Home குடும்பம் குழந்தைகள் குழந்தைகளும் விபத்தும்

மன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு

குழந்தைகளும் விபத்தும் PDF Print E-mail
Tuesday, 16 August 2011 12:34
Share

 MUST   READ

ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்   

      குழந்தைகளும் விபத்தும் (1)     

குழந்தை பராமரிப்பில் பெற்றோர் விபத்துகளைப் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதும் முக்கியமாகும். விபத்துகள் தொடர்பாக மிகக்குறைவாகவே ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. வருடாந்தம் நிகழும் விபத்துகளில் பெரிதும் குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர்.

இவ்விபத்துகளில் பெரும்பாலானவை தவறுதலாக அல்லது கவனயீனம் காரணமாக ஏற்படுகின்றன. இவற்றைக் கருத்திற் கொள்வோமாக இருந்தால் இவற்றை இலகுவாகத் தவிர்த்துக் கொள்வதற்கும் அல்லது பெருமளவு குறைத்துக் கொள்வதற்குமான அறிவை நாம் பெற்றுக் கொள்ளமுடியும்.

குழந்தைகளும் விபத்தும் என்ற இந்தத் தொடரில் குறிப்பாக வீட்டுவிபத்துகளை தவிர்த்துக் கொள்ள தற்காலிக வழிமுறைகளையும் விபத்து நிகழும் பட்சத்தில் எடுக்கவேண்டிய உடனடி நடவடிக்கைகளையும் விளக்கலாம் என நினைக்கிறேன். வீட்டு விபத்துகளில் குழந்தைகள் மரணித்தல் அல்லது அங்கவீனமடைதல் அல்லது காயப்படல் போன்றவற்றை பெருமளவு குறைத்துக் கொள்ள இவை உதவும்.

வீட்டு விபத்துக்கள் என்பது வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் (முற்றம், கலஞ்சியம், மலசலகூடம், கிணறு, மரம், கரேஜ், பாதைகள், வீட்டுத்தோட்டம் ஆகிய பகுதிகள் அடங்கும்) நிகழும் விபத்துகளைக் குறிக்கின்றது. இது நம்நாட்டில் குழந்தை பராமரிப்பில் எதிர்நோக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும்.

வீட்டுவிபத்துகள் ஏற்படும் போது உடனடியாக உரிய முதலுதவியை வழங்குவதன் மூலம் அவற்றால் ஏற்படக்கூடிய துரதிஷ்டமான பின்விளைவுகளையும் பாதிப்புகளையும் பெருமளவில் குறைத்துக் கொள்ளமுடியும். அநேகமாக எல்லாக் குடும்பங்களிலும் இத்தகைய முதலுதவியினை வழங்கமுடியும். அவ்வாறே வீட்டுவிபத்துகளில் பெரும்பாலானவற்றை நாம் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்ச்சியுடனும் நடந்து கொள்வதன் மூலம் தவித்துக் கொள்ள முடியும்.

வீட்டுவிபத்து என்பது வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் நிகழும் விபத்துகளைக் குறிக்கின்றது என்பதை ஏலவே நாம் குறிப்பிட்டோம். தொண்நூறுகளின் ஆரம்பத்தில் செய்யப்பட்ட கணிப்பீட்டின் படி வீட்டுவிபத்துகள் காரணமாக ஆண்டுதோறும் 2 முதல் 2.5 இலட்சம் பேர் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். வீடுகளில் கைமருந்து செய்வோர் தனியார் வைத்தியசாலைகளில் செல்வோரைக் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.

வீட்டுவிபத்துக்குள்ளாவோரில் அதிகமானவர்கள் குழந்தைகளாவர். இவ்விபத்துகளில் பெரும்பாலானவை சமயலறை, கிணற்றடி, மலசலகூடம், வாசல்படி, பள்ளம் படுகுழிகள், தண்ணீரோடும் கான், வீட்டுத்தோட்டம் போன்ற இடங்களிலேயே நிகழ்கின்றன. இவ்வாறு நிகழும் விபத்துகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

கூரான ஆயுதங்கள், உபகரணங்கள், உடைந்த பாத்திரங்கள் என்பவற்றால் ஏற்படும் காயங்கள், சிராய்ப்புகள், கீறல்கள்,

விழுதல், முட்டிமோதுதல், நெருக்குப்படுதல் போன்றவை காரணமாக ஏற்படும் காயங்கள், எழும்பு முறிவு, உளுக்கு, நசிவுகள் என்பன.

மண்ணெண்ணை விளக்கு, சுடுதண்ணீர், நீராவி மற்றும் கொதிக்கும் திரவங்கள் என்பவற்றால் ஏற்படக்கூடிய எரிகாயங்கள் கொப்புலங்கள்.

கிணறுகள் அல்லது நீரோடைகள், குளங்கள் போன்றவற்றில் விழுவதன் காரணமாக மூழ்குதல்.

மின்சாரத்தில் தாக்கப்படல்.

கிருமிநாசினிகள், மருந்துகள் என்பவற்றால் ஏற்படும் விபத்துகள்.

பாம்பு, பூரான், தேள், செவ்வால் அரணை போன்ற விஷ ஜந்துகள் தீண்டல்.

