Home கட்டுரைகள் உடல் நலம் கழுத்து வலியும் தீர்வும்!
கழுத்து வலியும் தீர்வும்! PDF Print E-mail
Wednesday, 11 May 2011 12:00
Share

கழுத்து வலியும் தீர்வும்!

    சிரசை தாங்கி நிற்கும் கழுத்துப் பகுதி    

''எண் சாண் உடம்புக்கு சிரசே (தலையே) பிரதானம்''. மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான்.

கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன.

கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன. இதில் ஏழு எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.

மேலும் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் உள்ளன. மூளைக்கும் இருதயத்திற்கும் இடையேயான இரத்த ஓட்டம் கழுத்தின் வழியேதான் நிகழ்கிறது.

முதுமைப் பருவத்தில் கழுத்து எலும்புகளின் இணைப்புகளில் (Posterior interrertebral joints) ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் (Cervical spondylosis) என்று அழைக்கின்றனர். இதை தமிழில் தோள்பட்டை வாதம் என்கின்றனர். இது பொதுவாக நடுத்தர வயதுடையோரிடமும், முதியோரிடமும் குறிப்பாக ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோரிடமும் காணப்படுகிறது.

குடல், வயிறு இவற்றின் மூலப் பகுதிகளில் உஷ்ணம் அதிகமானால் வயிற்றுப் பகுதியில் உள்ள அபான வாயுவின் அழற்சி காரணமாக குடல் மேலும் உஷ்ணப்பட்டு உடலில் உள்ள நீரானது அபான வாயுவால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் தலைப்பகுதிக்கு வந்து கோர்த்துக்கொள்ளும்.

பின்பு கழுத்து நரம்பு வழியாக முதுகுப் பக்கம் (பின்பகுதி) நீர் இறங்கும். இவ்வாறு இறங்கும் நீரானது கழுத்துப் பகுதிக்கு வரும்போது அதன் தன்மை மாறி பசை போல் கடினமாகிறது. பின்பு அது இறுகித் தடித்து கடினமானது போல் ஆகிவிடும். இதுதான் தோள்பட்டை வாதம்.

உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாவி மேல்சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீர் உஷ்ணமாகி ஆவியாக மாறி மேல்நோக்கி சிரசுக்கு சென்று அங்கு நீராக மாறி பிறகு கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

   கழுத்து வலி என்பது முதுகுத்தண்டு பாதிப்புக்கான எச்சரிக்கை:   

உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும் அதைக் கவனிக்கிற நாம், கழுத்து வலியை மட்டும் அவ்வளவாக பெரிதுபடுத்துவதில்லை. ஏதோ ஒரு பெயின் பாம் அல்லது சுளுக்குக்கான மாத்திரையுடன் சமாளிக்கப் பார்க்கிறோம். வலி முற்றி, கழுத்துக்கு பட்டை போட வேண்டிய அளவுக்கு வரும் வரை, அதன் தீவிரம் பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் கழுத்து வலி என்பது, முதுகுத் தண்டு பாதிப்புக்கான எச்சரிக்கை மணி என்கிறார்கள் மருத்துவர்கள்.

"கழுத்து வலி என்பது சின்ன வயசு, நடுத்தர வயசு, முதியவர்கள் என்று எந்த வயதிலும் வரலாம். விடலைப் பருவத்துல வரும் கழுத்து வலிக்கான காரணம், அதிகப்படியான உபயோகம். பாடசாலையில் முதல் பெஞ்சில் உட்கார்ந்து, போர்டை அண்ணாந்து பார்க்கிறது, தரையில் உட்கார்ந்து எழுதுவது, சரியான நிலையில் உட்காராத நிலையில் வலி வரலாம்.

கம்பியூட்டரை சரியான பொசிஷனில் வைத்து உபயோகிக்காதது, எப்போ பார்த்தாலும் லேப் டொப் முன்னாடியே இருக்கிறது, படுத்துக் கொண்டு கம்பியூட்டரை உபயோகிக்கிறது இதெல்லாம் இளம் வயதினருக்கு வரும் கழுத்து வலிக்கான காரணங்கள்.

கழுத்தின் பக்கத்தில் உள்ள தசைகள் சோர்வுற்று, கழுத்து எலும்பின் மத்தியில் உள்ள சவ்வில் அழுத்தம் அதிகமாகும். "செர்வைகல் டிஸ்க்'னு சொல்லப்படும் இந்த சவ்வு விலகி, பக்கத்துல உள்ள நரம்புகளை அழுத்துவதால் கழுத்து வலிஏற்படலாம். அப்படி உண்டாகிற வலி, கைகளுக்கும், கால்களுக்கும் பரவலாம். வயதானவர்களுக்கு வரக்கூடிய கழுத்து வலி "செர்வைகல் ஸ்பான்டி லைட்டிஸ்'னு சொல்லப்படுகிறது. 50 வயதுக்கு மேல் வரக்கூடியது இது. கழுத்தில் மொத்தம் 7 எலும்புகள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் இடையில் இணைப்புகளும், சவ்வும் இருக்கும்.

முதுமையின் காரணமாக தேய்மானம் ஏற்படும்போது, அது பக்கத்தில் உள்ள தண்டுவடம் (ஸ்பைனல் கோர்ட்) மற்றும் நரம்புகளில் அழுத்தத்தை அதிகமாக்கி, கை, கால்களுக்கும் வலியைத் தரும். தண்டு வடம் பாதிக்கப்படுகிற இந்த நிலைக்கு "செர்வை கல் மைலோபதி' என்று கூறப்படும்.

