Home கட்டுரைகள் அரசியல் ''எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள் இந்த நாட்டிலே..? இந்திய நாட்டிலே..!''
''எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள் இந்த நாட்டிலே..? இந்திய நாட்டிலே..!'' PDF Print E-mail
Wednesday, 29 September 2010 07:15
Share
முகவை அப்பாஸ்

பாபர் மஸ்ஜித் குறித்த தீர்ப்பை இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகளும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், பாபர் மஸ்ஜித் குறித்து தமது வழக்கமான சங்பரிவார சிந்தனையை 'உரத்த சிந்தனை' என்ற பெயரில் 'தினமணி' நாளிதழில் உளறியுள்ளார் திரு. இல.கணேசன். அந்த கட்டுரையில் அவர் கூறியுள்ள சில முக்கியமான விஷயங்கள் இங்கே அலசப்படுகிறது. 

''இந்த பா.ஜ.க. என்றால் என்ன, ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை எத்தனை முஸ்லிம்கள் அறிந்திருப்பார்கள்? அவர்கள் நிச்சயமாகத் தவறாக இந்த இரு அமைப்புகள் குறித்தும் தெரிந்துவைத்திருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் வாயால் கேட்டவர்கள், பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க.காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே'' என்கிறார் இல. கணேசன்.

ஆர்.எஸ்.எஸ். குறித்தும்- பாஜக குறித்தும், ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கும், பாஜக காரர்களுக்கும் பாடம் நடத்தும் அளவுக்கு முஸ்லிம்கள் தெரிந்து வைத்துள்ளோம்.

ஆர்.எஸ்.எஸ். ஆக, ஜன சங்கமாக, பாஜகவாக, வி.ஹெஜ்.பி.யாக, பஜ்ரங் தள் இவ்வாறு இன்னும் பல்வேறு பெயர்களில் ஒரே இந்துத்துவா சிந்தனையோடு வலம்வரும் நீங்கள் யார்..? உங்கள் கொள்கை என்ன என்பதை முஸ்லிம்கள தெளிவாகவே விளங்கியுள்ளோம்.

மேலும், காந்தி கொலை தொடங்கி, குஜராத் கொலைக்களம் வரை உங்கள் 'கொள்கையின்' செய்திகள் நித்தமும் செய்திகளாக மலர்வதையும் அறிந்தும் வைத்துள்ளோம்.

''இந்த நாட்டு இஸ்லாமியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. விதிவிலக்கான ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் இந்த நாட்டின் ஆதிமக்கள். அவர்களது பாரம்பரியமும் எனது பாரம்பரியமும் ஒன்று. பண்பாடு ஒன்று. உடலில் ஓடக்கூடிய ரத்தம் ஒன்று. நாம் அனைவரும் இந்தியர்கள்.

இது இன்றைக்குத்தான் இல. கணேசன் அவர்களின் சிந்தனையில் உதித்ததாக்கும்..? முஸ்லிம்களை எதோ வெற்றுக் கிரகவாசிகள் போல், இவரது சகாக்கள் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்று பல்வேறு காலகட்டத்தில் முழங்கியபோது இல. கணேசன் அவர்கள எங்கே போயிருந்தார்..?

''ஆங்கிலேயன் நம்நாட்டை ஆண்டபோது, அவனை எதிர்த்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டே போரிட்டனர்.

அப்பாடா! இப்பவாவது முஸ்லிம்கள் இந்த தேசத்தின் விடுதலைக்காக போரிட்டார்கள் என ஒப்புக் கொண்டீர்களே அதுவரைக்கும் சந்தோசம்.

''இந்த அயோத்திப் பிரச்னை இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாதகமாக இருப்பதாக மக்கள் கருதினார்கள்.இஸ்லாமிய சமுதாய மக்கள் கூடிப் பேசினார்கள். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை. இந்துக்கள் அதை ராமஜென்ம பூமியாகக் கருதி வழிபடுகிறார்கள். எனவே, அந்தப் பகுதியின் மீது எங்களுக்கு உரிமை கோரவில்லை என இந்துத் தலைவரிடம் எழுதித் தந்து சமாதானம் ஆனார்கள். இருதரப்பிலும் மகிழ்ச்சி. ஆனால், விஷயம் அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் ஓடிவந்தார்கள். இந்த ஒற்றுமை தங்களுக்கு ஆபத்து என உணர்ந்தார்கள். உடன்படிக்கையை வாங்கி, கிழித்தெறிந்தார்கள். உடன்படிக்கை செய்துகொண்ட இந்துப் பிரதிநிதியையும் முஸ்லிம் பிரதிநிதியையும் பகிரங்கமாக, மக்கள் முன்பு, மரத்தில் தூக்கிலிட்டார்கள் என்கிறார் இல. கணேசன்.

அவரின் வார்த்தைகளை கவனமாக படிக்கவேண்டும். அதாவது பாபர்மஸ்ஜித் பிரச்சினை என்பது ஆங்கிலேயன் காலத்திலேயே இருந்தது. அந்த பிரச்சினையை தீர்க்க இந்து முஸ்லிம் தலைவர்கள் கூடி பேசி, முஸ்லிம்கள் மஸ்ஜித் பகுதியை இந்து தலைவர்களிடம் விட்டுக் கொடுத்து சமாதானத்தை ஏற்படுத்தினார்கள் என்று இதுவரை கேள்விப்படாத கதையை சொல்கிறார். சரி! முஸ்லிம்கள் எழுதிக்கொடுத்த அந்த ஆவணத்தை எங்கே என்று யாரும் இல.கணேசனிடம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஆங்கிலேயன் கிழித்துவிட்டான் என்று கூறி லாவகமாக தப்பிக்கிறார்.

ஒரு விஷயத்தை இல. கணேசன் அவர்கள் மறந்து விட்டார். பள்ளிவாசல் என்பது முஸ்லிம்களுக்கு சொந்தமானது என அவர் கருதுகிறார். ஆனால் உண்மை அதுவல்ல. பள்ளிவாசல் என்பது இறைவனுக்கு சொந்தமானது என்பதும், ஒருவர் தன் சொந்த பணத்தில் ஒரு பள்ளியை கட்டியிருந்தாலும், அந்த பள்ளிக்கு அவர் எந்த வகையிலும் உரிமை கொண்டாட முடியாது என்பதும் தான் உண்மை. இவ்வாறிருக்க, முஸ்லிம் தலைவர்கள் பாபர் மஸ்ஜிதை விட்டுக் கொடுத்தார்கள் என்பது எவ்வாறு உண்மையாகும்..? அவ்வளவு ஏன் பாபரே நினைத்தாலும் பள்ளிவாசலுக்கு உரிமை கொண்ண்டாடி, அதை இந்துக்களுக்கு விட்டுக்கொடுக்க முடியாது எனபதுதான் இஸ்லாமிய நிலையாகும்.

சரி! ஒரு வாதத்திற்கு இல. கணேசன் அவர்கள் சொன்னது போன்று, அன்றைய முஸ்லிம் பிரமுகர்கள் விட்டுக் கொடுத்து விட்டார்கள் என்றால், ஆங்கிலேயன் காலத்திலேயே அப்பிரச்சினை முடிவுக்கு வந்திருக்குமே..? பிறகு எப்படி விட்டுக்கொடுத்த பள்ளியில் முஸ்லிம்கள் தொழுதார்கள்..? மேலும், உங்கள் வாதப்படி விட்டுக்கொடுக்கப்பட்ட பள்ளியில், இரவோடு இரவாக கள்ளத்தனமாக சிலைவைக்கவேண்டிய அவசியம் உங்களுக்கு ஏன் வந்தது..?

''அது ராமஜென்ம பூமி. அந்தப் பகுதி காவல் நிலையத்துக்கு பெயர் ஜன்ம ஸ்தான் போலீஸ் ஸ்டேஷன். ஜன்ம ஸ்தான் தபால் ஆபீஸ். முஸ்லிம் சமுதாயத்தின் இரு பிரிவுக்கிடையே அந்த மசூதியின் உரிமைமீது வழக்கு வந்தபோது, அங்கிருந்த மசூதிக் கட்டடத்தை அவர்களே ஜன்ம ஸ்தான் மஸ்ஜித் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள். என்கிறார் இல. கணேசன்.

அதாவது பாபர் மஸ்ஜித் அமைந்த பகுதியை எல்லோரும் முஸ்லிம்கள் உட்பட, ஜென்மஸ்தான் என்றுதான் கூறினார்களாம். எனவே அது ராமர் அவதரித்த இடம் என்று சொலல் வருகிறார் இல. கணேசன். இது சாதாரண விஷயம். எப்படியெனில், அயோத்தியை ஜென்மஸ்தான் என்று இந்துத்துவாக்கள் தொடர்ந்து சொல்லிவர, அந்த பெயர் மக்களிடம் நிலைத்திருக்கலாம். இதுவெல்லாம் ஒரு ஆதாரமா..? இன்னும் சொல்லப்போனால் ஒரு ஊருக்கு இயற்பெயர் ஒன்று இருக்கும். மக்கள் அழைக்கும் பெயர் வேறாக இருக்கும். இதெல்லாம் இல. கணேசன் அவர்கள் அறியாததா..?

''ஒருநாளும் தொழுகை நடக்காத அந்த இடம் மசூதி அல்ல; மசூதிக்கான கட்டட அமைப்பு இல்லை. எந்த இடத்தில் மசூதி அமையக்கூடாது என அவர்களது நூல்கள் சொல்கின்றனவோ அந்த எல்லா எதிர்மறை அம்சங்களும் இந்த இடத்துக்குப் பொருந்தும். ன்கிறார் இல.கணேசன்

ஒருநாளும் தொழுகை நடைபெறவில்லை என்று இல.கணேசன் அவர்கள் கூறுவது ஒரு பருக்கை சோற்றில் ஒரு யானையை மறைப்பதற்கு சமமானதாகும். உங்களால் கள்ளத்தனமாக சிலை வைக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவுத் தொழுகை வரை அங்கே தொழுகை நடந்தது என்பது சிறுபிள்ளையும் அறிந்த விஷயம்.

மேலும் மசூதிக்க்கான கட்டட அமைப்பும் இல்லையாம்! இதற்கு முன்னால் இவர்தான் சொன்னார். நான் அங்கு போயிருக்கிறேன்;வெளியிலிருந்து பார்த்தால் மசூதி போன்று தெரியும் என்று. இப்போது அவரே முரண்படுகிறார். மேலும், ஒரு மசூதி அமையக்கூடாத இடத்தில் பாபர்மஸ்ஜித் அமைந்துவிட்டதாக வருந்துகிறார். முஸ்லிம்களை பொருத்தவரை தொழுவதற்கு தடுக்கப்பட்ட இடங்கள் எதிலும் எந்த காலத்திலும் பள்ளிவாசல் எழுப்பப்படுவதில்லை. அதில் பாபர் மஸ்ஜிதும் விதிவிலக்கல்ல.

''சிலர் இது பாபரது கல்லறை எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாபர் கட்டியதால் பாபர் மசூதி. ஹிந்து ஆலயத்தை இடித்து கட்டியதா அல்லது காலி மனையில் கட்டப்பட்டதா என்பது வழக்கு. 1950-லிருந்து நடைபெறும் வழக்கு, நாளை தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறது. இனி எவரும் பாபர் மசூதி கட்ட முடியாது. மன்மோகன் சிங் கட்டினால் அது மன்மோகன் மசூதி என்றே அழைக்கப்படும்.என்கிறார் இல.கணேசன்.

முஸ்லிம்கள் எவரும் பாபர் மஸ்ஜித் இடத்தை பாபர் கல்லறை என்று ஒரு போதும் கருதியதில்லை. அன்றிலிருந்து இன்றுவரை அதை மசூதி என்றே கூறுகிறார்கள். மேலும் இனி எவரும் பாபர் மசூதி கட்டமுடியாது; மன்மோகன் சிங் கட்டினால், அது மன்மோகன்சிங் மசூதி என்றே அழைக்கப்படும் என்று அங்கலாய்க்கிறார் இல. கணேசன்.

இல. கணேசன் அவர்களே! முஸ்லிம்கள் அந்த இடத்தில் கட்டவிருப்பது பாபருக்கு மசூதியல்ல. அல்லாஹ்விற்கு, அதாவது அல்லாஹ்வை வணங்குவதற்கு ஒரு மசூதி.பாபருக்கு நாங்கள் மசூதி கட்டபோகிறோம் என்று நீங்கள் நினைத்தால் அந்த நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள்.

''பாபர் யார்? அவர் இந்தியரல்ல, அந்நியர். படையெடுத்து ஆக்கிரமிக்க வந்த அந்நியர்.என்கிறார் இல.கணேசன்.

ஒரு பக்கம் உங்க கூட்டம்தான் சொல்கிறது. சுதந்திரத்திற்கு முன் அகண்டபாரதம் இருந்தது. அந்த அகண்ட பாரதத்தில், ஆப்கானிஸ்தான் இருந்தது என்று. அப்படியாயின் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியான ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் பிறந்த பாபர் அன்னியர் என்றால், கைபர்-போலன் கனவாய் வழியாக வந்த உங்களுடைய முன்னோர்கள் யார்..? என்று நாங்கள் கேட்கவில்லை. வரலாறு கேட்கிறது.

பாபர் இரண்டாவது முறை தொடுத்த போரில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட அவர் அமைத்த வெற்றிச் சின்னம்தான் ராமர் கோயிலை இடித்துக் கட்ட முயற்சித்த மசூதிக் கட்டடம்.

அன்னியனுக்கு வெற்றிச் சின்னம் என்றால் அடிமைப்பட்டவனுக்கு அடிமைச் சின்னம். ஆக்கிரமிப்பு அகன்ற உடனேயே மீண்டும் அடிமைச் சின்னத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.பாபர் எங்கள் மதத்தவன், அதனால் அந்தச் சின்னம் அடிமைச் சின்னமானாலும் அது போற்றுதலுக்குரியது எனக் கருதுவது தேசபக்தியின் வெளிப்பாடாக ஆகாது என்கிறார் கணேசன்.

