Home கட்டுரைகள் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) ''நீதியே என்னிடம் நெருங்காதே- நீ நெருங்கும் இடத்தில் நானில்லை!''
''நீதியே என்னிடம் நெருங்காதே- நீ நெருங்கும் இடத்தில் நானில்லை!'' PDF Print E-mail
Monday, 29 March 2010 07:30
Share

Dr. A.P.முஹம்மது அலி. Phd. I.P.S.(rd)

[ இந்தியக் கோர்ட்டில் சமீபத்தில் ஒரு வழக்கு நடந்தது. அதில் ஜெர்மன் நாட்டு பெண்ணுக்கு கருப்பையில் கோளாறு. யாத்திரை வந்த அந்த தம்பதிகளுக்கு இந்தியப் பெண் மும்பையில் செயற்கை முறையில் கருத்தரிக்க உதவி அழகான பெண் குழந்தையும் பெற்றுக் கொடுத்தால். அந்தக் குழந்தை எந்த நாட்டு உரிமை கொண்டாடுவது என்ற வழக்கில் இந்தியக் கோர்ட்டு அந்தக் குழந்தைக்கு இந்திய பிரஜா உரிமை வழங்கி ஆணையிட்டது.

செயற்கை முறையில் கருத்தரித்த வெளிநாட்டு தம்பதிகளின் குழந்தைக்கே இந்திய பிரஜா உரிமை கொடுக்கும்போது இந்திய குடிமகன்களான இந்திய முஸ்லிம்களை இந்திய மண்ணிலிருந்து வெளியேறச்சொல்ல எவருக்கு யார் உரிமை கொடுத்தது?.

அதேபோல் மகாராஷ்ட்ராவில் சிவ்சேனா அமைப்புகள் மகாராஷ்ட்ரா மகாராஷ்ட்ராவினர்க்கே சொந்தம், அவர்களுக்குத்தான் வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் வேலைக்காக வந்த அடுத்த மாநில மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது என்ன நியாயம்?

எந்தக் கோர்ட்டாவது அப்படித் தாக்கும்-தூண்டிவிடும் சிவ்சேனா தலைவர்கள் பால்தாக்கரே-ராஜ்தாக்கரே-உதய் தாக்கரே உள்பட தண்டிக்க முடிகிறதா?

''உப்பினைச் சாப்பிட்டவன் தண்ணீர் குடிக்கத்தானே செய்ய வேண்டும்'' என்ற நாட்டுப்புற பழமொழிகளை போல குஜராத் முதல்வர் 1500 முஸ்லிம்களை குஜராத் மாநிலத்தில் கொன்ற குற்றத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.]

அரசியல் சட்டப் பிரிவு 14ன் படி சட்டத்திற்கு முன் அனைத்து இந்திய குடிமகனும் சமமாக நடத்தப்பட வேண்டும். அது தெரிந்ததுதானே அதற்கு இப்போது என்ன வந்தது என நீங்கள் கேட்கலாம். சொல்லட்டுமா சொந்தங்களே!

உங்களுக்கெல்லாம் தெரியும் புதிய பா..க தலைவர் நிதின் காட்காரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறார் என்று. அவருடைய கட்சிக்கு புதிதாக அமையப்பெற்ற நிர்வாகக் குழுவில் 50 சதவீத பொறுப்பாளர்கள் ஆர்.எஸ்.எஸ் ஆசிபெற்றவர்கள். அதில் முன்னாள் மத்திய பிரதேச மாநிலம் பி.ஜே.பி தலைவர் நரேந்தரசிங் தாமேர் தற்போதைய அகில இந்திய பி.ஜே.பி குழுவில் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

அவர் மத்திய பிரதேச சிவ்பூரி மக்களவை எம்.பியும் ஆவார். அவர் பொதுச்செயலாளர் பதவியேற்ற பின்பு தன்னுடைய சொந்த ஊரான மத்திய பிரதேசத்திலுள்ள அப்பா நகருக்கு சென்ற போது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. எப்படி? நமதூரில் வி..பிகளுக்கு கொடுக்கப்படும் யானைகள் வரவேற்பா? அல்லது பட்டர்கள் பரிவட்டம சூடி பூரண கும்பம் வரவேற்பா? அல்லது தாரை தப்பட்டை வரவேற்பா?

அல்ல-அல்ல நண்பர்களே! அது அரசு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள் வரும்போது வழங்கப்படும் ''கன்'' அதாவது துப்பாக்கி சல்யூட் என்றால் நம்புவீர்களா? நம்பாமல் இருக்கு முடியாது 21.3.2010 ஊடகங்களையும்-எலக்ட்ரானிக் மீடியாவிலும் பார்த்த பின்பு. சாதாரணமாக வெளிநாட்டு வி.வி..பி வரும் போது 21 துப்பாக்கி குண்டுகள் வெடித்து தான் வரவேற்பர். ஆனால் எம்.பி. நரேந்திரசிங் வரும்போது 101 துப்பாக்கி வெடித்து மாபெரும் வரவேற்பில் திறந்த ஜீப்பில் வலம் வந்த அவரை வரவேற்றிருக்கிறார்கள்.

