Home கட்டுரைகள் விஞ்ஞானம் போதையூட்டும் பூக்கள்!
போதையூட்டும் பூக்கள்! PDF Print E-mail
Sunday, 27 December 2009 08:31
Share

போதையூட்டும் பூக்கள்! 

Rare & wonderful Article

மனிதன் மரணித்த பிறகு மீண்டும் உயிர் கொடுத்து மண்ணிலிருந்து எழுப்பப்படுவான் என்ற பிரச்சாரத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் வைத்தவுடன் மக்காவிலிருந்த இறை நிராகரிப்பாளர்கள் அதை ஒத்துக் கொள்ள மறுத்தார்கள்.

''நாங்கள் எலும்புகளாகி மக்கிப் போகும் போது புதுப்படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். (அல்குர்ஆன் 17:49)

''நமது வசனங்களை அவர்கள் மறுத்ததாலும், ''நாங்கள் எலும்பாகி மக்கிப்போகும்போது புதுப்படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று கூறியதாலும் இதுவே அவர்களுக்குரிய தண்டனை.'' (அல்குர்ஆன் 17:98)

இதற்குப் பதிலாக வல்ல அல்லாஹ், இறந்தோரை உயிர்ப்பித்துக் காண்பிக்கவில்லை. தன் தூதரை இப்படியொரு அற்புதத்தைச் செய்து காட்டவும் சொல்லவில்லை.

மாறாக அல்லாஹ் இதற்கு பதிலாக தாவரப்படைப்பைத் தான் ஆதாரமாகவும், அற்புதமாகவும் காட்டுகின்றான்.

அல்லாஹ்வே விதைகளையும், கொட்டைகளையும் வெடித்து முளைக்கச் செய்பவன். உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துபவன். இவனே அல்லாஹ். எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்? (அல்குர்ஆன் 6:95)

''அவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம்.

அதிலிருந்து பசுமையான பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை அப்பயிர்களில் வெளிப்படுத்துகிறோம்.

பேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஆலிவ் மரம், மாதுளை ஆகியவற்றையும் (வெளிப்படுத்துகிறோம்.)

அவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவும், (தன்மையில்) வேறுபட்டதாகவும் உள்ளன.

அது பலன் கொடுக்கும் போது அதன் பலனையும், அது கனிவதையும் கவனியுங்கள்! நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.'' (அல்குர்ஆன் 6:99)

மறுமையை மறக்கும் மக்களை, பாலைவனப் பயிரான பேரீச்சம் பழக் குலைகளையும், திராட்சைக் கொத்துகளையும், மாதுளை மற்றும் ஆலிவத்தையும் பார்க்கும்படி கூறுகின்றான்.

இந்தக் கனிகளின் மூலமான பூவின் அற்புதங்களைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்த அற்புதங்களைச் சிந்தித்துப்பார்த்து அதன் மூலம் மறுமையை நம்பச்சொல்லி அல்லாஹ் கட்டளை இடுகின்றான்.

உண்மையில் இந்த அற்புதங்களைச் சிந்திப்பவர்கள் அல்லாஹ்வின் மகத்தான வல்லமையைக் கண்டு கொள்வார்கள். இன்னொரு உலகமா? இற்றுப்போன எலும்பான பிறகு இன்னொரு உயிராக்கமா? என்ற கேள்வி அவர்களுக்கு எழவே எழாது.

மாறாக அவர்கள் ஏகத்துவத்தின் பால் தங்களை அறியாமலேயே ஈர்க்கப்பட்டு விடுவர். மறுமை உலகம் ஒன்று உண்டு என்று உறுதியாக நம்ப முன்வந்து விடுவர்.

இந்த இதழின் அட்டைப் படத்தில் காட்சியளிக்கும் வண்ண மலர்களைப் பாருங்கள். அவற்றில் உள்ள கவர்ச்சியும் காந்தமிகு ஈர்ப்பு சக்தியும் நம்முடைய கண்களை மட்டுமல்ல! உள்ளங்களையும் கொள்ளை கொண்டு விடுகின்றன. இனப் பெருக்கத்திற்காக/ தாவர இனத்தின் உயிர் வாழ்வுக்காக அல்லாஹ் செய்திருக்கும் அற்புத ஏற்பாடுகள் நம்மை எண்ணி எண்ணி வியக்க வைக்கின்றன.

மலர்களின் இந்த அழகிய வண்ண இதழ்கள் வண்டுகளை, வவ்வால்களை, வண்ண வண்ண வண்ணத்துப் பூச்சிகளை வரவழைக்கும் விதத்தில் கவர்ச்சிக் கலையைக் கொண்டு அமைந்திருப்பது போலவே அவற்றின் ஊடே அமைந்திருக்கும் தேன் தடமும் வண்டுகள், வண்ணத்துப் பூச்சிகள் போன்ற தங்கள் காதல் முகவர்களை வரவழைக்கும் கவர்ச்சிக் கலையைக் கொண்டு அமைந்திருக்கின்றன.

