Home இஸ்லாம் கட்டுரைகள் ஒரு வார்த்தையைக் கூட மாற்றுவதற்கு அனுமதியில்லை!
ஒரு வார்த்தையைக் கூட மாற்றுவதற்கு அனுமதியில்லை! PDF Print E-mail
Thursday, 14 January 2010 09:01
Share

ஒரு வார்த்தையைக் கூட மாற்றுவதற்கு அனுமதியில்லை!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நபித்தோழர் ரளியல்லாஹு அன்ஹு ஒருவருக்கு தூங்குவதற்கு முன் ஓதவேண்டிய நீண்ட துஆ ஒன்றைக் கற்றுக்கொடுத்தார்கள்;

''ஆமன்து பிகிதாபிக்கல்லதீ அன்ஜல்த வநபிய்யிக்கல்லதீ அர்ஸல்த'' என்று செல்கிறது அந்த துஆ. அதைக் கற்றுக் கொண்ட நபித்தோழர் (ரளியல்லாஹு அன்ஹு) தன் வீட்டிற்குச் சென்றுவிட்டு மனனம் செய்து மறுநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து முந்தைய தினம் தாம் மனனம் செய்ததை ஒப்புவிக்கும் போது, ''ஆமன்து பிகிதாபிக்கல்லதீ அன்ஜல்த வரஸுலிக்கல்லதீ அர்ஸல்த'' என்று கூறியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''லா''(இல்லை). நான் எதைக் கூறினேனோ அதையே நீயும் கூறு என்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதற்கும், அந்த நபித்தோழார் ரளியல்லாஹு அன்ஹு கூறியதற்கும் என்ன வித்தியாசம்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த ''நபி'' என்ற வாத்தைக்குப் பதிலாக, ''ரஸுல்'' என்ற வார்த்தையைக் கூறினார் நபித்தோழர் (ரளியல்லாஹு அன்ஹு). இரண்டு வார்த்தைகளும் தூதர் என்ற ஒரே பொருளைக் கொண்டது தான்.

உண்மையில் ''ரஸுல்'' என்ற வார்த்தை ''நபி'' என்ற வார்த்தையைவிட சற்று அந்தஸ்து கூடியது. ஏனென்றால் ''ரஸுல்'' என்பவர் வேதங்களும், சட்டதிட்டங்களும் கொடுத்து அனுப்பப்பட்ட தூதர் ஆவார். ''நபி'' என்பவர் மக்களை எச்சரிக்கைச் செய்ய அனுப்பப்பட்ட தூதர் ஆவார்.

எனினும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த நபித்தோழருக்கு ஒரே ஒரு வாத்தையைக் கூட மாற்றுவதற்கு அனுமதியளிக்கவில்லை. இவ்வாறு தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலும், அவர்களுக்குப் பின் வந்த காலத்திலும் இஸ்லாம் எந்தவொரு மாற்றத்திற்கும் உட்படாமல் பாதுகாக்கப்பட்டது. ஆனால் நம்முடைய காலத்தில் நடைபெறுவது என்ன?

நம்முடைய முன்னோர்களும், ஹஜ்ரத் மார்களும், நாமும் இஸ்லாத்தின் பல விஷயங்களில் மாற்றம் செய்ததோடல்லாமல், எண்ணற்ற புதிய அமல்களையும் உருவாக்கி அவைகளை நல்ல அமல்கள் (பித்அத்துல் ஹஸனா) என்று வேறு அழைக்கிறோம். ஆனால் இன்னமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தைப் பின்பற்றி வாழ்பவர்கள் நாங்கள் என்று நம்மை நாமே கூறிக்கொள்கிறோம். இது விசித்திரமாக இல்லையா?

நம் குடும்பத்தில் மரணித்த ஒருவருக்காக ஓதப்படும் 3 ஆம் நாள் ஃபாத்திஹாவை எடுத்துக் கொள்வோம். தம் உறவினர் இறந்ததற்காக 3ஆம் நாள் ஃபாத்திஹா ஓதுதல் என்ற புதிய அமலை (பித்அத்) செய்யும் ஒருவர், பின்வரும் இரு விஷயங்களோடு சம்பந்தப்படுகிறார். (அதாவது பின்வரும் குற்றங்களைச் செய்தவர் போலாகிறார்)

1. அல்லாஹ் இந்த நல்ல அமலைச் செய்யச் சொல்லவில்லை. அதனால் நானே இதை உருவாக்கினேன். அதாவது இறந்தவருக்கு சுவர்க்கத்தைத் தரக்கூடியவல்ல இந்த அற்புதமான அமலை அல்லாஹ் கூறுவதற்கு மறந்து விட்டான். அதனால் தான் நான் இதைக் கண்டுபிடித்து இஸ்லாத்தில் சோத்து விட்டேன். அல்லது யாரோ ஒருவர் கண்டுபிடித்து ஏற்கனவே மார்க்கத்தில் சோத்துவிட்டார். நானும் அதை பின்பற்றுகிறேன். என்ன ஒரு இறை நிந்தனை! நவூதுபில்லாஹ் மின்ஹா!

