Home இஸ்லாம் வரலாறு தபூக் யுத்தமும் தடுமாற்றமும் (1)
தபூக் யுத்தமும் தடுமாற்றமும் (1) PDF Print E-mail
Monday, 16 May 2011 07:14
Share

படிப்பினைகள் நிறைந்த முக்கியமான கட்டுரை

ரியாளுஸ் ஸாலிஹீன்

கஅப் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார் அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்:

(இவர்தான் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்பார்வை இழந்த காலத்தில் அவர்களை வழிநடத்தி அழைத்துச் செல்பவராக இருந்தார்.) கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் நபியவர்களை விட்டும் பின்தங்கி விட்டபொழுது நடந்த நிகழ்ச்சி பற்றி இவ்வாறு அறிவித்ததை நான் கேட்டுள்ளேன்.

கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கலந்துகொண்ட எந்தப் போரை விட்டும் நான் எப்போதும் பின்தங்கியதில்லை., தபூக் யுத்தத்தைத்தவிர! ஆனால் பத்று போரில் நான் கலந்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்! அதில் கலந்துகொள்ளாமல் இருந்த எவரும் கண்டிக்கப்படவில்லை. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முஸ்லிம்களும் – குறைஷிகளின் வாணிபக் குழுவைத் தாக்குவதற்காகத்தான் புறப்பட்டிருந்தார்கள். அங்கே முன்னறிவிப்பு இல்லாமல் அவர்களையும் அவர்களுடைய பகைவர்களையும் மோதச் செய்தான், அல்லாஹ்!

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக நாங்கள் உறுதிமொழி கொடுத்தபோது நடைபெற்ற நள்ளிரவு கணவாய் உடன்படிக்கையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் ஆஜராகியுள்ளேன். அதற்குப் பகரமாக பத்ருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்பெறுவதை நான் விரும்பவில்லை. அதைவிட பத்ருப் போர்தான் மக்களிடையே அதிகம் பேசப்படக்கூடியதாக இருந்தாலும் சரியே!

தபூக் போரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட்டும் நான் பின்தங்கியிருந்தபோது நடைபெற்றது பற்றி நான் அறிவிப்பது என்னவெனில், நான் அதிக அளவு சக்தியும் சௌகரியமும் முன்னெப்போதும் பெற்றிருந்ததில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதற்கு முன்பு ஒரு பொழுதும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் இருந்ததில்லை. ஆனால் அந்தப் போரின்போது இரண்டு ஒட்டகங்களை நான் சேகரித்து வைத்திருந்தேன்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதேனும் போருக்குப் புறப்பட நாடினால் அதனை மற்றொரு விஷயத்துடன் இணைத்து மறைத்தே பேசுவார்கள். இவ்வாறு இந்தப் போரும் வந்தது! நபியவர்கள் இந்தப் போருக்காகப் புறப்பட்டது கடுமையான வெயில் நேரத்தில்! அதுவும் நெடியதொரு பயணத்தை மேற்கொண்டார்கள். பாலைவெளியைக் கடந்து செல்ல நேர்ந்தது! எதிரிகளின் அதிக எண்ணிக்கை கொண்ட படையைச் சந்திக்க நேர்ந்தது! எனவே முஸ்லிம்கள் தங்களுடைய போர்த் தளவாடங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக யதார்த்த நிலையை அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாகக் கூறினார்கள். முஸ்லிம்கள் எங்கு நோக்கிச் செல்ல வேண்டும் என்பது தமது நாட்டம் என்பதை வெளிப்படையாக அறிவித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் முஸ்லிம்கள் அதிக அளவில் புறப்பட்டிருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை எந்த ஏட்டிலும் பதிவு செய்து வைக்கப்படவில்லை. (அதாவது அரசாங்கப் பதிவேடு என்று எதுவும் அப்பொழுது இல்லை)

கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்: போருக்குப் புறப்படாமல் தங்கி விடலாமென விரும்பும் எவரேனும் இருந்தால் நாம் கலந்து கொள்ளாதது பற்றி அல்லாஹ்விடம் இருந்து வஹி (குர்ஆன் வசனம்) இறங்கினாலேதவிர அது யாருக்கும் தெரியப் போவதில்லை – என்றே எண்ணிக் கொண்டிருந்தார்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தப் போருக்காகப் புறப்பட்ட நேரத்தில் கனிகள் கனிந்திருந்தன., நிழல்கள் நன்கு அடர்த்தியாகி விட்டிருந்தன! நான் அவற்றின் மேல் அதிக மையல் கொண்டிருந்தேன்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போருக்கான ஏற்பாட்டைச் செய்து முடித்திருந்தார்கள். அவர்களுடன் முஸ்லிம்களும் அதற்கான ஏற்பாட்டை முழுமையாக்கி விட்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் போருக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகக் காலையில் புறப்படலானேன். ஆனால் எதையும் செய்து முடிக்காமலேயே திரும்பி வருவேன்.

நான் என் மனத்திற்குள் சொல்லிக்கொள்வேன்: நாம் நாடிவிட்டால் ஏற்பாட்டைச் செய்துமுடிக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கத்தானே செய்கிறது!- இந்த எண்ணம்தான் தொடர்ந்து என்னைத் தாமதப்படுத்திக் கொண்டே இருந்தது! மக்களோ இடைவிடாது முயற்சிகள் மேற்கொண்ட வண்ணம் இருந்தனர்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களுடன் ஒருநாள் அதிகாலையில் போருக்காகப் புறப்பட்டு விட்டார்கள். நானோ அதுவரையில் எவ்வித ஏற்பாட்டையும் செய்து முடிக்காமலேயே இருந்தேன். பிறகு மறுநாள் காலையில் சென்றேன். எதையும் செய்து முடிக்காமலேயே திரும்பி வந்தேன். இவ்வாறு நான் தாமதமாகிக்கொண்டே இருந்தேன். படைவீரர்களோ மிக வேகமாகப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்கள். வெகுதூரம் சென்று விட்டார்கள். நானும் பயணம் புறப்பட முனையத்தான் செய்தேன். எப்படியேனும் அவர்ளைப் பிடித்துவிட வேண்டும் என நாடத்தான் செய்தேன். அந்தோ! அப்படி நான் செய்தேனில்லையே! எனது விதியில் அந்தப் பாக்கியம் எழுதி வைக்கப் பட்டிருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்ற பிறகு நான் மக்கள் மத்தியில் சென்றபொழுது -நயவஞ்சகனென்று இழித்துக் கூறப்பட்டவனையும் (பெண்கள் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகளைப் போன்ற) இயலாதவர்களையும் தக்க காரணம் உடையவர்களையும் தவிர என்னைப்போல் போருக்குக் கிளம்பாதிருந்த எவரையும் நான் காணவில்லை. இது எனக்கு மிகுந்த துயரம் அளிக்கலானது!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக் சென்றடையும் வரையில் என்னைப் பற்றி எதுவும் கூறவில்லை. தபூக்கில் மக்கள் மத்தியில் அவர்கள் அமர்ந்திருந்த பொழுது கேட்டார்கள்: கஅப் பின் மாலிக் என்ன செய்தார்? பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர் பதில் சொன்னார்: அல்லாஹ்வின் தூதரே! அவர் அணிந்திருக்கும் வேஷ்டியும் மேலங்கியும் அவரைத் தடுத்து விட்டன! தமது ஆடையழகைக் கண்டு பூரிப்படைவதே அவரது வேலை!

அதற்கு முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: நீ எவ்வளவு மோசமான வார்த்தையைக் கூறிவிட்டாய்! அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவரது விஷயத்தில் நல்லதைத் தவிர வேறெதையும் அறிந்திருக்கவில்லை! – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மௌனமாகி விட்டார்கள்.

இதற்கிடையில் வெள்ளை ஆடை அணிந்த ஒரு மனிதர் பாலைவனத்தில் கானல் அசைவதுபோல் வந்துகொண்டிருப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்தார்கள். இவர் அபூ கைஸமா- ஆகத்தான் இருக்கவேண்டும் என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அபூ கைஸமாதான் வந்து கொண்டிருந்தார்! இவர் ஒரு அன்ஸாரித் தோழர். இவர் தான் ஒரு மரைக்கால் பேரீத்தம் பழத்தைப்போர்) நிதியாக வழங்கினார். அப்பொழுது அவரை நயவஞ்சகர்கள் குறை பேசினார்கள்.

 சிந்தையில் இருந்து பொய் அகன்றுவிட்டது! 

கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக்கில் இருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் செய்தி எனக்குக் கிடைத்த பொழுது கவலை என்னை ஆட்கொண்டது! எப்படிப் பொய் சொல்லலாமெனச் சிந்திக்க ஆரம்பித்தேன். நாளை நபியவர்களின் கோபத்தை விட்டும் எப்படித் தப்பிக்கப் போகிறோமோ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். இது தொடர்பாக எனது குடும்பத்தில் விஷயஞானம் உடைய அனைவரிடமும் ஆலோசனை கலந்தேன்.

ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதோ வந்துவிட்டார்கள் என்று சொல்லப் பட்டபொழுது (எனது சிந்தையிலிருந்து) பொய் அகன்றுவிட்டது. பொய் சொல்லி எந்தவகையிலும் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாது என்பது எனக்கு உறுதியாகி விட்டது. எனவே அவர்களிடம் உண்மையே கூறுவது என்று உறுதியான முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகாலையில் வருகை தந்தார்கள். அவர்கள் எப்போது பயணத்திலிருந்து திரும்பி வந்தாலும் முதலில் பள்ளிவாசல் சென்று இரண்டு ரக்அத் தொழுவார்கள். அப்படியே அமர்ந்து மக்களிடம் உரையாடுவார்கள்.

அப்படி அமர்ந்திருந்தபொழுது – போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்டவர்கள் வந்து நபியவர்களிடம் சாக்குப் போக்குச் சொன்னார்கள்., அவர்களிடம் சத்தியம் செய்தார்கள். அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்பது சொச்சம் இருந்தது. அந்த மனிதர்கள் வெளிப்படையாய் எடுத்துவைத்த வாதங்களை நபியவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் வாங்கினார்கள். அவர்களின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனையும் செய்தார்கள். அவர்களின் உள்ளத்து ரகசியங்களை உயர்வுமிக்கவனாகிய அல்லாஹ்விடம் ஒப்படைத்தார்கள்!

கடைசியாக நான் சென்றேன். நான் ஸலாம் கூறியபொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தியவாறு புன்னகை செய்தார்கள். பிறகு சொன்னார்கள்: ‘அருகே வாரும்’ – நான் சென்று நபியவர்களின் முன்னால் அமர்ந்தேன்.

என்னிடம் கேட்டார்கள்: நீர் ஏன் புறப்படாமல் இருந்து விட்டீர்? நீர் ஒட்டகத்தை வாங்கி வைத்திருக்கவில்லையா?

நான் சொன்னேன்: அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தாங்களின் சமூகத்திலன்றி உலகில் வேறொருவர் முன்னால் நான் அமர்ந்திருந்தால் ஏதேனும் சாக்குப்போக்குச் சொல்லி அவரது கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாமென நான் கருதியிருப்பேன். அந்த அளவுக்கு வாதம் புரியும் திறனை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான்.

ஆனாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உறுதியாக அறிந்துள்ளேன்: அதாவது இன்று நான் தாங்களிடம் பொய் சொல்லி அதனடிப் படையில் தாங்கள் என்னைப் பொருந்திக் கொண்டாலும் அல்லாஹ் என் மீது உங்களைக் கோபம் கொள்ளச் செய்தே தீருவான்! நான் உங்களிடம் உண்மை உரைத்து, அதனால் நீங்கள் என் மீது கோபம் கொண்டால் நிச்சயமாக நான் அது விஷயத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்னிடம் தக்க காரணம் எதுவுமில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உங்களுடன் (போருக்குப்) புறப்படாமல் தங்கி விட்டபொழுது நல்ல ஆற்றல் உடையவனாக – வசதி உடையவனாகவே இருந்தேன். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு!

அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: இவர்தான் உண்மை சொல்லியுள்ளார். நீர் செல்லலாம்., அல்லாஹ் உம் விஷயத்தில் தீர்ப்பளிக்கும் நேரத்தை நீர் எதிர்பார்த்திரும்,

ஸலாம் சொல்வேன். அருகிலேயே தொழுவேன்,

பனூ ஸலிமா கிளையைச் சேர்ந்த சிலர் என்னைத் தொடர்ந்து நடந்து வந்தார்கள். என்னிடம் சொன்னார்கள்:

அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதற்கு முன்பு நீர் எந்தப் பாவமும் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. போருக்குப் புறப்படாதிருந்த ஏனையோர் சாக்குப்போக்கு சொன்னதுபோல் நீரும் சாக்குப்போக்குச் சொல்வதற்கில்லாமல் செய்துவிட்டீரே! நபியவர்கள் உமக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தனை செய்வதே உமது பாவத்திற்குப் பரிகாரமாக – போதுமானதாக ஆகியிருக்குமே!,,

கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவ்வாறு அவர்கள் என்னை நச்சரித்துக்கொண்டே இருந்தனர். எந்த அளவுக்கெனில், நபியவர்களிடம் திரும்பிச் சென்று முன்பு நான் சொன்னது உண்மையல்ல என்று சொல்லிவிடலாமா? என்றுகூட நான் சிந்தித்தேன்.

- பிறகு அந்த மனிதர்களிடம் கேட்டேன்: என்னைப்போல் இந்நிலைக்கு ஆளானோர் எவரேனும் உண்டா?

அவர்கள் சொன்னார்கள்: இரண்டு போர் உம்மைப்போல் இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர். நீர் சொன்னதுபோன்றே அவர்களும் சொன்னார்கள். உமக்குச் சொல்லப்பட்டதுபோன்றே அவர்களிடமும் சொல்லப்பட்டுள்ளது,

‘அவர்கள் யார் யார்? "

‘முறாறா பின் ரபீஇல் ஆமிரி, ஹிலால் பின் உமையா -அல் வாகிஃபி"

கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்: ‘அவர்கள் என்னிடம் சொன்ன இரண்டு பேரும் எப்படிப்பட்டவர்கள் எனில், இருவரும் பத்றுப் போரில் கலந்துகொண்டவர்கள். அவ்விருவரிலும் எனக்கு ஒரு முன்மாதிரி இருந்தது! "

கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்: அவ்விருவரைப் பற்றியும் மக்கள் என்னிடம் சொன்போது நான் பேசாமல் சென்றுவிட்டேன்.

போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கியவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் எவரும் பேசக்கூடாதென நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை விதித்தார்கள். மக்கள் எங்களை விட்டும் ஒதுங்கிக் கொண்டார்கள். (அல்லது இந்த இடத்தில் கஅப் அவர்கள் இப்படிச் சொல்லியிருக்கலாம் :) எங்கள் விஷயத்தில் மக்களின் நடவடிக்கை மாறிவிட்டது,

எனது மனத்தில் விரக்தி ஏற்பட்டு இந்தப் பூமியே என்னைப் பொறுத்து அன்னிய பூமியாகத் தென்பட்டது. நான் முன்பு அறிந்த பூமியாக அது இல்லை. ஐம்பது இரவுகளாக இந்நிலையிலேயே நாங்கள் இருந்தோம்.

என்னுடைய இரு தோழர்களோ அடங்கிவிட்டார்கள். அழுத வண்ணம் வீட்டிலேயே முடங்கிக்கிக் கிடந்தார்கள். மூன்று பேரில் நான்தான் வயதில் குறைந்தவனாகவும் வலிமை மிக்கவனாகவும் இருந்தேன்.

நான் வெளியே செல்வேன். முஸ்லிம்களோடு தொழுகையில் கலந்துகொள்வேன். கடைவீதிகளிலே சுற்றுவேன். யாருமே என்னுடன் பேசமாட்டார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்துக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருக்கும்போது அவர்களிடம் ஆஜராவேன். அவர்களுக்கு ஸலாம் சொல்வேன். ஸலாத்திற்கு பதில் சொல்லிட உதடுகளை அசைக்கிறார்களா? இல்லையா? என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன்.

பிறகு அவர்களுக்கு அருகிலேயே தொழுவேன். ஓரக்கண்ணால் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் பொழுது நபியவர்கள் என்னைப் பார்ப்பார்கள். நான் அவர்களின் பக்கம் முன்னோக்கும்பொழுது என்னை விட்டும் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.