கண், காது, மூக்கு தொண்டை ஆகியவற்றுடன் ஏதேனும் பொருட்கள் விழுதல் அல்லது விழுந்து அடைத்துக் கொள்ளுதல்.

இத்தகைய விபத்துகளின் போது கை, கால், பாதம், தலை, மூக்கு, தொண்டை போன்ற உறுப்புகளே பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளுக்கு உடனடியாக பொருத்தமான முதலுதவியும் வைத்திய சிகிச்சையும் அளிக்கப்படுவது அவசியமாகும். அப்போதுதான் அவர்களுக்கு உயிராபத்து ஏற்படுவதையும் அல்லது அங்கவீனங்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

முதலுதவி

முதலுதவி என்பது சிகிச்சை அல்ல. மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் வரை நோயாளிக்கு நிவாரணம் வழங்கும் முகமாகவும் எதிர்வரக்கூடிய கடும் ஆபத்துக்களை குறைத்துக் கொள்ளவும் மேற்கொள்ளப்படும் ஒரு தற்காலிக நடவடிக்கை ஆகும்.

விபத்தில் சிக்கிய குழந்தையை மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வரை காற்றோட்டமுள்ள வசதியான ஓர் இடத்தில் வைத்திருக்க வேண்டும். அக்குழந்தைக்கு ஏற்பட்டுள்ள பயம், அதிர்ச்சி என்பவற்றை அகற்ற முயலவேண்டும். பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர் பயந்திருந்தால் அதைக் குழந்தைக்கு காட்டிக் கொள்ளக்கூடாது. மருத்துவ சிகிச்சையின் பின்னர் விரைவில் சுகம் கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையை குழந்தைக்கு ஏற்படுத்த வேண்டும்.

விபத்திற் சிக்கிய குழந்தை மயக்கமடைந்திருந்தால் அல்லது நினைவிழந்திருந்தால் அதனை இடப்புறமாக திருப்பி தலையைச் சிறிது பணிவாக வைத்திருக்கும் வகையில் படுக்க வைக்க வேண்டும். நோயாளி வாந்தி எடுக்கும் பட்சத்தில் அவ்வாந்தி மூச்சுக்குழாய்க்குள் செல்வதை இது தடுக்கும். இத்தகைய நோயாளிக்கு குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக்கூடாது.

பெரும்பாலான விபத்துகளின் போது ஏற்படக்கூடியது மயக்கமாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் சுத்தமான காற்றோட்டம் அவசியமானதால் நோயாளியைச் சுற்றி ஆட்கள் குழுமிநிற்பது தவிர்க்கப்படவேண்டும். தலை சற்றுப் பணிவாக இருக்கும் வகையில் குழந்தையைப் படுக்கவைக்க வேண்டும். இல்லாவிட்டால் உட்கார்ந்த நிலையில் இரண்டு முழங்கால்களுக்கிடையே தலையைக் கவிழ்த்து கீழாக இருக்கும்படி செய்ய வேண்டும்.

இடுப்பு நெஞ்சுப் பகுதிகளில் உடை நெகிழ்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். காற்று வீசவும் முகத்துக்கு குளிர்ந்த நீரைதெளிக்கவும் வேண்டும். மயக்கம் தெளிந்தவுடன் சூடான பானம் ஏதாவது குடிக்கக் கொடுக்க வேண்டும்.

மயக்கத்தைப் போன்று பெரும்பாலான விபத்துக்களில் நிகழக்கூடிய மற்றொரு விசயம் அதிர்ச்சியாகும். அதிக வியர்வை, தோல் வெளிறிவிடல், நினைவிழந்து போதல் என்பன இதன் அறிகுறிகளாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் நோயாளியின் கால்கள் தலைப்பகுதியைவிட உயரமாக இருக்குமாறு படுக்கவைக்க வேண்டும். குளிரைப் போக்க துணியால் போர்த்த வேண்டும். நினைவு இருப்பின் சூடான பானத்துடன் ‘பெரசிட்டமோல்‘ போன்ற வலியைக் குறைக்கும் மருந்துகள் எதையாவது கொடுக்க வேண்டும். 

    குழந்தைகளும் விபத்தும் (2)  

நீரில் மூழ்குதல், புகை விஷவாயுக்கள் உடலுட் செல்லுதல், தொண்டையில் ஏதும் சிக்கிக் கொள்ளுதல், மின்சாரம் தாக்குதல் போன்ற சந்தர்ப்பங்களில் சுவாசம் தடைப்பட இடமுண்டு. இத்தகைய சந்தர்ப்பங்களில் செயற்கைச் சுவாசம் மூலம் நோயாளியின் உயிரைக்காப்பாற்ற முடியும்.

முகம் மேலே இருக்குமாறு நோயாளியை நிமிர்த்திப் படுக்கவைக்க வேண்டும். வாய்க்குள் ஏதாவது சிக்குண்டு காணப்படின் உரனே வாயை விரல்களால் துப்பரவு செய்யவேண்டும். ஒரு கையை நோயாளியின் கழுத்துக்குக்கீழே வைத்து சிறிது நிமிர்த்தவும். அதாவது உயர்த்திவைக்கவும். மற்றக் கையை தலை உச்சியில் வைத்து முடிந்தளவு தலையை பின்னோக்கித் தள்ளவும்.

