Home கட்டுரைகள் சமூக அக்கரை விழிப்புணர்வை ஏற்படுத்தாத இஸ்லாமிய வலைக்குழுமங்கள்!
விழிப்புணர்வை ஏற்படுத்தாத இஸ்லாமிய வலைக்குழுமங்கள்! PDF Print E-mail
Thursday, 21 October 2010 09:02
Share

Image result for muslims in facebook

விழிப்புணர்வை ஏற்படுத்தாத இஸ்லாமிய வலைக்குழுமங்கள்! 

பொதுவாக நாம் சினிமாவையோ அல்லது மற்றவர்களின் பழக்கவழக்கங்களையோ பற்றி தாராளமாக விமர்சனம் செய்வோம். ஆனால் நம்மை பற்றிய ஒரு விமர்சனம் வரும்போது நாம் எந்த நோக்கத்திற்காக அவர்களை விமர்சனம் செய்தோமோ அதனால் அவர்களிடம் எந்த மாதிரியான மனமாற்றம் ஏற்படவேண்டும் என்று விரும்பினோமோ அதுபோல நாமும் நம்மைக் குறித்து வரக்கூடிய விமர்சனத்தையும் கையாள வேண்டும்.

இன்றைய காலத்தில் பல பெரும்பான்மையான இஸ்லாமிய வலைக்குழுமங்கள் (இதில் சில விதிவிலக்கானவை) செய்திகளை வெளியிடுகிறோம் என்ற பெயரில் வெறும் பொழுதுபோக்கிற்காகவும் விளம்பரத்திற்காகவுமே நடத்தப்படுகின்றன.

இந்த வலைத்தளங்கள் சமுதாயத்தில் நடைபெறும் மூடப் பழக்கவழக்கங்களை கண்டு கொள்ளாமலும் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் அனாச்சாரங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் போதிய கவனம் செலுத்தாமலும் வரதட்சணை ஆடம்பர திருமணம் போன்ற சமூக அவலங்களை மக்களிடம் எடுத்தச் சொல்வதில் பாராமுகமாகவும் இருந்து வருகின்றன.

மொத்தத்தில் இதுபோன்ற வலைத்தளங்களால் முஸ்லீம்களுக்கு ஏதேனும் பயன்பாடு உள்ளதா என்பதை அந்த தளங்களுக்கு செல்பவர்கள் தான் கூற வேண்டும்.

மார்க்கப் பிரச்சாரம் செய்கிறோம் எனும் பெயரில் ஆரம்பிக்கப்படுகின்ற இஸ்லாமிய வலை குழுமங்கள் அனைத்தும் (ஒன்றிரண்டு விதிவிலக்கும் உண்டு) இறைவனுக்கு இனைவைப்பதையும், சமுதாயத்தில் நிலவி வரும் மூடபழக்க வழக்கங்களையும், வரதட்சணையும் களைவதற்கு பதிலாக, இந்த குழுமங்கள், போலி ஒற்றுமைவாதிகளுக்கு ஆதரவாக ஆக்கங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் ஏகத்துவ பிரச்சாரர்களை எதிர்ப்பதன் மூலம் ஏகத்துவ பிரச்சாரத்திற்கு தடைகல்லாகவும், முட்டுகட்டையாகவும் இருந்து வருகின்றனர்.

சில வலைத்தளங்கள் எல்லா அமைப்புகளின் செய்திகளையும் வெளியிட்டு எம்மதமும் சம்மதம் என்ற தத்துவ அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. கேட்டால் 'நாம் முஸ்லீம்கள் நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும்' என்ற பதில். ஆனால் இணைவைப்பவனும் இணைவைக்காதவனும் எப்படி ஒரே மேடையில் ஒற்றுமையாக பேச முடியும் என்பது புரியாத புதிர்.

இஸ்லாமிய கயிறைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டுமானால் அது இஸ்லாத்தை பற்றி அறிந்த ஒரு முஸ்லிமால் தான் முடியும். அது ஒரு காஃபிரால் முடியாது. இஸ்லாமிய பெயரை வைத்துக் கொண்டு ஒருவன் இறைவனுக்கு இணை வைக்கிறான். இஸ்லாத்திற்கு மாற்றமான காரியங்களை செய்கிறான். இவன் எப்படி இந்த இஸ்லாமிய கயிறை பற்றிப் பிடிக்க முடியும். எனவே இந்த ஒற்றுமைக் கோஷம் அர்த்தமற்றது.

இந்த முக்கியத்துவம் இல்லாத ஒற்றுமையை முன்னிறுத்தி மக்களை நரகிற்கு அழைத்துச் செல்கின்றனர். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா தன் திருமறையில் இறைவனுக்கு மாற்றமான செயலை செய்து, அல்லாஹ்வை மறுப்பவர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம் என்று கூறுகின்றான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போர் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். (அல்குர்ஆன்: 58:22)

எனவே அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு நீங்கள் நடத்தும் வலைத்தளங்கள் மூலமாக நம்மைச் சார்ந்துள்ளவர்களுக்கு நம்மாலான இஸ்லாமிய சமூக மற்றும் கல்வி விழிப்புணர்வை கொண்டு செல்வது அவசியமாக இருக்கிறது.

வெறும் பெருமைகளையும் தேவையற்ற செய்திகளை போட்டு உங்களது நேரத்தையும் நம் தளங்களுக்கு வருபவர்களின் நேரத்தையும் வீணடிப்பதை விட பயனுள்ளதாக அமைந்தால் நன்றாக இருக்கும்.

இதன் மூலம் எதார்த்தத்தை நாம் புரிந்து கொண்டு நம்முடைய செயல்களை அல்லாஹ் பொருந்திக் கொள்ளக் கூடிய வகையில் மாற்றிக் கொள்வோமாக!

source: http://mangudigany.blogspot.com/2010/10/blog-post_20.html