Home குடும்பம் குழந்தைகள் குழந்தை வளர்ப்பு: மலர்ப்படுக்கை அல்ல (2)

மன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு: மலர்ப்படுக்கை அல்ல (2) PDF Print E-mail
Friday, 21 May 2010 08:02
Share

குழந்தை வளர்ப்பு: மலர்ப்படுக்கை அல்ல (2)

தனித்துச் செயல்பட... !

எல்லாக் குழந்தைகளுக்கும் தனிச்சையாக காரியங்களைச் செய்யும் திறமை உண்டு. ஆனால் நாம்தான் "என் செல்லத்தால் அதைச் செய்ய முடியுமா இதைச் செய்ய முடியுமா? என்று கூறி எதையும் செய்யவிடுவதில்லை.

தனது தேவைகளை தானே செய்து கொள்ள பழக்க வேண்டும். குளிப்பது, சாப்பிடுவது, டிரஸ் போடுவது போன்றவற்றைத் தானே செய்யப் பழக்க வேண்டும். அதில் சில தவறுகள் செய்யும்போது பக்குவமாக எடுத்துச் சொல்லவேண்டும். உனக்கு ஒன்னுமே வராது. நீ உருப்பட்ட மாதிரிதான் என்று சொல்லி பிஞ்சு உள்ளத்தை காயப்படுத்தாதீர்கள்.

குழந்தையைப் பற்றி கணவர் மனைவிடமும், மனைவி கணவரிடமும் குறை கூறி பேசக் கூடாது. கணவன் - மனைவி இருவரும் ஒருமித்து செயல்பட்டு உனது நலனுக்குத்தான் எல்லாம் செய்கிறோம் என்பதை குழந்தையிடம் புரிய வைக்க வேண்டும்.

பருவ வயது பிரச்சினைகளைச் சமாளிக்க வழி என்ன?

பருவ வயது மிகவும் ஆபத்தானது. நமது குழந்தைகள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டிய காலம் அது. செலவு செய்ய ரூ. 100 கேட்டால், நியாயமாகப்பட்டால் கொடுங்கள். ஆனால் அவர்களது நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள். கணக்கு கேளுங்கள்.

நமது குழந்தை மீது நம்பிக்கை வைக்கவேண்டும். அதே நேரத்தில் ஏமாந்துவிடக் கூடாது. நாம் குழந்தை மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் குழந்தை நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் குறையும்போது பிரச்சினை ஏற்படுகிறது.

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு சில வழிகாட்டி நெறிகள் சொல்லப்படுகின்றன அவை:

குயவர் (Potter): பெற்றோர் தொழில் திறன் மிக்க குயவர் போல் செயல்படவேண்டும். மண்ணைப் பிசைத்து, பக்குவப்படுத்தி அழகிய, கலைநயமிக்க மண் பாண்டங்களை உருவாக்குவது போன்று சமூகத்துக்குப் பயன்தரக் கூடிய சிறந்த குடிமகனாக குழந்தையை வளர்க்க வேண்டும்.

தோட்டக்கரார் (Gardener): மண்ணை சீர்படுத்தி விதை விதைத்து, தண்ணீர் ஊற்றி, பராமரித்து, களை எடுத்து, மரமாகி காய் காய்த்து கனி கிடைப்பது போல் குழந்தை நல் முறையில் வளர்வதற்கு உகந்த சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும். உடலுக்கும் உள்ளத்துக்கும் வளம் தரக்கூடிய சத்துப் பொருள்களை வழங்கவேண்டும். அவர்களது வளர்ச்சிக்குத் தடையாக உள்ள தீய விஷயங்களை நீக்கி ஒரு தோட்டக்காரர் போல் பெற்றோர் செயல்பட வேண்டும்.

வழிகாட்டி: குழந்தைக்கு நல்ல வழிகாட்டியாக நல்ல ஆசானாக இருந்து நல்லது எது - கெட்டது எது, நற்குணங்கள் எவை, தீய குணங்கள் எவை என்பதை எடுத்துச் சொல்லவேண்டும். வளைந்து கொடுக்கும் தன்மை. விட்டுக்கொடுக்கும் தன்மை, ஒட்டி வாழும் தன்மை ஆகியவற்றை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். அதே வேளையில் நமது விருப்பு - வெறுப்புகளை அவர்களிடம் திணிக்கக்கூடாது.

ஆலோசகர்: குழந்தைக்கு நல்ல ஆலோசகராக இருக்கவேண்டும். நெருக்கடியான நேரங்களில் எப்படி செயல்படவேண்டும். உணர்ச்சிகளை எவ்வாறு சமநிலையில் வைத்திருக்கவேண்டும். வெற்றி - தோல்வி கையாளும் பக்குவம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுங்கள். வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுங்கள்.