புற ஊதா வெளிச்சம் புலப்படுத்தும் உண்மைகள்

மலரின் தேன் சுரபிகள் பல வண்ண நிறங்களைத் தாங்கி நிற்கின்றன. இந்த வண்ண நிறங்களில் இருந்து ஒரு விதமான ஒளி அலைகள் கிளம்புகின்றன. அவற்றிற்குத் ''தேனமுத வழிகாட்டிகள்'' என்று பெயர்.

இவை தான் மலர்களை நோக்கி வரும் காதல் முகவர்களுக்கு தேன் சுரபிகளைக் காட்டிக் கொடுக்கின்றன. வியத்தகு இந்த விந்தையை, புல்லரிக்கச் செய்யும் இந்தப் புதுமையை நம்முடைய கண் புலன்களால் கண்டு கொள்ள முடிவதில்லை. புற ஊதாக் கதிர்கள் என்ற ஒளியின் மூலமே அறிய முடிகின்றது.

விமான நிலைய ஓடு தளத்தில் தீட்டப்பட்டிருக்கும் வண்ணப் பூச்சுக் கோடுகளைப் போன்று வண்ண மலர்களின் இந்த வண்ணத் தொகுப்புகள் தங்கள் முகவர்களுக்கு வழிகாட்டி, மகரந்தச் சேர்க்கை செய்ய வரும் மணவாளர்களுக்குத் தேன் பானத்தைப் பரிசாக அளிக்கின்றன என்றால் அது என்ன ஒரு ஏற்பாடு? எப்படிப்பட்ட ஒரு வழிகாட்டல்?

மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான். அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான். (அல்குர்ஆன் 87:1,2,3)

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று படைத்து, ஒழுங்குற அமைத்து இப்படி வழி காட்டியதற்காக அவனைப் புகழ்ந்து துதிக்க வேண்டும் அல்லவா?

பூக்களிடம் விளையாடும் ஈக்கள்

மகரந்தச் சேர்க்கை செய்ய வரும் மணவாளர்களுக்கு மலர்கள் தேனைத்தான் பரிசாகத்தர வேண்டும் என்பதில்லை. தேன் மட்டுமல்லாமல் மகரந்தத் தூளையும் வழங்குகின்றது. இவ்விரண்டில் எதையும் பரிசாக வழங்காத மலர்கள், மையல் விளையாட்டுக்களை மட்டும் பரிசாக வழங்குகின்றன.

லேடி ஸ்லிப்பர் எனும் அலங்காரச் செடியின் மலர் இதழ்கள் ஒரு விதமான பையைக் கொண்டிருக்கின்றன. அந்தப் பைக்குள் ஓர் இரசாயன நறுமணம். இம்மலர்களுக்கு வரும் ஈக்களால் எதிர்த்து நிற்க முடியாத அளவுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கின்றது அந்த வாசனை. அந்தப் பையின் வாய் முனையை நோக்கி இந்த ஈக்கள் ஏறுகின்றன. ஏறிய மறு நிமிடம் பைக்குள் இடறி விழுகின்றன. உள்ளே விழுந்த அந்த ஈக்கள் போதை வயப்பட்டு மயக்க நிலையை அடைகின்றன. மயக்கத்தில் சிறகடித்துக் கிடக்கின்றன.

இப்படி ஒரு மையல் விளையாட்டு முடிந்து மயக்கம் தெளிந்த ஈக்கள், அந்தப் பையில் உள்ள இரு மெல்லிய ஓட்டைகள் வழியாக சூரிய ஒளி ஊடுறுவுவதைக் கண்டு அவ்வழியாக வெளியே வருகின்றன. அவ்வாறு வெளியே வரும் ஈக்கள் என்ற முகவர்கள் வெறுமனே வருவதில்லை. தங்கள் முதுகுகளில் மகரந்தத் தூளைச் சுமந்து வருகின்றன. இல்லை! மலர்கள் சுமத்தி அனுப்பி விடுகின்றன. மகரந்தத் தூள் அந்த ஈக்களின் முதுகுகளில் பசையாக ஒட்டிக் கொள்கின்றன.

