Home இஸ்லாம் ஹதீஸ் ‘இந்த நாவிலிருந்து உண்மையைத்தவிர வேறு எதுவும் வராது’
‘இந்த நாவிலிருந்து உண்மையைத்தவிர வேறு எதுவும் வராது’ PDF Print E-mail
Thursday, 24 March 2011 08:17
Share

‘இந்த நாவிலிருந்து உண்மையைத்தவிர வேறு எதுவும் வராது’

     மவ்லவி, எம்.எம். முஹம்மது இப்ராஹீம், சென்னை    

அல்லாஹ் மனிதகுலத்திற்கு வழங்கிய மிகச்சிறந்த அருட்கொடைகளில் ஒன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தனது தூதராக அனுப்பியது. இதை தனது திருமறையிலேயே அல்லாஹ் குறிப்பிட்டுக்காட்டுகிறான்.

‘நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்;. அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்;. அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்;. இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்;. மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.’ (அல்குர்ஆன்: 3:164)

‘எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்;. யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை.’ (அல்குர்ஆன்: 4:80)

‘உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.’ (அல்குர்ஆன்: 4:65)

எனவே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியள்ள வார்த்தைகள் அத்தனையும் இஸ்லாத்தின் அடிப்படைகளாகவும், அவற்றை ஏற்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகவும் இருக்கிறது. அவற்றை இல்லையென்று மறப்பது இறைவனையும், மார்க்கத்தையும் மறுப்பதாக ஆகிவிடுகின்றது.

கியாம(யுக முடிவு) நாள் வரை பாதுகாக்கப்பட்டு செயல்படுத்த வேண்டிய மார்க்கமாக இஸ்லாம் இருப்பதால் அதற்குரிய ஏற்பாட்டை இறைவன் உறுதியாகவே செய்துள்ளான். அதன் ஒருபகுதியாகவே நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒவ்வொரு அசைவையும், சொல்லையும், செயலையும்: தமது உயிரினும் மேலாக மதித்து, பாதுகாத்து, செயல்படுத்தக்கூடிய உற்ற தோழர்களை அவர்களுக்கு இறைவன் அருளியுள்ளான். அவர்களைப் போன்ற தோழர்களை அதற்கு முன்பும் பின்பும் உலகில் எவரும் பெற்றிருக்க முடியாது.

அத்தகைய நபித்தோழர்கள், இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்ப காலத்தில் குர்ஆனையும், ஹதீஸையும் பிரித்து விளங்க முடியாதவர்களாக இருந்தபோது குர்ஆன் ஹதீஸ் இரண்டும் ஒன்றோடொன்று கலந்துவிடக் கூடாது என்பதற்காக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களிடம் ‘என்னிடமிருந்து (வரும் ஹதீஸ்களை) எழுத வேண்டாம். குர்ஆன் அல்லாததை எழுதியிருந்தால் அழித்துவிடுங்கள்’ என்று கூறினார்கள்.

பின்பு நபித்தோழர்களுக்கு குர்ஆனையும், ஹதீஸையும் பிரித்து விளங்கும் ஆற்றல் ஏற்பட்டவுடன் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸை எழுத அனுமதியளித்து, ஆர்வமூட்டியதுடன் பல சமயங்களில் ஏவவும் செய்தார்கள்.

 ஹதீஸ்களை பாதுகாப்பது அவசியம் 

ஒருமுறை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சபையில் அமர்ந்திருந்த அன்ஸாரி ஸஹாபி ஒருவர் ‘நபி அவர்களே! நான் நல்ல பல விஷயங்களை தங்களிடமிருந்து செவியுறுகிறேன். பின்பு மறந்து விடுகிறேன்’ என்று கூறியபோது ‘உங்களது வலத கை மூலம் உதவி பெற்றக் கொள்ளுங்கள்’ எனக் கூறி எழுதும்படி சைக்கினை செய்தார்கள்.

ஹளரத் அப்துல்லாஹிப்னு அம்ரிப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கும் அனைத்து விஷயங்களையும் நான் எழுதிக் கொண்டிருந்தேன். இதைக்கண்ட குரைஷிகள், ‘நபியும் மனிதர் தான். அவர்கள் கோபத்திலும், சந்தோஷத்திலும் பேசக்கூடிய அனைத்த விஷயங்களையும் நீர் எழுதுவது முறையல்ல’ என்று என்னைக் கண்டித்தனர். இதன் பிறகு நான் எழுதுவதை விட்டுவிட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இதனை நான் தெரிவித்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் நாவை சுட்டிக்காட்டி ‘எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன்மீது சத்தியமாக இந்த நாவிலிருந்து உண்மையைத்தவிர வேறு எதுவும் வராது’ என்றார்கள்.

இறைவன் தனது திருமறையில் ‘நாம் உம் மீது இந்த குர்ஆனை இறக்கி வைத்தோம். அம்மக்களுக்கு இறக்கி வைக்கப்பட்டதை அவர்களுக்கு நீங்கள் விளக்குவதற்காக’ என்று கூறியுள்ளான். குர்ஆனைப் பாதுகாப்பதைப் போன்றே அதன் விளக்கமாக அமைந்துள்ள ஹதீஸ்களை பாதுகாப்பதும் அவசியம் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளலாம்.

 www.nidur.info