ரோல் மாடல் (Roll Model): உங்கள் குழந்தையின் நல்லது. கெட்டது எல்லாவற்றுக்கும் நீங்கள்தான் காரணம். நீங்கள் சிகரெட் பிடித்தால் உங்கள் குழந்தையும் சிகரெட் பிடிக்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் பொய் சொன்னால் உங்கள் குழந்தையும் பொய் சொல்லும். மொத்தத்தில் உங்கள் குழந்தைக்கு நீங்கள்தான் ரோல் மாடல். அதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள தவறுகளை, குறைகளைச் சரி செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள், உங்கள் குழந்தை இச் சமூகத்தை வழி நடத்தும் குழந்தையாக வளரும்.

உங்கள் குழந்தை விரும்பும் சிறந்த பெற்றோரா?

நீங்களே முடிவு செய்யுங்கள்!

உங்கள் குழந்தையை நீங்கள் எப்படி வளர்க்கிறீர்கள்? நீங்களே தெரிந்துகொள்ள இதோ ஒரு பரீட்சை - கீழே உள்ள கேள்விகளுக்கு நான்கு வகையான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளதோ அந்தப் பதிலை டிக் செய்யவும்.

கேள்விகள்

o. எப்பொழுதும் இல்லை o.சில நேரங்களில் o.அடிக்கடி o. எப்பொழுதும்

1. குழந்தை கேட்பதையெல்லாம் நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்களா?

2. உங்கள் குழந்தையை மிகவும் பொக்கிஷம்போல் (Possessive) வளர்க்கிறீர்களா?

3. குழந்தைகளின் அன்றாடக் காரியங்களை (குளிப்பது, ஆடை அணிவது, சாப்பிடுவது, ஷூ போடுவது போன்றவை) அவர்களே செய்து அனுமதிப்பீர்களா?

4. குழந்தை அழுது அடம்பிடித்தால் உடன் பணிந்துவிடுவீர்களா?

5. குழந்தைகளை மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவீர்களா?

6. குழந்தைகளைத் தனித்துச் செயல்படவிடுவீர்களா (அருகில் உள்ள கடைக்குச் செல்வது போன்றவை)?

7. குழந்தைகளுக்கு வேண்டிய பொருள்கள், ஆடைகள் போன்றவற்றை வாங்குவதில் அவர்களின் விருப்பத்துக்கேற்ப செய்வீர்களா?

8. உங்கள் குழந்தையை இடம், பொருள், காலம் அறிந்து செயல்பட எடுத்துச் சொல்வீர்களா?

9. குழந்தையின் முன் நீங்கள் இருவரும் (தாய், தந்தை) சண்டை போட்டுக் கொள்வீர்களா?

10. தாய் பற்றி தந்தையோ, தந்தை பற்றி தாயோ குழந்தை முன் குறை கூறிப் பேசுவீர்களா?

11. டி.வி. பார்ப்பது, கதைப் புத்தகங்கள் படிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிடுவீர்களா?

12. உங்கள் குழந்தைகளின் செயல்களை சந்தேக நோக்குடன் பார்ப்பீர்களா?

13. குழந்தைகளுக்கு வேண்டியவற்றைச் செய்துவிட்டு, வாங்கி கொடுத்துவிட்டு சொல்லிக்காட்டுவீர்களா?

14. உங்கள் குழந்தைக்கு அவர்கள் விரும்பும் வகையில் அன்பு, பாசம் காட்டுவீர்களா?

15. சகோதர, சகோதரியைப் பாராட்டி குழந்தையைக் குறை கூறுவீர்களா?

16. குழந்தையின் சிறிய தவறைப் பெரிதுபடுத்திப் பேசுவீர்களா?

17. நாம் கஷ்டப்பட்டாலும் குழந்தை நன்றாக இருக்கவேண்டும் என்று கருதி சக்திக்கு மீறி செய்வீர்களா?

18. குழந்தைகள் தங்கள் பிரச்சினைகளை, தேவைகளைச் சொல்லும்போது காது கொடுத்து அமைதியாகக் கேட்பீர்களா?

19. உங்கள் இருவரிடையே (தாய் - தந்தை) உள்ள மன வேற்றுமைகளை குழந்தை முன் காட்டுவீர்களா?

20. குழந்தைகளுக்குத் தேவையான சுதந்திரம் கொடுத்து அவர்களைக் கண்காணிப்பீர்களா?

21. உங்களுடைய பதற்றம், பரபரப்பு, கோபம், ஏமாற்றம் போன்ற உணர்ச்சிகளைக் குழந்தை மீது காட்டுவீர்களா?