அவர்கள் வைத்திருந்த அத்தனைத் துப்பாக்கியும் அனுமதியில்லாத துப்பாக்கிகளாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி வெடித்த துப்பாக்கியால் பி.ஜே.பி தொண்டர் உமாக்காண்ட் சந்திராவும் காயம் பட்டிருக்கிறார் என்ற பெட்டிச் செய்தியும் உண்டு. இத்தனைக்கும் மாநில காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்துள்ளது. ஏனென்றால் மத்திய பிரதேச மாநிலத்தில் பா..க அரசு அரியணையிலுள்ளது.

ஆயுதச் சட்டம் 1959ன் பிரிவு 7, 20, 24, 25 படி துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வேண்டும், அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் கைது செய்யப்பட வேண்டும், அனுமதியில்லாத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட வேண்டும் மற்றும் அதற்கான தண்டனை மூன்று வருடத்திலிருந்து ஏழு வருடமாகும். ஆனால் அந்த வரவேற்பில் அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கையில்லை என்றே ஊடகங்கள் கூறுகின்றன. நீதி அவர்களை நெருங்காது. காரணம் அவர்கள் காவி உடை வஸ்தாதுகள்.

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் கோத்ரா ரயில் விபத்திற்கு பின்பு 1500 பேர்கள் காவியுடை குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் ஆடிய வெறியாட்டத்தை அப்போதைய உளவுப்படை தலைவர் ஸ்ரீகுமார் முழு விபரத்துடன் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்;. அத்துடன் அப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் பதவியிறங்கிய பின்னர் தன்னுடைய கையேழாத வருத்தத்தினை தெரிவித்ததாக ஊடகங்கள் சொன்னது அனைவரும் அறிந்ததே.

இதில் என்ன விசேஷம் என்றால் தனது வீட்டில் படுகொலைகளுக்கு பயந்து ஓடி வந்து ஒளிந்து கொண்டிருந்த மக்களைக் காப்பாற்ற பல முறை போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கும்-முதல்வர் மோடிக்கும் மாறி மாறி உதவிக்கு போன் செய்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஏசென் ஜாப்ரேயும் மற்றும் 68 பேர்களும் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்கள். அவருடைய வீடும் தரை மட்டமானது.

மதுரை பாண்டியன் மன்னன் நெடுஞ்செழியனிடம் தன் கணவன் கோவலனைக் கொன்ற பாவத்திற்கு நீதி பரிகாரம் தேடி முறையிட்ட சம்பவம் போல மறைந்த ஜாப்ரே மனைவி திருமதி. ஜாகா உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டு அதன் பயனாக விசாரணை செய்ய முன்னாள் சி.பி.ஐ டைரக்டர் ராகவன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரனைக்குழு விசாரனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. உடனே பி.ஜே.பி பத்திரிக்கை தொடர்பாளர் ரவி பிரசாத் என்ன சொன்னார் தெரியுமா? ''நாங்கள் சட்டத்தினை மதிப்பவர்கள். மோடி சட்டப்படி நடந்து கொள்வார்'' என்றும் கூறினார். ஆகவே அவர்கள் வாக்கின்படி குஜராத் முதல்வர் மோடிக்கு ஆஜராக சம்மனும் அனுப்பட்டது.

இப்போது குற்றவியல் சட்டம்(சி.ஆர்.பி.சி) பிரிவு 39 படி சில குற்றங்கள் சம்பந்தமாக உடனே தகவல் கொடுக்க கடமையாகிறது. முக்கிய சில குற்றங்களான தீ வைத்தல், கொலை செய்தல் போன்றவைகளும் அடங்கும். பிரிவு 160 படி காவல் துறை அதிகாரி மேற்கூறிய குற்றங்கள் சம்பந்தமான தெரிந்த விபரங்களை சொல்ல அது சம்பந்தப்பட்டவர்களை அழைக்கப்படும் சம்மனாகும்.