தலை மேலும் பின்னால் போகுமாறு நாடியைப் பிடித்து உயர்த்தவும். நோயாளியின் வாயை இயன்றளவு திறக்கவும். நோயாளியின் வாயிலும் மூக்கிலும் முழுமையாக உங்கள் வாயை வைத்து மூடவும். பின்னர் நோயாளியின் வாயுள் ஊதி மூச்சுக்குழாய்க்குள் காற்று நிரம்புமாறு செய்யவும். நெஞ்சுப்பகுதி விரிவடைகிறதா என்பதனை அவதானிப்பதான் மூலம் இதனை உறுதிசெய்யலாம். ஊதுவதை நிறுத்தி காற்று வெளியேறும் சப்தத்தை காது கொடுத்துக் கேட்கவும்.

மீண்டும் ஊதவும். நோயாளியின் வாயிலிருந்து காற்று வெளியேறாதிருந்தால் அவரின் தலை, கடைவாய் ஆகியன உரியமுறையில் இருக்கின்றனவா என்பதை கவனிக்கவும். நாக்கு தொண்டையை மறைத்துக் கொண்டிருக்கின்றதா என்பதையும் அவதானிக்கவும். நோயாளியின் தலை சிறிது பனிவாக இருக்கும் வகையில் ஒருபுறமாகத் திருப்பி இரு தோள்களுக்குமிடையே உள்ள பகுதியில் மெதுவாகத்தட்டவும்.

மீண்டும் ஊதவும். மூன்று விநாடிகளுக்கு ஒருமுறை ஓர் அளவான முறையில் (உரமாக ஊதாமல்) இவ்வாறு ஊதவும். நோயாளி மீண்டும் சுவாசிக்கத் தொடங்கும் வரை இவ்வாறு ஊதிக்கொண்டிருக்கவும். செயற்கைச் சுவாசம் வழங்குவதை அதுபற்றி நன்கு தெரிந்த ஒருவரே மேற்கொள்ள வேண்டும்.

சிறிதளவு இரத்தம் வந்த காயம், சிராய்ப்புகளால் ஏற்பட்ட காயம் என்பவற்றை சுத்தமான நீரில் நண்கு கழுவ வேண்டும். சவர்க்காரமிட்டுக் கழுவுவது மிகவும் நல்லது. கழுவியபின்னர் சுத்தமான ஒரு துணியால் காயத்தை மூடவும். விஷஜந்துக்கள், பாம்பு என்பன கடித்த கடிவாயையும் இவ்வாறு சவர்க்காரமிட்டுக் கழுவித் துப்பரவு செய்வது மிகவும் நல்லது. காயத்தில் மருந்து, எண்ணெய் போன்ற எதனையும் போடாது நோயாளியை உடன் வைத்தியரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

காயத்திலிருந்து இரத்தம் கொட்டும் பட்சத்தில் காயம்பட்ட இடம் உயரமாக அதாவது மேல்நோக்கி இருக்குமாறு வைக்கவும்.

இரத்தம் வழிவது நிற்கும் வரை சுத்தமான துணியால் அல்லது கையால் காயத்தை அழுத்திப்பிடிக்கவும். கால்கைகளில் பட்ட காயத்திலிருந்து இவ்வாறு இரத்தம் வெளியேறினால் துணித்துண்டொன்றினால் காயம்பட்ட இடத்திற்கு மேல்பகுதியில் ஓரளவு இறுக்கிக் கட்டிவிடவும். இதனை 10 – 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இளக்கிக் கொள்ளவும்.

கைகால்களில் எலும்புகள் முறிந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பின் பாதிக்கப்பட கை அல்லது கால் அசையாவண்ணம் ஒரு தடி அல்லது அடிமட்டை போன்ற ஒன்றை வைத்துக்கட்டிவிடவும். தோலைக்கிழித்துக் கொண்டு எலும்பு ஏதும் உடைந்து வெளியே வந்திருந்தால் அதனை உள்ளே தள்ளிவிடவும். பிரயத்தனம் செய்தல் கூடாது. அதேபோன்று உடைந்த எழும்புகளை சரிசெய்ய முனையவும் கூடாது. பொருத்தமான வைத்தியர் ஒருவரிடம் காயப்பட்டவரை உடன் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எரிகாயமாக இருந்தால் காயம்பட்ட பகுதிக்கு இயன்றளவு நேரம் சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கழுவச் செல்ல இடமளிக்கவும். அல்லது மெதுவாக கழுவி விடவும். காயத்தின் வெப்பத்தைக் குறைக்க அது உதவும். காயத்துக்கு எண்ணெயோ மருந்தோ அல்லது வேறு எதனையும் பூசவேண்டாம். காயமுற்ற குழந்தையை மிகவிரைவாக எடுத்துச் செல்ல வேண்டும்.

