Home குடும்பம் ஆண்கள் ஆண்களுக்கு ஆபத்து!
ஆண்களுக்கு ஆபத்து! PDF Print E-mail
Thursday, 03 February 2011 08:40
Share

ஆண்களுக்கு ஆபத்து! 

     கே.என். ராமசந்திரன்     

[ மனித இனத்திலும் ஆண்களிடத்தில் மலட்டுத் தன்மை அதிகமாகி வருவதைப் பற்றி மருத்துவர்களும் அரசு உடல் நலத் துறையினரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயத்தில் ஆண்களில் பெண்மையை உண்டாக்கும் வேதிகளின் விளைவுகளைப் பற்றிப் புதிய கண்டுபிடிப்புகள் வெளியாகிக் கலக்கத்தை அதிகப்படுத்தி வருகின்றன. 1989-க்கும் 2002-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்களின் விந்தணுக்களின் சராசரி எண்ணிக்கையில் முப்பது சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் நடத்தப்பட்ட சில ஆய்வுகள் காட்டுகின்றன.]

கூடிய விரைவில் உலகிலுள்ள எல்லா உயிரினங்களுமே பெண்பாலாக ஆகிவிடுகிற ஆபத்து தோன்றியிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பிரிட்டனின் கடல் வாழ் உயிரினங்களிலும் காடு வாழ் உயிரினங்களிலும் இத்தகைய பால் மாற்றம் தென்படத் தொடங்கியிருக்கிறது. அது தொடருமானால் 3.5 பில்லியன் ஆண்டுகளாக நடைபெற்று வருகிற பரிணாமச் செயல்பாடு குலைந்து போகும். வெல்க் (Whelk) என்கிற பெரிய கடல் நத்தைகளில் இந்தப் போக்கு முதன்முதலாகத் தென்பட்டது. உணவுத் தொடரில் (food chain) இடம் பெறுகிற மற்ற உயிரினங்களிலும் இந்தப் போக்கு விரைவாகப் பரவி வருகிறது.

2004-ஆம் ஆண்டில் பிரிட்டன் சுற்றுச்சூழல் முகமை ஆறுகளில் வாழும் ஆண் மீன்களில் மூன்றில் ஒரு பங்கு மீன்களுக்குப் பெண்பாலுக்குரிய உறுப்புகளும் இனப்பெருக்கத் திசுக்களும் உருவாகியிருப்பதைக் கண்டுபிடித்தது. இளம் மீன்களில் இந்த விளைவு கூடுதலாகத் தென்பட்டது. எதிர்காலத்தில் மீன்வளம் அழிந்து போகக்கூடும் என்ற அச்சம் பரவி வருகிறது. ஸீல்கள், டால்பின்கள், நீர் நாய்கள் போன்ற கடல் வாழ் உயிரினங்களிலும், வேட்டை வல்லூறு போன்ற பறவைகளிலும் தேனீ வகைகளிலும் மெல்ல மெல்ல ஆண்களின் தொகை அருகி வருகிறது. ஒரு நாள் பெண் பால் உயிரினங்கள் மட்டுமே எஞ்சும் நிலை ஏற்பட்டு அவை முற்றாக அழிந்து விடக் கூடும்.

இதற்கெல்லாம் பொறுப்பு மனிதனே. நாம் பயன்படுத்துகிற பிளாஸ்டிக்குகள், ஷாம்பூக்கள், பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றில் உள்ள ஒரு வேதி, நாளமில்லாச் சுரப்பிகளைப் பாதித்து நிணநீர்களையும் ஹார்மோன்களையும் கெடுக்கிறதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழலில் அத்தகைய வேதிகளின் அளவு கூடிக்கொண்டே போகிறது. அவை உடலுக்குள் புகுந்த பின் ஈஸ்ட்ரோஜன் என்ற பெண்பால் ஹார்மோனைப்போல நடிக்கின்றன. ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் அளவில் சுருங்குவது பாலுறவில் நாட்டமின்மை, விதைகளின் பகுதிகள் பெண்களின் முட்டையாகத் (Ovary) திசுக்களாக மாறுவது போன்ற விளைவுகள் ஏற்படும்.

உணவுத் தொடரின் கீழ்நிலை உயிரினங்களில் தற்போது தென்படும் இத்தகைய விளைவுகள் உயர்நிலை உயிரினங்களுக்கும் கடைசியில் மனிதர்களுக்கும் பரவக்கூடும். இப்போதே மனித ஆண்களில் விந்தணுக்களின் சராசரி எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆண் மலட்டுத்தன்மை பெருகி வருகிறது. சார்லஸ் டெய்லர் என்ற ஆங்கிலேய உயிரியல் பேராசிரியர் ஓர் உயிரினம் இனப்பெருக்கம் செய்யும் திறனை இழந்து விடுகிற கட்டம் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்.