ஆகவேதான் மோடியினை அழைத்துள்ளார்கள். சிறப்பு விசாரணைக் குழுவினர். ஆனால் மோடி என்ன சொன்னார் தெரியுமா? தனக்கு எந்த சம்மனும் வரவில்லை, தனது எதிரிகளின் திட்டமிட்ட செயல் என்றும் கூறினார். ஆனால் அடுத்த நாளே அதாவது 23.3.2010 அன்று அவருடைய வக்கீல் மகேஷ் ஜேத்மலானி சொல்கிறார்; ''சம்மன் வந்தது உண்மை, அவர் 27.3.2010 அன்று ஆஜராவார்'' என்று. ஆனால் மோதி சொல்கிறார் அவருடன் சேர்ந்து பி.ஜே.பி எம்.எல்.ஏ காலுபாய் மாலிலாடுக்கு அனுப்பிய சம்மனை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டியிருப்பதாகவும் ஆகவே அதனை சிறப்பு விசாரணைக்குழு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவருடைய போர்வையில் ஒளிந்து கொள்;ளப்பார்க்கிறார்.

இரண்டாம் உலகப்போரில் யூதர்களை நாசிப்படை வேட்டையாடியது அனைவரும் அறிந்ததே. ஜெர்மன் நாட்டுக் கோர்ட்டில் ஒரு வழக்கு நடந்தது. அதில் 1944 ஆம் ஆண்டு நடந்த கொலைகளில் சம்பந்தப்பட்ட ஜெர்மன் நாட்டு 88 வயதான வீல்ச் சேரில் வாழும் முன்னாள் படைத்தளபதி ஹீன்ரிச்சுக்கு 23.3.2010 அன்று ஆயுள் தண்டனை வழங்கியது. இது எதற்காகச் சொல்கிறேனென்றால் ''உப்பினைச் சாப்பிட்டவன் தண்ணீர் குடிக்கத்தானே செய்ய வேண்டும்'' என்ற நாட்டுப்புற பழமொழிகளை யாரும் மறந்து விட மாட்டார்கள்.

அது போல குஜராத் முதல்வர் 1500 முஸ்லிம்களை குஜராத் மாநிலத்தில் கொன்ற குற்றத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். ''ஊருக்கு இளைத்தவன் பிள்ளையாராண்டி'' என்ற பழமொழிக்கிணங்க அப்பாவி முஸ்லிம்களை என்னைப் போன்றோர் உள்பட பொய் வழக்கில் மாட்ட வைக்கும் யுக்தியினை குஜராத் போன்ற பல மாநில அரசுளும்-மத்திய புலனாய்வுத் துறையும் கையாண்டு கொண்டுதான் உள்ளனர் என்பதினை முஸ்லிம்கள் அறியாமலில்லை. ஆனால் ஆட்சியிலுள்ளவர்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் சட்டத்திலுள்ள அனைத்து ஓட்டைகளையும் பயன்படுத்தி தப்பிக்கப் பார்க்கின்றனர்.

உதாரணத்திற்கு பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் சீக்கிய தீவிரவாதிகளால் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டபோது டெல்லியுள்ள சீக்கியர்கள் 2000 பேர்களுக்கு மேல் கொலை செய்யப்பட்டும், அவர்கள் வீடு, கடைகள் எரிக்கப்பட்டும் அவர்கள் இன்னும் சில இடங்களில் அகதிகளாக உள்ளனர்.

அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜான் குமாருக்கு வாரண்ட் பிறப்பித்த பிறகும் பாதுகாப்பு வளையத்தில் வளைய வரும் அவரை கோட்டை விட்டதாக சி.பி.ஐ சொன்னது. சீக்கிய மக்களும், பத்திரிக்கை ஊடகங்களும் கண்டனம் எழுப்பின. கண்டனத்திற்குப் பிறகு அவர் டெல்லிக் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார் என்றது செய்தி. சட்டத்தினை ஆளுங்கட்சியினைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் எப்படியெல்லாம் தங்கள் இஷ்டம்போல வளைக்கிறார்கள் என்று தெரிகிறதா?

ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதவத் சொல்கிறார் இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் தான். அவ்வாறு ஹிந்துக்களாக இல்லாதவர்கள் இந்தியாவினை விட்டு வெளியேறி விட வேண்டுமாம். ஏன் முஸ்லிம்கள் இந்த நாட்டிக்காக தியாகம் செய்யவில்லையா? டெல்லியை ஆண்ட கடைசி முகலாய மன்னர் பகதூர்ஷா ஸபர் முதலாவது ஆங்கிலேயருக்கு எதிராக போர் கொடி தூக்கவில்லையா? ஆயுதம் ஏந்தி போரிட முதலில் வந்த சுபாஸ் சந்திரபோஸுக்கு இந்தியாவிலும்-பர்மா போன்ற நாடுகளிலும் வாரி வழங்கி ஐ.என்.ஏ படையில் நூற்றுக்கணக்கானவர் சேரவில்லையா?

