Home கட்டுரைகள் பொது இளைஞர்களை வளைத்துப்போடும் வலைத்தளங்கள்
இளைஞர்களை வளைத்துப்போடும் வலைத்தளங்கள் PDF Print E-mail
Wednesday, 06 October 2010 14:37
Share

எஸ். ரவீந்திரன்

இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் விரல்நுனியில் உலகம் வந்துவிட்டது. இது பெருமைப்படக்கூடிய விஷயம். அதேவேளையில் சிறுமைப்படவைக்கும் சில நிகழ்வுகளும் உள்ளன.

பொதுவாக இணையதளங்கள் அல்லது வலைத்தளங்கள் இன்று பல்கிப்பெருகிவிட்டன. புதியபுதிய வலைத்தளங்கள், வலைப்பூக்கள் என எக்கச்சக்கம். இவற்றின் வளர்ச்சியால் லாபம் நஷ்டம் என்று பார்க்க முடிவதில்லை.

"தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'' என்று எதற்காக கவிஞர் பாடினாரோ தெரியவில்லை. இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. "தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து கொள்ளடா' என கூறத்தோன்றுகிறது. அப்படி என்னங்க நடந்துட்டுது... என அப்பாவித்தனமாகக் கேட்பவர்கள், ஒருமுறை தமிழ் இணையதளங்களில் உலா வந்தால் போதும், அழுதே விடுவார்கள்.

மேற்கத்திய கலாசாரம் தமிழனைக் கெட்டழித்துவிட்டது. இணையதளங்களில் தேடும் எந்திரத்தில் தமிழில் ஒரு எழுத்தை அடித்தால் போதும், வார்த்தைகளும் விஷயங்களும் தமிழையே அவமானப்படுத்துகின்றன.

இந்தத் "தூய' தமிழால் நாட்டுக்குத்தான் கேடு. காரணம் அத்தனையும் பாலியல் சார்ந்த விஷயங்களாகவே இருக்கின்றன. இதைத் தவிர்த்து அறிவியல், கணிதம், பொறியியல் பற்றி எழுதவேண்டியதுதானே. இதைச் செய்வதால் இவர்களுக்கு என்ன திருப்தியோ அல்லது என்ன லாபமோ?

இப்படிப்பட்ட தமிழ் இணையப்பக்கங்களை பெண்களும், சிறுவர்களும் பார்த்தால் என்ன ஆவார்கள்? இதுபோன்ற இடுகைகளை இணையதளங்களில் வெளியிடுபவர்களுக்கு தாய், சகோதரிகள் இருக்கிறார்களா இல்லையா?

இந்த இணையதளங்களில்தான் இன்று இளையதலைமுறை மூழ்கிக் கிடக்கிறது. பொது அறிவு வளரும் என்று யாராவது நினைத்து, தங்கள் பிள்ளைகளுக்கு வலைத்தளங்களை அறிமுகப்படுத்தினால் பிள்ளைகள் விரைவாகவே வீணாகிவிடுவார்கள்.

இப்படி இளைஞர்களை வளைத்துப்போட இத்தகு வலைத்தளங்கள் ஏராளமாகப் பெருகி வருவது புற்றுநோயைவிடக் கொடுமையானதாகும். இவற்றை யார் தடைசெய்வார்கள்.

இதைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் எதுவும் உண்டா என்று தெரியவில்லை. சரி, இதை ஏன் பார்க்கிறீர்கள், இதைவிட நல்ல விஷயங்களே உங்கள் கண்ணுக்குப் படாதா என்று கேட்பவர்களும் உள்ளனர்.

நிச்சயமாக இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அறிமுகம். எனவே வலைக்குள் நுழைபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பிற தகவல்களுக்குள் தாராளமாக நுழைவதே சாலச்சிறந்தது. தமிழில் தலைசிறந்த வலைப்பூக்கள் வகைவகையாகப் பூத்திருக்கின்றன. அதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்பதே நமது அவா.

கிட்டத்தட்ட ஒரு நண்பனாய், ஆசிரியனாய் உதவக்கூடிய இணையதளங்கள் ஏராளமாக உள்ளன. தமிழிலேயே கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பிளாக்குகள் உள்ளன. இவை பெரும்பாலும் நாகரிகமாகவும், நகைச்சுவையாகவும் காணப்படுகின்றன.

தாராளமாகத் தங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள். அரசியல், தனிமனித துவேஷங்களைத் தவிர்த்து நிறையப் பூக்கள் உற்சாகத்தை அளிக்கின்றன.

இது தவிர இல்லத்தரசிகளுக்கு சிறந்த சமையல், ஆலோசனை, மருத்துவத் தகவல்கள் ஏராளமாக விரவிக்கிடக்கின்றன. கணினி பயில விரும்புபவர்கள் ஒரு பைசாகூடச் செலவழிக்காமல் ஆன்லைனிலேயே தங்களுடைய பாடங்களைப் பயிலலாம்.

இதேபோல பொறியியல் சந்தேகங்கள், விளையாட்டுகள், புதிர்கள், கதை, கவிதைகள், தரமான கட்டுரைகள் என இணையதளங்கள் விரவிக்கிடக்கின்றன.

எந்தச் சந்தேகமாக இருந்தாலும் இருக்கவே இருக்கிறது இணையதளம் என்ற அளவுக்கு, அத்தனைக்கும் தேவையான ஒன்றாக இவை உள்ளன. அதைத் தவறான வழியில் பயன்படுத்துவதால் இளையதலைமுறையினரின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதே இணையதளங்களில் வைரஸ்களைப் பரப்பி, குழப்பம் விளைவிப்பவர்கள் பலர் உள்ளனர். மேலும் இணையதளத்தின் பயன்பாடு ஓர் எல்லையோடு இருப்பதே சரியானது.

அதைவிடுத்து பல துன்பங்களுக்கும் தூண்டுகோலாக அமைந்துவிடுகின்றன. ஆன்லைன் திருமணத் தகவல் நிலையங்கள், ஃபேஸ்புக், ஆர்குட் என சிக்கிச் சீரழிபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

எனவே, அதைக் கருத்தில்கொண்டு இணையங்களில் உலாவருவது நல்லது. இல்லாவிட்டால் துன்பத்தின் வாசலுக்கே செல்ல நேரிடும். மேலும் பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளையும் இலவசமாகவே பதிவிறக்கம் செய்து படிக்கலாம். பல்வேறு இதழ்கள், பத்திரிகைகள் தங்கள் சேவையை இலவசமாகவே செய்துவருகின்றன.

எதுவாக இருந்தாலும் தேடுதல் எந்திரத்தில் மிக ஜாக்கிரதையாகக் கையாண்டு தேவையான விஷயங்களைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, இளைஞர்களுக்கு வலைவீசும் வலைத்தளங்களை புறக்கணிப்பதே சிறந்தது.

நன்றி: தினமணி