இத்தகைய பால் மாற்றம் ஒரு பெரிய பயங்கரம் நிகழப் போவதை முன்ன றிவிப்புச் செய்கிற அபாய அறிவிப்பு. பாலியல் மாற்றங்களை ஏற்படுத்தும் வேதிகளை உடனடியாகத் தடை செய்ய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ உதவும் தேனீக்களின் உடலில் இந்த வேதிகளைச் செலுத்திய போது ஆண் ஈக்களின் பாலுறவு நாட்டம் வெகுவாக மங்கிப் போனதையும் ராணித் தேனீக்கள் இடும் முட்டைகளின் எண்ணிக்கை யும் கணிசமாகக் குறைந்து போனதையும் ஆய்வர்கள் கண்டுபிடித்திருக் கிறார்கள்.

இங்கிலாந்தின் வடகடலில் வாழும் புட்டிமூக்கு டால்பின்களின் ஆண் குட்டிகளில் பிறவி ஊனங்கள் ஏற்பட இந்த வேதிகள் காரணமாயிருக்கின்றன. அந்த ஆண் குட்டிகள் சிசுப் பருவத்திலேயே மரணமடைவதும் அதிகரித்திருக் கிறது. அதன் காரணமாக அந்த மீன் கூட்டங்களின் சராசரி வயது அதிகமாகி விடுகிறது. முதிய மீன்களுக்கோ பாலுறவில் நாட்டமும் குறைந்திருக்கிறது.

இங்கிலாந்தின் கடற்பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே நீர் நாய்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வந்தது. பெண் பாலாக்கும் வேதிகளின் தாக்கத்தால் நீர்நாய்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய ஆங்கிலேய அரசு நிதி ஒதுக்கியது. அதன் பிறகு கடந்த சில ஆண்டு களில் நீர் நாய்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயரத் தொடங்கியுள்ளது. ஆறுகளில் கிடைக்கும் புழு பூச்சிகளை உண்டு வாழும் டிப்பர் (dipper) இனப் பறவைகளும் இத்தகைய வேதிகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யவும் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலத்தில்தான் பாலியல் மாற்ற வேதிகளைப் பற்றித் தெரிய வந்தது. இதற்கு முன் அவற்றைத் தடை செய்யும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அரசுகளும் அந்த வேதிகள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆய்வு செய்வதில் அக்கறை காட்டவில்லை. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செயற்கை வேதிகள் அரசு அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 550 வேதிகள் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டைக் குலைக்கக் கூடியவை என ஐரோப்பிய யூனியன் அடையாளம் கண்டிருக்கிறது.

பிரீம் (Bream) கெண்டை (Carp), ரோச் (roach), கஜன் (gudgeon) போன்ற நன்னீர் மீன்களின் இனப்பெருக்க உறுப்புகள் பால் மாற்றமடைந்திருப்பதற்கும் வட கடலில் வாழும் சாம்பல் நிற ஸீல்களில் ஹார்மோன் சீர்குலைவுகள் ஏற்பட்டிருப்பதற்கும் எந்த வேதிப்பொருள் காரணம் என்றறிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தின் தேனீக்கள் ஆண்மையிழந்து வருவதற்கு வயல்களிலும் தோட்டங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் விவசாய வேதிகளே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனித இனத்திலும் ஆண்களிடத்தில் மலட்டுத் தன்மை அதிகமாகி வருவதைப் பற்றி மருத்துவர்களும் அரசு உடல் நலத் துறையினரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயத்தில் ஆண்களில் பெண்மையை உண்டாக்கும் வேதிகளின் விளைவுகளைப் பற்றிப் புதிய கண்டுபிடிப்புகள் வெளியாகிக் கலக்கத்தை அதிகப்படுத்தி வருகின்றன. 1989-க்கும் 2002-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்களின் விந்தணுக்களின் சராசரி எண்ணிக்கையில் முப்பது சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் நடத்தப்பட்ட சில ஆய்வுகள் காட்டுகின்றன.

இங்கிலாந்தில் உள்ள தம்பதிகளில் ஆறில் ஒரு பங்கினர் கருத்தரிப்பதற்கு மருத்துவர்களின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கருத்தடை மாத்திரைகளை உட்கொள்கிற பெண்களின் கழிவுப்பொருள்கள் குடிநீர் வழங்கும் ஆதாரங்களில் கலந்து மாசுபடுத்துவது இதற்கான காரணங்களில் ஒன்றெனக் கண்டறியப் பட்டிருக் கிறது. உணவுப்பொருள்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் புட்டிகள் தவிர கண்ணாடிக் கலன்களிலும் பெயர், பிராண்டு முதலியவற்றை அச்சிடப் பயன்படுத்தப்படுகிற சாயப் பொருள்களிலும் இத்தகைய சந்தேகத்துக்குரிய வேதிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பின்விளைவுகளை அறியாமல் மனிதன் பயன்படுத்துகிற எல்லாச் செயற்கை வேதிகளும் முதலில் கீழ்நிலை உயிரினங்களைப் பாதிக்கத் தொடங்கும் போதே கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. கூட்டல் விளைவு காரணமாக அந்தப் பாதிப்புகள் எல்லாம் மனித இனத்தின் தலையில் வந்து விடிவும் கால கட்டம் வருவதற்கு முன் காப்பு நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

source: http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?t2987.html