கண்ணுக்குள்ளே ஏதும் விழுந்துவிட்டால் கண்ணைக் கசக்கக்கூடாது. முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து அதனுள் கண்ணை விழிப்பதன் மூலம் விழுந்த பொருளை அகற்ற முயலவும். இவ்வாறு செய்யும் போது கண்ணிமையை வேண்டுமானால் உயர்த்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் மெல்லிய ஒரு துணியை எடுத்து அதன் நுனியைச் சுத்தமான தண்ணீரில் நனைத்து அதன் மூலம் கண்ணுக்குள் விழுந்த பொருளை எடுக்க முயற்சி செய்யவும். கண்ணின் கருவிழிப்பகுதிக்குள் சென்றுள்ள எவற்றையும் விரல்களால் எடுக்க முனையவேண்டும். உடனே மருத்துவ உதவியினை நாடவேண்டும்.

கொதி நீராவி, இரசாயனப் பொருட்கள், நச்சுத்திரவங்கள் ஏதேனும் கண்ணுக்குள் சென்றுவிட்டால் சிறிய ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து கண்ணுக்குள் விடவும். சிறு ரப்பர் குழாய் (இங்க் பிலர்) மூலமாகவும் இதனைச் செய்யலாம். சுமார் 15 நிமிடம் நேரம் இவ்வாறு கண்ணை நன்கு கழுவவும். கழுவும் போது பிள்ளையின் கண் இமைக்காது நன்கு திறந்துவைத்துக் கொள்ள இன்னொருவரின் உதவியைப் பெற்றுக் கொளளவும். மருத்துவ ஆலேசனை பெற்றுக் கொள்ளும் வரை கண்ணுக்குள் எவற்றையும் போட வேண்டாம்.

தொண்டையில் ஏதும் சிக்கிக் கொண்டால் குழந்தையை இருமிக்கக்குமாறு செய்ய வேண்டும். சிறுவயதுக் குழந்தையாயின் தலை கீழே இருக்கக்கூடியதாக அதாவது தலை கீழாய் பிடித்துக் கொண்டு தோள்பட்டைகள் இரண்டுக்குமிடையே முதுகில் தட்டவும். வளர்ந்த பிள்ளையாயின் தலை பனிவாக இருக்கும் வகையில்வைத்து அல்லது நீட்டிப் படுக்கவைத்து தோள்களுக்கிடையே முதுகில் சிறிது பலமாகத்தட்டவும். இல்லாவிட்டால் வயிற்றை மேல்நோக்கி அமுக்கவும். தொண்டைக்குள் விரலைவிட்டு சிக்குண்ட பொருளை எடுக்க முனையவேண்டாம்.

காது அல்லது மூக்கினுள் ஏதாவது சிக்குண்டால் அதனை எடுக்க முயலவேண்டாம். உடனே வைத்தியர் ஒருவரது உதவியை நாடவும். அத்தகைய பொருட்களை உரியமுறையில் எடுக்காது போனால் அவை மேலும் உள்ளே சென்று பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்திவிடலாம்.

பாம்பு கடித்தால் நஞ்சு உட்செல்வதைத் தாமதப்படுத்திக் கொள்வதற்காக கடிவாய்ப்பகுதி அசையாது இருக்கும் வகையில் சிறுபலகைத்துண்டு போன்ற ஒன்றை வைத்துக் கட்டவும். கடிவாய்ப்பகுதி வீங்கக்கூடாது. கையில் மோதிரம், வளையல் என்பன அணிந்திருந்தால் அவற்றை அகற்றுங்கள். காயப்பகுதியில் காணப்படக்கூடிய விஷத்தை அகற்றுவதற்கு அப்பகுதியை சவர்க்காரமிட்டு நன்கு கழுவவும்.

கடியுண்ட இடத்தை வெட்டி அல்லது கீறி இரத்தத்தை வெளியேற்ற முயலவேண்டாம். அந்த இடத்தில் வாயை வைத்து விஷத்தை உரிஞ்ச முனையவும் வேண்டாம். வேதனை காணப்படின் பரசிட்டமோல் வில்லைகளை நோயாளிக்குக் கொடுக்கவும். அஸ்பரின் மருந்துகள் கொடுக்கக்கூடாது. நோயாளியை உடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவேண்டும். கடித்த பாம்பு எவ்வகையைச் சேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளுதல் மிகமுக்கியமாகும். கடித்த பாம்பு அருகில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் சற்று மயக்கத்துடன் காணப்படும். ஏனெனில் பாம்பின் இனத்தைப் பொருத்தே சிகிச்சை அமையும்.

பிழையான மருந்துகள், இரசாயணப்பொருட்கள், நஞ்சுமருந்துகள் என்பவற்றைத் தவறுதலாக உட்கொண்டுவிட்டால் குடித்தவர் வாந்தி எடுப்பின் ஒருகிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கக் கொடுக்கவும். இது வாந்தி எடுப்பதை இலகுவாக்கும். வாந்தி எடுக்காவிட்டால் தொண்டைக்குள் விரலைவிட்டு வாந்தியை ஏற்படுத்தவும். இதனை மிகக்கவனமாக செய்ய வேண்டும். வாந்தி எடுத்தபின்னர் முடிந்தளவு தண்ணீரைக் குடிக்கக் கொடுக்கவும்.

