Home இஸ்லாம் கட்டுரைகள் இஸ்லாத்தின் இலக்கணம்
இஸ்லாத்தின் இலக்கணம் PDF Print E-mail
Saturday, 16 July 2011 15:17
Share

     மவ்லவி, ஏ. முஹம்மது இஸ்மாயில் ஃபாஜில், பாகவி    

[ மற்றவரைப் போன்றே (இஸ்லாமிய ஆண்கள், பெண்கள்) உடையணிந்து, ஆண்கள் தங்க நகை அணிந்து, தரை தட்ட கீழ் வேஷ்டிகள் கட்டுவது, நின்ற வண்ணம் சிறுநீர் கழிப்பது, சுத்தம் செய்யாதிருப்பது, குடிப்பது, சூதாடுவது, வட்டிக் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவது போன்ற இத்யாதி செயல்பாடுகளில் பல முஸ்லிம்கள் ஈடுபடுகிறார்கள். இவை யாவும் கலாச்சாரச் சீரழிவாகும். முஸ்லிம்கள் வாழ்வில் இடம் பெறக் கூடாத அசிங்கங்கலாகும்.

எந்த முஸ்லிமும் பொய் சொல்லக்கூடாது. பிறரை ஏமாற்றக்கூடாது. தில்லு முல்லுகளில் ஈடுபடக்கூடாது. குறிப்பாக தொப்பி அணிந்துக்கொண்டு ஜிப்பா போட்டுக்கொண்டு தாடியும் வைத்துக்கொண்டு பாவங்களில் ஈடுபட்டால் அது உயரிய மார்க்கம் இஸ்லாத்திற்கு மேலும் இழுக்கு என்பது உண்மைதான்! அதற்காக ஒரு முஸ்லிம்தான் இதுபோன்ற சுன்னத்துகளை கடைபிடிக்காதிருக்க மேற்கண்டவாறு குற்றம் காட்டுவது அதுவும் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் செயலாகும். நாகரீகமான வாழ்வு என்பது இஸ்லாமிய சுன்னத் வழி முறைகளை கடைபிடிப்பதில் தான் இருக்கிறது என்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் அந்த நாகரிக நடைமுறைகளை சொல்லாலும் அவமதிக்கக்கூடாது

முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலா?

நீங்கள் இஸ்லாத்தில் முற்றிலுமாக நுழைந்து விடுங்கள்! என்று அல்லாஹ நம் போன்றோருக்கே கூறியுள்ளான்! ]

தற்காலத்தில் முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவே இல்லை! நாங்கள் முஸ்லிம்களாக இருந்தால் என்ன? எங்களுக்கும் மற்றவர்களுக்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடு இல்லை என விளம்பரப்படுத்துவது போலுள்ளது ... இன்றைய முஸ்லிம்களின் நிலை!

அல்லாஹ்வையே நாங்கள் இரட்சகனாகப் பொருந்திக் கொண்டோம்! இஸ்லாத்தை மார்கமாகவும், ஹள்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைத் தூதராகவும் ஏற்றுள்ளோம்! என்ற முஸ்லிம்களின் விண்ணப்பம் வெறும் உச்சாடனமாகவே உள்ளது! அதில் சத்தும் இல்லை. சாரமும் இல்லை!

இன்றைய முஸ்லிம்கள் சர்வ சாதரணமாக கோவில் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். தேவைகள் நிறைவேற வேண்டி, குழந்தைப் பெற வேண்டி பூசாரிகளை அணுகுவோர் உண்டு. கோவிலிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குவோரும் உள்ளனர்! கோவில் கட்டிக் கொடுப்பதை பேறாக சிலர் கருதுகின்றனர்!

என்னையே வணங்குங்கள்! எனக்கு இணை வைக்காதீர்கள்! என்றும் பள்ளிகளெல்லாம் அல்லாஹ்வுக்கே உள்ளவை!

அல்லாஹ்விடம் எவரையும் அழைக்காதீர்கள் என்றும் அருள் மறையில் அலலாஹ் அருள்கிறான்.

''அசத்தியத்திலிருந்து சத்தியத்தின்பால் சாய்ந்து, வானத்தையும் வையகத்தையும் படைத்தவனுக்கே எனது முகத்தைத் திருப்பியுள்ளேன். நான் இணைவைப்பவர்களில் இல்லை!

என்னுடைய தொழுகையும் மற்ற வணக்கங்களும் நான் வாழ்வதும்,மரணிப்பதும் அகிலத்தாரை இரட்சிக்கும் அல்லாஹ்வுக்கே உரியது!

திண்ணமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன்! என்று (உரத்திச்) சொல்பவரைவிட அழகிய சொல்லை உரைப்பவர் யார்!'' - (அல்குர்ஆன்)

இவையாவும் இறைமறை வாக்குகளாகும்! ஒரு முஸ்லிமுடைய இதயத்தின் அடித்தளத்தில் ஆழமாகப் பதிந்து அவனுடைய நாவிலிருந்து உரைகப்படவேண்டிய திரு வாக்கியங்களாகும்.

