Home இஸ்லாம் வரலாறு காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (1)
காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (1) PDF Print E-mail
Tuesday, 26 January 2010 11:40
Share

 Image result for qayde azam muhammad ali jinnah

காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (1)

[ அரசியலிலும், காயிதே ஆஸாம் அதே அளவிற்குத் துல்லியமாக இருந்தார். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் அவர் எடுத்ததே கிடையாது. பில்லியர்ட்ஸ் விளையாடுவது போலவே, ஒவ்வொரு நிலைமையையும் பல கோணங்களில் ஆராய்ந்து முதல் முயற்சியிலேயே, வேண்டியது கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டே பின்னரே அவர் தன் செயலைத் தொடங்குவார்.

அவர் வேட்டையாடும் பொருளை மிகச் சரியாகக் கணித்து, அதை வீழ்த்துவதற்கு மிகச் சரியான ஆயுதத்தைத் தேர்ந்தொடுப்பார். அவசர அவசரமாக துப்பாக்கியை எடுத்துக் குறிபாராமல் சுடக்கூடிய வகையராக்களைச் சேர்ந்தவர் இல்லை அவர். தாக்குவதற்கு முன்னரே, அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் காயிதே ஆஸாம் அறிந்து தான் இருந்தார்.]

[ காயிதே ஆஸாம் முஹம்மது அலி ஜின்னாவின் காரோட்டியாகப் பல வருடங்கள் இருந்த ஆஸாத் அவரைப்பற்றி கூறும் சுவையான வரலாற்றுத்தொடர் ]

''1939ம் வருடம் முஸ்லீம் லீக் அதனுடைய வாலிபப் பருவத்தில் இருந்தது - நானும் அது போலவே தான். ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புள்ள வயதில் இருந்தேன்... ஏதாவது. நான் திடமாகவும் கட்டுமஸ்தான உடலைக் கொண்டவனாகவும் இருந்தேன். என் வழியில் எது வந்தாலும் அதனோடு மோதுவதற்குத் தயாராக இருந்தேன். நான் எதற்கும் துணிந்தவனாக இருந்தேன்.

என் சொந்தக் கரங்களாலேயே ஏதேனும் ஒரு ஜந்துவை வடிவமைத்து அதனோடு கண்மூடித்தனமாக மல்யுத்தம் செய்வதற்கும் நான் தயாராக இருந்தேன். வாலிபம் அப்படிப்பட்டது தான். ஏதேனும் செய்யவேண்டும் என்ற துடிப்பில், அதுவும் அது மிகப் பெரிய விசயமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், சதா சர்வகாலமும் அமைதியற்ற நிலையில் தான் இருப்போம். வெறுமனே அமைதியாக உட்கார மட்டும் முடியவே முடியாது.''

இதைச் சொன்னது, சினிமா நடிகர் ஆஸாத் - இந்தப் பெயர் பலருக்குப் பரிச்சயமானது. நாடு துண்டாக்கப்படுவதற்கு முன்பு பம்பாய் திரைப்படத்துறையில் இருந்தான். அதற்குப் பிறகு லாகூரில் குடியிருக்க, அங்கு மற்ற சக நடிகர்கள் போல வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கிறான். பாகிஸ்தானில் திரைப்படத்துறை அப்படிப்பட்ட நிலையில் தான் இருந்தது. அவன் காயிதே ஆஸாம் முஹம்மது அலி ஜின்னாவின் காரோட்டியாகப் பல வருடங்கள் இருந்தவன் என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். அது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்ததால், ஒரு நாள் அவனைத் தேடிச் சென்றேன். அவனுடைய கடந்த கால நினைவுகளை மீட்டெடுப்பதற்கு நான் பல சந்திப்புகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இனி ஆசாத்தே பேசட்டும்.

ஒரு சமயம் காலிப் இளமையாய் இருந்தது போல் தான் நானும் இருந்தேன். அந்த மாபெரும் கவிஞன் அரசியல் இயக்கத்தால் உள்ளிழுக்கப் பட்டானா இல்லையா என்று எனக்குத் தெரியாது என்றாலும் நான் அகில இந்திய முஸ்லீம் லீக்கினுடைய உறுதியான தொண்டன் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். மற்ற எத்தனையோ இளைஞர்கள் போலவே தான் நானும் காஸியாபாத் கிளையின் நேர்மையான உறுப்பினராக இருந்தேன். நேர்மையாக என்று சொல்வதற்குக் காரணம் என்னிடம் இருந்தது எல்லாம் அது ஒன்று தான்.

