Home குடும்பம் பெண்கள் டிவி சீரியல் கொடுமைகளில் பெண்கள்!
டிவி சீரியல் கொடுமைகளில் பெண்கள்! PDF Print E-mail
Friday, 18 March 2011 07:36
Share

[ "என்ன, ஊர்ல நாட்ல நடக்காததையா காமிக்கிறாங்க? இதெல்லாம் பாத்துத் தான் ஊர் உலகத்துல இப்படி எல்லாம் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கணும்" என்றும் ‘விஷய ஞானத்துடன்’ பேசுபவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

உண்மையில் சமூகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏழைகளுக்கும் நடக்கும் எத்தனையோ கொடுமைகளை இதே ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. அதை விடுத்து இல்லாத அபத்தங்களைப் புனைந்து காண்பித்து நம்மைப் பதைபதைப்புடன் பார்க்க வைக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

அறியாமையை மூலதனமாக்கி லாபம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல் அதை உரம் போட்டு வளர்ப்பதிலும் இந்தச் சீரியல்களுக்குப் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது தான் நிதர்சனம்.

ஒரு பெண் சொல்கிறார். "நான் இந்தச் சீரியல்களையெல்லாம் கதைக்காகப் பார்ப்பதே இல்லை. அதில் வரும் பெண்கள் அணிந்திருக்கும் புடவைகள் நகைகள் இதிலிருந்து லேட்டஸ்ட் ஃபாஷன் என்னவென்று தெரிந்து கொள்ளத்தான் பார்க்கிறேன்" என்று.]

டிவி சீரியல்கள், அதுவும் மெகா சீரியல்களின் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம். இந்தியாவில் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒரு பத்தாண்டு காலத்தில் விளம்பரதாரர் வழங்கும் நிகழ்ச்சிகளாக தினமும் அரைமணி நேரம் ஏதாவது ஒரு நாடகம் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்தி தூர்தர்ஷனில் ஓரளவுக்குத் தரமான தொடர் நாடகங்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தன.

தொடர்ந்து சென்னைத் தொலைக்காட்சியிலும் பதின்மூன்று வாரங்கள் வருமாறு சில நாடகங்கள் வந்தன. இவற்றினால் பெரிய அளவுக்கு நல்லவை அல்ல என்றாலும் கெட்டவையாகவும் இல்லை. மேலும் சினிமாவில் இடமில்லாத இலக்கியங்களுக்கும் சமூக அக்கறையுள்ள நிகழ்ச்சிகளுக்கும் தொலைக்காட்சியில் இடமிருக்கும் எனறு ஒரு நம்பிக்கை இருந்தது. எல்லாம் அடியோடு மாறிப் போனது சாட்டிலைட் டிவிக்களின் படையெடுப்பில்.

சாட்டிலைட் டி.வி. வந்தது முதல் ஸ்டார் டிவி போன்ற ஆங்கில சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட "போல்ட் அண்ட் பியுட்டிஃபுல்", "சண்டா பார்பரா" "டைனாஸ்டி" போன்ற பல வருடங்களுக்கும் மேலாக ஓடிய அந்தத் தொடர்கள் தான் நம் தயாரிப்பாளர்களுக்கு பேராசை வரக் காரணமாக இருந்த முன்னோடிகள். சில வாரங்களுக்காக மட்டுமே கதை தேடி தயாரித்துச் சொற்பக் காசுபார்த்து வேறொரு தயாரிப்பாளருக்கு "ஸ்லாட்டை" ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? மொத்தமாக ‘ஸ்லாட்’ புக் பண்ணி வைத்துக் கொண்டு கதை பண்ணிக் கொண்டே போகலாமே? அந்த மேல்நாட்டு சீரியல்களை நான் பார்த்ததில்லை. அதனால் அவை பற்றிய விமர்சனம் கூற நான் ஆளில்லை. ஆனால் அவை நமக்கு விளைவித்த கேடுகள் நமது மெகா சீரியல்கள்.

இவர்களின் முக்கிய டார்கெட்டுகள் கணவனையும் குழந்தைகளையும் அனுப்பிவிட்டு வீட்டில் தனிமையைக் கொல்லப் போராடும் பெண்கள் தான். அதனால் இந்த சீரியல்களில் நாயகிகளுக்குத் தான் முக்கியத்துவம். முக்கியத்துவம் என்று இங்கே குறிப்பிடுவது நிச்சயம் பாத்திரப்படைப்பின் மேன்மைக்காக அல்ல.

இந்தக் கட்டுரை எழுதுவதற்காக சமீபத்தில் தவிர்க்கமுடியாமல், சில சீரியல்களைப் பார்க்க நேர்ந்தது. ஆஹா, என்ன அழகுக் காவியங்கள் அவை! எந்தவித லாஜிக்கும் இல்லாமல், நம்பவே முடியாத திடுக்திடுக் அல்லது மொக்கையான சம்பவங்கள் சேர்த்து புனையப்பட்ட கதைகள். கதையில் வரும் பாத்திரங்கள் மீது மட்டுமல்ல பார்க்கும் பெண்கள் மீதும் எவ்வளவு அலட்சியமான மதிப்பீடு இருந்தால் இப்படிப் பட்ட குப்பைகளை கூவிக் கூவி விளம்பரம் செய்து ஒளிபரப்புவார்கள் என்று தோன்றுகிறது. எந்தக் கழிசடையைக் காண்பித்தாலும் பார்ப்பார்கள் என்கிற மனோபாவம் தான் இதற்குக் காரணம் என்று நினைக்கும் போது ஆத்திரமே வருகிறது. ஆம், நான் பார்த்தவரை அப்படித் தான் இருக்கின்றன இந்தச் சீரியல்கள்.