அவ்வளவு நேரம் பூக்களுக்கு இந்த ஈக்களின் திருவிளையாடல்கள், களி நடனங்கள் போதாதென்று அதே அலங்காரச்செடியின் அடுத்த மலரின் பைக்குள் அவை வருகையளிக்கின்றன. அந்த மலரின் பைகள், மணவாளரே வருக! என்று வரவேற்று, ஈக்களின் முதுகிலிருந்த, முந்தைய மலர் கொடுத்த அந்த மகரந்தத் தூளை இவை உருவி விட்டு வழியனுப்பி வைக்கின்றன. அந்த மலரில் வாரி வந்ததை இந்த மலர் வாங்கி விட்டு வாழ்த்துச் சொல்லி அனுப்புகின்றது. மலரின் கருவைத் தாங்கி நிற்கும் பெண் சூலகப்பை தான் இந்த மகரந்தத் தூளை உருவுகின்றது. பின் கருவுறுகின்றது.

தங்களிடம் வந்த ஈக்களுக்கு, போதை மிக்க ஒரு நடனத்தை இந்தப் பூக்கள் காணிக்கையாகக் கொடுத்து, தங்களை இனப்பெருக்கம் செய்து கொள்கின்றன என்றால் இப்படி ஒரு திட்டத்தைத் தாவர இனத்திற்குத் தீட்டிக் கொடுத்தவன் யார்? அந்த எல்லாம் வல்ல அல்லாஹ்தான்.

இறைவன் இல்லை என்று வறட்டு வேதாந்தம் பேசும் நாத்திகவாதிகளுக்கு மலர்களின் இந்த இனப்பெருக்கம் ஒரு சவால் அல்லவா? எந்த ஒரு மனிதக் கற்பனையிலும் உதித்திராத புனிதப் படைப்பாற்றல் இதுவல்லவா? அதனால் தான் தாவர இனத்தின் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது சுப்ஹானல்லாஹ் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

மகரந்தச் சேர்க்கையின் மற்றொரு வினோதம்

இங்கே இன்னொரு மிக முக்கியமான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். தாவர இனத்தில் ஆண், பெண் மலர்கள் என்று குறிப்பிடும்போது, ஆண்மலர்கள் தனியாகவும், பெண் மலர்கள் தனியாகவும் இருப்பதாக விளங்கிக் கொள்ளக் கூடாது.

விலங்கினத்தில் ஆண், பெண் இனம் வித்தியாசத்துடன், வேறுபாட்டுடன் காட்சியளிப்பது போல் இது ஆண்மலர், இது பெண்மலர் என்று காட்சியளிப்பதில்லை. ஒரே மலரில் தான் ஆண் பாகமும் பெண் பாகமும் அமைந்திருக்கின்றது.

வண்டுகள், வண்ணத்துப் பூச்சிகள், விட்டில் பூச்சிகள், தேனீக்கள் போன்ற முகவர்கள் ஒரு மலரின் ஆண் பாகத்தில் இருக்கும் மகரந்தத் தூளை எடுத்து, அதே மலரின் பெண் பாகத்தில் வைப்பதில்லை. ஒரு மலரின் ஆண் பாகத்திலிருந்து எடுத்து அடுத்த மலரின் பெண் பாகத்தில் கொண்டு போய் சேர்க்கின்றன.

அறிவியல் உலகின் ஆராய்ச்சியில், ஈக்கள் ஒரு மலரில் இருக்கும் ஆண் பாகத்திலிருந்து மகரந்தத் தூளை எடுத்து, அதே மலரின் பெண் பாகத்தில் கொண்டு போய் வைப்பதாக இதுவரை கண்டறியவில்லை.

அயல் மகரந்தச் சேர்க்கையில் அல்லாஹ் அமைத்திருக்கும் இந்த வினோதம் நம்மை விந்தையில் ஆழ்த்துகின்றது.

இரு பக்க இனப் பெருக்கம்

இந்த விந்தையிலிருந்து விலகுவதற்கு முன்னால் அடுத்து வரும் ஒரு விந்தை நம் சிந்தையை வியப்பின் உச்சாணிக்குக் கொண்டு செல்கின்றது.

இதே அலங்காரச் செடி வகை ஒன்று பார்ப்பதற்குப் பெண் குளவி (பூச்சியினம்) போன்று காட்சி தருவதுடன், பெண் குளவியின் வாசனையையும் கொண்டிருக்கின்றது. ஆண் குளவியைத் தன்னிடம் கவர்ந்து இழுக்கும் மாயாஜாலக் கருவியாக இந்த வாசனையை இச்செடி பயன் படுத்துகின்றது.

இந்தச் செடியிலுள்ள பூ பூத்தவுடன் புழுக் கூட்டிலிருந்து வெளி வருகின்ற புதிய ஆண் குளவிகள் இந்தப் பூவை நோக்கிப் புறப்பட்டு வருகின்றன. ஏன்? இந்தப் பூவிலிருந்து பறந்து வரும் வாசனை வெறும் பூ வாசனையாக வரவில்லை. தங்களது பெண் ஜோடிகளின், அதாவது பெண் குளவிகளின் வாசனையாக வந்ததால் தங்களது மனைவிகளின் வீடுகளுக்குச் செல்கிறோம் என்ற உரிமையில் புறப்பட்டு வருகின்றன.