22. குழந்தைகளிடம் குடும்பப் பிரச்சினைகளைக் கலந்து பேசுவீர்களா?

23. குழந்தைகளுக்கு சிறிய, சிறிய பொறுப்புகளைக் கொடுப்பீர்களா?

24. குழந்தையை பாராட்டும் நேரத்தில் பாராட்டி, கண்டிக்கும் நேரத்தில் கண்டிப்பீர்களா?

25. குழந்தைகளிடம் அன்பு, கண்டிப்பு, பாசம் காட்டிப் பழகுவீர்களா?

நீங்கள் நல்ல பெற்றோரா என்ற புதிருக்கான விடை

நீங்கள் டிக் செய்துள்ள எண்களை கூட்டி மொத்தத் தொகை என்ன என்று பாருங்கள். உங்கள் மதிப்பீடு 58-க்கும் குறைவாக இருந்தால் நீங்கள் உங்கள் குழந்தை விரும்பும் பெற்றோர்.

உங்கள் மதிப்பீடு 58-க்கும் அதிகமாக இருந்தால் குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் சில மாற்றங்கள் செய்துகொள்ளவேண்டும். அதாவது குழந்தைகளைக் கண்டிக்க வேண்டும். ஆனால் அன்பு, பாசம் காட்டி கனிவோடு கண்டிக்கவேண்டும். பாராட்ட வேண்டிய விஷயங்களுக்கு குழந்தையைத் தக்க நேரத்தில் பாராட்டவேண்டும்.

தன் காரியங்களை (உதாரணம்: சாப்பிடுதல், ஆடை அணிதல் போன்றவை) குழந்தையே செய்ய பழக்கவேண்டும். குழந்தைகளைப் பொத்தி பொத்தி (over protection) வளர்க்கக் கூடாது.

படிப்பில் பிரச்சினையா?

குழந்தை 51-க்குப் பதிலாக 15 என்று எழுதிவிட்டால், "மக்கு, படிப்பிலே கவனமே இல்லை' - எப்பவும் டிவி பார்த்துகிட்டு, கார்ட்டூன் பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி கவனம் இருக்கும் என்று பலர் திட்டித் தீர்க்கிறோம். சிலர் கோபத்தில் அடித்து, உதைத்து அக் குழந்தைக்கு படிப்பு என்றாலே வெறுப்பு ஏற்படும் அளவுக்கு நடந்துகொள்வார்கள். இது சரியல்ல. இதனால் குழந்தையின் படிப்புத் திறன் மேலும் பாதிக்கப்பட்டு அதன் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் ஆபத்து உள்ளது.

இதை கற்றலில் குறை (learning difficulty) என்கிறோம். இக் குறையுள்ள குழந்தைகளின் மூளை வளர்ச்சி, அறிவுத்திறன், சிந்திக்கும் திறன் எல்லாம் நன்றாக இருக்கும். சிறு சிறு குறைகளால் தவறு செய்வார்கள்.

"படிப்பில் அதிகக் கவனம் செலுத்துவதே இல்லை; படித்த அனைத்தையும் உடனே மறந்துவிடுகிறான். அதிக எழுத்துப் பிழைகள், கல்வியில் சரிவரத் தேர்ச்சிஅடைய முடிவதில்லை, படிப்பைத் தவிர மற்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறான்' எனப் பெரும்பாலான பெற்றோர் புலம்புகின்றனர்.

மேற்கூறிய அனைத்தும் கற்றலில் உள்ள குறைபாட்டால் ஏற்படுவது அல்லது கற்கும் திறனில் உள்ள இயலாமையைக் குறிக்கும்.

கற்றலில் குறை (Learning Difficulty) என்றால் என்ன?

o படிப்பதிலும் எழுதுவதிலும், உச்சரிப்பிலும் மற்றும் கணிதம் போன்றவற்றை கற்பதிலும் ஏற்படும் குறைகளையே கற்றலில் உள்ள குறைபாடு என்கிறோம். 

o கற்கும் திறனில் உள்ள இயலாமைகளுக்கு மூளையில் ஏற்படும் ஒரு சில நரம்பியல் செயல் மாற்றங்களின் நிகழ்வே ஆகும்.

o இது ஒரு குறைபாடு - நோய் அல்ல.ஊ குறைந்த மதிப்பெண்கள், எழுதுவதில் ஏற்படும் பிழைகள், எழுதுவதில் தாமதம் போன்றவற்றில் இக் குறை தெரியவரும்.  

o ஒரு குழந்தையின் இயலாமை மற்றும் அதன் பாதிப்பின் அளவை நரம்பியல் மருத்துவ உளவியல் சோதனை (Neurophysichological Assessment) மூலம் தெரிந்துகொள்ள இயலும். சிறப்புப் பயிற்சி முறைகள் மூலமே இக் குறைபாட்டை நீக்க முடியும்.