90 வயதிற்கு மேல் உயிர் வாழும் போராட்ட வீரர் அமீர்ஹம்ஸாவினை முஸ்லிம்கள் தியாகம் சம்பந்தமாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் கேட்டுத் தெரிந்து கொண்டால் நலமாக இருக்கும். அல்லது முஸ்லிம்கள் சுதந்திரத் தியாக வரலாறுகளைப் படித்தால் நலமாக இருக்கும். அரசியல் சட்டப்படி ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொல்வது போல பிரிவு 14க்கு எதிராக அவரால் நடவடிக்கை எடுக்க முடியுமா?

இந்தியக் கோர்ட்டில் சமீபத்தில் ஒரு வழக்கு நடந்தது. அதில் ஜெர்மன் நாட்டு பெண்ணுக்கு கருப்பையில் கோளாறு. யாத்திரை வந்த அந்த தம்பதிகளுக்கு இந்தியப் பெண் மும்பையில் செயற்கை முறையில் கருத்தரிக்க உதவி அழகான பெண் குழந்தையும் பெற்றுக் கொடுத்தால். அந்தக் குழந்தை எந்த நாட்டு உரிமை கொண்டாடுவது என்ற வழக்கில் இந்தியக் கோர்ட்டு அந்தக் குழந்தைக்கு இந்திய பிரஜா உரிமை வழங்கி ஆணையிட்டது. செயற்கை முறையில் கருத்தரித்த வெளிநாட்டு தம்பதிகளின் குழந்தைக்கே இந்திய பிரஜா உரிமை கொடுக்கும் போது இந்திய குடிமகன்களான இந்திய முஸ்லிம்களை இந்திய மண்ணிலிருந்து வெளியேறச்சொல்ல அவருக்கு யார் உரிமை கொடுத்தது?.

அதேபோல் மகாராஷ்ட்ராவில் சிவ்சேனா அமைப்புகள் மகாராஷ்ட்ரா மகாராஷ்ட்ராவினர்க்கே சொந்தம், அவர்களுக்குத்தான் வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் வேலைக்காக வந்த அடுத்த மாநில மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது என்ன நியாயம்? ஏந்தக் கோர்ட்டாவது அப்படித் தாக்கும்-தூண்டிவிடும் சிவ்சேனா தலைவர்கள் பால்தாக்கரே-ராஜ்தாக்கரே-உதய் தாக்கரே உள்பட தண்டிக்க முடிகிறதா?

மேலே சொன்ன உதாரணங்கள் எல்லாம் எப்படி ஆட்சி பீடத்திலுள்ள, மத செல்வாக்குள்ளவர்கள் குற்றங்கள் செய்து விட்டும், விஷ துவேஷத்தினை பரவ விட்டும் நீதியின் கரங்களிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் என்று பார்த்தோம். அவர்களை நீதியின் கரங்கள் தங்கள் வளையத்தில் கொண்டு வரமுடியவில்லை. நீதியினைப்பார்த்து என்னைத்தொடாதே என்று கேலி செய்கிறார்க்ள் அந்த செல்வாக்குள்ளவர்கள் என்று புரிகிறதா? டெல்லி சீக்கியர் கொடுமை நடந்து 26 வருடம் ஆகிறது. பாபர் மஸ்ஜித் இடித்து 18 வருடமாகி விட்டது. இப்போது தான் ராய் பெரேலிக் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது.

இதில் உற்சாகமாக தகவல் என்னவென்றால் அத்வானிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அஞ்ஜூ குப்தா பி.ஜே.பி எப்படி தொண்டர்களை கர்சேவைக்கு லட்சக்கணக்கில் கூட்டி, பாபரி மஜ்ஜித் இடித்த நேரத்தில் அத்வானி, முரளி மனோகர் ஜோஜீ, உமா பாரதி, பெண் சுவாமி ரித்தம்பரா, வினாய் கட்தார், டால்மியா, கிரஜா மகராஜ், அசோக் சிங்கால் போன்றோர் எப்படி ஆக்ரோசமாக தூண்டிவிட்டனர் என்பதினை 20க்கு மேற்பட்ட அதிகாரகள் இருந்தாலும் தைரியமாக இன்று கோர்ட்டில் சாட்சி சொல்லி இருக்கிறார்.

அவருடைய நேர்மையினை, துணிச்சலினை உங்கள் சார்பாக பாராட்டுகிறேன். குஜராத் இனப்படுகொலை நடந்து எட்டு வருடமாகிறது. நீதி கிடைக்க தாமதமாகிறது.

''தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகக் கருதவேண்டும்'' என்று சட்ட நிபுணர்கள் கருத்து. ஆனால் நம்பிக்கையில் வாழும் இந்தியர் நீதி தாமதமானாலும் மறுக்கப்பட்ட நீதியாக இருக்கக்கூடாது என ஆசைப்படுவது நியாயம் தானே சொந்தங்களே!

www.nidur.info