முதல் இரவுக்கு மோப்பம் பிடித்து வந்த உல்லாச ஆண் குளவிகளுக்கு தாங்கள் வீற்றிருப்பது மனைவியின் மடியல்ல! வெறும் மலர்களின் மடி தான் என்ற விபரம் தெரிய வருகின்றது. உடனே வெளியே கிளம்புகின்றன. வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை மலர்கள் வெறுங்கையோடு அனுப்புமா? இல்லை! மகரந்தத் தூள்களை அவற்றின் மீது அப்பி அனுப்பி வைக்கின்றன.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்

அந்த விருந்தாளி ஆண் குளவிகள் வேறு மலர்களுடன் சேர்க்கை செய்யச் செல்கின்றன. அப்போது அந்த மலர்கள் ஆண் குளவிகளிடம் உள் மகரந்தத் தூளை வாங்கி விட்டு விடை கொடுத்து அனுப்பி வைக்கின்றன. தங்கள் மனைவிகளிடம் தாம்பத்யம் செய்ய வந்த ஆண் குளவிகளுக்குப் பெருத்த ஏமாற்றம்! தகுந்த இடத்தில் தங்கள் தாகத்தைத் தணிக்க முடியாத வருத்தம்! ஆனால் மலர்களுக்கு மத்தியில் மகரந்தச் சேர்க்கை எனும் தாம்பத்யம் நடந்தேறி விடுகின்றது.

இங்கு ஏமாந்து போன ஆண் குளவிகளை அல்லாஹ் சும்மா விட்டு விடவில்லை. இப்போது ஆண் குளவிகளிடமிருந்து கிளம்பும் ரசாயன வாசனையை மோப்பம் பிடித்து, அவை இருக்கும் மலர்களை நோக்கி உண்மையான பெண் குளவிகள் விரைந்து வருகின்றன. ஏற்கனவே ஏமாந்த ஆண் குளவிகள், தங்களை நோக்கி ஓடி வந்த பெண் குளவிகளளோடு தாம்பத்ய உறவை மேற்கொள்கின்றன. என்ன ஒரு நுட்பம்?

இப்படி மலர்களின் இனப் பெருக்கம் முடிந்த கையோடு, குளவிகளின் இனப் பெருக்கமும் நடந்தேறுகின்றது.

ஒரே கல்லில் இரு மாங்காய் என்ற உவமைப்படி குளவிப் புணர்ச்சியின் மூலம் தாவர இனப் பெருக்கமும், குளவியின் இனப் பெருக்கமும் ஒரு சேர அமையப் பெறுகின்ற தகவுப் பொருத்தத்தை அமைத்தவன் யார்? இந்த இனத்திற்கு மத்தியில் ரசாயன இணைப்பை, கலவையை ஏற்படுத்தியவன் யார்? எல்லாம் வல்ல அல்லாஹ் அல்லவா?

பூமி முளைக்கச் செய்வதி இருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன். (அல்குர்ஆன் 36:36)

தாவர இனத்தின் ஜோடியைப் பற்றி இறைவனின் இந்தச் சொல் தெரிவிக்கின்றது.

அன்றைய கால மக்கள் தாவர இனத்தின் ஜோடிகளைப் பற்றி தற்போதுள்ள அளவுக்கு ஆழமாக அறிந்திருக்கவில்லை. நாம் இன்று அபார அறிவியல் வளர்ச்சியின் மூலம் மகரந்தச் சேர்க்கையின் ஒவ்வொரு அசைவுகளை, அதன் அற்புதங்களைத் தெரிந்து கொள்கிறோம். அந்த வகையில் தனது இந்த அற்புதத்தை அறிவியல் வளர்ச்சி மூலம் அறிந்து கொள்ளும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றான்.

இந்தத் தாவர இனத்தின் பெருக்கத்தில் ஒளிந்து கிடக்கும் ஓராயிரம் ரகசியங்களை அறிவியல் மூலம் வெளிப்படுத்தி, இந்த அறிவியல் நூற்றாண்டுக்கும், இது போல் ஒவ்வொரு அறிவியல் காலத்திற்கும் இந்தக் குர்ஆனைப் பொருத்தமாக்கி வைத்திருக்கின்றானே அவன் நிச்சயமாகத் தூய்மையானவன்.

''Jazaakallaahu khairan''

இக்கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

source: http://kadayanalluraqsha.com/?cat=39