பிரபலமான சீரியல் ஒன்றில் வரும் நிகழ்ச்சி: மனைவி விபத்தொன்றில் தாயாகும் தன்மையை இழக்கிறாள். அதனால் கணவனுக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயல்கிறாளாம். அவள் கணவன், "யார் வந்தாலும் நீ தான் எனக்கு முக்கியம். அடுத்து வர்றவளுக்கு இரண்டாம் இடம் தான்" என்கிறானாம். அவள் புல்லரித்துப் போகிறாள். நமக்கோ டிவியை உடைத்து விடலாம் போல கை அரிக்கிறது.

ஆண்கள் பலமணம் புரிவது காலங்காலமாக நடப்பது தானே? இதில் என்ன புதுமையைக் கண்டுவிட்டார்கள்?

தன்னிடம் குறை என்று தெரிந்தும் அதை மறைத்து மனைவியின் வாழ்வை நிர்மூலமாக்க்கும் ஆண்கள் இன்றளவும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? தந்தையாக இயலாத ஒரு கணவன் தன் மனைவியை மறுமணம் செய்து கொள்ளத் தூண்டுமாறு ஏன் காண்பிக்கக் கூடாது?

இன்னொரு சீரியல். படிக்காத, வீட்டுவேலைகள் ஒழுங்காகப் பொறுப்பாகப் பார்க்கும், அன்பும் பொறுமையுமே உருவான பெண் தான் நாயகி. (வேறு மாதிரி எப்படி இருக்க முடியும்?) வேலைக்குப் போகும் அவளது அண்ணி அவளுக்குக் கேடு விளைவிக்கும் வில்லி! வேலைக்குப் போவதாகச் சொல்லிக் கொண்டு அவள் தன் நாத்தனாருக்குப் பிரச்னைகள் உண்டாக்கும் வேலைகளில் ஈடுபடுகிறாள். (வேலைக்குப் போகும் மருமகளா, எச்சரிக்கை!)

இன்னொரு அவியல், சாரி சீரியல்.. இதில் பள்ள்யில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண் தன் முறைமாமனைக் கல்யாணம் செய்து கொள்வதே தன் லட்சியம் என்று திரிகிறாள். அதே மாமனைத் தீவிரமாகக் காதலிப்பது, நன்கு படித்துச் சொந்தக் காலில் நிற்கும் ஒரு ஆஃபிஸர் பெண்மணி. என்ன பேராசையடா இந்த ஆண்களுக்கு?!

பொதுவாகவே சீரியல் நாயகிகள் இழுத்துக்கட்டிய பின்னல் அல்லது கொண்டை மற்றும் எட்டுமுழப் புடவைகளில் வருகிறார்கள். பெரும்பாலான வில்லிகள் குட்டை முடி வைத்திருக்கிறார்கள், சிலர் ஜீன்ஸ் அணிந்திருக்கிறார்கள். இதுவும் ஒரு விஷமத்தனமான ஸ்டீரியோடைப். எல்லா சீரியல்களிலும் நாயகிகள் மைபூசிய கண்களுடன் குடம் குடமாக அழுகிறார்கள். வில்லிகள் லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு சிரிக்கிறார்கள்.

இதையெல்லாம் யார் பார்க்கச் சொல்கிறார்கள்? சானலை மாற்றிக் கொண்டு போக வேண்டியது தானே என்று சொல்பவர்கள் எத்தனை பேர் வீட்டில் தினம் இரண்டு சீரியலாவது பார்க்காத பெண்கள் இருக்கிறார்கள்? பல வீடுகளில் ஆண்களும் அல்லவா போட்டி போட்டுக் கொண்டு பார்க்கிறார்கள்.

ஆண்களைக் கவர்வதற்கென மாமியார் நாத்தனார், மருமகள்கள் வில்லிகள் பழிவாங்கல்கள் போதாதென்று இப்போதெல்லாம் கொலை, கற்பழிப்பு போன்ற மசாலா ஐட்டங்களையும் சேர்த்துக் கனஜோராக நமது வரவேற்பறையில் பரிமாறுகிறார்கள்.

"என்ன, ஊர்ல நாட்ல நடக்காததையா காமிக்கிறாங்க? இதெல்லாம் பாத்துத் தான் ஊர் உலகத்துல இப்படி எல்லாம் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கணும்" என்றும் ‘விஷய ஞானத்துடன்’ பேசுபவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா? உண்மையில் சமூகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏழைகளுக்கும் நடக்கும் எத்தனையோ கொடுமைகளை இதே ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. அதை விடுத்து இல்லாத அபத்தங்களைப் புனைந்து காண்பித்து நம்மைப் பதைபதைப்புடன் பார்க்க வைக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? அறியாமையை மூலதனமாக்கி லாபம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல் அதை உரம் போட்டு வளர்ப்பதிலும் இந்தச் சீரியல்களுக்குப் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது தான் நிதர்சனம்.

ஒரு பெண் சொல்கிறார். "நான் இந்தச் சீரியல்களையெல்லாம் கதைக்காகப் பார்ப்பதே இல்லை. அதில் வரும் பெண்கள் அணிந்திருக்கும் புடவைகள் நகைகள் இதிலிருந்து லேட்டஸ்ட் ஃபாஷன் என்னவென்று தெரிந்து கொள்ளத்தான் பார்க்கிறேன்" என்று. இது வேறயா?

எது எப்படியோ, சீரியல் பார்க்கும் பழக்கமுடைய, நம் அன்புக்குரிய நான்கு பெண்களையாவது இம்மடமையை விட்டொழிக்கத் துணை புரிவோம் என்று இந்த மகளிர் தினத்தில் உறுதி எடுத்துக் கொள்வோமா?

– தீபா

source: http://wp.me/pvMZE-2Wl