Home கட்டுரைகள் பொது நம்மூரில் காணாமல் போன பழக்க வழக்கங்கள்!
நம்மூரில் காணாமல் போன பழக்க வழக்கங்கள்! PDF Print E-mail
Monday, 25 October 2010 08:25
Share

நம்மூரில் காணாமல் போன பழக்க வழக்கங்கள்!

       மு.செ.மு. நெய்னா முஹம்மது       

உலகை நவீன தொழில் நுட்பமயம் ஆட்டிப்படைத்து ஆட்சி செலுத்தி வருவதை நாம் அறிவோம். அதன் தாக்கம் பெருநகரங்கள் முதற்கொண்டு, சிற்றூர்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் படிப்படியே சென்றடைவதை நாம் பல விசயங்களில் பார்த்து வருகிறோம். அதன் சாரமாக நம்மூரில் காணாமல் போன சில பழக்க, வழக்கங்களை இங்கு முடிந்த வரை ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்தலாம் என்று விரும்புகிறேன்.

1. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கும் இரவு நேரங்களில் பள்ளிகளின் பாங்கு கொடுத்த பின் அடிக்கப்படும் நஹராக்களின் ஒலி இன்று பெரும்பாண்மையான பள்ளிகளில் 'இன்வெண்ட்டர்' வந்த பிறகு கேட்க முடியவில்லை.

2. வீட்டின் பல விசேச தருணங்களில் மற்றும் சம்மந்தி வீட்டாரை சந்தோசப்படுத்த வீட்டிலேயே ஆள் வைத்து அல்லது ஆள் வைக்காம‌ல் மாவு இடித்து சுட்டுத்த‌ர‌ப்ப‌டும் பூவ‌டை, நானா ஹ‌த்த‌ம், அரிய‌த‌ர‌ம், குழ‌ல் ப‌ணியான், பூவந்தி, முட்டாசு, மைசூர் பாக்கு, வெங்காய‌ப்பணியான், சாதா ஹ‌ல்வா, பீட்ரூட் ஹ‌ல்வா போன்ற‌வைக‌ள் இன்றும் வீடுக‌ளில் உண்டாக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌வா என்று தெரிய‌வில்லை.

3. சிறுவ‌ர்க‌ளாக‌ இருந்த‌ நாம் விளையாடி க‌ழித்த‌ ப‌ளிங்கு, ப‌ட்ட‌ம், ப‌ம்ப‌ர‌ம், பேபே, தொட்டு விளையாட்டு, க‌ண்டு விளையாட்டு, தேர்த‌ல் வாக்கெடுப்பு, க‌யிறு ர‌யில் வ‌ண்டி, நொங்கு கோம்பை வ‌ண்டி, ட‌ய‌ர் வ‌ண்டி, அட்ட‌பில்லு போன்ற‌ விளையாட்டுக்க‌ள் பெரும்பாலும் ஒழிந்து விட்ட‌ன‌. எல்லாம் க‌ம்ப்யூட்ட‌ர், செல்போன் ம‌ய‌மாகி விட்ட‌ன‌.

4. க‌லியாண‌ம் முடிந்து ஒரு வார‌ம் அல்ல‌து ப‌த்து நாட்க‌ள் மாப்பிள்ளையுட‌ன் கூட‌ வ‌ந்து மூன்று வேளையும் ஒரு க‌ட்டு க‌ட்டிவிட்டு (சாப்பாடு) பெண் வீட்டாரின் மறைமுக வதுவாப்பேரு (பத்வா)எடுத்துச்செல்லும் மாப்பிள்ளை தோழ‌ன்மார்க‌ள் சாப்பாடு இன்று ஓரிரு நாட்க‌ளிலே முடிந்து விடுவ‌து ஒரு ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் தான். அல்ஹ‌ம்துலில்லாஹ்.. முற்றிலும் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒன்று.

5. பெரிய‌வ‌ர் முத‌ல் சிறிய‌வ‌ர் வ‌ரை ந‌ம‌தூர் குள‌ங்க‌ளில் குளிப்ப‌து, கும்மாள‌ம் அடிப்ப‌து குறைந்து அல்ல‌து ம‌றைந்து விட்ட‌து.

6. ஒன்றுமேயறியாத ப‌டித்துக்கொண்டிருக்கும் சிறுவ‌ர்க‌ளைப்பிடித்து அவ‌ர்க‌ளுக்கு வ‌ருங்கால‌த்தில் திரும‌ண‌ம் முடிக்க‌ இருக்கும் பெண்ணை முடிவு(அசைன்) செய்து 'நிக்காஹ்' என்னும் திரும‌ண‌ முன் உறுதி ஒப்ப‌ந்த‌ம் செய்து வைப்ப‌து இப்பொழுது குறைந்து அல்ல‌து ம‌றைந்து விட்ட‌தாக‌ க‌ருதுகிறேன்.