முஹம்மது அலி ஜின்னா டெல்லி வந்த போது, அதுவரை, அந்த அளவில் எவருமே பார்த்திராத ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டதை என்னால் தெளிவாக நினைவு கூர முடிகிறது. காஸியாபாத் வாலிபர்களான நாங்கள் அந்த நிகழ்வு பெரும் வெற்றியை அடைவதற்குச் சாதாரணமாக பங்காற்றவில்லை.

எங்கள் கிளையை தலைமை ஏற்று நடத்தியவர் பின்னாளில் பாகிஸ்தானின் கவிஞர் என்று அறியப்பட்ட, மிகவும் துடிப்புள்ள வாலிபனான ''அன்வர் குரேஷி''யேதான். அந்த நிகழ்ச்சிக்குப் பிரத்யேகமான கவிதை ஒன்றை அவர் எழுதித்தர நாங்கள் எல்லோரும் அதை ஊர்வலத்தில் பாடிக்கொண்டு சென்றோம். தாளம் தவறியதா இல்லையா என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நாங்கள் பாடிக்கொண்டு சென்றோம். எங்கள் தொண்டையில் இருந்து வெளியேறிய சுருதி சரியானதா தவறானதா என்றெல்லாம் நாங்கள் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை.

காலிப் சொன்னதை நினைத்துப்பார்: ''நீ என்ன பேசுகிறாய் என்பதோ, நீ பேசுவது தாளத்துக்கு உட்பட்டதா, இல்லையா என்பதோ முக்கியமான விசயமே இல்லை. எது முக்கியமானது என்றால் நீ பேச வேண்டும்.'' டெல்லியில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஜும்மா மசூதியில் இருந்து, அந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஊர்வலம் தொடங்கி விண்ணைப் பிளக்கும் கோஷங்களோடு சாந்தினி சௌக், லால் கன்வான், ஹெளக் காஸி மற்றும் சௌரிபஜார் வழியாக சென்று முஸ்லீம் லீக் அலுவலகத்தில் முடிவடைந்தது.

இந்த ஊர்வலத்தில்தான் முஹம்மது அலி ஜின்னாவுக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காயிதே அஸாம், அதாவது மாபெரும் தலைவர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டதாக நினைக்கிறேன். ஆறு குதிரைகள் பூட்டிய திறந்த வண்டியில் அவர் இருந்தார். ஒவ்வொரு முஸ்லீம் லீக் தலைவரும் அன்று எங்களோடு ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். ஆண்கள் மிதிவண்டி, மோட்டார் வண்டி, ஏன் ஒட்டகம் இழுத்த வண்டியில் கூட வந்தார்கள். எல்லாம் மிக ஒழுக்கத்தோடு நடந்தது. எல்லாம் கண்டிப்பாக ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நம் தலைவருக்கு அது பெருத்த சந்தோசத்தைக் கொடுத்தது.

என்னைப் பொருத்தமட்டில், அந்த ஊர்வலம் மிகவும் உணர்வு பூர்வமாக என்னைப் பாதித்தது. நான் அதனால் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டேன். என் கண்கள் முதல் முறையாக ஜின்னா சாகிப்பைப் பார்த்த போது எப்படி உணர்ந்தேன் என்பதைக் கூட என்னால் இப்போது சரியாக நினைவு கூர முடியவில்லை.

நான் திரும்பிப் பார்த்து அந்த உணர்வுகளை ஆராய முற்பட்டால், நான் அவரை நேரடியாகப் பார்ப்பதற்கு முன்னரே அவர் மீது இருந்த ஈடுபாட்டில் யாரோ ஒருவர் எவரையோ சுட்டிக்காட்டி, ''அதோ உன்னுடைய காயிதே ஆஸாம்'' என்று சொல்லியிருந்தாலும் நான் அதை முழுமையாக நம்பி அவரைப் பார்த்ததில் தடுமாற்றம் கொள்ளும் அளவிற்கு சந்தோசப்பட்டிருப்பேன் என்றே நினைக்கத் தோன்றுகிறது. நம்பிக்கை அப்படிப்பட்டது தான். ஓரு இழை சந்தேகமும் இல்லாமல் மிகச் சுத்தமானது.

