள். ஆனால், யாரை மேட்டுக்குடி என்று சொல்லுகிறீர்களோ, அந்த சாதியிலே தான் உங்கள் பேரன்கள் பெண் கட்டுவார்கள். அப்போது அதை நீங்கள் தடுக்க மாட்டீர்கள்.

‘என் தந்தை நோய் வாய்ப்பட்டிருக்கும்போது மருந்து வாங்கிக் கொடுக்க பணம் இல்லாமல் சிரமப்பட்டேன்’என்று ‘நெஞ்சுக்கு நீதி’யில் எழுதினீர்கள். கூட்டங்களிலே பேசும்போது, ‘எனது தந்தையிடம் தங்க நாதஸ்வரம் இருந்தது’ என்கிறீர்கள். தங்க நாதஸ்வரம் என்றால் எத்தனை கிலோ எடை இருக்கும் என்று சொல்லியிருந்தால், நீங்கள் செல்வச் சீமான் என்று நாங்கள் நம்ப வசதியாக இருந்திருக்கும்.]

முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் சிறுபான்மை இனத்தவர் என்பதால் பழிவாங்கப்படுகிறார்’ என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி முதல்வராக இருந்த போது நிழலாக இருந்தவர் ஜாபர் சேட். அவர் மீது தி.மு.க.வினரே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைக் கூறினர். அனைத்தையும் குப்பையில் போட்டது தி.மு.க. தலைமை. ‘ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, ஒரு அதிகாரி மீது எடுக்கப்படும் நடவடிக்கையை கருணாநிதி எதிர்ப்பது ஏன்?’ என்ற கேள்வி பல தரப்பிலும் எழுந்துள்ளது.

இதற்கான விடையைக் கேட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் நெல்லை கண்ணன், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதும் திறந்த மடல் இதோ...

‘‘தி.மு.க. ஆட்சியில் எல்லாமாக இருந்த காவல்துறை கலக்கல் அதிகாரி மீது இன்றைய அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கின்றது என்றவுடன் நீங்கள் (கருணாநிதி) வழக்கமான வேலைகளைத் துவங்கி விட்டீர்கள்.

உங்கள் இயக்கத்து தோழர்களுக்கு ஆதரவாக நீங்கள் அறிக்கை வெளியிட்டால் ஆச்சரியம் இல்லை. ஒரு காவல்துறை அதிகாரிக்காகப் பரிந்து பேசுவதில் இருந்தே, ‘என் அப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகின்றது.

ஜாபர் சேட் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமியர். அதனால்தான் அவருக்கு இடையூறுகள் தரப்படுகின்றது என்கிறீர்கள்.

சாதிய மதக் கொடுமைகளைக் களைய வந்த தந்தை பெரியாரின் சீடரான நீங்கள், எப்போதும் சாதிகளையும், மதங்களையும் இழுத்துத்தான் வாதங்களைத் துவங்குவீர்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. உங்கள் ஆட்சிக் காலத்தில்தானே சாதியச் சங்கங்களே அதிக அளவு துவங்கப்பட்டன.

‘கடவுளே இல்லை’ என்று சொல்லுகின்ற உங்களைத் தானே, கடவுளை மிக உண்மையாகப் போற்றும் சில இஸ்லாமிய நண்பர்கள் தங்கள் விழாக்களுக்கு அழைத்தார்கள். அங்கு தேவையில்லாமல் இந்து மதம் பற்றி நீங்கள் கருத்துக்களைக் கூறியதால்தான், தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பே தோன்றியது.

அது எப்படி உங்களால் மட்டும் மாற்றி மாற்றிப் பேச முடிகிறது. ‘நான் சாமானியக் குடும்பத்திலே பிறந்தவன், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்திலே பிறந்தவன்’ என்பீர்கள். ஆனால், யாரை மேட்டுக்குடி என்று சொல்லுகிறீர்களோ, அந்த சாதியிலே தான் உங்கள் பேரன்கள் பெண் கட்டுவார்கள். அப்போது அதை நீங்கள் தடுக்க மாட்டீர்கள்.

‘என் தந்தை நோய் வாய்ப்பட்டிருக்கும்போது மருந்து வாங்கிக் கொடுக்க பணம் இல்லாமல் சிரமப்பட்டேன்’என்று ‘நெஞ்சுக்கு நீதி’யில் எழுதினீர்கள். கூட்டங்களிலே பேசும்போது, ‘எனது தந்தையிடம் தங்க நாதஸ்வரம் இருந்தது’ என்கிறீர்கள். தங்க நாதஸ்வரம் என்றால் எத்தனை கிலோ எடை இருக்கும் என்று சொல்லியிருந்தால், நீங்கள் செல்வச் சீமான் என்று நாங்கள் நம்ப வசதியாக இருந்திருக்கும்.