சிறப்புப் பயிற்சி முறைகள்: இது டியூஷன் வகுப்பு அல்ல.

1. மொழியின் அடிப்படை எழுத்து வரிசைகளைக் கற்றுக் கொடுத்தல்.

2. சொற்களின் உச்சரிப்பு முறைகளை கற்றுக்கொடுத்தல்

3. எண்களின் வரிசைககளைக் கற்றுக் கொடுத்தல்

4. கணிதத்தில் உள்ள கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றின் வழிமுறைகளைக் கற்றுக் தருதல்.

5. பெருக்கல் வாய்ப்பாடு கற்றுத் தருதல்.

6. எழுத்து - எண்வரிசை, வழிமுறை - எண்களைப் படிக்கவும் எழுத்து முறையில் எழுதவும் கற்றுக் கொடுத்தல்.

7. எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தல். ஆங்கிலப் பாடத்தில் கேபிட்டல் (Capital) ஸ்மால் (Small) எழுத்துகளுக்கு இடையே குழப்பம் ஏற்படுதல். சில குழந்தைகள் க்ஷ -க்குப் பதிலாக க் என்று எழுதுவார்கள். அதாவது ball என்பதற்குப் பதிலாக dall என்று எழுதுவார்கள். அதுபோல் ல் -க்குப் பதிலாக வ், த்-க்கு பதிலாக ண் என்று எழுதுவார்கள். அதுபோல் Pencil என்பதற்குப் என்பதற்குப் பதிலாக Pencile என்று எழுதுவார்கள். Happily என்பதற்குப் பதில் Happly. இதுபோன்ற எழுத்துப்பிழைகள் இருக்கும். அதுபோல் படிக்கும் போது was என்பதை saw எனப் படிப்பார்கள்.

தமிழ்: மாம்பழம் என்பதை "மாம்பலம்' என்றும் பள்ளிக் கூடம் என்பதை "பல்லிக்குடம்' என்றும் கண்ணாடி என்பதை "கன்னடி' என்றும் மந்திரம் என்பதை "மண்திரம்' என்றும் எழுதுவார்கள். இதுபோன்ற எழுத்துப் பிழைகளை வாக்கியம் எழுதும்போது பார்க்கலாம்.

சிலர் எழுத்தைத் தலைகீழாக எழுதுவார்கள்.

கணக்கு: கணக்கை எடுத்துக்கொண்டால் 39 உடன் 3-ஐ கூட்டச் சொன்னால், 9-ஐயும் 3-ஐயும் கூட்டி கீழே 12 என்று எழுதிவிட்டு, 12-க்கு முன்பு 3-ஐயும் போட்டு, "312' எனத் தவறாக எழுதிவிடுவார்கள். இதுபோல் கழித்தல், பெருக்கல், வகுத்தல் எல்லாவற்றிலும் பிரச்சினை வரும். இக் குறைகளை உரிய பயிற்சி மூலம் சரி செய்துவிடலாம்.

குழந்தை எப்போது நடக்கும்?

o குழந்தை பிறந்து முதல் மூன்று மாதங்களில் கைகளை ஊன்றும்; தலையைத் தூக்கும்.

o பிறந்து நான்கு மாதங்களுக்குள் கழுத்து நிற்கும். குழந்தையைப் படுக்க வைத்து மேலே நேராகப் பொம்மையை அசைத்து தாய் பயிற்சி அளித்தால் கழுத்து நிற்க ஆரம்பித்து விடும்.  

o பிறந்து 6 மாதம் ஆனவுடன் பிறர் உதவியுடன் குழந்தை உட்காரும். தலையை நிமிர்த்தும்; முதுகு நேராகும்.

o பிறந்து 8 மாதம் ஆனவுடன் பிறர் உதவியின்றி உட்காரும்; கைகளை நீட்டிப் பொருள்களை எடுக்கும். 

o ஒரு வயது ஆனவுடன் எதையாவது பற்றிக்கொண்டு நிற்கும்.ஊ ஒரு வயது மூன்று மாதம் ஆவதற்குள் பிறர் உதவியின்றி எழுந்து நடக்கத் தொடங்கி விடும். 

o குழந்தையின் கால்கள் பின்னிப் பிணைந்திருந்தால் அடிக்கடி இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டால் சரியாகிவிடும்.

டாக்டர் பி.எஸ்.விருதகிரிநாதன், நரம்பு-உளவியல் மருத்துவ நிபுணர்,சென்னை.

நன்றி: தினமணி மருத்துவ மலர்

www.nidur.info