Home கட்டுரைகள் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) தந்தையையும் தாயையும் காப்பது தலையாய கடமை
தந்தையையும் தாயையும் காப்பது தலையாய கடமை PDF Print E-mail
Tuesday, 09 February 2010 08:22
Share

MUST READ

தந்தையையும் தாயையும் காப்பது தலையாய கடமை

     Dr. A.P.முஹம்மது அலி. Phd. I.P.S.(rtd)     

[ குர்ஆனுடைய மேற்கோள்படி பிள்ளைகளை ஒரு ரத்தக்கட்டி மூலம் உருக் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தப்பிள்ளை தாயின் கருவில் வளரும் போது தாய் தன் உதிரத்தை உணவாக தந்து வளர்க்கிறாள்.

குழந்தை தாயின் வயிற்றில் தவழும் போது ஏற்படும் அசைவுகளை இன்ப வேதனையாக ஏற்றுக் கொள்கிறாள்.

பிறக்கும் போது தாய் படும் வேதனையினை எடுத்தியம்ப வார்த்தையில்லை. சில சமயங்களில் அந்தக் குழந்தையினைப் பெறும் போது தாயும் மடிவதுண்டு.

பிறந்த குழந்தையினை தாலாட்டி, .சீராட்டி வளர்க்கும் போது கணவன் கூட சில சமயங்களில் மனைவியினைப் பார்த்து பெறாமை அடைவதுண்டு.

குழந்தையினை தூக்கிக் கொஞ்சும் போது சிறுநீர், மலம் கழித்தாலும் அதனை புன்சிரிப்புடன் தாங்கிக் கொள்வதுண்டு, குழந்தை பெற்றோர்கள் நெஞ்சில் மிதித்தாலும் அதன் வலியைப் பொறுத்துக் கொள்வதுமுண்டு.

தாய் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் தான் குழந்தை அழும் போது சிரிப்பாளாம். அது எப்போது தெரியுமா நண்பர்களே?

தன்னுடையக் குழந்தை பிறக்கும் போது அழுவதைப் பார்த்துத் தானே தாய் மகிழ்ச்சி வெள்ளத்தில் அழுவாளாம்.

ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்த பின்பு ''வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த'' கதைகளைக் கேட்கும் போது தானே நாம் குழந்தைகளுக்கு மார்க்க நல்லொழுக்கங்களைச் சொல்லிக் கொடுக்க மறந்துவிட்டோமா? என்ற சந்தேகம் எழுகிறது.]

முதல் செய்தி:    05. 02. 2010 காலைப் பத்திரிக்கையினை புரட்டிக் கொண்டிருந்த எனக்கு ஒரு பெட்டிச் செய்தியினைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அது என்ன என்று கேட்கிறீர்களா?

70 வயதான கலீல் அஹமது என்ற பெரியவர் சென்னைக் கூடுவாஞ்சேரி மெயின் ரோடில் உள்ள காட்டுச் செடிகள் ஓரத்தில் அவருடைய மகன்களால் காரில் கொண்டு வரப்பட்டு அனாதையாக தள்ளப்பட்டார். ஒட்டிய வயிறும், மெலிந்த தேகமும் கொண்ட அவரைக்கண்ட அந்த வழியாகச் சென்ற இரக்கக் குணம் கொண்ட சிலர் தின்பதற்காக தின்பண்டங்களை அவர் அருகில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

அதனைக்கூட அவர் எடுக்கக்கூடிய திராணியில்லை. அதனை தெருநாய்கள் சாப்பிட்டதாகவும், அந்த பரிதாப நிலையினைப் பார்த்த சிலர் அருகில் இருந்த காவல் துறையினரை அனுகியதாகவும். அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லையென்றும், ஆகவே காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டருக்கு செல்ஃபோனில் தகவல் சொன்னதாகவும், அவர் தாசில்தாரை அனுப்பி மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாகவும், ஆனால் அந்த முதியவர் எவ்வளவோ அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் அவரை அனாதையாக விட்டுச் சென்ற மகன்கள் பெயர்களைச் சொல்லத் தயாராகவில்லை என்றும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது..

