Home கட்டுரைகள் அரசியல் இலவசங்கள் மக்கள் பணத்தைக் கொண்டுதான் வழங்கப்படுகின்றன!
இலவசங்கள் மக்கள் பணத்தைக் கொண்டுதான் வழங்கப்படுகின்றன! PDF Print E-mail
Monday, 21 March 2011 10:36
Share

[ இலவச டிவி கொடுத்த அரசு, கேபிள் கட்டணத்தையும் இலவசமாக்கியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? இலவசத் தொலைக்காட்சிப் பெட்டியை அரசு கஜானாவில் கையை வைத்து விநியோகித்துத் தங்களது குடும்பக் கேபிள் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்க நடந்த அதிகாரபூர்வமான அதிகார துஷ்பிரயோகத்தைத் தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு நடந்த விஞ்ஞானபூர்வ முறைகேடுதானே இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம்?

இதேபோன்று இலவச சமையல் எரிவாயு திட்டத்திலும், ஏழைக்கு தேவையில்லாத செலவை உண்டாக்கியதைத் தவிர வேறு என்ன பலன்? குடும்பத் தலைவர் இந்த இலவச எரிவாயுவை வணிக நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, பணத்தைக் குடித்துத் தீர்த்தார். பெண்கள் தங்களுக்குக் கிடைத்துவந்த மண்ணெண்ணெய் அளவும் குறைந்துபோனதால் அதிக விலை கொடுத்து மண்ணெண்ணெய் வாங்கும் கட்டாயத்துக்கு உள்ளாகினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இத்தகைய இலவசத் திட்டங்கள் அரசை கடனாளியாக்குவதோடு, அதைப் பெறும் மக்களையும் கடனாளியாக்கிவிடுகிறது.

இந்தத் திட்டங்களை மிக நுட்பமாக ஆராய்ந்தால், இலவசங்கள் உண்மையில் மக்கள் பணத்தைக் கொண்டுதான் வழங்கப்படுகின்றன என்பதும், இதைப் பெறும் மக்கள் ஒரு ரூபாய் இலவசத்துக்கு இரண்டு ரூபாய் கூடுதல் செலவு செய்ய நேரிடும் அதே வேளையில், அரசியல்வாதிகள் ஒரு ரூபாய்க்கு 50 காசுகள் லாபம் அடைவது நடந்து கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.]

' வாக்காளர்கள் விட்டில் பூச்சிகளா?

இன்று தமிழகத்தின் இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் காட்டிலும், தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்கு இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, வாக்குறுதிகளாக்குவதுதான் ஆளும் திமுகவின் குறிக்கோளாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது திமுகவின் தேர்தல் அறிக்கை. தேர்தல் ஆணையம் எதிர்க்க முடியாதபடி எவ்வாறு மக்கள் வரிப் பணத்தை இலவச நலத் திட்டங்கள் என்கிற பெயரில் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கலாம் என்பதை மட்டுமே திமுக யோசிக்கிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது அக்கட்சியின் தேர்தல் அறிக்கை.

தேர்தலுக்கு முன்பாக வீடு வீடாக, அவர்களது வாக்காளர் வரிசைஎண் சீட்டுடன் பணக்கட்டுகளை இணைத்து வீசிச் செல்வதற்கும், தேர்தலுக்குப் பிறகு குடும்ப அட்டை உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசப் பொருள்களைக் கொடுப்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கமுடியும்?

தேர்தல் அறிக்கை என்பது ஒரு மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக இருக்க வேண்டுமே தவிர, மக்களை வெறும் இலவச ஆசைகளில் தள்ளி, காரியம் சாதிப்பதாக இருத்தல் கூடாது. அவர்களது எளிய பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்வது ஆட்சியைப் பிடிக்கவும், அதன் மூலம் ஆட்சியாளர்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும் பயன்படுமே தவிர, ஒரு மாநிலத்தின் மேம்பாட்டுக்கு எந்த வகையில் உதவும்?

இத்தகைய இலவசத் திட்டங்கள் அரசை கடனாளியாக்குவதோடு, அதைப் பெறும் மக்களையும் கடனாளியாக்கிவிடுகிறது.

தற்போது திமுக இவ்வாறாக இலவசங்களை அறிவித்துள்ளதால், அதிமுகவும் போட்டிக்குச் சில இலவசங்களை அறிவிக்கக்கூடும். இதன் முடிவுதான் என்ன?

குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவச டிவி வழங்கப்பட்டது. வசதி படைத்தவர்களும் இதை ஒரு விளையாட்டாக வாங்கி, குறைந்த விலையில் விற்றார்கள். தமிழ்நாட்டின் எந்த ஊரிலும் சிறிய தங்கும் விடுதிகளில் தமிழக அரசின் இலவச டிவி இருப்பதே இதற்கு சாட்சி.

o மேலும் இந்த டிவியைப் பெற ரூ.100 லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த டிவிக்களில் பல உயர்மின்அழுத்தம் தாளாமல் வெடித்தபோது, இந்த டிவி பார்க்கும் வழக்கத்துக்குப் பழகிப்போன ஏழைத் தொழிலாளி புதிதாக பல ஆயிரம் செலவில் மாதத் தவணையில் டிவி வாங்க வேண்டிய குடும்ப நெருக்கடிக்கு ஆளானார். மேலும் மாதம்தோறும் கேபிள் கட்டணம் ரூ.150 (அவருடைய ஒருநாள் கூலி) வழங்க வேண்டியிருந்தது.

o இலவச டிவி கொடுத்த அரசு, கேபிள் கட்டணத்தையும் இலவசமாக்கியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? இலவசத் தொலைக்காட்சிப் பெட்டியை அரசு கஜானாவில் கையை வைத்து விநியோகித்துத் தங்களது குடும்பக் கேபிள் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்க நடந்த அதிகாரபூர்வமான அதிகார துஷ்பிரயோகத்தைத் தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு நடந்த விஞ்ஞானபூர்வ முறைகேடுதானே இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம்?

o இதேபோன்று இலவச சமையல் எரிவாயு திட்டத்திலும், ஏழைக்கு தேவையில்லாத செலவை உண்டாக்கியதைத் தவிர வேறு என்ன பலன்? குடும்பத் தலைவர் இந்த இலவச எரிவாயுவை வணிக நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, பணத்தைக் குடித்துத் தீர்த்தார். பெண்கள் தங்களுக்குக் கிடைத்துவந்த மண்ணெண்ணெய் அளவும் குறைந்துபோனதால் அதிக விலை கொடுத்து மண்ணெண்ணெய் வாங்கும் கட்டாயத்துக்கு உள்ளாகினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

o அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தாமல், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை என்று அறிவிக்கப்பட்டாலும், இத்திட்டத்தில் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும் சிகிச்சைகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன. மேலும், நோய் கண்டறிதலுக்கான மருத்துவ சோதனைச் செலவுகளும், சிகிச்சைக்குப் பிந்தைய மருந்து மாத்திரைகளும் ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 வரை செலவு வைத்தது. இந்த மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் வாங்கவும் வழியில்லாமல் போனது. காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் தொகையைக்கொண்டு மருத்துவமனைகளை மேம்படுத்தினால், அனைவருக்கும் அங்கே இலவச சிகிச்சை அளிக்க முடியும்.

o தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்கிறது திமுக தேர்தல் அறிக்கை. அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் இலவசக் கல்வி என்று அரசால் அறிவிக்க இயலுமா? ஏனென்றால் அத்தனை தனியார் கல்லூரிகளும் அரசியல்வாதிகளின் பினாமிகளால் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவே தமிழக அரசால் முடியவில்லை என்பதுதான் கடந்த இரு ஆண்டுகளாக எல்லோரும் கண்ட காட்சி.

o இலவசங்களையும் கடன்பட்டுத்தான் வழங்குகிறார்கள் என்பதோடு, இந்தச் செலவை ஈடுகட்ட மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக மதுவினால் வருவாய் கிடைக்கிறது. இந்த மது தயாரிப்பில் லாபம் அடைவோரும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளே. அண்மையில் ஒரு வாரஇதழில் எந்தெந்த அமைச்சருக்கு மதுபானத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன, புதிதாக அனுமதி பெற்றுள்ளார்கள் என்று பட்டியலே வெளியிடப்பட்டிருந்தது. மக்கள் பணத்தை இப்படியாக மதுவினால் உறிஞ்சி, அதையே திருப்பிக் கொடுப்பது எவ்வகையில் சரி?

o இந்தத் திட்டங்களை மிக நுட்பமாக ஆராய்ந்தால், இலவசங்கள் உண்மையில் மக்கள் பணத்தைக் கொண்டுதான் வழங்கப்படுகின்றன என்பதும், இதைப் பெறும் மக்கள் ஒரு ரூபாய் இலவசத்துக்கு இரண்டு ரூபாய் கூடுதல் செலவு செய்ய நேரிடும் அதே வேளையில், அரசியல்வாதிகள் ஒரு ரூபாய்க்கு 50 காசுகள் லாபம் அடைவது நடந்து கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

நன்றி: தினமணி