Home இஸ்லாம் ஹதீஸ் நன்மை பயக்கும் நபிமொழி - 52
நன்மை பயக்கும் நபிமொழி - 52 PDF Print E-mail
Saturday, 31 October 2009 06:49
Share

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்: ''உங்களில் ஒருவர், தொழும் நிலையில் தூங்கினால், தன்னை விட்டும் தூக்கம் நீங்கும் வரை அவர் தூங்கட்டும்! உங்களில் ஒருவர் தூங்கிய நிலையில் தொழுதால், 'அவர் தன்னை மன்னிக்க வேண்டுகிறாரா? அல்லது தன்னைத் திட்டுகிறாரா' என்று அறிய மாட்டார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்''.(புகாரி,முஸ்லிம்).

(அபூமஸ்ஊத் என்ற) உக்பா இப்னு அம்ரூ அல்அன்சாரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ''நல்லதை ஒருவர் பிறருக்கு அறிவித்துக் கொடுத்தால், அதை செய்தவனின் கூலி போன்றது அவருக்கும் உண்டு'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்).

(அபூஸைத் என்ற) உஸாமா இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ''மறுமையில் ஒருவர் அழைத்து வரப்பட்டு, நரகிலும் போடப்படுவார். அப்போது அவரின் வயிற்றுக் குடல்கள் சரிந்து விடும். அவர் அந்த நிலையிலேயே கழுதை செக்கைச் சுற்றுவது போல் சுற்றுவார். அவரிடம் நரகவாசிகள் அனைவரும் வந்து, இன்னாரே! உனக்கு என்ன நேர்ந்தது? நீ நல்லதை ஏவி, தீயதை விட்டும் தடுத்துக் கொண்டு இருந்தீர்தானே? என்று கூறுவார்கள். அதற்கு அவர், ஆம் நல்லதை ஏவிக் கொண்டிருந்தேன். அந்த நன்மையை நான் செய்ய வில்லை. தீயதை விட்டும் தடுத்தேன். ஆனால் அந்த தீமைகளை நான் செய்தேன்'' என்று கூறுவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ''தான் விரும்பியதை தன் சகோதரனுக்கும் விரும்பும் வரை உங்களில் ஒருவர் இறை விசுவாசியாக மாட்டார்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்).

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ''நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும் 1) பேசினால் பொய் பேசுவான் 2) வாக்குறுதி அளித்தால் மாறு செய்வான் 3) அவனை நம்பினால் மோசடி செய்வான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்).

ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ''அநீதம் செய்வதை அஞ்சிக் கொள்ளுங்கள். அநீதம் என்பது, மறுமை நாளின் இருள்களில் உள்ளதாகும். கஞ்சத்தனத்தை அஞ்சிக் கொள்ளுங்கள். கஞ்சத்தனம் தான், உங்களுக்கு முன் இருந்தவர்களை அழித்தது. மேலும் அது (கொலை மூலம்) இரத்தங்களை ஓட்டிடவும், தடுக்கப்பட்டதை ஆகுமாக்கிக் கொள்ளவும் அவர்களை தூண்டியது.'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்).