தான் துன்பப்பட்டாலும் தன்னை நடுத் தெருவில் அனாதையாக விட்ட பிள்ளைகளைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை என்று அறியும் போது அவரதுபிள்ளைப்பாசத்தின் அழுத்தம் உங்களுக்குத் தெரியவில்லையா?

இரண்டாவது செய்தி:    02. 02. 2010 அன்று பத்திரிக்கைகளில் வந்தது. 70 வயதான கணவர் பூங்காவனம்-மனைவி, சின்னக்குழந்தை திருவேற்காடு தன் மகன் வீட்டில் வசித்து வந்தனர். அந்தப் பெண்மனி தன் நகைகளை மகன் கேட்டுக் கொண்டதிற்கிணங்க கொடுத்து வைத்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு அந்த நகைகளை திருப்பிக் கேட்டதாகவும், ஆனால் மகன் அதனை மனைவியிடமிருந்து வாங்கிக் கொடுக்கவில்லையென்றும் அதனையறிந்து மனம் நொந்த வயதான தந்தையும்-தாயும் தாங்கள் சொந்தக்காரர்களைப் பார்க்க வந்தவாசிக்கு செல்வதாக மகன் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு திருவேற்காடு ஏரிக்கரை சென்று விஷம் அருந்தி இறந்ததாகவும் செய்தி வெளி வந்தது.

ழூன்றாவது செய்தி:  01. 02. 2010 தேதியில் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக நடப்பதாக ஒரு சம்பவத்தினை மேற்கோள் காட்டியிருந்தது. அதுதான் ''கைக்குத்தல்'' என்ற பழக்கம். நெல்லை உரலில் குத்தி எடுத்த அரிசியைத்தானே கைக்குத்தல் என்று கேள்விப்பட்டிருக்கிறோம.; ஆனால் வயதானவர்களை அன்புக் கொலை மூலம் சாகடிப்பதினைக் கேள்விப் பட்டிருக்கிறோமா? இல்லையே! அதுதானே புது தகவலான ''கைக்குத்தல்''.

அதாவது 80 வயதினைக் கடந்த ஆணோ-பெண்ணே தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக் கொண்டு அவஸ்தை படக்கூடாது என்ற அபூர்வ நடவடிக்கையாகும். 80 வயதினைக் கடந்த பெரியவர்; உறவினர்களுக்கு தகவல் சொல்லி வரவழைத்து அவர்களுக்கு உடல் முழுக்க எண்ணெய் தடவப்படும். பின்பு குளிர்ந்த தண்ணீரில் அவரைக் குளிப்பாட்டுவார்கள். அதன் பயனாக அந்த பெரியவர் ஜன்னிக் கண்டு இரண்டு நாளைக்குள் இறந்து விடுவார். அதன் பின்பு அவருடைய உறவினர் இறுதி சடங்கு செய்வார்களாம்.மேற்கூறிய சம்பவங்கள் ழூன்றுமே அதிர்ச்சியான செய்திதானே?

குர்ஆனுடைய மேற்கோள்படி பிள்ளைகளை ஒரு ரத்தக்கட்டி மூலம் உருக் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தப்பிள்ளை தாயின் கருவில் வளரும் போது தாய் தன் உதிரத்தை உணவாக தந்து வளர்க்கிறாள்.

குழந்தை தாயின் வயிற்றில் தவழும் போது ஏற்படும் அசைவுகளை இன்ப வேதனையாக ஏற்றுக் கொள்கிறாள்.

பிறக்கும் போது தாய் படும் வேதனையினை எடுத்தியம்ப வார்த்தையில்லை. சில சமயங்களில் அந்தக் குழந்தையினைப் பெறும் போது தாயும் மடிவதுண்டு.

பிறந்த குழந்தையினை தாலாட்டி, .சீராட்டி வளர்க்கும் போது கணவன் கூட சில சமயங்களில் மனைவியினைப் பார்த்து பெறாமை அடைவதுண்டு.