நரம்புகளும் வரும் வழி சிறுத்துப் போய், கை, கால்கள் சோர்வுற்று, அந்தப் பகுதிகளில் உணர்ச்சிகளும் குறையும். சின்னப் பொருட்களைக் கூடப் பிடிக்க முடியாமல் தவற விடுவது, சாவியால பூட்டைத் திறக்க முடியாதது, புத்தகத்தைப் பிடித்துக்கொண்டு படிக்க முடியாது என்று மறைமுக அறிகுறிகளை உணர்வார்கள் பாதிக்கப்பட்டவர்கள். தண்டுவடம் பாதிக்கப்படுவதால் கால்களும் சோர்வாகி, நடை மாறலாம். பாதங்களிலும் உணர்ச்சி குறையலாம்.

இன்னும் தீவிரமானால், சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சினை வரலாம். கழுத்து வலி வரும் போது, அது சாதாரண வலியாகவோ, சுளுக் காகவோதான் இருக்கும் என்று நினைத்து அலட்சியப்படுத்த வேண்டாம். 5 நாட்களுக்கு மேலும் வலி தொடர்ந்தாலோ, வலியோடு கூடவே காய்ச்சலோ, பசியின்மையோ இருந்தாலோ, உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டியது அவசியம்'' என்கிறார்கள் மருத்துவர்கள்.

    கழுத்து வலி அறிகுறிகள்:    

கழுத்துப் பகுதியில் வலி ஏற்படும். கைகள் மரத்துப் போகும். சுண்டுவிரல் செயலிழுந்து போகும். மன எரிச்சல் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கண் எரிச்சல், உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும்போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும் போதும், நிமிரும்போதும் தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒருசிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும்.

கழுத்து கடுத்து, தடித்து காணப்படும். மன நிம்மதியின்றி காணப்படுவார்கள். பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்பு நீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும்.

அதிக வியர்வை உண்டாகும். கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும். ஒரு சிலருக்கு இடது பக்கமாக கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள்பட்டையில் வலியை உண்டாக்கும். இது நெஞ்சு வலியைப் போன்று தோன்றும். நெஞ்சு வலிக்கும் தோள்பட்டை வலிக்கும் வித்தியாசம் கண்டறிவது கடினம்.

தொடர்ந்து பல நாட்களாக கழுத்து வலி காணப்படும் அந்த வலியானது தோள்வரை பரவும், கழுத்துப் பகுதியில் கை பட்டவுடன் வலி தோன்றும்.

      கழுத்து வலி வரக் காரணம்:    

மலச்சிக்கல், குடலில் வாய்வுக் கோளாறு, மூலச்சூடு, தலையில் நீர் கோர்த்தல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகிறது.

படிக்கும் பிள்ளைகள் படிக்கவும், எழுதவும் மேசையை உபயோகிக்கலாம். நிற்கிறபோது, நடக்கிற போது, உட்கார்ந்திருக்கிறபோது, கம்பியூட்டர் மொனிட்டரை பார்க்கிறபோதெல்லாம் சரியான பொசிஷனைப் பின்பற்ற வேண்டியது அவசியம். தூங்கும்போது 2, 3 தலையணை உபயோகிக்கக் கூடாது. மெல்லிசான ஒரே ஒரு தலையணை போதும். படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கிறது, டி.வி பார்க்கிறது, கம்பியூட்டர் உபயோகிக்கிறதெல்லாம் கூடவே கூடாது.

சாதாரண சுளுக்கா இருக்குமோ என்கிற எண்ணத்தில் கண்டவர்களிடம் சுளுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. அது கழுத்து நரம்புகளையும் பாதிக்கும். புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு கழுத்து எலும்பு சவ்வு பாதிப்புகளில் அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கல்சியம் அதிகள்ள உணவுகள் தினசரி உணவில் இருக்கவும். கழுத்து தசைகளை பலப்படுத்தும் பயிற்சிகளையும், தோள்பட்டைகளுக்கான பயிற்சிகளையும் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு செய்வது மூலமாக, வலி வருமுன் இந்நோயை காக்கலாம்.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது தாகம் ஏற்பட்டால் குளிரூட்டப்பட்ட நீரோ, குளிர்பானங்களோ அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை சிறு சிறு தூரங்களுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

கழுத்து வலிக்கு இந்திய மருத்துவ முறையில் நிறைய மருந்துகள் உள்ளன. குறிப்பாக வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் சில கொடுத்து கழுத்துப் பகுதி தோள்பட்டைப் பகுதியில் எண்ணெய் தடவி சீராக கழுத்தை நீவிவிட்டு வந்தால் நாளடைவில் இரத்த ஓட்டம் சீராகும். தோள்பட்டை வலியும் நீங்கும்.

வர்ம பரிகார முறையில் இதை எளிதாக குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை தேவையில்லை.

இதுபோல் சித்த மருத்துவ முறையில் சீர்கேடடைந்த உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கிழி ஒற்றடம், பிழிச்சல் முதலியன செய்வார்கள். இவ்வாறு செய்து வந்தால் நோயிலிருந்து விடுபட்டு உறுப்புகளில் உள்ள வலி, குத்தல், குடைதல், இசிவு, பிடிப்பு, வீக்கம் முதலியன மெல்ல மெல்லக் குறைந்து அவற்றின் தளர்ச்சி, செயலின்மை போன்றவை நீங்கி உடல் பலம் பெறும்.

இந்த முறையில் சிகிச்சை செய்வதின் மூலம் கழுத்து வலிக்கு அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கலாம்.

     உணவு      

பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஒதுக்க வேண்டிய உணவுகள்    

மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    படுக்கை    

தலையைணை இல்லாமல் தூங்குவது நல்லது. மேடுபள்ளம் இல்லாத சமமான படுக்கையே நல்லது. அதிக குளிர்காற்று உடலில் படும்படியாக படுக்கக்கூடாது.

இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தால் தோள்பட்டைவாதம் என்ற கழுத்து வலியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.