இன்றைக்கு வழக்குகளில் சிக்கியிருக்கும் ஜாபர் சேட்டை சிறுபான்மை சமுதாயத்தவர் என்று சொல்லும் நீங்கள், 2006-ம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்றபோது டி.ஜி.பி.யாக இருந்த அலெக்சாண்டரை, பதவி முடிய 11 நாள் இருக்கும்போதே மாற்றினீர்களே? இப்போது ஜாபர் சேட் இருக்கும் மண்டபம் முகாமிற்கு..! அலெக்சாண்டர் சிறுபான்மை இனத்தவர் என்று அப்போது உங்களுக்குத் தெரியாதா?

வேலூர் பொதுக் கூட்டத்தில் பேசியபோது, ‘ஆண்டிமுத்து ராசா தலித் என்பதால்தான், அவரை இடையூறு செய்கின்றார்கள்’ என்றீர்கள். ஆனால், அவரை அமைச்சர் பதவியை விட்டு விலகச் சொல்லி, திகார் சிறைக்கு அனுப்பியதே நீங்கள்தான் என்பது ஊருக்கே தெரியுமே?

இன்றும் தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் ராசாவிற்கு வழக்கறிஞர் யாரையாவது ஏற்பாடு செய்தீர்களா? இப்போது ஜாபர் சேட்டுக்காக வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியிருக்கிறீர்கள். ராசாவுக்கு நேர்ந்த கதிதான் தனக்கும் ஏற்படும் என்று ஜாபர் சேட்டிற்குத் தெரியாதா என்ன?

‘கருணாநிதி இப்படியும் பேசுவார், அப்படியும் பேசுவார்’ என்று தெரிந்துதான் உங்கள் தொலைபேசி உரையாடல்களைக் கூட ஜாபர் சேட் பதிவு செய்திருக்கிறார். முதல்வராக இருந்த உங்களுக்கு இது தெரியாதா என்ன?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தி.மு.க. முன்னோடிகளில் ஒருவரான சத்தியவாணிமுத்துவை எப்படி எல்லாம் அவமானப்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை திராவிட இயக்கத்தில் இருக்கும் அனைவரும் அறிவார்கள்.

இஸ்லாமியர்களுக்கு தான் ஆதரவானவர் போன்ற தோற்றத்தையும், எதிரணியில் இருப்போர் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துவது உங்களுக்கு வழக்கமாகிப் போகியிருக்கிறது. உங்கள் ஆட்சியில் தானே ஏராளமான அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதை அந்த இஸ்லாமிய மக்கள் மறந்துவிடுவார் களா?

தி.மு.க.வில் முக்கிய தலைவராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான். இவரும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்தானே. இவரை தொடர்ந்து நீங்கள் களங்கப்படுத்திக் கொண்டிருப்பது யாருக்கும் தெரியாதா என்ன?

குல்லுகபட்டர், கோணல் புத்திக்காரர், ஆச்சாரியார், கணவாய் வழியாக வந்தவர் என்றெல்லாம் ராஜாஜியைப் பேசிய அதே வாய்தானே, பின்னர் ராஜாஜியை ‘மூதறிஞர்’ என்றது.

கூட்டணியில் இருந்தால் மார்க்சிஸ்ட் பெரியவர் ராமமூர்த்தியை சர்வதேசச் சிந்தனையாளர் என்பீர்கள். அவர் ஆகாதவர் என்றால், அவரை நொண்டிப் பார்ப்பான் என்பீர்கள். பெருந்தலைவர் காமராஜரைக் கூட சாதியைச் சொல்லிப் பேசியவர் தானே நீங்கள். நேர்மையுடன் வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனைக் கூட நீங்கள் விட்டு வைக்கவில்லையே.

இந்து மதம்தான் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியது என்று சொல்வீர்களே. ஆனால், அந்த மஞ்சள் துண்டின் மகிமையை மட்டும் என்னவென்று இதுவரை சொல்லியிருக்கிறீர்களா? மஞ்சள் துண்டுக்கு மாறியதற்கான காரணத்தைச் சொல்ல மட்டும் ஏன் தயங்குகிறீர்கள்?

சிறுபான்மை இன இஸ்லாமிய மக்களின் மீது அன்பு கொண்ட நீங்கள், வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.வில், இரண்டு வருடம் படுக்கையில் இருந்த மருமகன் மாறனை அமைச்சராக தொடரச் செய்தீர்களே... அது எப்படி ?

தி.மு.க.வின் ஆணி வேராக இருந்த எம்.ஜி.ஆரை இயக்கத்தை விட்டு நீக்கிய போது ‘மலையாளி’ என்றீர்கள். ‘நடிகன் நாடாளலாமா?’ என்று கேட்டீர்கள். அவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, ‘எனக்கு வாக்களியுங்கள். எனது நண்பர் எம்.ஜி.ஆர். வந்தவுடன் நான் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்து விடுவேன்’ என்றீர்கள்.

உங்களை நம்பினார்களா தமிழக மக்கள். இப்போது ஒன்று சொல்வீர்கள். பிறகு மாற்றிப் பேசுவீர்கள் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்த தமிழக மக்கள், உங்களுக்கு படுதோல்வியைக் கொடுத்தார்கள். எம்.ஜி.ஆரை முதல்வராக்கினார்கள். இதை எல்லாம் மறக்கமுடியுமா?

ஆட்சிக் காலத்தின் இறுதியில், ‘நான் முதலமைச்சர் பதவி வேண்டவே வேண்டாம் என்றேன். என் நண்பர் எம்.ஜி.ஆர்.தான் என்னை அந்தப் பதவியை ஏற்க வேண்டும் என்றார். எனது குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி என்னை முதல்வராக்கியவர் எம்.ஜி.ஆர்’ என்று சட்டப்பேரவையில் பேசினீர்களே? நல்லவேளை உங்களது அந்தப் பேச்சு சட்டப்பேரவைக் குறிப்பேடுகளிலே பதிவாகி விட்டது.

எந்த வாயால் எம்.ஜி.ஆரை மலையாளத்தான், நடிகன் நாடாள முடியுமா? என்றெல்லாம் கேட்டீர்களோ, அதே வாயாலேயே ‘சிகிச்சை முடித்து திரும்பி வந்தால், ஆட்சியை எம்.ஜி.ஆரிடமே கொடுத்துவிடுகிறேன்’ என்றீர்கள்.

இப்போது உங்களையே தூக்கி சாப்பிட்டுவிடுவார் போல உங்கள் மகன் அழகிரி. ‘விஜயகாந்த் ரொம்ப மானமுள்ளவர். அவர் அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர மாட்டார்’ என்றார்.

நிலைமை கைமீறிப் போன பின்னர் எல்லா பிரிவினராலும் ரசிக்கப்பட்ட ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் வடிவேலுவை சந்தியில், சகதியில் இழுத்து விட்டார். நடிகன் என்றால் கேவலம் என்று நீங்கள் அப்போது பேசினீர்கள். உங்கள் மகனோ அண்ணாவின் தி.மு.க.வைக் காப்பாற்ற குஷ்புவால் மட்டுமே முடியும் என்று நம்புகிறார்.

‘காமராஜர் என்ன மெத்தப் படித்தவரா?’ என்று கேட்ட நீங்கள், காமராஜர் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மகிழ்ந்தீர்களே? இதையெல்லாம் வரலாறு மறந்து விடுமா?

சொல்லுவது ஒன்று செய்வது ஒன்று. இதுதான் கருணாநிதி. இதை நான் சொல்லவில்லை. ஆரம்ப கட்டத்தில் இருந்து உங்களது அரசியல் நடவடிக்கைகளை அலசிப்பார்த்தால் குழந்தைகளுக்குக் கூட இது புரியும்.

சினிமாவில் இரட்டை வேடம் போடுவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அரசியலில் இரட்டை வேடம் போடுவது எப்படி என்பதை உங்களிடம் இருந்துதான் மற்ற அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஜாபர் சேட்டை கையில் போட்டுக் கொண்டு, எதிர்க்கட்சிகளை நசுக்க எவ்வளவு முயற்சித்தீர்கள் என்பதை அனைவரும் அறிவர்.இப்போது ஜாபர் சேட்டுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்.

ஜாபர் சேட் எதையும் உளறிவிடக் கூடாது என்று பதறுகிறீர்கள். இந்தப் பிரச்னையைத் திசைதிருப்ப முயற்சிக்கிறீர்கள். ஏன் இவ்வளவு அக்கறை?

தமிழக மக்களின் தீர்ப்பை உங்களால் தாங்க முடியவில்லை. அதனாலேதான் ஜாபர் சேட் விவகாரத்தைக் கிளறிவிட்டு, இஸ்லாமிய இனத்தவரை நோன்பு நாட்களிலே தூண்டி விடலாம் என்று கணக்குப் போடுகிறீர்கள்.

''தவறுகளும், தீங்கும் செய்பவர்களுக்கு இறைவன் தண்டனை தருவான்’ என்பது குர்ஆன் வாக்கு. இதை அறியாதவரா நீங்கள்?''

இப்படிக்கு,

நெல்லை கண்ணன்