குழந்தையினை தூக்கிக் கொஞ்சும் போது சிறுநீர், மலம் கழித்தாலும் அதனை புன்சிரிப்புடன் தாங்கிக் கொள்வதுண்டு, குழந்தை பெற்றோர்கள் நெஞ்சில் மிதித்தாலும் அதன் வலியைப் பொறுத்துக் கொள்வதுமுண்டு.

தாய் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் தான் குழந்தை அழும் போது சிரிப்பாளாம். அது எப்போது தெரியுமா நண்பர்களே?

தன்னுடையக் குழந்தை பிறக்கும் போது அழுவதைப் பார்த்துத் தானே தாய் மகிழ்ச்சி வெள்ளத்தில் அழுவாளாம்.

ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்த பின்பு ''வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த'' கதைகளைக் கேட்கும் போது தானே நாம் குழந்தைகளுக்கு மார்க்க நல்லொழுக்கங்களைச் சொல்லிக் கொடுக்க மறந்துவிட்டோமா? என்ற சந்தேகம் எழுகிறது.

இக்ராமுல் முஸ்லிமீனில் தந்தையினை நடத்தும்விதம் சம்பந்தமாக கூறுகையில், ''அன் அபிதர்தா கால சமிஹ்து ரஸூலல்லாஹ் யக்கூலுல் வாலிது அவ்சத்து அப்வாபில் ஜன்னத்தி ஃபஇன்ஸித்த ஃபஅழ்ஹி தாலிக்கல் பாப அவிஹ் ஃபழ்கு''. அதாவது தந்தை சுவர்க்க வாசல்களில் சிறந்த வாசல். (அவருக்கு மாறு செய்து மனவேதனை கொடுத்து) அவ்வாசலை அழித்து விடவும் அல்லது அவருக்குக் கீட்படிந்து நடந்து(அவரைத் திருப்திப்படுத்தி) அவ்வாசலை பாதுகாக்கவும் உனக்கு விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளது'' என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இன்னொரு தடவை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ''கேவலமடையவும்! மீண்டும் கேவலமடையவும்! மறுபடியும் கேவலமடையவும்'' என கூறியபோது திகைத்து காரணம் கேட்டு கேள்வி எழுப்பிய தோழர் ஹஜரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ''தனது பெற்றோரில் இருவர் அல்லது ஒருவர் முதுமை அடைந்த நிலையில் இருக்க, அவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்வித்து சுவர்க்கத்தில் நுழையாதவன் கேவலமடையவும்'' எனக் கூறியதாகச் சொன்னார்கள். ஆகவே நமது வேதமும், அதனை உலகில் பரப்ப காரண கர்த்தாவான கடைசி நபியும் எடுத்துக் காட்டிய உதாரணத்திற்கு மேல் வேறு என்ன வேண்டும் நல்மார்க்க பண்புகளை கற்க?

நல்ல நெல் விளைச்சல் வேண்டுமென்றால்; நல்ல விதை நெல்லை விதைக்க வேண்டும். அதை விதைத்தால் மட்டும் போதுமா? அதனை போதுமான தண்ணீர்-போசாக்கான உரம்-பாய்ச்சி தாக்காதளவில் பாய்ச்சி மருந்து ஆகியவைகள் தெளித்த பின்பு தான் நல்ல நெல் அறுவடை செய்ய முடியும். அதேபோன்று தானே குழந்தை பிறப்பதிற்கு எவ்வாறு கவனம் செலுத்துகிறோமோ அதே போன்று அன்பு, பாசம், நல்லொழுக்கம், நல்ல உலகக் கல்வி, மார்க்கப்பற்று போன்றவைகளை குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அந்தக் குழந்தை தவறு செய்தால் எப்படி செடிக்கு பாய்ச்சி மருந்து தெளிப்போமோ அதேபோன்று தவறை அந்தக் குழந்தைக்கு கசப்பானதாக இருந்தாலும் சுட்டிக் காட்டி கண்டிப்புடன் வளர்த்தால் தானே நல்லவர்களாக வளரும். அவ்வாறு செய்யவில்லையெனில் நல்ல விதை எப்படி பேணிக் காக்காவிடில் பதராக போய் விடுமோ அதே போன்று குழந்தைகள் வாழ்வும் வீணடிக்கப்படும்.