குர்ஆன் சூரத்துல் மர்யமில் அல்லாஹ் கூறுகிறான் ''வமா காண ரப்புக்க நஸீயா'' பொருள்: உமது இறைவன் எதையும் மறக்கக்கூடியவன் அல்ல. மற்றொரு வசனத்தில் (ஆயத்துல் குர்ஸி), அல்லாஹ் தன்னைப்பற்றியே கூறுகிறான், ''லா த ஹுதூஹும் சினத்துன் வலா நவ்ம்'' - பொருள்: அவன் தூங்குவதும் இல்லை, மேலும் சிற்றுறக்கமும் அவனைப்பிடிப்பதில்லை (அல்குர்ஆன் 2:255)

2. மேலும் அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனிதகுலம் முழுவதற்கும் நபியாகவும், அனைத்து இறை நம்பிக்கையாளார்களுக்கும் மார்க்க விஷயங்களில் பின்பற்றவேண்டியதற்கு ஓர் முன்மாதிரியாகவும் அனுப்பினான்.

யாராவது ஒரு முஸ்லிம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகள் எங்களுக்குப் போதவில்லை, அதனால் தான் நாங்கள் இன்னும் சில நல்ல புதிய அமல்களையும் செய்து, இறைவனிடமிருந்து திருப்தியைப் பெற்று அதற்குப் பரிகாரமாக சுவர்க்கத்தை அடைய விரும்புகிறோம் என்று நினைத்தால், அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதித்து, அவர்களின் நபித்துவத்தையே கேலிக்குரியதாக்கி, அவர்கள் நமக்கு நல்லமல்கள் எல்லாவற்றையும் கூறவில்லை, சிலவற்றை கூறாமலேயே சென்றுவிட்டார்கள் என்று கூறுவது போலாகும்.

என்ன ஒரு மோசமான இறை நிந்தனை! இது நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை மட்டும் இழிவுபடுத்தவில்லை, மேலும் அல்லாஹ்வுக்கு தூதரைத் தோந்தெடுக்கத் தெரியவில்லை என்றும் பொருள்படுகிறது. இவ்விசயம் மீண்டும் அல்லாஹ்விடமே செல்கிறது. அல்லாஹ் நம்மனைவரையும் இதுபோன்ற புதிய பித்அத்களை செய்வதிலிருந்து காப்பாற்றி மன்னிப்பானாகவும். அஸ்த பிருல்லாஹில் அளீம்.

நாம் செய்யக்கூடிய இந்த புதிய அமல்கள் எவ்வளவு பெரிய கொடிய பாவம் என்பதை நாம் உணர்வதில்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு பித்அத் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் செயல்களாகிவிட்டது. அனுதினமும் சிலையை வணங்கும் ஒருவர் அவ்வாறு செய்வது தவறு என்று எப்படி உணராமல் இருக்கிறாரோ, அதுபோலவே பித்அத் புரியும் முஸ்லிமும் தான் செய்யும் தீமையின் விளைவுகளை உணராமல் அதை தொடாந்து செய்துவருகிறார். அல்லாஹ் ஒவ்வொரு நிமிட நேரத்திலும், வினாடியிலும் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் பதிவுசெய்தவாறு இருக்கிறான். நம்முடைய அனைத்துச் செயல்களுக்கும் இறுதிதீப்பு நாளில் நாம் கணக்கு கூறவேண்டியதிருக்கிறது.

நாம் அல்லாஹ்வுக்கு பயந்து பித்அத் போன்ற செயல்களை செய்வதில் இருந்தும் தவிர்ந்து இருக்க வேண்டும்.

அல்லாஹ், நம்மை அவனுடைய மார்க்கத்தில் தெளிவு உள்ளவர்களாக்கி, நம்முடைய இதயத்தையும் ஒளிவுள்ளதாக்கி, அவனால் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றக்கூடியவர்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாகவும். ஆமின். வஆகிருதாவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

source: ''உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்!'' கட்டுரையிலிருந்து,

மூலக்கட்டுரை (ஆங்கிலம்): அபூ ரிள்வான், தமிழில்: புர்ஹான் www.suvanathendral.com