ஆனால் மண்ணென்ணெய், பெற்றோல், அசிட்டிக் அசிட், வினாகிரி போன்ற அமிலங்களையோ, அமோனியா போன்ற காரவகைகளை குடித்திருந்தால் வாந்தி எடுக்கச்செய்யக் கூடாது.

மயக்கம், நினைவிழந்து போதல், வலிப்பு போன்றன ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் வாந்தியை ஏற்படுத்தக் கூடாது. இத்தகைய சந்தர்ப்பங்களில் தண்ணீர் குடிக்கக் கொடுக்கவும் கூடாது. ஏதும் விஷம் அல்லது இரசாயணப்பொருட்கள் உடம்பில் பட்டுவிட்டால் உடுத்திருக்கும் துணிவகைகளை அகற்றிவிடவும். பட்ட இடத்தை சவர்க்காரம் போட்டு நண்கு கழுவவும். எண்ணெய், மருந்துவகைகள் எவற்றையும் வைத்திய ஆலோசனை இன்றி பூசக்கூடாது. சிகிச்சைக்காக வைத்தியரிடம் கொண்டு செல்லும்போது உடம்பில்பட்ட மருந்தின் போத்தல் அல்லது லேபல் என்பவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். பட்டது இன்ன இரசாயனப் பொருள் என்பதை அறிந்து கொள்ள இது உதவும்.

மேலே கூறப்பட்டவை யாவும் முதலுதவியாகும். விபத்தின் சிக்கிய ஒரு குழந்தையின் உடல்நிலை எவ்வளவுதூரம் அபாயகரமானது என்பதை ஒரு வைத்தியசாலைதான் தீர்மானிக்க முடியும். எனவே விபத்திற் சிக்கிய குழந்தையை உடனடியாக வைத்தியர் ஒருவரிடம் கொண்டுசெல்வது அவசியமாகும்.

   குழந்தைகளும் விபத்தும்    3    

வீட்டுவிபத்துகளில் பெரும்பாலானவற்றை நாம் அவதானத்துடனும் கவனத்துடனும் நடந்துகொள்வதன் மூலம் தவித்துக் கொள்ள முடியும்.

வீடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் கவனயீனம், தவறுதல் காரணமாகவே நிகழ்கின்றன. இத்தகைய விபத்துகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க குழந்தைகளை பயிற்றுவிப்பதன் மூலமும் பெற்றோர் தமது குழந்தைகள் விடயத்தில் அவதானமாக இருப்பதன் மூலமும் இவ்விபத்துகளில் பெரும்பாலானவற்றை தவிர்த்துக் கொள்ள முடியும். இதற்கான சில ஆலோசனைகளை நோக்குவோம்.

குழந்தைகளை தனியே வீடுகளில் விட்டுவிட்டுப் போவதை தவிர்த்தல் வேண்டும். வீட்டுக்குள்ளும் வெளியிலும் அவர்கள் ஓடிவிளையாடும் போது நாம் அவதானத்துடன் இருக்க வேண்டும். எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் திடீரென விபத்துகள் நிகழலாம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தண்ணீர் கிடக்கும் அல்லது பொலிஷ் செய்யப்பட்ட தரை அல்லது மாபிள் தரை வழுக்கக்கூடும். இத்தகைய இடங்களில் குழந்தைகள் ஓடிவிளையாடுவதைத் தவிரத்தல் வேண்டும். வீட்டில் தரை, திண்ணை, படிக்கட்டுகள் என்பவற்றைத் துடைத்து துப்பரவாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வாசல்படியில் இடும் கிழிந்துபோன கால்துடைக்கும் தட்டி, கிழிந்துபோன தரைவிரிப்புகள், பாய்கள், வீட்டுத்தரையில் காணப்படக்கூடிய குழிகள், பள்ளங்கள் என்பவற்றில் குழந்தைகள் இடறிவிழாமல் இவற்றை அகற்றிவிடலாம் அல்லது சீர் செய்யலாம்.

வீட்டினுள்ளேயோ வெளியேயோ படிகளிலேயோ குழந்தைகள் ஓடியாடி விளையாடும் இடங்களில் தடையாக இருக்கக் கூடிய வகையில் பூச்சட்டி, கதிரைகள், விளையாட்டுப் பொருட்கள், பந்து போன்ற இன்னோரன்ன பொருட்கள் இருப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தொட்டில், கட்டில்களில் உறங்கும் குழந்தைகள் நித்திரையில் உருண்டு கீழே விழுந்துவிடாதிருக்க தலையணை போன்ற போதிய பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சமயலறை, கிணற்றுக் கட்டு, சேறுதாங்கி, மலசலகூடம் போன்ற ஈரலிப்பான இடங்களில் சேறு, பாசி போன்றவை படிந்து காணப்படுவதால் குழந்தைகள் வழுக்கிவிடக்கூடிய அபாயம் உண்டு. எனவே இத்தகைய இடங்களில் சேறு, பாசிகளை அகற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற கிணறுகளைச் சுற்றி உறுதியான கட்டுக்களை அமைக்க வேண்டும். கிணற்றினுள் தலையை விட்டுப் பார்ப்பதைத் தவிர்த்துவிட வேண்டும்.