எனது உறவினர் மலேசியா சிட்டிசன் தகுதி உடையவர். ஐவேளை தொழுது மார்க்கப்பற்று குறையாதவர். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். அவருடைய தாயார் எட்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய பார்வையிழந்த தந்தை இரண்டு வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கிறார். அந்தத் தந்தையினைப் பார்த்துக் கொள்வதிற்காகவே அவர் மலேசியா செல்லாமல் தந்தையினை பேனிக் காப்பதிலேயே அவரும் அவருடைய மனைவியும் கவனம் செலுத்துகிறார்கள். அவ்வாறு உள்ளவர்களுக்குத் தானே எல்லாம் வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்ற சொர்க்க வாசலை திறந்து வைப்பான். அது போன்றவர்கள் நம்மிடையே இல்லாமலில்லை என்பதிற்காகத் தான் மேற்கொண்ட உதாரணத்தினைச் சொன்னேன்.

சில மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியானதினை அனைவரும் படித்திருப்பீர்கள். அதனை இந்தச் சமயத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். உத்திரப் பிரதேசத்தினைச் சார்ந்த ஒரு திருமணமாகாத இளைஞர் தந்தையினை இழந்தவர். பொருளாதாரத்தில் அவ்வளவு வசதியில்லாதவர.; அன்புத் தாய் மட்டுமே உள்ளார். அந்தத் தாய்க்கு ஒரு ஆசை. எப்படியாவது தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரக் கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்று. ஆனால் அந்த ஆசையினை நிறைவேற்ற அந்த மகனிடம் போதிய வசதியில்லை. அதற்காக தாயின் ஆசையினை எட்டாக்கனி என்று ஒதிக்கித் தள்ளினாரா? என்றால், இல்லையே! ஒரு கூடையிலே தாய் அடுத்தக்கூடையிலே தனக்கும்,தனது தாயும் உடுத்த போதுமான உடை எடுத்துக் கொண்டு அந்தக் கூடையில் தாயினை உட்கார வைத்து உத்திரப் பிரதேச மாநிலத்திலுருந்து ராமேஸ்வரம் வந்து தன் அன்புத் தாயின் ஆசையினை நிறைவேற்றி மகிழ்ந்ததாக பத்திரிக்கைகளுக்குப் பேட்டியும் அளித்துள்ளார் என்றால் பாருங்களேன். பெற்றோரை எவ்வளவு மதிக்கிறார் அவர் என்று.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எங்களூர் கண்மாயின் கீழ் கோடியில் உள்ள கீழாயூருக்கு அருகில் குடிக்கத் தண்ணீர் எடுக்க ஊற்றுத் தோண்டும் போது முதுமக்கள் தாழியினை தோண்டி யெடுத்தார்கள். அங்கே சென்று பார்த்தேன். அந்தத்தாழிகள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு வயதானவர்களை உயிருடன் போட்டு அவர்கள் சில நாட்கள் வாழும் அளவிற்கு வாக்கரிசி, அவர்களுக்கு பிடித்த பண்டங்கள், அவர்கள் உபயோகித்;த மண்பண்டஙகள், சிறிய எண்ணெய் விளக்கு வைத்து மூடி வைத்து விடுவார்களாம். அது தானே உயிர் ஊசலாடும் போது அந்தக் காலத்தில் எடுத்த நடவடிக்கை. அதே நடவடிக்கையைத் தானே மேற்கூறிய விருதுநகர் மாவட்டத்தில் நடப்பதாகக் கூறிய ''கைக்குத்தல்'' என்ற அன்புக்கொலை என்றால் மிகையாகுமா?

