Home இஸ்லாம் சொற்பொழிவுகள் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (12, 13)
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (12, 13) PDF Print E-mail
Friday, 20 May 2011 11:46
Share

    சொற்பொழிவு 12    

‘புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனைப்போற்றிப் புகழ்ந்து அவனிடமே உதவி தேடுகிறேன். மேலும், அவனிடம் பிழை பொறுக்க வேண்டுகிறேன். நம் நஃப்ஸ{களால் (மனோ இச்சைகளால்) விளையும் தீமைகளை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன். அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்டவர்களை யாராலும் வழிகெடுக்க முடியாது. அவ்வாறே அல்லாஹ் வழிதவறும்படி விதித்து விட்டவர்களை யாராலும் நேர்வழியில் செலுத்திடவும் முடியாது. மேலும் வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்.

‘அல்லாஹ் அவருக்குச் சன்மார்க்கத்தைத் தந்து நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சிரிக்கை செய்பவராகவும், கியாமத்துக்குச் சமீப காலத்தில் அனுப்பியுள்ளான். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் பணிந்தவர்கள் நிச்சயம் நேர்வழி பெற்று விட்டவர்களாவார். அவர்களுக்குப் பணியாமல் மாறு செய்தவர்கள் நிச்சயம் வழி தவறியவர்களாவர்.’

இறைவா! உன்னையும் உன் தூதரையும் பணிந்தவர்களின், உன் திருப்பொருத்தத்திற்கு ஒப்ப நடந்தவர்களின், உன் கோபத்தை விட்டும் தப்பித்துக் கொண்டவர்களின் திருக்கூட்டத்தில் எங்களையும் சேர்த்து அருள இறைஞ்சுகிறோம். மக்களே! உங்களுக்காகவே சன்மார்க்க அடையாளங்கள் சில உள்ளன. அவ்வாறான அடையாளங்களின் பக்கம் சேர்ந்து விடுங்கள். உங்களுக்குச் சில லட்சியங்களும் உள்ளன. அந்த லட்சியங்களின் பக்கம் சார்ந்து விடுங்கள்.’

‘நிச்சயமாக முஃமினான அடியான் இரண்டு பயங்கரங்களின் இடையில் உள்ளான். ஒன்று, அவனுடைய சென்றுவிட்ட ஆயுள். அந்த அயுளில் அல்லாஹ் என்ன தீர்ப்பளிப்பான் என்று அடியான் அறிந்து கொள்ள முடியாது. மற்றொன்று, அடியானுடைய மிச்சமுள்ள ஆயுள். அதில் அல்லாஹ் என்ன செய்துள்ளான் என்பதை அடியான் அறிந்து கொள்ள முடியாததாய் இருக்கிறது. ஆகவே, அடியான் தனது ஈடேற்றத்துக்காகத் தன் நஃப்ஸிடமிருந்தே நல்ல அமல்களைத் தயாரித்துக் கொள்ளட்டும்.

மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்வுக்காக உயிரோடிருக்கும்போதும், வயோதிகத்துக்காக வாலிபத்திலும், மறுமைக்காக இம்மையிலும், நன்மையை தேடிக்கொள்ளட்டும். என் உயிரைத் தன்வசம் வைத்திருக்கும் அல்லாஹ்வின்மீது ஆணையாக(க்) கூறுகிறேன், ‘மரணத்துக்குப் பின் எவ்வித சாக்குப்போக்கும் சொல்ல முடியாது. இம்மைக்குப் பின் சுவர்க்கம், நரகம் இரண்டே வீடுகள் தான் உண்டு. நான் சொல்ல வேண்டிய இந்த செய்திகளைச் சொல்லி விட்டேன். மேலும், எனக்காகவும் உங்களுக்காகவும் அல்லாஹ் பாவமன்னிப்பை அருளுமாறு வேண்டுகிறேன்.

    சொற்பொழிவு 13    

திருக்குர்ஆன்; அல்லாஹ்வால் அருளப்பட்ட மனிதகுல முன்னேற்றத்துக்கான வழி முறைகள் யாவும் அதில் ஒருங்கே கூறப்பட்டிருப்பதால் அதை அதிகமாக ஓதி உணர்ந்து சீர்படும்படி நபி பொருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூண்டினார்கள். அது குறித்து ஒரு சமயம் அவர்கள் நிகழ்த்திய உரை பின்வருமாறு:

‘புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனைப்போற்றிப் புகழ்ந்து அவனிடமே உதவி தேடுகிறேன். மேலும், அவனிடம் பிழை பொறுக்க வேண்டுகிறேன். நம் நஃப்ஸ{களால் (மனோ இச்சைகளால்) விளையும் தீமைகளை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன். அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்டவர்களை யாராலும் வழிகெடுக்க முடியாது. அவ்வாறே அல்லாஹ் வழிதவறும்படி விதித்து விட்டவர்களை யாராலும் நேர்வழியில் செலுத்திடவும் முடியாது. மேலும் வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்.’

‘ஞானங்களில் எல்லாம் மிகமிகப் புனிதமானது அல்லாஹ்வின் திரு வேதமாகும். அதன் (திருக்குர்ஆன்) புனிதமும், மாண்பும் அல்லாஹ்வால் தங்கள் இதயங்களில் நிரப்பப் பட்டவர்களே - குஃப்ரிலிருந்து இஸ்லாத்தில் புகுமாறு அவனால் செய்யப்பட்டவர்களே – நிச்சயமாக வெற்றியாளர்களாவர். திருக்குர்ஆன் மெய்யான ஞானங்களை போதிப்பதாகவும், உணர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது. அதை விசுவாசம் கொண்டவர்களை நீங்களும் நேசியுங்கள். மேலும், அல்லாஹுத்தஆலாவை மக்களின் பரிசுத்தமான முழு இதயத்தாலும் நேசியுங்கள். அத் திருக்குர்ஆனை ஓதுவதிலும், அதன் ‘திக்ரு’களை ஓதுவதிலும் உங்கள் இதயம் சோர்வடைந்து விட வேண்டாம். மேலும், திருக்குர்ஆனைப் பின்பற்றாமல் உங்கள் இதயம் மறத்துப் போக விடவேண்டாம்.

அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு எந்தப் பொருளையும் இணையாகவும், துணையாகவும் கற்பணை செய்யாதீர்கள். அல்லாஹ்விடம் பூரணமான பயபக்தி (தக்வா) காட்டுங்கள். நீங்கள் செய்யும் நல்ல அமல்களை உங்கள் நாவால் உறுதி கூறுங்கள். மேலும், உங்கள் நாவை உங்கள் வசத்தில் அடக்கி வைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அருட்கொடைகளை (வெளியிடுவதை)க் கொண்டு நீங்கள் உங்களுக்கிடையில் அன்போடு பழகுங்கள். அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் உங்கள் மீது உண்டாகட்டும்.’ ( - இஜாஸுல் குர்ஆன்)

-     அறிஞர், ஆர்.பி.எம் கனி ரஹ்மதுல்லாஹி அலைஹி    

www.nidur.info