Home கட்டுரைகள் குண நலம் இன்பம் எங்கே?
இன்பம் எங்கே? PDF Print E-mail
Saturday, 04 December 2010 07:48
Share

இன்பம் எங்கே..... இன்பம் எங்கே...?

இன்பமாக வாழவே எல்லாரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்திலேயே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. எனவே இன்பத்தின் முடிவில் துன்பமும், துன்பத்தின் எல்லையில் இன்பமும் இருக்கும். இரவு, பகல், மேடு, பள்ளம், உயர்வு, தாழ்வு, மேல், கீழ் என்று வருகின்ற இணைகள் இவை.

ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் இன்னொருவருக்குத் துன்பம் தருகிறது. பாகற்காய் பொதுவாகக் கசக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிக்கு "இனிக்கிறது'.

ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் எல்லாருக்கும் இன்பம் தர வேண்டுமல்லவா? விளையாட்டுப் பொம்மை குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. குமரிப் பருவத்தில் விளையாட்டுப் பொம்மை மகிழ்ச்சியளிக்குமா? இன்று மகிழ்ச்சியளிக்கும் மனைவியோ, மகனோ மற்ற பொருள்களோ நாளை துன்பம் தரும் சூழலை உருவாக்கிட வாய்ப்பு உண்டு. எனவே இன்பம் உலகியல் பொருள்களில் இல்லை.

சில நேரங்களில் நமக்குத் துன்பம் உண்டாகிறது. நாம் விரும்பிய பொருள் கிட்டவில்லை. உலகியல் ஆசை நிறைவேறவில்லை. துன்பத்தால் மனம் இடிந்து போய் விடுகிறது. உடல் பிணியாலும், பொருள் இன்மையாலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவராலும் ஒவ்வொரு பிரச்சினை உண்டாகிறது. பிரச்சினை தொடர் கதையாகிறது.

வணிகத்தில் தோல்வி, வாங்கிய கடனைத் திருப்ப முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். துன்பப்படுவதற்கு என்றே இறைவன் என்னைப் படைத்து விட்டானோ என்று புலம்புகின்றனர்.

நாம் இன்பம் அடைய நாமே காரணம் என்று மார்தட்டுகிறோம். ஆனால் துன்பம் வந்தால் எதிரே இருப்பவர்தான் காரணம் என்று கருதுகிறோம்.

பிரச்சினைகள்தாம் இன்ப துன்பத்திற்குக் காரணம், பிரச்சினை ஏதும் இல்லாவிட்டால் வாழ்க்கை ஒளிமயமாகும் என்று பலர் கருதுவர். பிரச்சினை யாருக்குத்தான் இல்லை? சிலர் தமக்கு ஏற்பட்ட பிரச்சினையை எண்ணி எண்ணி பயந்து சிறு விவகாரத்தைப் பூதாகரமாக்கி அலைந்து திரிவர்.

எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என அமைதி அடையவேண்டும். அடுத்தடுத்து வரும் அலைகள் போல் பிரச்சினை வந்து கொண்டேதான் இருக்கும். சில நேரங்களில் தீவிரமாக இருக்கும். பின்னர் அழுத்தம் குறைந்து போகும். நாம் வருந்தும் வரை பிரச்சினையின் தாக்கம் இருக்கும். புயலுக்குப்பின் அமைதி, என்பது போல் பிரச்சினையின் முடிவில் நிறைவு உண்டாகும்.

ஒரு மனிதனுக்கு பகைவன் இன்னொரு மனிதன் மட்டும் அல்லன். பிரச்சினை, பதற்றம், அச்சம், அருவருப்பு, அவநம்பிக்கை போன்ற தீய பண்புகளும் தாம்.

இப்படிப்பட்ட பகைவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். தொடர்ந்து நாமும் போரிட்டு இப்பண்புகளை வெற்றி கொள்ள வேண்டும். இச் செயலிலும் உள்ளார்ந்த மகிழ்ச்சி உண்டு. பிரச்சினை இல்லா வாழ்வு சுவைக்காது. இறந்து விட்ட பிணத்திற்குத்தான் பிரச்சினை ஏதும் இல்லை.

ஒட்டகம் முட்செடியைத் தின்ன விரும்புகிறது. ஆனால் முட்செடியைத் தின்னும் போது அதன் வாயிலிருந்து இரத்தம் வடிகிறது. என்றாலும் தின்னுவதை நிறுத்தவில்லை. இதுபோன்றே மக்கள் போதைப் பொருளுக்கும், புகைப் பொருளுக்கும் அடிமையாகி விடுகின்றனர். இத்தகு பழக்கங்களால் ஏராளமானவர்கள் மாண்டு போகின்றனர் என்ற செய்தியை நாளேடுகள் நமக்கு அறிவுறுத்துகின்றன. என்றாலும் தீது உணர்ந்தும் பழக்கத்தில் ஊறிப் போனவர்கள் மன மாற்றம் பெற வழிவகை செய்தல் ஏற்புடையதாகும்.

உலகத்தை இன்பமாகவோ துன்பமாகவோ அமைத்துக் கொள்ள மனிதனுடைய மனப்பக்குவம் காரணமாகிறது.

இரண்டினும் பாதிக்கப்படாத சமநிலை பெற வேண்டும். உலகியல் வாழ்வில், பொது நல நாட்டம் கொண்டவன் எப்போதும் இன்பத்தில் இருப்பான். சுய நல நோக்கம் கொண்டவன் பெறுவது துன்பமே. நாம் பிறருடன் உறவு ஏற்படுத்தப் பாலம் அமைப்போம்.

இன்பத்தில் சிரிக்கும் போது மனம் மலருகிறது. உடல் உறுப்புகள் எழுச்சி பெறுகின்றன.

சுரப்பிகள் சுறுசுறுப்பாய் பணிபுரிகின்றன. உயிர் ஆற்றல் உத்வேகம் பெறுகிறது. நோய் நொடிகள் தாக்க அஞ்சுகின்றன.

எனவே துன்பத்தைக் கண்டு கலங்காமல் ""எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா'' என்று இறுமாப்புடன் எதிர் கொள்வோம்.

- க.திருநாவுக்கரசு, வெண்ணந்தூர்

நன்றி: நிலா முற்றம்