Home கட்டுரைகள் அரசியல் இஸ்லாத்தை மறக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்!
இஸ்லாத்தை மறக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்! PDF Print E-mail
Thursday, 12 May 2011 08:29
Share

அரசியலில் பங்கெடுக்கும் முஸ்லிம்கள் நாளடைவில் தேர்ந்த அரசியல்வாதிகளாகவே மாறிவிடுவதை பார்க்கிறோம். இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதால் பெரும்பாலும் அவர்களை நாம கண்டுகொள்வதில்லை. ஆனாலும் அவர்களது செயல் இஸ்லாத்திற்கு முரணாக அமையும்போது சக சகோதரன் என்ற அடிப்படையில் சுட்டிக்கட்டவேண்டும் என்பதற்காக சமீபத்திய இரு முஸ்லிம் அரசியல்வாதிகளின் தடுமாற்றத்தை இங்கே பதிவு செய்கிறோம்.

ஜெயலலிதாவின் முந்தைய அட்சியில் அமைச்சராக இருந்தவர் அன்வர்ராஜா. இவர் பல்வேறு கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார். நாமறிந்தவரை அவைகளில் ஒன்றிற்கு கூட இஸ்லாமிய பெயர்கள் இல்லை. மாறாக அவரது தலைவர் எம்.ஜி.ஆர் பெயரையே சூட்டியுள்ளார். சரி! அது அவரது விருப்பம். இத்தகைய இவரது கல்வியகத்தின் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இவர்,

''எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.(!!!!) ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள். இறைவன் தன்னுடைய படைப்புகளில் வேறுபாடு காண்பதில்லை. அதேபோல ஆசிரியர்கள் மாணவர்களை வேறுபடுத்தி பார்க்காமல் எல்லோரையும் ஒரே கண்டோட்டத்துடன் அணுகவேண்டும்' என்று பேசியுள்ளார்.

ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்பதை தவிர இவரது பேச்சின் முற்பகுதியும் பிற்பகுதியும் சரியானதுதான். எழுத்தை அறிவித்தவன் இறைவன் தான் என்பதில் எந்த மாற்றமுமில்லை. அதுமட்டுமன்றி ''அவனே எழுதுகோலை கொண்டு கற்றுத் தந்தான்'' என்றும் குர்'ஆன் கூறுகிறது. அதற்காக இன்றைக்கு எழுதுகோலை கொண்டு கற்றுத்தரும் அனைவரும் இறைவனுக்கு சமமாகி விடமுடியுமா?

ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் எனில், அவர்களை சுற்றி பாலியல் குற்றச்சாட்டுகளும், மோசடிகளும் பக்கம் பக்கமாக பத்திரிக்கைகளில் வெளியாகிறதே! இவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்றால் இறைவனும் இதுபோன்ற தேவையுள்ளவன் என்று கருதுகிறாரா அன்வர்ராஜா? இறைவனுக்கு சமமாக எவரும் எந்த விஷயத்திலும் ஒப்பாக முடியாது என்று அதாவது ''அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. 'என்று ஒற்றைவரியில் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் திருமறை குர்'ஆன் கூறுவதை மறந்து விட்டாரா அன்வர்ராஜா? எனவே இனியாவது இறைவனோடு எவரையும் ஒப்பிட்டு பேசும் குணத்தை மாற்றிக் கொள்ளட்டும்.

அடுத்து, சமீபத்தில் மறைந்த பிரபல சாமியார்; அல்ல அல்ல சாமியார் என்பதை விட தன்னை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் கூறிக் கொண்ட சாய்பாபா என்பவர் மரணித்தார். எல்லா மனிதர்களும் மரணிப்ப்பவர்களே; அந்த வரிசையில் சாய்பாபா ஒரு சாமான்ய மனிதர் எனவே மரணித்து விட்டார். அவரது மரணத்தை கொண்டு நாம் மகிழவோ, வருந்தவோ எதுவுமில்லை. ஆனால் தன்னை சிறுவயது முதல் ஏகத்துவ சிந்தனையில் வளர்ந்ததாக கூறிக் கொள்ளும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எனும் அரசியவாதி, சாய்பாபா மறைவுக்காக இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

''இந்து சமய ஆன்மீக வாதியும் சமூக சேவகருமான புட்டபர்த்தி சாய்பாபாவின் மறைவால் வாடும் அவரது பக்தர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஓரிடத்திலும், சாய்பாபாவின் மறைவினால் வாடும் அவரது பக்தர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்று மற்றொரு இடத்திலும் கூறியதோடு, சாய்பாவை சிறந்த சமூக சேவகராகவும் புகழ்ந்து தள்ளியுள்ளார் ஜவாஹிருல்லாஹ்.

சாய்பாபா எந்த வகை ஆன்மீகப்[?]பனியால் பக்தர்களை உலகெங்கிலும் உருவாக்கினார் என்று ஜவாஹிருல்லாஹ் அறியாததா? இறைவனுக்கு இணைவைத்த நிலையில் மரணிக்கும் எவருக்கும் இஸ்லாத்தில் மன்னிப்பில்லை என்ற கொள்கையை உணர்ந்த ஜவாஹிருல்லாஹ், தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறியவரின் இறப்பிற்காக கடலளவு கண்ணீர் உகுப்பது ஏன்?

சாய்பாபாவின் மறைவிற்கு கருணாநிதி-ஜெயலலிதா-விஜயகாந்த்-தங்கபாலு-பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக அறிக்கை விட்டு, தன்னை முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக காட்டியுள்ளார் ஜவாஹிருல்லாஹ். நாத்திக கொள்கையுடைய கி.வீரமணி கூட தனது கொள்கை உறுதியால் சாய்பபவிற்கு இரங்கல் தெரிவிக்காத நிலையில், ஜெயலலிதாவிற்கு அடுத்து விரைவாக அறிக்கை வெளியிட்டதன் நோக்கம் இதிலும் அம்மாவின் மனம் குளிர செய்யும் நோக்கமா? அல்லது இப்படியெல்லாம் அனைத்தையும் சரிகண்டால்தான் அரசியலில் காலம் தள்ளமுடியும் என்ற முன்னேற்பாடா?

இவரைப் போன்ற கல்வியாளர்கள் அரசியலுக்கு சென்றால் அரசியல் பண்படும்; சமுதாயம் பயன்பெறும் என்ற நம்பிக்கை தவிடுபொடியாகி விட்டதோ என்ற எண்ணம் இவருக்கு வாக்களித்த மக்களுக்கு ஏற்படுவதற்குள் ஜவாஹிருல்லாஹ் தன்னை சீர்திருத்திக் கொள்வது நல்லது.

நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட்