Home கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ அதிகறித்துவரும் 'தலாக்'கிற்கு பெண்கள் காரணமா?!
அதிகறித்துவரும் 'தலாக்'கிற்கு பெண்கள் காரணமா?! PDF Print E-mail
Saturday, 19 June 2010 15:22
Share

அதிகறித்துவரும் ''தலாக்''கிற்கு பெண்கள் காரணமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,

கணவன் மனைவிக்குள் புரிந்துணர்வு நாளுக்கு நாள் நசுங்கி வருகிறது. இல்லற வாழ்க்கையின் தத்துவமோ முக்கியத்துவமோ விளங்காத நிலையிலேயே பெரும்பாலும் அவர்கள் திருமணம் முடிக்கப்படுவதால் பலரது வாழ்வு அந்தரத்தில் தொங்குகின்ற நிலை ஏற்படுகிறது. ''அல்லாஹ்வின் அர்ஷை'' நடுங்கச் செய்யக்கூடிய செயலை ஏதோ ''பஸ் டிக்கட்'' வாங்குவது போல் மக்கள் எளிதாக ''கேட்கும்'' நிலை மாற வேண்டும்.

சமீபத்தில் தமிழகத்தின் பிரபலமான மதரஸாவின் முதல்வர் ஒருவரிடம் பேசும்போது அதிர்ச்சியான செய்தி ஒன்றை சொன்னார்கள்: ''மதரஸாவிற்கு தீர்வு கேட்டு வரும் மக்கள் 100 பேர் எனில் அதில் 90 பேர் தலாக் சம்பந்தமாகவே ஃபத்வா கேட்க வருகிறார்கள். அதுவும் தற்சமயம் பெண் வீட்டார்கள் விவாகரத்து கேட்டு வருவது அதிகரித்து வருகிறது'' என தெரிவித்தார்கள்.

எப்போதுமே குற்றாவளிக்கூண்டில் பெண்களை நிறுத்துவது ஆண்களுக்கு கைவந்த கலை. அதில் ஒன்று தற்காலத்தில் பெண்கள் அதிகமாக படிப்பதால் 'தலாக்'கும் அதிகறித்து வருகிறது என்கின்ற குற்றச்சாட்டு. இதில் உலகக்கல்வி மார்க்கக்கல்வி என்கின்ற வேறுபாடெல்லாம் கிடையாது. இது எந்த அளவுக்கு உண்மை!

சில ஆண்டுகளுக்கு முன் இரண்டு மூத்த ஆலிம்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர்கள் சொன்ன ஒரு விஷயம் ஆச்சர்யப்பட வைத்தது. அவர்கள் சொன்னது இதைத்தான்; ''ஒரு ஆலிமுக்கு ஆலிமாவை திருமணம் முடித்து வைத்தால் அது 'தலாக்'கில் போய் முடிகிறது.'' '

''என்ன இப்படிச் சொல்கிறிர்கள்?'' என்று அவர்களை திருப்பிக் கேட்டபோது,

"ஆம், நாங்கள் சொல்வது உண்மைதான், ஆலிமா பட்டம் வாங்கிய பெண் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை தெரிந்துகொள்வதால், கணவனிடம் தனது உரிமைகளை கேட்கும்போது பிரச்சனை ஏற்படுகிறது; எங்களைவிட ஒரு மூத்த அறிஞரும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளார்'' என்று சொல்லி முடித்தபோது நமக்கு உண்மையாகவே அதிர்ச்சிதான். ஆணா, பெண்ணா? இதில் யார் குற்றவாளி என்று சொல்லாமலே புரிந்திருக்குமே!

மார்க்கம் கற்றறிந்து மக்களுக்கு இஸ்லாத்தை போதிக்கும் ஆலிம்களுக்கே பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை கொடுப்பதற்கு மனம் வராதபோது மற்றவர்களிடம் பெண்கள் தங்களது உரிமைகளைப் பெற முடியுமா என்ன?!

நன்றாக நினைவிருக்கிறது, நித்யானந்தா விவகாரம் உலகை கலக்கிக்கொண்டிருந்த வாரம் - நாகை மாவட்டத்திலுள்ள முஸ்லீம்கள் அதிகமாக வாழும் ஒரு நகரின் 'ஜும்ஆ' குத்பா பிரசங்கத்தில் பேசிய ஆலிம் சாகிப் பெண்களை லெஃட் அண்டு ரைட் - வாங்கு வாங்கென்று விளாசித்தள்ளிவிட்டார். ''பெண்களெல்லாம் ஷைத்தான்கள் என்று ஆரம்பித்தவர் கடைசீவரை அதன் 'காரம்' குறையாமல் அணல் மழை பொழிந்தார் என்றே சொல்லலாம். அவர் பெண்களைப்பற்றி சொன்ன விஷயங்கள் அத்தனையும் உண்மைதான். அதே சமயம், சீனி இனிப்பு என்பதற்காக ஒரேயடியாக அதை 'காபி'யில் கொட்டினால் குடிக்க முடியுமா? இவர் சாமியாரை ஆதரிக்கிறாரோ என்று சந்தேகப்படக்கூடிய அளவுக்கு அன்றைய பயான் இருந்தது என்று கூட சொல்லலாம். வேடிக்கை என்னவென்றால் அங்கு ஒரு பெண்மணிகூட கிடையாது.

ஒரு விஷயம் உண்மையில் உறுத்தலாக இருந்தது; இந்த அளவுக்கு ஒரேயடியாக பெண்களை தாக்கிப்பேசுகிறாரே, இதோ இந்த ''ஜும்ஆ'' முடிந்த பின்பு இங்கிருக்கும் ஆயிரக்கணக்கான ஆண்கள்- ஏன் அந்த இமாம் உள்பட அனைவரும் வீட்டுக்குச் சென்றவுடன் பெண்கள் சமைத்த உணவைத்தானே உண்ணப்போகிறார்கள்! இதை எப்பொழுதாவது இவர்கள் நினைத்துப்பார்த்ததுண்டா?!

பெண்கள் கல்வி கற்பதுதான் அதிகமான 'தலாக்' நிகழ்வதற்கு காரணம் என்று சொல்லக்கூடியவர்கள் ஒரு விஷயத்தை விளங்கிக்கொண்டால் சமுதாயத்திற்கு நல்லது. கல்வி கற்பது ஆண் பெண் இருபாலர் மீதும் கட்டாயக் கடமையாக இஸ்லாம் ஆக்கியிருப்பதை அவர்கள் மறந்ததேனோ!

ஆண்களுக்கு இருப்பது போன்று பெண்களுக்கும் அல்லாஹ் உரிமைகளை வழங்கியிருக்கின்றானே! அந்த உரிமைகளை அவர்களுக்கு வழங்குவதில் ஆண்களுக்கு விருப்பமில்லாமல் போவதும் 'தலாக்'கிற்கு காரணம் என்று வாய் திறந்து சொல்வதற்கு ஒருவரும் முன்வரவில்லையே ஏன்?!

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகளையும் கடமைகளையும் சரிவர பேணி வருவார்களேயானால் 'தலாக்'கிற்கு அங்கு வேளையே கிடையாது.

- எம்.ஏ.முஹம்மது அலீ

www.nidur.info