Home கட்டுரைகள் பொது இந்தியா வல்லரசு நாடுகளின் குப்பைத்தொட்டி அல்ல!
இந்தியா வல்லரசு நாடுகளின் குப்பைத்தொட்டி அல்ல! PDF Print E-mail
Friday, 12 December 2008 07:04
Share

தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே, ஏன் வளர்ச்சி அடையும் நாடுகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி எலிப்பே தர்மராவுக்கும், நீதிபதி தமிழ்வாணனுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, சமூகப்பிரக்ஞையுடன் கூடிய ஒரு தீர்ப்பை வழங்கி, வளரும் பொருளாதாரங்களின் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறது அவர்களது சமீபத்திய ஒரு தீர்ப்பு.

இதற்கு முன்பு "நாம் என்ன குப்பைத் தொட்டியா?' என்ற தலைப்பில் "தினமணி' தனது தலையங்கத்தில் எழுப்பி இருந்த கேள்விக்குச் சரியான விடை பகர்ந்திருக்கிறது இந்த நீதிபதிகளின் தீர்ப்பு. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தூத்துக்குடி துறைமுகத்தின் சுற்றுச்சூழலைப் பாதித்து, நாற்றம் அடித்தபடி இருக்கும் நாற்பது கன்டெய்னர்களிலுள்ள குப்பைகளை உடனடியாகத் தனது சொந்தச் செலவில் திருப்பி அனுப்பும்படி இறக்குமதி செய்த ஐ.டி.சி. நிறுவனத்திற்கு உத்தரவு இட்டிருக்கிறது நீதிமன்றம்.

சிகரெட்டுகள் மற்றும் புகையிலைப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யும் பிரபல பன்னாட்டு நிறுவனமான ஐ.டி.சி. நிறுவனம் "காகிதக் கழிவுகள்' என்கிற பெயரில் அமெரிக்காவிலுள்ள "எவர்க்ரீன் ஸ்பெஷாலிட்டீஸ்' என்கிற ஏதோ ஒரு நிறுவனத்திடமிருந்து கடந்த ஆகஸ்ட் 2005-ல் 1000 கன்டெய்னர்களை இறக்குமதி செய்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்த சுங்க இலாகாவினர் அதைப் பரிசோதனை செய்தபோது திடுக்கிட்டனர்.

 

25,000 டன் "காகிதக் கழிவுகள்' என்று கூறி ஐ.டி.சி. நிறுவனம் இறக்குமதி செய்த கன்டெய்னர்களில் இருந்தவை பழைய பேப்பர்களும் காகிதக் குப்பைகளும் என்று நம்பி அந்தக் கன்டெய்னர்களை அனுமதித்த சுங்க இலாகாவினருக்கு அதிலிருந்து வெளிப்பட்ட துர்நாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதற்குள் பல "கன்டெய்னர்கள்' வெளியேறிவிட்டன என்பது வேறு விஷயம். ஆனால் சுங்க இலாகாவினரிடம் நாற்பது கன்டெய்னர்கள் சிக்கின. பரிசோதித்துப் பார்த்ததும் அவர்கள் அதிர்ந்தனர்.

அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி நகரத்தின் குப்பைக்கூளங்கள் இந்தக் கன்டெய்னர்களில் நிரப்பப்பட்டு, இந்தியாவில் கழிவுகளாகக் கொட்டுவதற்கு இதுபோல திருட்டுத்தனமாக அனுப்பப்பட்டிருந்தன. பிளாஸ்டிக் பைகள், பூச்சிக்கொல்லி மருந்து டப்பாக்கள், உபயோகித்துத் தூக்கி எறிந்த பேட்டரிகள், கக்கூஸ் குப்பைகள், மிதியடிகள் என்று அந்தக் கன்டெய்னர்களில் குத்தி அடைக்கப்பட்டிருந்தன.

அதாவது அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க இந்தியா போன்ற வளர்ச்சி அடையும் நாடுகளுக்கு இதுபோல நகராட்சிக் கழிவுகளைத் திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்வது வழக்கம் என்பதும், இதற்காக பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பெரும் தொகை கூலியாகப் பேசப்படுகிறது என்பதும் திடுக்கிட வைத்த தகவல்கள்.

இது கண்டுபிடிக்கப்பட்டதும் எதிர்பார்த்ததுபோல ஐ.டி.சி. நிறுவனம் "எவர்கிரீன் ஸ்பெஷாலிட்டீஸ்' நிறுவனத்தின் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்த்தது. அந்த 40 கன்டெய்னர்களும் அஜ்மான் நாட்டுக்கு அனுப்பப்பட்டன. அந்த அரசு எச்சரிக்கை செய்து கப்பலை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டது. மீண்டும் தூத்துக்குடி துறைமுகத்துக்குத் திரும்பி வந்த கன்டெய்னர்களை நியூஜெர்சிக்கே திருப்பி அனுப்பும்படி மத்திய மாசுக் கட்டுப்பாடு ஆணைய நிபுணர்கள் அறிக்கை அளித்ததும், அதைத் திருப்பி அனுப்பக்கூடாது என்று ஐ.டி.சி. நிறுவனம் அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவின்மீது தீர்ப்பளித்த நீதிபதிகள் இருவரும் மிகவும் தெளிவாக சில விஷயங்களைக் கூறி இருக்கிறார்கள். ""தங்களுக்குத் தெரியாமலோ, கேட்காமலோ "எவர்கிரீன் ஸ்பெஷாலிட்டீஸ்' நிறுவனம் அந்தக் குப்பைக் கழிவுகளை அனுப்பி இருக்கிறது என்கிற ஐ.டி.சி.யின் வாதம் உண்மையானால், அந்தக் கன்டெய்னர்களை உடனடியாக அமெரிக்காவுக்கு அப்படியே திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். இவர்கள் ஏன் அஜ்மான் நாட்டுக்கு அனுப்பினார்கள்? வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது நகராட்சிக் கழிவுகளைக் கொட்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளைத் தங்களது குப்பைத் தொட்டிகளாக்க நினைப்பது அதிர்ச்சி அளிக்கிறது. யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, நமது நாட்டின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடாது என்கிற வளர்ச்சி அடைந்த நாடுகளின் மனோநிலை ஆபத்தானது'' என்று தங்களது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள் நீதிபதி தர்மராவும், நீதிபதி தமிழ்வாணனும்.

ஐ.டி.சி. நிறுவனம் உடனடியாக அந்தக் கன்டெய்னர்களைத் திருப்பி அனுப்ப உத்தரவிட்டிருப்பதுடன், நீதிமன்றச் செலவாக ரூ. 50,000-ம் அபராதம் விதித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, 12 வாரத்திற்குள் இந்தச் சதியில் தொடர்புடைய அத்தனை அதிகாரிகள் மீதும் கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் தொடரவும் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

இதுபோன்ற நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால்தான், ஏனைய பன்னாட்டு நிறுவனங்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பார்கள். ஐ.டி.சி.போல எந்தெந்த பன்னாட்டு நிறுவனங்கள் இறக்குமதி என்கிற பெயரில் பன்னாட்டுக் குப்பைக்கூளங்களை இந்தியாவில் கொண்டுவந்து கொட்டி நமது சுற்றுச்சூழலைக் கெடுக்கிறார்களோ, யார் கண்டது?

நாம் வல்லரசு நாடுகளின் குப்பைத் தொட்டி அல்ல. நம்மைக் குப்பைத் தொட்டியாக்க முயற்சிப்பவர்களைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியத் தயங்கவும் கூடாது!

நன்றி: தினமணி