ஆனால் இன்றைய முஸ்லிம் பெருங்குடி மக்கள் தங்களின் உண்மையான அடையாளத்தை தொலைத்து விட்டார்கள்! தேர்தல் காலத்திலும் மற்ற காலத்திலும் கும்பிடு போடுகிறார்கள். ஒரு பக்கம் ஏகத்துவக் கொள்கையின் கோட்டையைத் தகர்கிறார்கள் என்றால் மறுபக்கம் முஸ்லிம் கலாச்சாரங்களை விட்டு விட்டு மாற்று கலாச்சாரங்களை அரிதாரமாக்கிக் கொள்கிறார்கள்.

"இன்னொரு சமூகத்தாருடன் எவர் ஒத்துப் போகிறாரோ அவர் அந்த சமூகத்தாரைச் சார்ந்தவர்தான்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்!

மற்றவரைப் போன்றே (இஸ்லாமிய ஆண்கள், பெண்கள்) உடையணிந்து, ஆண்கள் தங்க நகை அணிந்து, தரை தட்ட கீழ் வேஷ்டிகள் கட்டுவது, நின்ற வண்ணம் சிறுநீர் கழிப்பது, சுத்தம் செய்யாதிருப்பது, குடிப்பது, சூதாடுவது, வட்டிக் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவது போன்ற இத்யாதி செயல்பாடுகளில் பல முஸ்லிம்கள் ஈடுபடுகிறார்கள். இவை யாவும் கலாச்சாரச் சீரழிவாகும். முஸ்லிம்கள் வாழ்வில் இடம் பெறக் கூடாத அசிங்கங்கலாகும்.

கொள்கையிலும் இஸ்லாமிய செயல்பாட்டிலும் இஸ்லாமியக் கொள்கைகள் அணுகுமுறைகள் பின்பற்றாத நிலையில் அல்லாஹ் எப்படி இவர்களை ஏற்றுக்கொள்வான்? பொருந்திக்கொள்வான்!

தலையில் தொப்பி அணிவதும் ,அழகிய முறையில் தாடி வைத்துக் கொள்வதும் இஸ்லாமியருக்கான அழகிய சின்னங்கள்! இன்று பெரியளவில் இஸ்லாமியரைவிட்டு அன்னியமாகிவிட்டன !அப்படிச் செய்வது இன்றைய முஸ்லிம்களுக்கு மிகவும் வெட்கமாகப்படுகிறது. தாடி வைத்திருபவருக்கு சமுதாயத்தில் தனி மரியாதை இருப்பது கண்கூடான விஷயம்! முஸ்லிம்கள் இதை புரிந்து கொள்ள மறுகின்றனர்! தாடி வைத்தால்தான் முஸ்லிமா? தாடி வைதவர்களேல்லாம் யோக்கியர்களா? என எதிர்க்கேள்வி கேட்கின்றனர்! இது போன்ற உயரிய சுன்னத்துக்களை கைவிட இவ்வாறு வக்கனை பேசுகின்றனர்!

எந்த முஸ்லிமும் பொய் சொல்லக்கூடாது. பிறரை ஏமாற்றக்கூடாது. தில்லு முல்லுகளில் ஈடுபடக்கூடாது. குறிப்பாக தொப்பி அணிந்துக்கொண்டு ஜிப்பா போட்டுக்கொண்டு தாடியும் வைத்துக்கொண்டு பாவங்களில் ஈடுபட்டால் அது உயரிய மார்க்கம் இஸ்லாத்திற்கு மேலும் இழுக்கு என்பது உண்மைதான்! அதற்காக ஒரு முஸ்லிம்தான் இதுபோன்ற சுன்னத்துகளை கடைபிடிக்காதிருக்க மேற்கண்டவாறு குற்றம் காட்டுவது அதுவும் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் செயலாகும். நாகரீகமான வாழ்வு என்பது இஸ்லாமிய சுன்னத் வழி முறைகளை கடைபிடிப்பதில் தான் இருக்கிறது என்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் அந்த நாகரிக நடைமுறைகளை சொல்லாலும் அவமதிக்கக்கூடாது

முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலா?

நீங்கள் இஸ்லாத்தில் முற்றிலுமாக நுழைந்து விடுங்கள்! என்று அல்லாஹ நம் போன்றோருக்கே கூறியுள்ளான்!

முஸ்லிம்கள் அன்னியப் பெண்களுடன் கலப்பது, பெண்கள் அன்னிய ஆண்களுடன் பழகுவது, கலப்புத் திருமணத்தை ஆதரிப்பது, புற்க அணிவதை விமர்சிப்பது, முஸ்லிம்களின் வீடுகளில் நாய் வளர்ப்பது இவையெல்லாம் இஸ்லாமிய கலாச்சாரங்களா? இழிந்த ஈனத்தனமான செயல்களல்லவா?