இவ்வாறாக முஸ்லிம்களின் ஒட்டுமொத்தப் புறக்கணிப்பு நீடிப்பதை நான் உணர்ந்தபோது – ஒருநாள் அப்படியே நடந்துசென்றேன். அபூ கதாதாவின் தோட்டத்துச் சுவர் ஏறி உள்ளே சென்றேன். அவர் என் சிறிய தந்தையின் மகன். எனக்கு மிகவும் பிரியமானவர். அவருக்கு நான் ஸலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் எனது ஸலாத்திற்கு பதில் சொல்லவில்லை. நான் கேட்டேன்: அபூ கதாதாவே! அல்லாஹ்வைக் கொண்டு சத்தியமிட்டுக் கேட்கிறேன்: நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியாதா? – அவர் மௌனமாக இருந்தார். மீண்டும் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்து அவரிடம் அவ்வாறு கேட்டேன். அப்பொழுதும் அவர் மௌனமாகவே இருந்தார். மூன்றாவது தடவையும் கேட்டேன். அப்பொழுது சொன்னார். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்தான் மிகவும் அறிந்தவர்கள்.

என் கண்களிரண்டும் கண்ணீர் வடித்தன. வந்த வழியே திரும்பி சுவர் ஏறித்தாவி வெளியே வந்தேன்.

அப்படியே மதீனாவின் கடைவீதியில் நான் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, உணவுப் பொருள்களை மதீனாவில் விற்பனை செய்ய வந்திருந்த சிரியா தேசத்து விவசாயி ஒருவன் அங்கே, கஅப் பின் மாலிக்கை அறிவித்துக் கொடுப்பவர் யார்? என்று கேட்டுக் கொண்டிருந்தான். உடனே மக்கள் என் பக்கம் சுட்டிக்காட்டி அவனுக்கு என்னைத் தெரியப்படுத்தத் தொடங்கினார்கள். உடனே அவன் என்னிடம் வந்தான். கஸ்ஸான் மன்னன் எழுதிய ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தான். நான் எழுத்தறிவு உடையவனாக (அதாவது எழுதவும் படிக்கவும் தெரிந்தவனாக) இருந்தேன். அந்தக் கடிதத்தைப் படித்தேன். அதில் எழுதப்பட்டிருந்தது:

‘நான் எழுதுவது என்னவெனில், உம்முடைய தோழர் உம்மை வெறுத்து ஒதுக்கிவிட்டார் எனும் செய்தி எங்களுக்குக் கிடைத்துள்ளது. கேவலமும் உரிமையிழப்பும் உடைய நாட்டில் அல்லாஹ் உம்மை வைத்திருக்க வேண்டாம். எங்களிடம் வந்துவிடும். நாங்கள் உம்மை உபசரிப்போம்’

அதைப் படித்தபொழுது- இதுவும் ஒரு சோதனையே என்று சொன்னேன், பிறகு அந்தக் கடிதத்தை அடுப்பில் தூக்கி வீசி எரித்து விட்டேன்.

இவ்வாறு ஐம்பதில் நாற்பது நாட்கள் கழிந்துவிட்டபொழுது வஹி எனும் இறையருட்செய்தி வருவது தாமதமானபொழுது நபியவர்களின் தூதுவர் என்னிடம் வந்துசொன்னார்: நீர் உம் மனைவியை விட்டும் பிரிந்திருக்குமாறு நபியவர்கள் உமக்குக் கட்டளையிடுகிறார்கள்.

அவளை நான் விவாவகரத்து செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்யவேண்டும் ? என்று நான் கேட்டேன்,

இல்லை. அவளைவிட்டும் விலகியிரும்! அவளை நெருங்கக் கூடாது என்றார் அவர்.

இதேபோன்ற கட்டளையை என்னிரு தோழர்களுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பியிருந்தார்கள். நான் என் மனைவியிடம் சொன்னேன்: நீ உன் பெற்றோரிடம் சென்றுவிடு! அல்லாஹ் இந்த விஷயத்தில் ஒரு தீர்ப்பை அளிக்கும் வரையில் அவர்களிடம் தங்கியிரு.

ஹிலால் பின் உமையாவின் மனைவி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து சொன்னாள்: ஹிலால் பின் உமையா தள்ளாத வயதுடைய முதியவராக இருக்கிறார். அவருக்குப் பணிவிடை செய்பவர் யாரும் இல்லை. நான் அவருக்குப் பணிவிடை செய்வதைத் தாங்கள் விரும்பவில்லையா? என்ன?