பழைய டெல்லி சாலைகளில் அந்த ஊர்வலம் சுழன்று கொண்டிருந்த போது, ஜின்னா சாகிப்பைப் பல கோணங்களில் இருந்து பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது திடீரென்று ஓர் எண்ணம் என் மண்டைக்குள் உதித்தது. எப்படி என்னுடைய காயிதே ஆஸாம், என்னுடைய மிகப்பெரிய தலைவர் இவ்வளவு பலவீனமாகவும் உடைந்து போகிறாற் போலவும், மெலிந்தும் இருக்க முடியும்!

காலிப் ஒரு முறை, அவரைப் பார்க்க வந்த அவருடைய காதலியைக் கண்டு அதிசயித்துப் போனாராம். ஆச்சரியத்தில் அந்தக் கவிஞர் அவளையும், அவள் நுழைந்த அந்த வீட்டையும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாராம். ஏறக்குறைய நானும் அப்படித்தான் உணர்ந்தேன். உடைந்து போகிறாற் போல் இருக்கும் காயிதே ஆஸாமின் உடலையும், என்னுடைய திடமான கட்டுமஸ்தான உடலையும் பார்த்து, ஒன்று நான் சுருங்கி விட வேண்டும் அதாவது நான் அவரைப்போல் ஆகி விடவேண்டும் அல்லது அவர் என்னைப்போல் மாறிவிட வேண்டும் என்றே விரும்பினேன். அவருக்குக் கேடு நினைப்பவர்களிடம் இருந்து அதுவும் அப்படி நினைப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று என்னிடம் சொல்லப்பட, அவர் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தேன்.

வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்க, கலாப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்னுள் மிக ஆழத்தில் மறைந்துக் கிடந்த துடிப்பும் என் இருப்புக்கொள்ளாமையோடு சேர்ந்துக் கொண்டது. அதனால் பம்பாய்க்கு பயணம் செய்து அந்த நகரத்தில் என் அதிர்ஷ்டத்தைப் பரிசோதித்து பார்ப்பது என்று ஒரு நாள் முடிவு செய்தேன். எனக்கு எப்போதும் நாடகம் நடிப்பு என்று ஈடுபாடு உண்டு அதனால் நான் அங்கு இருந்தேன்.

தேச சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதலைக் காட்டிலும் ஒரு நடிகனாக வேண்டும் என்பதே என்னுள் மேலோங்கி இருந்தது. மனிதன் தான் எத்தகைய முரண்பாடுகளின் மொத்தத் தொகுப்பு! நான் பம்பாயை அடைந்த போது, இம்பீரியல் சினிமா கம்பெனி தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தது. ஆனால் அதற்குள் நுழைவது ஏறக்குறைய சாத்தியமில்லாத காரியமாகவே இருந்தாலும் நான் தொடர்ந்து முயற்சித்து, இறுதியில் தினக்கூலியாக எட்டணா வாங்கும் துணை நடிகனானேன். வெள்ளித்திரையில் பெரிய நடிகனாக வேண்டும் என்ற என் கற்பனையை இது எவ்விதத்திலும் தடைசெய்யவில்லை.

இயல்பாகவே நான் எல்லோரிடமும் இணக்கமாகப் பழகக்கூடியவன். எனக்கு இனிமையாகப் பேசத் தெரியாமல் இருந்தாலும் விட்டெறிந்து பேசக்கூடியவன் இல்லை. என்னுடைய தாய்மொழி உருதுவாக இருந்ததால் - கம்பெனியில் எல்லா பெரிய நட்சத்திரங்களும் இதை அறியாதவர்களாக இருந்தது, எனக்கு உதவக்கூடியதாக இருந்தது. இந்த மொழி பேசப்படாத பம்பாயில், அது எனக்கு உதவியாக இருந்தது.

ஆனால் எங்கு பேசப்படுகிறதோ, அதாவது டெல்லியில் அப்படி இல்லாதது விசித்திரமானது தான். திரைப்படங்களில் பேசப்படும் மொழி பொதுவாக உருது அல்லது இந்துஸ்தானியாக இருந்ததால் பெரிய நட்சத்திரங்களுக்கான வசனங்களை எழுதவும் படிக்கவும் நான் மிகவும் அவசியமானவனாக இருந்தேன். அவர்களுடைய விசிறிகள் எழுதும் கடிதங்களை அவர்களுக்குப் படித்துக்காட்டி, அதற்குப் பதில்களும் எழுதிக் கொடுப்பேன் ஆனாலும் இப்படி படிப்பதும், எழுதுவதும் என்னுடைய குறிக்கோளை அடைவதற்கு எவ்விதத்திலும் பயனுள்ளதாக இல்லாமல் இருந்தது. ''எக்ஸ்ட்ரா'' தான் நான். ''எக்ஸ்ட்ரா''வாகவே தான் இருந்தேன்.