குழந்தைகள் மேலே ஏறுவதற்கு விரும்புவர். இதனாலும் விபத்துகள் வரலாம். எனவே தலைவாசல், கேற் என்பவற்றை மூடிவைத்து அவற்றில் பிள்ளைகள் ஏறாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏணிகள் இருந்தால் அவற்றைக் கீழே சாய்த்து வைத்தல் வேண்டும். வீட்டு முற்றம், வீட்டுத்தோட்டத்திலுள்ள மரங்களின் கிளைகளையும் வெட்டிவிடலாம். அல்லது குழந்தைகளின் ஏறும் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினால் பெற்றோர் அந்த இடங்களில் மிகவும் கண்காணிப்பாக இருக்க வேண்டும்.

வீடுகளிலுள்ள மதில்கள், வேலிகள் என்பவற்றை குழந்தைகள் ஏறாதவகையில் கட்டிக்கொள்ள வேண்டும். ஜன்னல்களை முடியுமாயி்ன் கம்பிவலையாவது போட்டு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மொட்டைமாடி, பல்கனி போன்ற இடங்களுக்கு குழந்தைகளைக் கொண்டு செல்வதை அல்லது அதில் ஏறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

குப்பைகூலங்களைப் போடுவதற்காகத் தோண்டும் குழிகள், பள்ளங்கள், ரோட்டருகில் காணப்படும் கான்கள் என்பவற்றைத் தூரத்திலிருந்து பார்த்தால் தெரியக்கூடிய வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றைச் சுற்றியுள்ள புதர்கள், செடிகொடிகள், புல் என்பவற்றை அகற்றுதல் வேண்டும். தேவையற்ற குழிகளை மூடிவிடல் வேண்டும். முடியுமாயின் குழிகளைச் சுற்றி பாதுகாப்பு வேலியை அமைக்க வேண்டும்.

வெட்டுக்காயங்களை ஏற்படுத்தக்கூடிய கத்தி, அலவாங்கு, மண்வெட்டி, திருகானி போன்ற ஆயுதங்களைக் குழந்தைகள் எடுத்து விளையாடும் வண்ணம் வைக்கக் கூடாது. குழந்தைகளுக்கு எட்டாத அல்லது தூரமான இடத்தில் அவற்றை வைக்க வேண்டும்.

உடைந்த கண்ணாடித்துண்டுகள், பீங்கான் கோப்பைத் துண்டுகள், சிரட்டை, பழைய முற்கம்பி, மீன், இறைச்சி எலும்புகள் போன்றவற்றை காலில் குத்தக் கூடியவாறு கண்ட இடங்களில் போடாது குப்பை மடுவில் போடவேண்டும்.

ரோஜா, போகன்விலா, கற்றானை போன்ற முற்கள் உள்ள செடிகளை குழந்தைகள் விளையாடும் இடங்களில் வளர்க்கக்கூடாது.

காய்கள், கிளைகள், ஓலைகள் என்பன மேலிருந்து விழக்கூடிய மரங்களின் அடியில் குழந்தைகள் விளையாடுவதைத் தவிர்த்தல் வேண்டும். சிறிது தட்டுப்பட்டாலும் கீழே விழக்கூடிய உயரமான மரங்களில் பூச்சட்டிகள், மீன்தொட்கள் என்பவற்றை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சமையலறையில் பிள்ளைகளுக்கு எட்டாத உயரத்தில் அடுப்பை அமைக்க வேண்டும். அது முடியாவிட்டால் அடுப்புக்கு அருகே குழந்தைகள் வராதவாறு தடைகளை அமைக்க வேண்டும். குழந்தைகள் தீக்காயங்களுக்குள்ளாதல், கொதிநீரால் தாக்கப்படல், துரும்பு கொழுத்துதல் என்பவற்றைத் தவிர்க்க இது உதவும். சமையல் முடிந்தவுடன் கேஸ் சிலின்டரை அடைத்துவிட வேண்டும்.

கொதிநீரால் பாதிக்கப்படுவதைப் போன்றே கேத்தல், பானை என்பவற்றிலிருந்து வெளியேறும் நீராவியாலும் பிள்ளைகள் காயப்பட இடமுண்டு. எனவே இதுவிடயத்திலும் கவனமாக இருத்தல் வேண்டும். பெரும்பாலான எரிகாயங்கள் மண்ணென்ணெய் விளக்குகள், குப்பி லாம்புகள் கவிழ்ந்து தீப்பிடிப்பதாலயே நிகழ்கின்றன. இதனைத் தவிர்க்க கவிழ்ந்தால் தீப்பிடிக்காத பாதுகாப்பான விளக்குகளை உபயோகித்தல் உகந்தது. விளக்குகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அல்லது அவர்கள் புழங்காத இடத்தில் வைப்பது பாதுகாப்பானது.