பாபர் போரில் பெற்ற வெற்றியை கொண்டாட அவர் எழுப்பியது நினைவுத் தூண் அல்ல அகற்றுவதற்கு. அவர் அமைத்தது பள்ளிவாசல். பள்ளிவாசலை அடிமைச்சின்னம் என்று வர்ணித்து தனது மதவெறியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார் இல. கணேசன். சரி! பாபரால் அமைக்கப்பட்டது அடிமைச்சின்னம் என்றால் இன்றைக்கு முகலாயர்களின் கட்டட கலைக்கு சான்று பகரும் எண்ணற்ற கலைநயமிக்க கட்டடங்கள் உள்ளனவே. அதுபற்றி இல.கணேசனின் நிலை என்ன..? மேலும் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள், பாலங்கள், அணைகள், உள்ளிட்ட அத்துனையையும் அனுபவிக்கும் இல. கணேசன் அதுபற்றிய என்ன நிலையில் இருக்கிறார்..?

ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, மவுண்ட் ரோட்டில் இருந்த சில ஆங்கில மன்னர்களது சிலைகளை இரவோடு இரவாக நீக்கி, அருங்காட்சியகத்தில் வைத்தார் - அவை அடிமைச் சின்னம் என்பதால் அப்போது எந்தக் கிறிஸ்தவரும் எதிர்க்கவில்லை. என்கிறார் இல. கணேசன்.

இல. கணேசன் அவர்களே! எங்கேனும் முகலாயர்கள் உள்ளிட்ட இந்தியாவை ஆண்ட எந்த முஸ்லிம்களுக்காவது சிலை இருந்தால் அதை அகற்றி,நீங்கள் அருங்காட்சியத்தில் வைக்கவேண்டாம். மாறாக நடுத்தெருவில் அடித்து நொறுக்குங்கள். ஒரு முஸ்லிமும் தடுக்கமாட்டோம்.

சோமநாதபுரம் ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டது வரலாறு. இடித்து மசூதியாக மாற்றப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு சர்தார் வல்லபாய் படேல் சபதம் ஏற்று, அந்த மசூதியை அகற்றி, மீண்டும் பிரம்மாண்டமாக சோமநாதபுரம் ஆலயத்தை காந்திஜியின் ஆசியோடு எழுப்பினாரே! அதுபோலத்தானே இதுவும்.

மீண்டும் ஒரு சோமநாதபுரமாக பாபர் மஸ்ஜித் இடத்தை மாற்ற, உங்களுக்கு ஆசி வழங்க இப்போது காந்தியும் இல்லை. செய்து முடிக்க நீங்கள் வல்லபாய் படேலும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம்கள் அன்றுபோல் இன்று ஏமாளிகளாகவும் இல்லை. இந்தியாவில் கடைசி முஸ்லிம் உயிர் இருக்கும்வரை பாபர் மஸ்ஜித் இடத்தில் நீங்கள் சோமநாதபுர கனவுகான விடமாட்டான் இன்ஷா அல்லாஹ்.

மதம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், அது எல்லை மீறியதாக இருக்கக்கூடாது. தேசம்தான் முக்கியம். நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், நமக்கு முதன்மையாகத் தேவைப்படுவது தேசபக்தி. என்னைப் பொறுத்தவரை அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்கிற அடிப்படையில் நாம் அணுகுவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன் என்கிறார் இல. கணேசன்.

இதை சொல்வதற்கு முன்னால் உங்களை கொஞ்சம் கண்ணாடியில் பார்த்திருக்கக் கூடாதா..? மதத்தின் பெயரால் எல்லைமீறி, மஸ்ஜிதை இடித்தது யார்..? ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்தியது யார்..? நாட்டில் நடைபெற்ற பெரும்பாலான வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு சொந்தக்காரர்கள் யார்..? வன்முறையை அரசியலாக்கி, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை உண்டாக்கி பதவி சுகத்தை அனுபவித்தது யார்..? அவ்வளவு ஏன்..? சம்மந்தப்பட்ட இந்த பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விசயத்தில் கூட, முஸ்லிம்கள் ஏகோபித்த குரலில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம்; அமைதிகாப்போம் என்று சொல்லிக்கொண்டிருக்க, நீதிமன்ற தீர்ப்பு எப்படியிருந்தாலும் அது எங்களை கட்டுப்படுத்தாது; நாங்கள் கோயில் கட்டியே தீருவோம் எனக் கொக்கரிப்பது யார்..? எல்லாம் செய்து விட்டு 'தேசபக்தி' முகமூடியை போர்த்திக் கொள்வதில் சங்பரிவாருக்கு நிகர் சங் பரிவார்தான்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள் இந்த நாட்டிலே...? இந்திய நாட்டிலே..!

முகவை அப்பாஸ், This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it