அந்த நாட்களில் இம்பீரியல் கம்பெனியின் உரிமையாளர் சேத் அர்தேஷிர் இரானியினுடைய அந்தரங்கக் காரோட்டியாக இருந்தவனிடம் - அவனுடைய பெயர் புதான், நான் நட்புக் கொண்டிருந்தேன். அவன் செய்த முதல் காரியம், எனக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தது தான். அவனுடைய ஓய்வு நேரங்களில், பொதுவாக அது பெரிய அளவில் கிடைப்பது இல்லை என்றாலும், அதை எனக்குக் கற்றுக் கொடுத்தான். அவன் செய்து கொண்டிருப்பதை, சேட் கண்டு பிடித்துவிட்டால் வேலையை விட்டு வெளியேற்றப்படுவார் என்று எப்போதும் பயந்துக் கொண்டிருந்தான்.

இந்தக் கட்டுப்பாடுகளால், என்னுடைய புத்திசாலித்தனம் மற்றும் உற்சாகத்தை மீறி, மோட்டார் வண்டி ஓட்டுவதில் நான் நிபுணத்துவம் பெற முடியாமல் போயிற்று. என்னால் செய்ய முடிந்தது சந்தர்ப்பம் கிடைத்த போது எல்லாம் பம்பாயில் நூல் பிடித்தாற்போல் நேராக இருந்த சாலைகளில் மட்டுமே சேத் அர்தேஷிர் இரானியின் வண்டியை ஓட்டமுடிந்தது. ஒரு கார் எதனால் ஓடுகிறது என்றோ, அதன் உள்ளே இருக்கும் பாகங்கள் என்னவென்றோ, எனக்குச் சுத்தமாக எதுவும் தெரியாது.

நடிப்பு என்னை முழுமையாய் ஆட்கொண்டது என்றாலும் அது என் மண்டைக்குள் மட்டுமே இருந்தது. என் இதயம் முழுக்க, முஸ்லீம் லீக் மீதும், அதை நடத்திச் செல்லும் சக்தியாய் இருந்த காயிதே ஆஸாம் முஹம்மது அலி ஜின்னா மீதும் காதலால் நிரம்பியிருந்தது. இம்பீரியல் சினிமா கம்பெனியில் வேலை இல்லாமல் நேரத்தைக் கழித்த போதும், கென்னடி பாலம், பின்டி பஜார், முஹம்மது அலி சாலை, அல்லது விளையாட்டு இல்லம் என்று சுற்றிக் கொண்டிருக்கும் போதும், காங்கிரஸ் முஸ்லீம் லீக்கை எப்படி நடத்துகிறது என்பது பற்றி முடிவில்லாமல் பேசிக்கொண்டே இருப்போம்.

இம்பீரியல் கம்பெனியில் எல்லோருக்கும். நான் முஸ்லீம் லீக்கின் தீவிர ஆதரவாளன் என்றும், காயிதே அஸாம் முஹம்மது அலி ஜின்னாவின் தொண்டன் என்றும் தெரிந்து தான் இருந்தது. அந்த நாட்களில் காயிதே அஸாம் மீது பற்றுக் கொண்டிருப்பதனாலேயே, ஒரு இந்து நம்முடைய எதிரியாகிவிடவில்லை. ஒருவேளை, இம்பீரியல் கம்பெனியில் காயிதே பற்றி எல்லோருக்கும் தெரிந்திராமலும் இருக்கலாம். நான் அவரைப் புகழ்ந்து பேசும் போது, எனக்கு மிகவும் பிடித்த ஒரு சினிமா நடிகரைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதாகக்கூட சிலர் நினைத்திருக்கலாம்.

சாதத் ஹஸன் மண்ட்டோ

தமிழாக்கம்: ராமாநுஜம்

கட்டுரையின் தொடர்ச்சிக்கு "Next" "கிளிக்" செய்யவும்.