7. சிறுவ‌ர்க‌ளுக்கு 'சுன்ன‌த்' செய்ய‌வ‌த‌ற்கு முன் வீட்டில் வ‌ச‌தி வாய்ப்புக‌ள் இருக்கிற‌தோ இல்லையோ அல‌ங்கார‌ வாக‌ன‌ ப‌வ‌னி தெருதோறும் பைத்துச‌பா இசை முழ‌ங்க‌ வ‌ருவ‌து இப்பொழுது முற்றிலும் குறைந்து விட்ட‌தாக‌ க‌ருதுகிறேன். ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் தான் மாஷா அல்லாஹ்.

8. வீடுகளின் முற்றத்தில் உரலை வைத்து நான்கு புற‌மும் புட‌வையை சுவ‌ராக‌ எழுப்பி ந‌டுவில் சிறுவ‌ர்க‌ளை உட்கார‌ வைத்து அவ‌ர்க‌ள் க‌த‌ற‌, க‌த‌ற‌ நாசுவ‌னை வைத்து 'சுன்னத்' செய்யும் முறை இப்பொழுது முற்றிலும் இல்லை என‌ க‌ருதுகிறேன்.

9. புதிய‌தாக‌ வெளிநாடு ப‌ய‌ண‌ம் செய்ய‌ இருக்கும் ந‌ப‌ர்க‌ளின் வீட்டில் ச‌ல‌வாத்நாரியா ஓதி நார்சா கொடுக்கும் வ‌ழ‌க்க‌ம் நின்று போய் விட்ட‌தாக‌ க‌ருதுகிறேன். (வீட்டுக்கு வ‌ருகிற‌வ‌ர்க‌ள் ந‌ன்றாக‌ மூக்குபிடிக்க‌ உண்டு செல்வார்க‌ள். பாவ‌ம் ச‌புராளி சைத்தான் கோளாறு உள்ள‌வ‌ன் போல் காட்சி த‌ருவான்).

10. இக்கால பெண்கள் அவர்கள் சிறுமிகளாக இருக்கும் பொழுது விளையாடிக்களித்த கலச்சிக்காய், சில்கோடு, பல்லாங்குழி, புளியங்கொட்டை, கொலெகொலெயா மந்திரிக்கா நரிநரியா சுத்திவா விளையாட்டுக்கள் எல்லாம் கண்மாசியா (முற்றிலும்) காணாமல் போய் விட்டது இக்கால சிறுவர், சிறுமியரிடம்.

11. நமது வீட்டில், குடும்பத்தில், தெருவில் யாரேனும் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டால் நமதூர் ரயிலடி (ரயில்வே ஸ்டேசன்) வரை ஆண்களும், பெண்களும் புடைசூழ வந்து ஹாஜிகளுக்கு மாலை அணிவித்து பைத்து ஓதி புனித பயணத்தை சிறப்புடன் இறைவன் கிருபையில் முடித்து வீடு வந்து சேர து'ஆச்செய்து அனுப்பியது இப்பொழுது இருக்கிறதா? அல்லது இல்லாமல் போய் விட்டதா? தெரியவில்லை.

12. இப்பொழுது நமதூரில் மாணவ, மாணவியர் எல்லாம் வண்ண,வண்ண சீருடை அணிந்து பள்ளிக்கூடம் சென்று வருகின்றனர். பார்ப்பதற்கே மனதிற்கு சந்தோசமாக இருக்கின்றது. நாம் படிக்கும் காலத்தில் பத்தாம் வகுப்பு வரை கலர் வேட்டியும், பதினொன்றாம் வகுப்பிலிருந்து வெள்ளை வேட்டியும் உடுத்தி வர பள்ளி நிர்வாகமே அனுமதித்திருந்தது. அதை இப்பொழுது நினைத்தாலே வெட்கமாக இருக்கிறது.

13. வீட்டில் நடை பெற இருக்கும் கலியாண வைபவங்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டின் பெரியவர்கள் ஒன்று கூடி (டீ, மிக்ஸர், பனியான் துணையுடன்)பத்திரிக்கைகள் எழுதி முதலில் அயல்நாடுகளில் இருக்கும் உறவினர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு, பிறகு உள்ளூர் உற்றார், சுற்றத்தாருக்கு அனுப்பப்படும். இக்காலத்தில் அவைகளெல்லாம் குறைந்து அல்லது மறைந்து வாய்க்கூப்பாடு, டெலிபோன் கூப்பாடு, ஈமெயில் கூப்பாடு, சாட்டிங் கூப்பாடு, இன்டர்நெட் கூப்பாடு என்று பரிணாம வளர்ச்சி பெற்று விட்டது. இதை தொழிலாக செய்து வந்தவர்களுக்கு பேரிடியாக அமைந்தது. எப்படி குதிரை வண்டிகளெல்லாம் ஆட்டோக்களாக பரிணாம வளர்ச்சி பெற்றதோ அது போல் தான் இதுவும்.