பிள்ளைகளைக் குளிப்பாட்ட அல்லது கழுவ கொதிநீரைத் தயார் செய்த பின்னர் பிள்ளையை அந்த இடத்தில் ஒருபோதும் தனியே விட்டுச் செல்லக்கூடாது. அப்படிப் போக நேர்ந்தால் கொதிநீரில் தண்ணீரைக் கலந்துவிட்டுப் போகவும்.

வீட்டில் புழங்கும் மின்சார உபகரணங்களில் மின்சார ஒழுக்கு காணப்படுகிறதா என்பதைக் கவனிக்கவும். மின்னழுத்தி, மின்சூடாக்கி, மின்கேத்தல், மின்னடுப்பு, ரேடியோ, தொலைக்காட்சிப் பெட்டி போன்றவற்றை குழந்தைகள் தொட்டுவிளையாடவிடக்கூடாது. அதன் இணைப்புத் துவாரங்களில் குழந்தைகள் விரல்களை விடுவதைத் தவிர்க்க வேண்டும். உபயோகிக்காத சந்தர்ப்பங்களில் அவற்றை அனைத்து களற்றிவைக்க வேண்டும்.

சிறியளவு தண்ணீரில்கூட ஒரு குழந்தை மூழ்கிவிடக்கூடும். எனவே பேசின், வாளி என்பவற்றில் தண்ணீரை நிரப்பிவிட்டு அவ்விடத்தில் குழந்தையைத் தனியாக விட்டுச் செல்லக்கூடாது. வாளியில் நீர்வைத்திருந்தால் அதில் கவனமாக இருங்கள். வெற்றுவாளியை எப்போதும் தலைகீழாகத் கவிழ்த்து வையுங்கள். மழையின் பின்னர் வீட்டுக் கான்கள், தோட்த்திலுள்ள பள்ளங்கள், குழிகளில் தண்ணீர் நிரம்பியிருக்கும் அத்தகைய இடங்களுக்கு குழந்தைகள் தனியே செல்வதை தவிக்க வேண்டும்.

கடல், ஆறு, குளம் நீரோடைகள் என்பவற்றில் குழந்தைகள் குளிக்கும்போது பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும். இந்த இடங்களில் குழந்தைகள் எக்காரணம் கொண்டும் தனியே விட்டுச் செல்லக்கூடாது.

     குழந்தைகளும் விபத்தும் 4      

நாய் பூனை போன்ற வீட்டில் வளர்க்கப்படும் நன்கு பழகிய பிராணிகள் என்றாலும் அவற்றுக்கும் சில வேளைகளில் கோபம் வரலாம். அவ்வேளைகளில் அப்பிராணிகள் எமது குழந்தைகளைக் கடிக்க வாய்ப்புண்டு. எனவே இத்தகைய பிராணிகளுடன் குழந்தைகளை தனியே விட்டுவிடக்கூடாது. முன்பின் தெரியாத பிராணிகளுடன் பிள்ளைகளை விளையாடவிடவே கூடாது.

வீட்டு எல்லைக்குள் எறும்புப்புற்றுகள் இருப்பின் அவற்றை அகற்றிவிடவேண்டும். பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் வருவதைத் தடுக்க வீட்டைச்சுற்றியுள்ள புதர்கள், புல், பற்றைகள் என்பவற்றைத் துப்பரவு செய்து அகற்றிவிடவும். குப்பைக்கூலங்கள், மட்டைக்குவியல் என்பவற்றை வீட்டுக்கருகே போடக்கூடாது. பாம்பு மற்றும் விஷஜந்துக்கள் ஒளிந்திருக்கக்கூடிய துவாரங்கள், தரையிலுள்ள குழிகள் என்பவற்றையும் மூடிவிடவும். இவை வீட்டுக்குள் வரக்கூடிய கான், நீர்குழாய்கள், ஜன்னல் என்பவற்றை கம்பிவலை மூலம் நன்கு மறைத்துவிட வேண்டும்.

கறையான் புற்று, பாம்புப்புற்று, கற்குவியல்கள், விறகுக்குவியல், தென்னை ஒலைக்குவியல் போன்றவற்றில் விஷஜந்துக்கள் மறைந்திருக்கலாம். எனவே இத்தகைய இடங்களுக்கு குழந்தைகள் செல்வதையோ அவற்றில் கையைப் போடுவதையோ தவிர்க்க வேண்டும். இப்புதர்கள், பற்றைகள் ஊடாக செல்கையில் சத்தமிட்டுக்கொண்டு, உரக்கக்கதைத்துக் கொண்டு செல்வதற்குக் குழந்தையைப் பழக்குங்கள். தடியென்றினால் பாதையோரத்தின் இருமருங்கிலும் அடித்துக்கொண்டு செல்வதும் நல்லது. முடியுமானால் முழங்கால் அளவு உயரமான சப்பாத்து (பூட்ஸ்) அணிந்து செல்வதற்கு குழந்தையைப் பழக்குவது பாதுகாப்பானது.

மருந்துகள், கிருமி நாசினிகள், அசிட் (அமில) வகைகள் போன்றவற்றை பிள்ளைக்கு எட்டாத வகையில் மிக உயரமான இடத்திலோ அலுமாரி, பெட்டகம் என்பவற்றில் வைத்தோ இறுக்கிப் பூட்டிவிடவேண்டும். தேவையற்ற காலாவதியான மருந்துகள், கிருமிநாசினிகள் என்பவற்றை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். சில மாத்திரைகளைப் பார்க்கும் போது குழந்தைகள் அதை மிட்டாய் என்று நினைத்து சாப்பிட்டுவிடுவார்கள்.