மாற்று மதத்தாருடன் மத நல்லிணக்கம் பேண வேண்டியதுதான்! அதே சமயம் முஸ்லிம்களின் இறைக்கொள்கைகள் பாதிக்குமளவு இறங்கிவிடக் கூடாது! சமரச உடன்பாடு செய்து கொண்டுவிடக் கூடாது.

சகோதர சமுதாயத்துடன் பாசத்துடன் பழகுகிறோம். ஒருவர் வீட்டு விசேஷத்தில் மற்றொருவர் கலந்து கொள்கிறோம். சமய நல்லிணக்கம் பாராட்டுகிறோம். இவையெல்லாம் இஸ்லாத்திற்கு எதிரானவையல்ல! இஸ்லாம் ஏற்கிறது ஆதரிக்கிறது.

இருந்தாலும் உங்கள் மார்க்கம் உங்களுக்கு எமது மார்க்கம் எமக்கு! என்ற திரு வசனம் நமது மார்க்க நெறிமுறைகளை நாம் விட்டுவிடக் கூடாது என்பதை அறிவுறுத்துகிறது.

நீங்கள் கொஞ்சம் இளகி (இறங்கி) வந்தால் அவர்களும் இளகி வந்து விடுவர்! என்று அல்லாஹ் கூறி அவர்கள் வேண்டுமானால் கொண்ட கொள்கையை லோகாதாயத்துக்கு விட்டுக் கொடுக்கலாம். நீங்கள் கொண்ட கொள்கையை ஒரு போதும் விட்டுக் கொடுத்து விடக் கூடாது! என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். ஈட்டி முனையில் நிறுத்திய போதும் ஈமானை இழக்க மாட்டோம்! என இந்தக் கொள்கை அடிப்படையில் தான் நம் முன்னோர் கூறினர்!

உயர்ந்த மார்க்கம் இஸ்லாம்! அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட பூரணப்படுதப்பட்ட மார்க்கம் இஸ்லாம்! அம்மார்க்கத்தை நமது உயிருக்கும் மேலாக மதித்துப் போற்ற வேண்டும். முஸ்லிம்களாக நம்மைத் தேர்வு செய்த வல்ல அல்லாஹ்வுக்கு நாம் ஆயிரமாயிரம் நன்றி செலுத்திய வண்ணமிருக்க வேண்டும்.

"நீங்கள் யார் ?" என்று ஹள்ரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருவர் வினவியபோது "நான் ஒரு முஸ்லிம்" என்று பதிலளித்தார்கள். நாம் முஸ்லிமாக இருப்பதே பெரும் பாக்கியமாகும். நான் நபியின் மருமகன் ஃபாத்திமாவின் கணவன் மக்களின் தலைவர் சுவன சுபச் செய்தி அறிவிக்கப்பட்டவர் என்றேல்லாம் ஹள்ரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு

அவர்கள் தங்களைப் பற்றி கூறவில்லை.

முஸ்லிம்களிடம் ஷிர்க் ஜஹ்ரி, பகிரங்க இணைவைத்தல் கூடாதது போல 'ஷிர்க் கஹ்பி' மறைமுக இணைவைத்தலும் கூடாது.

"மேல் மட்டத்திலுள்ளவரை "இதய தெய்வமே! உன்னையே வணங்குகிறோம்" என்றெல்லாம் முஸ்லிம்கள் கூறினால் அது மறைமுக இணைவைத்தலாகும்.

"அல்லாஹ்வின் பக்கம் அழைப்புக் கொடுத்து, தானும் நல்லது செய்து, நான் திண்ணமாக முஸ்லிம்களில் உள்ளவன் என்று சொல்பவனை விடச் சிறந்த சொல்லாளர் யார்?" என அல்லாஹ் திருமறையில் கேட்கிறான்!

நான் ஒரு முஸ்லிம் என்பதை ஆணித்தரத்துடன் எடுத்துக் கூர வேண்டும்! என்னுடைய தொழுகையும், பிறகிரியைகளும், என்னுடைய வாழ்வும் மரணமும் அகிலத்தாரை இரசிப்பவனுக்கே உரியதாகும்! என்று முஸ்லிம்கள் சொல்லாலும் செயலாலும் தங்களுடைய இஸ்லாத்தின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் .

வல்ல அல்லாஹ் நம்மை உண்மை முஸ்லிம்களாக இவ்வுலகிலிருந்து விடை பெறச் செய்வானாக!

கட்டுரையாசிரியர்: மவ்லவி, ஏ. முஹம்மது இஸ்மாயில் ஃபாஜில், பாகவி, நாஜிர், ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா, நீடூர் நெய்வாசல்.

நன்றி: குர்ஆனின் குரல்