14. அன்று வீடுதோறும் தண்ணீர் நிறம்பிய கிணறுகள் இருந்தன‌. இன்று அவைகளெல்லாம் மறைந்து ஆழ்குழாய்க்கிணறுகளாக வந்து நம் வீட்டை ஆட்சி செய்வதுடன் குளங்களின் தண்ணீர் இருப்புக்கும் வேட்டு வைக்கிறது. அன்று கிணற்றில் பயன்படுத்தப்பட்ட வாளியும், கயிறும் அதன் இரும்பு சக்கரமும் விரைவில் அழிந்துபோன பொருட்களின் வரிசையில் அருங்காட்சியகத்தில் காணப்படலாம்.

15. ஒரு காலத்தில் நமக்கு வரும் சளித்தொல்லை, இருமல், காய்ச்சல், ஜலதோசங்களெல்லாம் ஆஸ்பத்திரி சென்று ஒரு ஊசி போட்டு வந்தால் அவை நம்மை விட்டு காணாமல் போய் விடும். ஆனால் இன்றோ எத்தனை ஊசி போட்டு வந்தாலும், மருந்து மாத்திரைகள் தின்றாலும் அவைகள் நம் அன்றாட வாழ்வில் தொட்டு விளையாட்டு விளையாண்டு வருகின்றன. (இக்கால மருந்துக்கு வீரியம் குறைந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன என சொல்ல வந்தேன்).

16. அன்றாட சமையலுக்காக நம் வீட்டில் பயன்படுத்தப்பட்ட அலாயத்திக்காட்டு விறகுகளும், சைக்கிளின் பின் கேரியரில் கட்டி வாங்கி வந்த விறகுகடை சவுக்கு விறகுகளும் இன்று கலியாண வைபவங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் பொருளாக மாறிப்போனது. குறிப்பாக அலயாத்திக்காட்டு விறகுகள் இன்று அடியோடு இல்லாமல் போய்விட்டதாக கூறலாம். அன்று ஆடம்பரப்பொருட்களின் வரிசையில் பவனி வந்த கேஸ் அடுப்புகள் இன்று இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம்.

17. அன்று டி.வி.எஸ். 50 (மொபெட்) வைத்திருந்தாலே பணக்காரர்களின் வரிசையில் வலம் வந்தவர்கள் இன்று இன்னோவா இல்லை ஃபர்ச்சூனர் வைத்திருந்தால் மட்டுமே ஏதோ உப்புக்கு சப்பானி போல் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பணங்காசுகள் பெருகி அதற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டது என சொல்ல வந்தேன்...

18. ஒரு காலத்தில் ட்ரங்கால் புக் பண்ணி டெலிபோனுக்காக காத்துக்கிடந்த நாம் இன்று எல்லோரின் கைககளிலும் செல்போன் துள்ளி விளையாடுவதை தவிர்க்க முடியவில்லை.

19. அன்புக்கடிதங்களும், ஆசை வாழ்த்துக்களும், மணியார்டருகளும் கொண்டு வந்து நம் வீட்டில் கொடுத்துச்சென்ற தபால்காரர்கள் இன்று இருக்கலாம். ஆனால் அப்பழக்க, வழக்கங்களெல்லாம் மலையேறி சென்று விட்டதாக அடித்தும் கூறலாம் அடிக்காமலும் கூறலாம். இதில் தோனா.கானா முறையும் அடங்கும்.

இன்னும் நம்மிடம் அன்றாட வாழ்வில் பின்னிப்பிணைந்திருந்த எத்தனையோ பழக்க,வழக்கங்கள் விஞ்ஞான மாற்றத்தை காரணம் காட்டி இன்று நம்மிடமிருந்து பிரியா விடைபெற்று சென்று விட்டன. அதில் சில எனக்கு ஞாபகம் உள்ளதை மேலே வரிசைப்படுத்தியுள்ளேன். மேற்கண்டவற்றில் யாரையும் புண்படுத்த வேண்டுமென்றோ அல்லது உட்கருத்து ஏதேனும் வைத்தோ எதுவும் எழுதப்படவில்லை.

இஸ்லாத்திற்கு முரணான‌ பல தீய பழக்க,வழக்கங்கள் நாளடைவில் நம்மை விட்டு காணாமல் போயிருந்தால் அதற்காக நாம் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக சந்தோசப்பட வேண்டியது தான்.

பழைய ஞாபகங்களை ஓரளவு மறக்காமல் இங்கு வழங்க பேருதவி புரிந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என்று அவனிடம் பிரார்த்தித்தவனாக இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.

வஸ்ஸலாம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

Source: http://adirainirubar.blogspot.com/2010/10/blog-post_18.html