Home குடும்பம் பெற்றோர்-உறவினர் அன்பே உருவான அம்மா.... (3)
அன்பே உருவான அம்மா.... (3) PDF Print E-mail
Monday, 26 April 2010 07:44
Share

 

அன்பே உருவான அம்மா.... (3)

என் அகம் நிறைந்த அம்மா!

ஒரு தந்தையைவிட தாய் பல கஷ்டங்களை அனுபவிப்பவர், தன் பிள்ளைகளுக்காக எப்பொழுதும் தியாகத்துடன் பணி புரிபவர். எனவே, எல்லா வகையான கண்ணியங்களுக்கும் உரிய முதலாமவராக, அவரைக் கருதுவது அவசியம் அல்லவா!

அல்குர்ஆனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரைகளும் இது பற்றி மிகத் தெளிவான விளக்கங்களைத் தருகின்றன.

''தந்தைக்காக செய்யும் பணிவிடைகளை விட தாய்க்காக செய்யும் பணிவிடைகள் மிக சிறப்பானது!'' என ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்தார்கள்.

ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ''யாரசூலுல்லாஹ்! நான் அடிபணிந்து நிற்பதற்கு மற்றவர்களை விடவும் சிறப்பானவராகக் கருதுவதற்கு உரியவர் யார்?'' எனக் கேட்டார். ''உங்கள் தாய்!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்தார்கள்.

''அதன் பின் யார்?'' அவர்; மீண்டும் கேட்டார்.

''உங்கள் தாய்'' மீண்டும் அதே பதில் வந்தது.

''அதன் பின் யார்?'' வந்தவர் மீண்டும் கேட்டார்.

''உங்கள் தாய் தான்!' நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாவிலிருந்து பதில் வந்தது. நான்காவது முறையாக, ''அடுத்தவர் யார்?'' எனக் கேட்ட பொழுது, ''உங்கள் தந்தை'' என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

மற்றொரு முறை, 'தாயின் பாதத்தடியில் சேயின் சுவனம் உண்டு!' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்னைக்கு அன்புடன் பணிவிடைசெய்து, அவரை மிக நல்ல முறையில் கவனித்து வந்தால் உங்களுக்கு சுவன பாக்கியம் கிட்டும் என்பது இதன் கருத்து. இத்தகைய எண்ணற்ற போதனைகள் தாய்க்குப் பணிவிடை செய்வதை பெரும் கடமை எனக் கூறி நிற்கின்றன.

பெற்றோரில் ஒருவரோ இருவருமே மரணித்துவிட்டால், அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனைப் புரிய வேண்டும். அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், அவர்களுக்கு மறுவுலக இன்பங்கள் கிட்டுவதற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தனைப் புரிய வேண்டும் என்பது இறை தூதரின் இதயம் நிறைந்த கட்டளை.

பெற்றோருக்கு கண்ணியமனித்து, மிகுந்த கீழ்ப்பணிவுடன் நடந்து, அவர்கள் வயது முதிர்ந்துவிட்டால், அவர்களைத் திருப்தி படுத்தும் விதத்தில் பணிவிடைப் புரிவதை அல்லாஹ் போற்றியுள்ளான். அப்படி நடந்து கொள்வதைக் கட்டாயப்படுத்தியுள்ளான்.

ஆனால், ஒரு முக்கிய விஷயம்:

அல்லாஹ் தடுத்துள்ள, 'செய்யக் கூடாது' என விலக்கியுள்ள எதையும் தமது அன்புப் பெற்றோர் செய்யும்படி பணித்தால், அவற்றைச் செய்யக் கூடாது. அத்தகையவற்றை தவிர்த்து நடக்க வேண்டும் என்பதுதான் இறை கட்டளை.

பெற்றோராயினும் தவறான (இஸ்லாத்திற்கு முரணான) செயல் ஒன்றைச் செய்யும்படி வேண்டினால் எப்படிச் செய்வது? எனினும் அவர்களது (இஸ்லாத்திற்கு முரணில்லாத) நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தவறு இல்லை. இதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அன்புத் தாயே!

என்மைப் படைத்த அல்லாஹ்வும், அவன் தூதரும் எமக்கு எவற்றைச் செய்யும்படி கட்டளை இட்டுள்ளார்களோ. அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுச் செய்வதற்கு நான் உறுதியுடன் இருப்பதாக முன்னரே கூறிவிட்டேன். பெற்றோரைப் பற்றிய இறையாணைகள் எவையோ அவற்றின் படி அவர்களிடம் நடந்து கொள்வேன். அந்த இறையாணைகள் என்னென்ன என்பதை நான் உங்களுக்கு நன்கு விளக்கிக் கூறியுள்ளேன். ஆதற்காக என் வாழ்நாள் முழுவதும் அமையும் என உறுதியாகக் கூற விழைகின்றேன்.

இவற்றைப் படித்துவிட்டு நன்கு சிந்தியுங்கள் அம்மா, அப்பொழுது 'என் மகன் சொல்வதெல்லாம் உண்மைதான்!' என்று உங்கள் உள்ளுணர்வுகள் உணர்த்துமாயின், எத்தகைய ஐயமுமின்றி கீழ்காணும் முடிவுக்கு நீங்கள் வருவீர்கள்.

''என் மகனை மௌலானா தவறான வழியில் இட்டுச் சென்றார் என நான் நினைத்தது தவறு, அவன் எனது மகனல்ல எனக் கூறியதும் தவறு. மாறாக, மௌலானா என் மகனை சரியான மகனாக ஆக்கினார், அவர் என் மகனைத் தவறான வழியில் இட்டுச் செல்லவில்லை. மாறாக, வாழ்வுக்கான நேரிய வழியைக் காட்டினார், இவன் உங்களது ஒரு மகனாக இருக்கமாட்டான் என அன்று சோதிடர் கூறியது பொய், தவறு''.

ஆமாம் தாயே! நான் கூறியது உண்மை என நீங்கள் விளங்கிக் கொண்டால் மேற்காணும் முடிவுகளுக்கே வருவீர்கள் - இது உறுதி.

கருணையே உருவான அம்மா!

நீங்கள் உறுதியாக நம்புங்கள், நான் என்றென்றும் உங்கள் மகனாகவே இருப்பேன், எப்பொழுதும் நான் உங்களுக்குச் சொந்தமாவேன். எனவே, உங்கள் உள்ளத்தில் வேர்பிடித்து வாட்டும் வேதனைகளையும், அச்சத்தையும் வேரோடு பிடுங்கி எறிந்து விடுங்கள்.

மனித சமுதாயத்திற்கு நேரான வழியைக் காட்டும் உண்மையான மார்க்கம் இஸ்லாம் ஒன்று மட்டுமே. இது அனைத்தும் அறிந்த அல்லாஹ்வால் அருளப்பெற்றது. மனித வாழ்வுக்கு அவசியமான, அனைத்துக் துறைகளுக்கும் வழிகாட்டக் கூடிய அம்சங்கள். நீதி நெறிமுறைகள் இதில் அடங்கியுள்ளன. ஒரு வேதம் சத்தியமானதா அல்லது அசத்தியமானதா என்பதை அறிந்து கொள்ள, அந்த வேதத்தின் ஓர் அம்சத்தை மட்டும் ஆய்வுக்குட்படுத்துவது போதுமானது.

இங்கு, பெற்றோர் பற்றிய இஸ்லாத்தின் போதனைகள் என்ன என்பதைச் சுருக்கமாக உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன். இவற்றைத் திறந்த மனதுடன் படிக்கும் நீங்கள், இஸ்லாம் எவ்வளவு சிறப்பான வாழ்க்கை முறையென்று என விளங்கிக் கொள்வீர்கள். இது போன்ற பரிபூரணமான, தெளிவான மற்றொரு மதம் உண்டா என்றால், 'நிச்சயமாக இத்தகைய விளக்கம் நிறைந்த, நீதி வழி சார்ந்த மற்றொரு மதம் இல்லை' என்பது உங்கள் முடிவாக இருக்கும் என்பது என் திடமான நம்பிக்கை.

இது போலவே, வாழ்வின் ஒவ்வொரு துறைக்குமான நீதிநெறி முறைகள் இஸ்லாத்தில் இருக்கின்றன, அவை மனித சமுதாயத்திற்கு எப்பொழுதும் நேர்வழியைக் காட்டி நிற்கும்.

என் அன்புத்தாயே!

நீஙகள் என்னை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தீர்கள், அவை ஒன்றிரண்டா? உங்கள் கருவறையில் என்ன சில மாதங்கள் சுமந்திருந்தீர்கள். எனக்காக நீண்ட கால வேதனைகளை சகித்துக் கொண்டீர்கள். நான் இவ்வுலக ஒளியைக் காணும்போது வெறுமனே ஒரு சதைக்கட்டிதான். அப்போது நான் சக்தியேயில்லாது பலவீனமாக இருந்Nதுன். எனினும், நீங்கள் இந்த சதைக் கட்டியை, உங்கள் உடல் வலுவைத் தியாகம் செய்து இரத்தத்தை அமுதாக்கி ஊட்டி, தாலாட்டி, உவகையோடு அவசியமான அத்தனையையுயம் தந்து கவனித்தீர்கள். நான் ஓரளவு வளர்ந்து வந்தபோது என் கல்விக்கான ஆக்கப் பணிகளைச் செய்தீர்கள்.

நான் அறிவு பெற வேண்டும், நல்லதொரு மனிதனாக வாழ வேண்டும் என்ற மட்டில்லா ஆசையோடு என்னவெல்லாமோ செய்தீர்கள். நான் நோயுற்றபோது நீங்கள் பொறுமை இழந்து காணப்பட்டீர்கள். என் கண்களில் நீர் வடிந்தால், உங்கள் இதயத்தில் இரத்தம் பீரிட்டு வருவதைப் போன்ற உணர்வைப் பெற்றீர்கள். ஊன், உறக்கம் இல்லாது காலத்தையும் சிரமத்தையும் எனக்காக அர்ப்பணித்தீர்கள்.

இவ்வாறு அன்போடு அரவணைத்து என்னை ஊட்டி வளர்த்த அன்னை நீங்கள், உங்கள் உணவை எனக்குத் தந்து நான் உண்பதை பசியுடன் பார்த்திருந்து பரவசம் அடைந்த அம்மா நீங்கள், எனக்கு அழகும் கவர்ச்சியும் நிறைந்த உடைகளை அணிவித்து அழகு பார்த்த நீங்களோ அழுக்கான பழைய உடைகளை அணிந்தீர்கள்.

உண்மையில், நீங்கள் எனக்காக தியாகம் செய்த உங்கள் பொன்னான காலமும் சிரமமும் சொற்பமானவை அல்ல. அவற்றை என் நாவினால் மொழிந்து முடித்துவிட முடியாது. இவற்றுக்காக நான் எப்படித்தான் கைம்மாறு செய்வேனோ? நான் என்னதான் உங்களுக்குப் பணிவிடைகள் புரிந்தாலும், விழுந்து விழுந்து கவனித்தாலும் உங்கள் தன்னலமற்ற தியாகங்களுக்கு எதிரில் அவை மிக அற்பமானவையே!.

பெற்ற தாயைக் கவனிக்கும் படியும், அவருக்கு உதவி ஒத்தாசைப் புரியும்படியும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நீங்கள் எனக்கு இவ்வுலகில் நல்வாழ்வுபெற்றுத் தந்தீர்கள். உங்களுக்குப் பணிவிடைப் புரிவது உதவி ஒத்தாசைப் புரிவதும் என் நீங்காக் கடமை. அந்த வகையில் என் மிக உயர்ந்த விருப்பம் என்னவெனில் என்றும் நிரந்தரமான மறுவுலக வாழ்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். எந்த வழியில் சென்றால் அந்த வெற்றி கிடைக்குமோ அந்த வழியை உங்களுக்குக் காட்டித் தருவது என் கடமை.

அந்த வழி இஸ்லாம் ஒன்று மட்டுமே. நாம் இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றியும் விமோசனமும் பெறுவதற்கு இஸ்லாத்தைத் தவிர வேறு வழியே இல்லை. அதன்படி வாழ்வதே நன்று. எனவே, என் அம்மா! நீங்கள் இம்மதத்தை ஏற்று வாழ்வதைக் காண நான் துடியாத் துடிக்கின்றேன், ஆசைப்படுகிறேன்.

நான் வீட்டிலிருந்த வேளையில் பல முறை இதுபற்றி உங்களுக்கு விளக்கிக் கூற முயன்றேன். 'இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்களேன்' என்றுகூட வேண்டினேன். என்றாலும், நீங்கள் எத்தகைய கவனமும் எடுக்கவில்லi.

உண்மையில், இது தொடர்பாக நான் உங்களிடம் எதுவுமே எதிர்பாக்கவில்லை. மேலும், எனக்கு உலக வாழ்வு தொடர்பான ஏதேனும் எதிர்பார்ப்போ, ஆசையோ, ஆர்வமோ இல்லை என்பது நீங்களும் அறிந்த விஷயம்.

என் உள்ளத்தைக் குடைந்து கொண்டிருக்கும். ஆர்வம், ஆசை, வேதனை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக உங்கள் முன் சமர்ப்பிக்கட்டுமா அம்மா? இதோ கேளுங்கள்:

என்னுயிர் அம்மா!

பத்து மாதங்கள் சுமந்திருந்து என்னைப் பெற்ற என் அன்னை என் உயிரையே விடவும் அன்பிற்குரியவர். அவர் என் கண் எதிரிலேயே கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் வீழ்ந்து வேதனைப் படுவதைக்காண நான் ஒரு போதும் சகிக்க மாட்டேன். அந்த பயங்கர வேதனையிலிருந்து என் அன்பே உருவான அன்னையை மீட்டெடுப்பதுதான் என் ஒரே எண்ணம்!.

அம்மா! நீங்கள் இப்பொது பின்பற்றும் மதம் உங்களை நரகத்திற்குத்தான் இழுத்துச் செல்லும். அதை இன்னுமே நீங்கள் விளங்கிக் கொள்ளாது இருப்பது துரதிஷ்டமே!.

இதை இன்னும் தெளிவாக நீங்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் ஓர் உதாரணத்தின் மூலம் கூறட்டுமா அம்மா!.

நீங்கள் ஒரு தொடர்வண்டியில் (ரயிலில்) பயணம் செய்வதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் புகையிரதம் போகும் பாதையில், சற்று தூரத்தே பாதை தடம் புரண்டிருப்பதை நான் தெளிவாக அறிவேன். அதில் பயணம் செய்யும் ஏராளமான பிரயாணிகள் இதை அறியாதுள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் தாம் போக வேண்டிய இடத்திற்குப் போக முடியாமற் போவதும், இடையில் மாபெரும் விபத்தொன்று நடக்கப் போவதும், அவர்களுள் பலர் பயங்கரமான முறையில் மரணத்தைச் சந்திக்கப் போகின்றனர் என்பதும் நான் நன்கு அறிந்த விவரங்கள்.

இதேவேளை என்னிடம் ஒரு வாகனம் உண்டு, அதில் பாதுகாப்பாகப் போக வேண்டிய இடத்திற்கப் போகமுடியும். எனவே, அந்தப் தொடர்வண்டியை (ரயிலை) நிற்கும் ஒவ்வொரு இடத்திலும் நான் பதற்றத்துடன் உங்களிடம் ஓடோடி வந்து, 'அம்மா! இதில் பயணம் செய்வது ஆபத்து, உடனே இறங்கி வந்து எனது வாகனத்தில் ஏறி அமருங்கள். பாதுகாப்பாக நம் பயணத்தை மேற்கொள்ளலாம்' என்று அன்போடு அழைக்கின்றேன்.

மரணத்தைக் கொண்டுவரும் அந்த தொடர்வண்டியிலிருந்து இறங்கி என் வண்டியில் ஏறும்படி நான் உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன். எனினும் நீங்கள் என் அழைப்பை செவிமடுப்பதாக இல்லையே! என்றாலும், அந்தப் பயணத்தின் கோர விளைவை உணர்ந்த நான், உங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருப்பேன்.

அம்மா! அந்த அழிவின் விளிம்பிற்குப் போகுமுன் தொடர்வண்டியிலிருந்து இறங்கி, எனது வாகனத்தில் ஏறிக்கொண்டால் நீங்கள் போகவேண்டிய இடத்திற்கு சுகமாக போய்ச் சேர முடியும். இல்லையாயின், நீங்களும் மற்ற பிரயாணிகளுடன் சேர்ந்து கோர அழிவைத்தான் சந்திக்கப் போகிறீர்கள். அந்தக் கடைசி கட்டத்தில் நீங்கள் 'அந்தோ! என் மகன் விடுத்த அழைப்பை ஏற்றிருந்தால்'.. அவனது வாகனத்தில் ஏறியிருந்தால்..' என கைசேதப்பட்டு, அழுது புரண்டு பிரலாபிப்பீர்கள். அது காலம் கடந்துவிட்ட பரிதாப நிலை அல்லவா!.

நீங்கள், நான் பயணத்தை மேற்கொண்டுள்ள இஸ்லாம் எனும் வாகனத்தில் வந்தமர்ந்து பயணத்தை ஆரம்பித்தால், நீங்கள் எதிர்பார்க்கும் இடத்திற்கு எத்தகைய இடையூறும் இன்றி பத்திரமாகப் போய்ச் சேர முடியும் என்பதில் ஐயமே இல்லை. 

இவை என் உள்ளத்தில் உதிர்த்த சில கருத்துக்கள். உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன். இவற்றை நன்றாகச் சிந்தியுங்கள். அல்லாஹ் உங்களை மிகச் சரியான பாதையில் பயணத்தை மேற்கொள்ளச் செய்வானாக!

''நீங்கள் இவ்வுலககை விட்டுப் பிரிந்து சென்ற பின் அல்லாஹ் உங்கள்மிது திருப்தி கொள்ள வேண்டும். அவனுடைய சுவன செல்வங்களுக்கு நீங்கள் உரித்துடையவராக வேண்டும்'' என நான் இருகரம் ஏந்தி வல்லோனிடம் பிரார்த்தனைப் புரிகின்றேன்.

நான் எழுதியவை பற்றி நன்கு சிந்தித்து பதில் எழுதுவீர்கள் என திடமாக நம்புகின்றேன். அதோடு, என் குற்றங் குறைகளை மன்னிப்பீர்கள் எனவும் எதிர்பார்க்கின்றேன்.

இவ்வண்ணம்,

பணிவன்புள்ள மகன்

தமிழ் அச்சு: அபு அல் முஹன்னத்

source: http://www.otrumai.com/MotherSpecial2.htm