Home கட்டுரைகள் அரசியல் விசுவாசத்தின் எல்லை – ஓர் அணு உலை!
விசுவாசத்தின் எல்லை – ஓர் அணு உலை! PDF Print E-mail
Thursday, 30 September 2010 11:47
Share

நாடாளுமன்ற ஜனநாயகவாதிகளான நமது எம்.பி.க்கள் தம் ஊதியத்தை உயர்வு செய்யக் கோரி வாரக்கணக்கில் மல்லுக்கட்டிப் பாய்ந்தார்கள். ஆனால் நம் அறிவுக்கும் இறையாண்மைக்கும் கொஞ்சமும் பொருந்தாத ஒரு மசோதாவை கண்மூடியே நிறைவேற்றிவிட்டார்கள்.

ஒளியின் வேகத்தை மிஞ்சும் இன்னொன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்கிறார்கள். மன்மோகனின் அமெரிக்க விசுவாசத்தின் வேகத்தை சோதித்துப் பார்த்தால் அதன் முன் வேறெதுவும் இல்லை என்று புரியும்.

போபால் விஷவாயு வழக்கின் தீர்ப்பைப் பெற்று சர்வதேச அரங்கின் முன் நாம் தலைகுனிந்து நிற்கின்றோம். அசிங்கத்தில் புரள்கின்றோம். இந்தியா என்பது ஓர் அரசும், அரசமைப்பும், ஜனநாயகமும், நீதித்துறையும், பரிபக்குவமும் கொண்ட ஒரு நாடுதான் என்கிற சந்தேகம் உலகம் முழுமைக்கும் வந்துவிட்டது.

இந்திய மக்களை கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்வதைப்போன்ற சுலபமான ஒருவேலை வேறு எதுவுமேயில்லை. போபால் இழப்பீடு மசோதா இதையே நிரூபிக்கிறது. போபால் விஷவாயு வழக்கின் மர்மங்கள் நீண்டபடியே இருக்கின்றன.

நம் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கைகளை நாடு முழுவதுமாக இழந்து நிற்கிறது. அந்த நம்பிக்கை இழப்பை இன்னொரு சட்டபூர்வ மசோதாவாகப் பார்க்க முடியமென்றால், அதன் பெயர்தான் அணுவிபத்து நஷ்டஈடு மசோதா’!

இந்த மசோதாவை நிறைவேற்றத் துடித்த தருணத்தில், மன்மோகன்சிங் அரசு சொல்ல முடியாத கீழ்த்தரமான ராஜதந்திர வார்த்தைகளை மடக்கி மடக்கிப்போட்டு நம்மை இழிவு செய்ய முயன்றது. அவருக்குத் தன் அடிமைத்தனத்தில் வெட்கமேதும் இல்லை.

இருமாதங்களுக்கு முன் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்புகையில் விமானத்திலேயே பேட்டியளித்த மன்மோகன்சிங் எங்கள் திட்டங்களை நாடு எதிர்க்கிறது என்பதற்காக கைவிட்டுவிட முடியாது. நாடே எதிர்த்த போதும் நாட்டின் முன்னேற்றத்திற்காக அவற்றை நாம் செய்தே தீரவேண்டும் என்றார்.

இந்த நளினமான வார்த்தைகளை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து அரைத்து, இறுதியாக பதமாய் அதனை எடுக்கையிலே கிடைக்கின்ற லோக்கல் வார்த்தைகள் இவைதாம்;என்ன செய்ய? நாட்டு மக்கள் 120 கோடி பேரும் முட்டாள்களாக இருக்கிறீர்கள், நான் மட்டும் அறிவாளியாக இருக்கிறேன். அதனால்தான் நீங்கள் அத்தனை பேரும் எதிர்த்தாலும், அறிவுக்கொழுந்தாகிய நான், நாட்டு முன்னேற்றத்திற்காக இதையெல்லாம் செய்கிறேன். மன்மோகன்சிங் இந்திய மக்களுக்கு செய்யும் முதல் மரியாதை இதுதான்.

மன்மோகனாருக்கு ஒரு வேண்டுகோள்: உங்களுடைய பதவி பிடுங்கப்பட்டு விரட்டப்படும் அந்த நன்னாளில் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நிம்மதியாய் வாழ அமெரிக்க அணுஉலைகளின் அருகிலேயே தங்களின் குடியிருப்புகளை அமைத்து எமக்குத் தக்க முன்னுதாரணமாய் இருக்க வேண்டுகிறோம்.

மசோதாவுக்கு ப...வின் ஆதரவைப்பெற நரேந்திரமோடியின் மீதான விசாரணையைக் கைவிட மன்மோகனும் சோனியாவும் தீர்மானித்து முஸ்லீம் சமூகத்திற்கு இனிய கைமாறு செய்திருக்கிறார்கள்!

- களந்தை பீர் முஹம்மது

(செப்டம்பர் 2010, ''சிந்தனை சரம்'' மாத இதழிலிருந்து)