Home குடும்பம் பெண்கள் ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி!
ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி! PDF Print E-mail
Tuesday, 26 August 2008 08:28
Share

ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி

தொழிற் கல்விப் படிப்புகளில் தற்போது அதிகக் கவனம் பெற்றுள்ளது உணவு தயாரிப்பு (கேட்டரிங்), ஆடை வடிவமைப்பு (ஃபேஷன் டெக்னாலஜி) ஆகியவைதான்.

வெளிநாடுகளுக்குச் சென்று அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற ஆவலைத் தூண்டும் (உண்மையோ, பொய்யோ) துறையாக சில ஆண்டுகளாக இவை பிரபலமடைந்துள்ளன.

இவற்றின் ஒரு பகுதியாக "ஃபேஷன் டெக்னாலஜி' எனப்படும் ஆடை வடிவமைப்பு பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கும் போதும், வழக்கமான கல்லூரி ஆண்டு விழாக்களிலும் "ஆடை அலங்கார அணிவகுப்பு' கட்டாயம் இடம்பெறுகிறது.

இங்கே தான் குழப்பமே. இந்த அலங்கார அணிவகுப்புகள் தமிழ்நாட்டு கலாசாரத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத அரைகுறை நடை, உடை, பாவனைகளுடன் அமைந்து விடுகின்றன.

நிச்சயமாகப் பொது இடங்களில் போட்டுக் கொண்டு வெளிவர முடியாத ஆடைகளை மட்டுமே அணிந்து கொண்டு, வழக்கமான மேடை கலாசாரமாகிய ஒளி வெள்ளத்தில், "ஆணிக்கால்' வந்தவரைப் போல "ஹை ஹீல்ஸ்' செருப்பு அணிந்து நடந்து வரும் இளம்பெண்கள், மேடையின் முன் அமர்ந்திருக்கிற நூற்றுக்கணக்கான மக்களுக்கு "பறக்கும் முத்தமும்' கொடுக்கிறார்கள்.

நிகழ்ச்சி முடியும் தருவாயில் இவர்களுக்கெல்லாம் ஒப்பனை செய்த கலைஞர்கள் (மேக்அப் மேன்) வருகிறார்கள். அவர்களை இறுக அணைத்தவாறே இறுதி நடை. சில நேரங்களில் அவர்களுக்கும் பகிரங்க முத்தம். "இவர் என்னுடைய மாஸ்டர்- இவர் என்னுடைய மாணவி'... அறிமுகங்கள் வேறு.

பெரும்பாலான ஆடை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்பவர்கள் எல்லாம் கோவை போன்ற மாநகரிலிருந்து அழைத்து வரப்படும் "மாடலிங்' பெண்கள். அப்பாவியாய் நடைபோடும் ஆண்களும் உண்டு. ஒரு மணி நேரம் மேடையில் "நடக்க' இவர்கள் கட்டணம் பெறுகிறார்கள்.

கால்களும், உடலின் சில பகுதிகளும் இடமும், வலமுமாகச் செல்ல வேண்டும். ஆனால், நேராகச் செல்ல வேண்டும். இதற்குத்தான் "கேட் வாக்' என்ற பெயர் வேறு. இந்த நடை முறையால், யோகா செய்யாமல், உடற்பயிற்சி செய்யாமல் உடல் ஆரோக்கியமாக இருக்குமென்றாலும்கூட பரவாயில்லை. கையில் அல்லது கக்கத்தில் எதுவுமே இல்லாத குட்டைப்பையொன்று கண்டிப்பாக இருக்கும்.

இன்னும் சில பேஷன் டெக்னாலஜி கல்லூரிகளில் அபத்தங்கள் அரங்கேறுகின்றன. காய்கறிகளால், பயறுகளால் தயாரிக்கப்பட்ட ஆடை, பெண்களின் பாவாடையைப் போல மூங்கில் கூடை, சாக்கு தைக்கப் பயன்படும் சணலைக் கொண்டு தயாரிக்கப்படும் உடைகள். இதைத்தான் புதியன உருவாக்கும் திறன் (கிரியேட்டிவ்) என்கிறார்களோ?

இவற்றை அணிந்து கொண்டு ஆண்களும், பெண்களும் மேடையில் உலாவரும்போது பின்னணி இசைவேறு. இவையெல்லாம் எதற்காக? சாதாரணமாக இவற்றை அணிந்து சாலைகளில் நடை போட முடியுமா? தெரு நாய்கள் துரத்தாதா? திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்குப் போகத்தான் முடியுமா?

உண்மையில் இந்தப் படிப்பு, அறைகுறை ஆடைகளை, அபத்தமான ஆடைகளைத் தயாரிக்கத் தானா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அவ்வாறில்லை என கல்வித் துறையினர் மறுக்கின்றனர்.

பிறகு எதற்காக? புதிய வடிவங்களை, முன்மாதிரிகளைத் தயாரிக்கிறோம் என்பதைக் காட்டவா? இல்லை. அறைகுறையும், அபத்தங்களும் மட்டும்தான் புதிய வடிவங்களா? இல்லையில்லை. முற்றிலும் வணிக உத்தியே.

எதையும் வித்தியாசமாகப் பார்த்துப் பழகிய நம் மக்கள் மத்தியில் அபத்தமான, ஆபாசமான உடையணிந்து ஊர்வலம் விட்டால் கல்லூரிக்கு ஆள் பிடிக்கும் வேலையை எளிதாகச் செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கத்தான் இந்த ஆபாசங்களும் அபத்தங்களும்.

இவையெல்லாம் மாயத் தோற்றங்கள் என்ற உண்மை புரியாமல் கீழே உட்கார்ந்து கைதட்டி ஆரவாரம் செய்யும் இளைஞர்கள், இளைஞிகள், பெற்றோர்களையும்கூட என்ன செய்வது?

கல்வி கற்க இதுபோன்ற அறிமுகங்கள் நமக்குத் தேவையா? கல்வியைக் கொடுக்க இதுபோன்ற நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்கள் நடத்த வேண்டுமா? கல்வி முறை, நம் வாழ்க்கை முறையை- வாழ்க்கைத் தேவையைவிட்டு வெகுதொலைவு விலகிச் செல்வதாகத் தெரிகிறதே?

உடைக்கும், நடைக்கும், கண்ணை- காதைப் பிளக்கும் ஒலி, ஒளிக்கும் என்ன பொருள்? விவரம் தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் நல்லது.

www.nidur.info