கிருமிநாசினிகள், மருந்துகள் என்பவற்றை நீங்கள் பாவித்த குளிர்பான, பழரசப்போத்தல்களில் ஊற்றிவைப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் தவறுதலாக அவற்றைக் குடித்துவிடலாம்.

அத்தோடு மருந்துகள், இரசாயனத் திரவங்கள், கிருமிநாசினிகள் உள்ள போத்தல்களில் அவை ஒவ்வொன்றின் பெயரையும் தெளிவாக எழுதி ஒட்டிவிடவேண்டும். மேலும் ஒரு நோய்க்காக ஒரு குழந்தைக்கு வாங்கி வந்த மருந்தை வேறொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு குழந்தைக்குக் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

வீட்டுத்தோட்டப் பயிர்களுக்கு பசளை இடும் போது கிருமிநாசினிகள் தெளிக்கும் போதும் சிறுபிள்ளைகளை அவ்விடத்தில் புழங்கவிடக்கூடாது.

இனம்தெரியாத கீரை, காய், கனிகளை குழந்தைகளுக்கு உணவாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வீட்டுச் சுற்றுப் புறங்களில் காணப்படும் உணவுக்கொவ்வாத தீங்கிழைக்கக்கூடிய செடிகொடிகளை அகற்றிவிடவும்.

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும்போது தொண்டையில் சிக்கிக் கொள்ளக்கூடிய உணவு வகைகள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும். மீன் முள், இறைச்சித்துண்டுகள், சவ்வுகள், இறைச்சி எலும்புகள் என்பன இவ்வாறு சிக்கி பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக் கூடியனவாகும்.

தொண்டையில் சிக்கிக் கொள்ளக்கூடிய நாணயம், குளிர்பானப் போத்தல் மூடிகள், ஜில்லடிக்கும் குண்டுகள் என்பவற்றை குழந்தைகள் வாயில் போடுவதை தவிர்த்துவிடவேண்டும்.

வீட்டைத்துப்பரவு செய்யும் போதும் குறிப்பாக கூரையை துப்பரவு செய்யும் போது வீட்டுக்குள் பெயின்ட் அல்லது சுண்ணாம்பு அடிக்கும் போது குழந்தைகள் அவ்விடத்திற்கு வரவிடக்கூடாது. குழந்தைகளின் கண்களுக்குள் அவை விழுந்து ஊறுவிளைவிக்கலாம்.

சிறு பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட வெற்றிலைச் சுண்ணாம்பைக் கையாள குழந்தைகளை விடக்கூடாது. இப்பக்கட்டுக்களை பிதுக்கு அமுக்கும் போது அவற்றுக்குள்ளிருந்து சுண்ணாம்பு கண்களுக்குள் வீசப்பட்டு தீங்கு விளைவிக்கலாம். இவற்றை வாங்குவதற்கு குழந்தையைக் கடைக்கு அனுப்பவும் கூடாது.

கல்துண்டுகள், சிறுவிதைகள் முதலியவற்றை குழந்தைகள் காது, மூக்கு போன்றவற்றுக்குள் போட்டுக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இவற்றை வைத்து குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும்.

குழந்தைகள் விளையாட்டுப்பொருட்களை தெரிவு செய்யும்போது வயதுக்கேற்ற பொருட்களையே தெரிவுசெய்ய வேண்டும். குத்தினால் காயம் ஏற்படக்கூடிய, ஆணி, கொக்கி, தகரம், உலோகத்துண்டுகள் அவற்றிலிருக்கின்றனவா என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள அறிவுறுத்தல்களை வாசித்தபின்னர் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

விளையாட்டுப் பொருட்களில் பூசப்பட்டுள்ள சாயம், மை என்பன கரைகின்றதா என்பதை கவனிக்க வேண்டும். இவை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அவற்றை வாயில் போடவோ அல்லது நாக்கால் நக்கவே இடமளிக்கக்கூடாது.

வீட்டில் மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை நிறுத்திவைக்கும் போது குழந்தைகள் அவற்றைச் சுற்றி விளையாடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஸ்டார்ட் செய்யும் போது குழந்தைகள் அருகே வரவிடக்கூடாது.

நாய் பூனை போன்ற வீட்டில் வளர்க்கப்படும் நன்கு பழகிய பிராணிகள் என்றாலும் அவற்றுக்கும் சில வேளைகளில் கோபம் வரலாம். அவ்வேளைகளில் அப்பிராணிகள் எமது குழந்தைகளைக் கடிக்க வாய்ப்புண்டு. எனவே இத்தகைய பிராணிகளுடன் குழந்தைகளை தனியே விட்டுவிடக்கூடாது. முன்பின் தெரியாத பிராணிகளுடன் பிள்ளைகளை விளையாடவிடவே கூடாது.

source: http://idrees.lk/?p=771