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: அப்படியில்லை. ஆனால் அவர் உன்னை நெருங்கக்கூடாது.

அதற்கு அந்தப் பெண்மணி கூறினாள்: ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எந்தச் செயலின் பக்கமும் எந்த அசைவும் அவரிடம் இல்லை. அவரது விவகாரம் இவ்வாறு ஆனதிலிருந்து இன்றுவரை அவர் ஓயாது அழுது கொண்டே இருக்கிறார்"

என்னுடைய குடும்பத்தினர் சிலர் என்னிடம் சொன்னார்கள்: உமது மனைவி விஷயத்தில் நபியவர்களிடம் நீர் அனுமதி கேட்கக்கூடாதா?

நான் சொன்னேன்: அவள் விஷயத்தில் நபியவர்களிடம் நான் அனுமதி கேட்டால் நபியவர்கள் சொல்லப்போவதென்ன என்பது எனக்கு என்ன தெரியும்? நானோ இளைஞனாக இருக்கிறேன்.

இதேநிலையில் பத்து நாட்கள் கழிந்தன. எங்களோடு எவரும் பேசக்கூடாது என்று தடைவிதித்து ஐம்பது நாட்கள் நிறைவடைந்தன!

 உண்மைக்குக் கிடைத்த பரிசு 

பிறகு ஐம்பதாவது நாள் அதிகாலையில் எங்களது வீடொன்றின் மாடியில் நான் ஃபஜ்ர் தொழுகை தொழுது கொண்டிருந்தேன். நான் அந்த நிலையிலே -அதாவது, எங்களைப் பற்றி (குர்ஆனில்) அல்லாஹ் கூறியுள்ளதுபோல் – உயிர்வாழ்வதே எனக்குக் கஷ்டமாகிவிட்டது. பூமி இவ்வளவு விரிவாக இருந்தும் என்னைப் பொறுத்து குறுகிப்போய் விட்டது என்ற அந்நிலையிலே இருந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஸல்வு என்ற மலை மீதேறி சப்தமிட்டு அழைப்பவரின் அழைப்பைக் கேட்டேன்!

‘ ஓ.....! கஅப் பின் மாலிக்! நற்செய்தி பெறுவீராக!"

-அப்படியே ஸஜ்தாவில் விழுந்தேன். நமது துன்பம் நீங்கியது என்பதை அறிந்தேன்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுப்ஹு தொழுதபொழுது, எங்களது பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு எங்கள் மீது மீண்டும் கருணை பொழிந்துவிட்டான் என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்.

உடனே மக்கள் அந்த நற்செய்தியை எங்களுக்கு அறிவித்திடப் புறப்பட்டு விட்டார்கள். என் இரு தோழர்களை நோக்கியும் நற்செய்தியாளர்கள் சென்றனர். ஒருவர் குதிரை மீது ஏறி என்னை நோக்கி விரைந்து வந்தார். அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒருவரோ என்னை நோக்கி விரைந்து வந்தவர் மலை உச்சியிலே ஏறிவிட்டார். அவரது குரலின் வேகம் குதிரையை விடவும் விரைவானதாக இருந்தது.

எவரது உரத்த குரலினால் நற்செய்தியை நான் செவியுற்றேனோ அவர் என்னிடம் வந்தபோது அவரது நற்செய்திக்குப் பரிசாக என்னுடைய இரண்டு ஆடைகளையும் களைந்து அவற்றை அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்பொழுது அவற்றைத் தவிர வேறு ஆடைகள் என்னிடம் இல்லை. பிறகு இரண்டு ஆடைகளை இரவல் வாங்கி அணிந்துகொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஜராக நாடியவாறு புறப்பட்டேன். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்தனர். பாவமன்னிப்புக் கிடைத்ததன் பேரில் என்னை வாழ்த்திக் கொண்டிருந்தனர்! மக்கள் என்னிடம் சொன்னார்கள்: உமது பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டதன் பேரில் உமக்கு வாழ்த்துக்கள்!

அவ்வாறாக மஸ்ஜிதுக்குள் நுழைந்தேன். அங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் மக்கள் அமர்ந்திருந்தனர். தல்ஹா பின் உபைதுல்லாஹ் எழுந்து என்னை நோக்கி ஓடிவந்தார். எனக்குக் கைலாகு கொடுத்தார். எனக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அல்லாஹ்வின்மீது சத்தியமாக! அவரைத் தவிர முஹாஜிர்கள் வேறெவரும் எழுந்து வரவில்லை. தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த உபகாரத்தை கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்றென்றும் மறக்காமல் இருந்தார்கள்!

கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ’நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் சொன்னபொழுது – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அவர்களின் முகம் மகிழ்ச்சியால் பிரகாசித்துக் கொண்டிருந்தது: உம் அன்னை உம்மை ஈன்றெடுத்த நாள் முதல் உமக்குக் கிடைக்கப்பெறாத சிறந்ததொரு நாளினைக் கொண்டு மகிழ்வு அடைவீராக!

நான் கேட்டேன்: ‘இது தங்களிடம் நின்றும் உள்ளதா? அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததா? "

நபியவர்கள்: ‘இல்லை. இது, கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும் "

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மகிழ்ச்சியடைந்தால் அவர்களின் முகம் ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அது சந்திரனின் ஒருபகுதியைப் போலிருக்கும். நபியவர்களின் இந்நிலையை நாங்கள் அறிபவர்களாய் இருந்தோம்.

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னால் உட்கார்ந்தபொழுது சொன்னேன்: ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு மன்னிப்புக் கிடைத்ததன் பொருட்டு நன்றி செலுத்திடவே எனது எல்லாச் சொத்துகளையும் அல்லாஹ் – ரஸூலின் பாதையில் தர்மம் செய்கிறேன் "

அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: ‘உமது சொத்தில் சிறிது அளவை உமக்காக வைத்துக் கொள்ளும். இதுவே உமக்குச் சிறந்ததாகும்’

நான் சொன்னேன்: ‘கைபரில் இருந்து எனக்குக் கிடைத்த பங்கை எனக்காக நான் வைத்துக் கொள்கிறேன் "

மேலும் நான்சொன்னேன்: அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசியதனால் தான் அல்லாஹ் எனக்கு ஈடேற்றம் அளித்துள்ளான். எதிர்காலத்தில் என் ஆயுள் முழுவதும் உண்மையே நான் பேசுவேன் என்பதும் – எனக்கு மன்னிப்பு கிடைத்ததன் பொருட்டு நான் செலுத்தும் நன்றியாக உள்ளது.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னிலையில், உண்மையே பேசுவேன் என நான் வாக்குறுதி கொடுத்த நாளில் இருந்து இன்று வரை முஸ்லிம்களில் எவரைக் குறித்தும் (நான் அறியேன் அதாவது) உண்மை பேசும் விஷயத்தில் அல்லாஹ் என்னைச் சோதனைக் குள்ளாக்கியதை விடவும் அழகாக அல்லாஹ் அவரைச் சோதனைக்குள்ளாகியதை நான் அறியேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபியவர்களிடம் அவ்வாறு நான் வாக்குறுதி கொடுத்ததில் இருந்து இன்றைய தினம்வரை எந்தச் சூழ்நிலையிலும் பொய் பேச நான் நாடியதே இல்லை. எதிர் காலத்திலும் அதிலிருந்து அல்லாஹ் என்னைப் பாதுகாப்பான் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு"

கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்: அப்போது அல்லாஹ் இறக்கியருளிய வசனம் இதுதான்:

"நபியையும் – துன்பம் சூழ்ந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த முஹாஜிர்களையும் அன்ஸார்களையும் அல்லாஹ் பொறுத்தருளினான். அவர்களில் ஒருசிலரின் உள்ளங்கள் நெறி தவறுதலின்பால் சற்று சாய்ந்துவிட்டிருந்த பிறகும்! (ஆனால் அவர்கள் நெறிதவறிச் செல்லாமல் நபிக்கு பக்கபலமாக இருந்தார்கள்! அப்பொழுது) அல்லாஹ் அவர்களை மன்னித்தான். திண்ணமாக அவன் அவர்கள் விஷயத்தில் அதிகப் பரிவும் கருணையும் கொண்டவனாக இருக்கிறான். மேலும் விவகாரம் ஒத்தி போடப்பட்டிருந்த மூவரையும் அவன் மன்னித்து விட்டான். அவர்களது நிலைமை எந்த அளவு மோசமாகி விட்டதெனில், பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்து அது குறுகி விட்டிருந்தது., அவர்கள் உயிர் வாழ்வதே கஷ்டமாகிவிட்டது. மேலும் அல்லாஹ்விடம் இருந்து தப்பிப்பதற்கு அவனது அருளின் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் அவர்கள் மீண்டு வர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களின் மீது கருணை பொழிந்தான். திண்ணமாக அவன் பெரும் மன்னிப்பாளன். கருணை மிக்கவன். இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வாய்மையாளர்களுடன் இருங்கள்" (அல்குர்ஆன் 9: 117 – 119)

கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மேலும் சொல்கிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இஸ்லாத்தின் பால் அல்லாஹ் எனக்கு வழிகாட்டிய பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் உண்மை பேசியதைவிட பெரியதோர் அருட் கொடையை அல்லாஹ் என் மீது அருளிடவில்லை! அவர்களிடம் நான் பொய்சொல்லி இருந்தால் பொய் சொன்னவர்கள் அழிந்து போனதுபோல் நானும் அழிந்துபோயிருப்பேன். நிச்சயமாக அல்லாஹ் (வஹி எனும் இறையருட் செய்தியை இறக்கியருளியபொழுது) பொய் சொன்னவர்கள் குறித்து மிகவும் மோசமான நிலையைக் கூறினான்., வேறு எவர் விஷயத்திலும் அப்படிக் கூறவில்லை. அல்லாஹ் கூறினான்:

"நீங்கள் அவர்களிடம் திரும்பிவரும்பொழுது அவர்களை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்திட வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அவர்கள் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் செய்வார்கள். எனவே நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளாமலே இருந்துவிடுங்கள். ஏனெனில் அவர்கள் அசுத்தமானவர்கள். உண்மையில் அவர்கள் சேருமிடம் நரகம்தான். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீமைகளுக்கு இதுவே கூலியாகும். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டிட வேண்டும் எனும் நோக்கத்தில் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் திண்ணமாக அல்லாஹ், பாவிகளான இத்தகைய மக்கள்மீது திருப்தி கொள்ளமாட்டான்’ (அல்குர்ஆன் 9: 95-96)

கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மேலும் சொல்கிறார்கள்: "எவர்கள் நபியவர்களிடம் வந்து சத்தியம் செய்தார்களோ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் வாங்கினார்களோ அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினார்களோ அத்தகையவர்களின் விவகாரத்தைவிடவும் எங்கள் மூவரின் தீர்ப்பு பிற்படுத்தப்பட்டது. அல்லாஹ் பின்வருமாறு குர்ஆன் வசனத்தை இறக்கியருளி எங்கள் விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கும் வரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கள் விவகாரத்தை ஒத்தி போட்டார்கள்’

‘விவகாரம் ஒத்தி போடப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்’)

- இங்கு குல்லிஃபூ எனும் வார்த்தை, நாங்கள் மூவரும் போரில் கலந்துகொள்ளாமல் பின்தங்கியிருந்தவர்கள் எனும் ரீதியில் சொல்லப்பட்டதல்ல, மாறாக, எவர்கள் நபியவர்களிடம் வந்து சத்தியம் செய்து சாக்குப்போக்குச் சொல்லி – நபியவர்களும் அதனை ஒப்புக் கொண்டார்களோ அவர்களை விடவும் எங்களது தீர்ப்பை (تَخْلِيْفٌ) பிற்படுத்துதல், எங்களது விவகாரத்தை ஒத்திப்போடுதல் என்பதே கருத்து. (புகாரி, முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில் உள்ளது: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக் போருக்குக் கிளம்பியது வியாழக்கிழமையில்! மேலும் வியாழக்கிழமையிலேயே பயணம் புறப்பட விரும்பக்கூடியவர்களாய் இருந்தார்கள்’

இன்னோர் அறிவிப்பில்: ‘பயணத்திலிருந்து திரும்பிவந்தால் முற்பகல் – வேளையில்தான் வருவார்கள். (ஊரை) வந்தடைந்தால் முதலில் பள்ளி வாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத் தொழுவார்கள். பிறகு அங்கு அமர்ந்திருப்பார்கள்.

இக்கட்டுரையின் தொடர்ச்சிக்கு "Next""கிளிக்" செய்யவும்.