ஃபார்சி இனத்தவர் இறந்தவர்களை காக்கைக்கும், கழுகுக்கும் உணவாகும்படி குன்றுகள் மேல் வைத்து விடுவார்களாம். அதுபோன்று வயதில் பெரியோர்களை நடத்தக் கூடாது, இறந்தவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டுமென்று என்று தானே ரஸ_லுல்லாஹ் இறந்தவர்களை குளிப்பாட்டி சுத்தம் செய்து கபனிட்டு நல்லடக்கம் செய்யச் சொன்னார்கள். அதனை விட்டு விட்டு பெற்றோரை நடுரோட்டில் அனாதையாக விட்டு தலை முழுகலாமா?

இங்கே ஒரு தமிழ் பழமொழியினையும் அதற்கான ஒரு கதையினையும்; சொல்வது சரியானதாகும் என் நினைக்கிறேன். ஒரு வீட்டில் உள்ள சிறுவன் தன் பெற்றோர் தினமும் தன் வயதான பாட்டனாருக்கு ஒரு சிறு மண்பாண்டத்தில் உணவிடுவதும், அவரை கீழ்தரமாக நடத்துவதையும் பார்த்து பொருமிக்கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் தன் பாட்டனார் சாப்பாட்டு மண் பாத்திரத்தை தந்தை கண் எதிரே எடுத்து பத்திரப்படுத்தினான். தந்தை அதனைப் பார்த்து ஏன் அதை; எடுத்து பாதுகாப்பாக வைக்கிறாய் என்றார். அதற்கு அந்த சிறுவன், ''தாத்தா இறந்த பின்பு உங்களுக்கு உணவளிக்க அது உதவுமே என்றுதான் அதனைப் பத்திரப்படுத்து''வதாகச் சொன்னதும் அதிர்ச்சியடைந்து பாட்டனாரை தந்தையும், தாயும் போட்டி போட்டு நல்ல முறையில் நடத்தினார்கள் என்பது கதையாக இருக்கலாம். அந்தக் கதையினை தழுவித் தானே தமிழில் உள்ள பழமொழியில், ''முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'' என்பார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் செயல்களை கண்காணிக்காமலில்லை என நினைத்து தங்கள் பெற்றோருக்கு கடமை செய்ய வேண்டும்.

தீன் குறள் என்ற புத்தகத்தில் கவிஞர் இ. பதுருத்தீன் கீழ்கண்ட குறளை பெற்றோர் பற்றி எழுதியுள்ளார்:

''செல்லுபடியாகாச் செயல்புரினும் தள்ளுபடி செய்யற்க தாய்தந்தைச் சொல்''

அதாவது தனக்கு உடன்படாத செயல் பெற்றோர் செய்தாலும் பொற்றோரை ஒதுக்கித்தள்ளாதே, என்பதே அதன் பொருள்.

மற்றொரு குறளில், ''தோள் துர்க்கி, தொட்டிலும் ஆட்டி, அரவணைத்தார் தாள்துர்க்கிக் காத்தல் தலை'' அதாவது தோளிலும் துர்க்கித் தொட்டிலிலும் ஆட்டி அரவணைத்து வளர்த்த பெற்றோர்தம் பாதங்களையும் போற்றிக் காப்பது பிள்ளைகளின் கடமையாகும். ஆகவே தான் தாயின் காலடியில் சொர்க்கமிருக்கிறது என்று போதித்தது இஸ்லாம். அதற்காக தாயின் காலடியில் தலை வைத்து வணங்கவேண்டுமென்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அது ஷிர்க் ஆகும். தாய், தந்தையினை பேணிக்க காப்பாற்றுங்கள்: அவர்களை அனாதையாக நடுத் தெருவில் விடாதீர்கள் என்பதைத் தானே போதித்தது இஸ்லாம்.

உங்கள் பெற்றோரை கூடுவாஞ்சேரியில் அனாதையாக விடப்பட்ட 70 வயது கலீல் அஹமது போன்று விட்டு விடுடாதீர்கள். அவர்கள்தானே நீங்கள் உலகத்தின் பார்த்த முதன் முதல் அறிமுகமாக இருக்கிறார்கள். அவர்களை காப்பதின் மூலம் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்ற சொர்க்க வாசலை அடைய உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

www.nidur.info