Home குடும்பம் பெண்கள் நான் ஒரு பெண்!
நான் ஒரு பெண்! PDF Print E-mail
Saturday, 16 April 2011 08:21
Share

நான் ஒரு பெண்!

o நான் ஒரு பெண் என்பதால் இரண்டாம் பாலினத்தைச் சேர்ந்தவள்.

o நான் ஆண்களின் உலகில் பிறந்தேன். ஆண்களின் மொழியை கற்றுணர்ந்தேன். ஆண்களின் இல்லங்களில் வசிக்கிறேன். ஆண்களின் பள்ளிகளில் படித்து, ஆண்களின் அலுவலங்களில் பணிபுரிந்து, ஆண்கள் விதிக்கும் விதிகளைக் கடைபிடித்து வாழ்கிறேன்.

o திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைத்தான் சிறுவயதில் இருந்து கற்றுக்கொடுக்கிறார்கள். பிடிவாதம் பிடிக்காதே. விட்டுக்கொடு!

o என் இளைய சகோதரனும்கூட என் மீது அதிகாரம் செலுத்துவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.

o நான் அதிகம் தூங்கக்கூடாது. ருசியான உணவை நாடக்கூடாது. சத்தம் போட்டுப் பேசக்கூடாது.

o நான் வீட்டு வேலைகளை பழகிக்கொள்ளவேண்டும். என் சகோதரர்களுக்கு அந்த அவசியம் இல்லை.

o எனக்கு மட்டும் Good Touch, Bad Touch கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். என்னை அணுகுபவர்களிடம் நான் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

o நான் அணியும் ஆடைகளில் கவனமாக இருக்கவேண்டும்.

o நான் யார் என்பதை என் தோற்றத்தால் நிர்ணயம் செய்கிறார்கள்.

o நான் பலவீனமானவள். பாதுகாக்கப்பட வேண்டியவள்.

o உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், தெரியாதவர்கள் என்று யாரும் எப்போதும் என்னை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கலாம்.

o எனக்கு நேரும் அவமானங்களை நான் மென்று விழுங்கவேண்டும்.

o எனக்கு மூன்று வயதாகும்போதே என் திருமணம் குறித்த கவலைகள் என் பெற்றோரை ஆக்கிரமித்துவிடுகின்றன.

o வீட்டில் பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டால், முதலில் என் படிப்பு நிறுத்தப்படுகிறது.

o வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் என்னைக் கட்டுப்படுத்த என் சமூகத்துக்கு முழு உரிமையுண்டு.

o வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் என் மீது அதிகாரம் செலுத்தப்படுவதை நான் முழு விழிப்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.

o கட்டளைகள் பிறப்பிப்பது ஆண்களின் இயல்பு என்பதை நான் அறிவேன். கீழ்படிவது என் உரிமை.

o நான் எத்தகைய உயர் பதவி வகித்தாலும் தொடக்க நிலையில் இருக்கும் எந்தவொரு ஆண் ஊழியரைக் காட்டிலும் நான் தாழ்ந்தவள்தான்.

o என் விருப்பம் அல்ல, என்னை மணப்பவரின் விருப்பமே இறுதியானது. திருமணச்செலவு என்னுடையது.

o திருமணத்துக்குப் பிறகு என் முந்தையை வாழ்க்கையை நான் மறந்துவிடவேண்டும். என் பெயர் மாற்றமடைகிறது. என் அடையாளம் மாற்றமடைகிறது.

o என் கணவனின் கல்வித் தகுதியைவிட என்னுடையது ஒரு படியேனும் கீழானதாக இருக்கவேண்டும். தவறினால், நான் அகந்தை கொண்டவளாகச் சித்தரிக்கப்படுவேன்.

o என் சம்பளத்தை என் கணவரிடம் ஒப்படைக்கிறேன். எனக்கென்று தனிப்பட்ட செலவுகள் கிடையாது. என் தேவைக்கான பணத்தை என் கணவரிடம் கோரி பெற்றுக்கொள்கிறேன்.

o எனக்கென்று தனியே வங்கிக்கணக்கு கிடையாது.

o என் சிந்தனைகளை நான் முன்னெச்சரிக்கையுடன் சுயதணிக்கைக்கு உட்படுத்திக்கொள்கிறேன்.

o என் ஒவ்வொரு செய்கையும் கண்காணிக்கப்படுகிறது; ஒப்பிடப்படுகிறது; எடைபோடப்படுகிறது.

o நான் கேள்விகள் கேட்பதில்லை. பதில்களை மட்டுமே அளித்துக்கொண்டிருக்கிறேன்.

o என் கணவரின் பேச்சை (எப்போதாவது) நான் மீறினால், நான் கண்டிக்கப்படுகிறேன். நான் சொல்வதை என் கணவர் (எப்போதாவது) செவிமெடுத்தால், அவர் பரிகசிக்கப்படுகிறார்.

o எனக்கான சுதந்தரத்தை என் கணவர் அவ்வப்போது அளிக்கிறார்.

o வீட்டுப் பணிகள் என்னுடையது. என் கணவர் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார் என்று நான் எதிர்பார்க்கக்கூடாது.

o எனக்கான முடிவுகளை என் கணவரே எடுக்கிறார்.

o பேருந்துகளில், ரயில்களில், பொது இடங்களி்ல் அனுபவிக்க நேரும் பாலியல் இம்சைகளை நான் மென்று விழுங்கிக்கொள்ளவேண்டும்.

o நான் செய்தித்தாள்கள் படிக்கவேண்டியதில்லை. அரசியலில் ஈடுபாடு காட்டவேண்டியதில்லை. என் உலகம் சமையலறையில் தொடங்கி படுக்கையறையில் நிறைவடைகிறது.

o என் துறை தொடர்பாக நான் எந்த லட்சியங்களையும் கொண்டிருக்கலாகாது. நான் தொடர்ந்து பணியாற்றவேண்டுமா வேண்டாமா என்பதை நான் முடிவு செய்யமுடியாது.

o என் தனிப்பட்ட சாதனைகள் முக்கியமற்றவை. என் திறன்கள் முக்கியமற்றவை.

o என் கணவனின் மனைவி என்று நான் அறியப்படுகிறேன்.

o நான் எந்த மத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், என் உலகை நான் என் பர்தாவின் வழியாகவே காண்கிறேன்.

o என் கணவர் படித்தவராக இருந்தாலும், கல்லாதவராக இருந்தாலும் என் நிலை இதுவே. கிராமங்களில் வாழ்ந்தாலும் நகரங்களில் வாழ்ந்தாலும் என் அடையாளம் மாறிவிடுவதில்லை.

o நான் மூப்படைந்த பிறகும் எனக்கான பாடங்களை கற்றுக்கொண்டே இருக்கிறேன். குறிப்பாக, Good Touch, Bad Touch. முந்தையது அபூர்வம் என்ற போதிலும்.

source: http://www.penniyam.com/